பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, April 23, 2008

ஸ்டாலின் கலக்கீட்டீங்க !

ஜூவியில் 'ஸ்டாலின் நெகிழ்ச்சி நிமிடங்கள்...' என்ற கட்டுரை. நிச்சயம் அமைச்சர் ஸ்டாலினை இதற்கு பாராட்ட வேண்டும்.


தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அது ஒரு பொன்மாலைப் பொழுது. கடந்த 17-ம் தேதி மாலை தனது மகள் செந்தாமரையையும் மருமகன் சபரீசனையும் அழைத்த ஸ்டாலின், 'ஒரு முக்கியமான நிகழ்ச்சிக்குப் போகிறேன், நீங்களும் கிளம்புங்கள்' என்றார். போஸ்டர் இல்லை, வரவேற்புகள் இல்லை, கோஷங்கள் இல்லை... ஸ்டாலினின் கார் போய்ச்சேர்ந்த இடம் சென்னை வில்லிவாக்கத்தில் இருக்கும் ராஜாஜி நகர். இந்த நகரின் குறுகலான மூன்றாவது தெருவுக்குள் கார் போக முடியாததால் மகளோடும், மருமகனோடும் இறங்கி நடக்க ஆரம்பித்தார் அமைச்சர்.

ஸ்டாலின் ஆர்வமாகக் கலந்துகொண்ட அந்த விழா, சென்னை சிறுமலர் பார்வையற்றோர் பள்ளியில் ப்ளஸ்--டூ படிக் கும் பார்வையற்ற மாணவி பெனோ செபினின் பிறந்த நாள் விழா தான்! (மாணவி செபின் குறித்து ஏற்கெனவே ஆனந்த விகடன் இதழில் கட்டுரை வெளியிட்டிருக்கிறோம்).

ஸ்டாலினின் திடீர் வருகை தந்த பிரமிப்பு ப்ளஸ் இன்ப அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளாத செபினிடம் பேசினோம். ''ஸ்டாலின் அண்ணா அவருடைய பொறந்த நாளைக்கு எங்க பள்ளிக்கு வந்தாங்க. அப்போ நான் என் க்ளாஸ் ரூம்ல இருந்தேன்.அமெரிக்காவுல நடக்கப்போற இளைய தலைவர்கள் மாநாட்டுக்குப் போக எனக்கு வாய்ப்புக் கிடைச்சிருந்தது. இந்தியாவுலயிருந்து பார்வையற்ற மாணவியாப் போற ஒரே மாணவி நான்தான்.

எங்க பள்ளியே என்னை அந்த மாநாட்டுக்குப் பரிந்துரை செஞ்சிருந்தது. அமெரிக்கா போக நிறையப் பணம் வேணுங்கறதால அந்த வாய்ப்பை விட்டுடலாம்னு முடிவெடுத்திருந்தேன்.

ஸ்டாலின் அண்ணாகிட்ட ஹெல்ப் கேட்டா அவரு நிச்சயம் செய்வாருன்னு என்கூடப் படிக்கற பசங்க சொன் னாங்க. அவரை எப்படி சந்திக்கறதுன்னு தெரியலை.அவர் இருந்த இடத்துக்கு என்னைக் கூட்டிட்டுப் போகச் சொன்னேன். 'உங்ககிட்ட பேசணும்ணே. அஞ்சு நிமிஷம் ஒதுக்குவீங்களா?'ன்னு கேட்டேன். 'வாம்மா வந்து உட்காரு. என்ன பேசணும்?'னு அவரே என்னைத் தன் பக்கத்துல உட்கார வெச்சுக்கிட்டார். அப்போ என் பிரச்னையைச் சொன்னேன். 'மனுவா எழுதிக்கொடும்மா. நான் ஏற்பாடு செய்யறேன்'னு சொன்னாரு. நான் மனு எழுதறதுக்குள்ளே, என்னைப்பத்தி ஸ்கூல்ல விசாரிச்சார் அண்ணன். 'உன்னோட மனுவைப் பார்க்கிறேம்மா... நல்லாப் படி'ன்னுட்டுப் போயிட்டாரு.

ரெண்டே நாள்ல திரும்பவும் அண்ணனோட ஆபீஸ்லயிருந்து பேசுனாங்க. எனக்குப் பணம் சாங்ஷன் ஆயிடுச்சுன்னு சொன் னாங்க. மார்ச் 14-ம் தேதி முதலமைச்சர் எனக்கு அமெரிக்கா போக நாலு லட்சத்து எழுபதாயிரம் ரூபா கொடுத்தார். அப்போ பக்கத்துல இருந்த ஸ்டாலின் அண்ணாவோட கையைப் பிடிச்சுக்கிட்டு கண்ணீர் விட்டேன். 'ஏப்ரல் 17-ம்தேதி என் பர்த்டேவுக்கு வருவீங்களாண்ணே?'ன்னு கேட்டேன். 'நிச்சயம் வர்றேம்மா'ன்னு சொன்னார். சொன்னது போலவே வந்துட்டார். அவரோட வருகை சம்பந்தமா எங்களுக்கு எதுவும் தெரியாது. வீட்டு வாசல்ல வந்து, 'செபின் இருக்காங்களா? நான் ஸ்டாலின் வந்திருக்கேன். அவங்களை வாழ்த்திட்டுப்போக வந்தேன்'னு அவரு சொல்லவும் எங்க வீட்டுல எல்லாரும் ஆடிப்போயிட்டாங்க. அவரு கூடவே தெரு ஜனங்களும் கூடிட்டாங்க.

'எல்லாருக்கும் வீட்டுல இடம் இருக்கா?'னு கேட்டுக்கிட்டே, 'விழாவை ஆரம்பிக்கலாமே'னு சொன்னார் ஸ்டாலின். அதுக்கு முன்னால அவர் கொண்டுவந்திருந்த தமிழ்த்தாய் வாழ்த்து கேஸட்டைப் போடச் சொன்னார். தமிழ்த்தாய் வாழ்த்தோட என் பொறந்த நாள் விழா தொடங்கிச்சு. அவரே கேக்கை கட் பண்ணி எனக்கு ஊட்டினார். அவரும் ஒரு தட்டுல கேக்கை எடுத்து சாப்பிட ஆரம்பிச்சார். அமெரிக்காவுல இருக்கற தமிழ்ச் சங்கத்துலயும் நான் பேசறதுக்கு ஏற்பாடு செஞ்சிருக்கறதாச் சொன்ன அண்ணன், அங்க எப்படிப் பேசணும்னு டிப்ஸ§ம் கொடுத்தார். அண்ணனோட பொண்ணு செந்தாமரையும், மருமகன் சபரீசனும் தரையில என் பக்கத்துல உட்கார்ந்து ஸ்வீட் சாப்பிட்டாங்க. ஒரு மணிநேரம் எங்க வீட்டுல இருந்துட்டு கிளம்புன ஸ்டாலின் அண்ணாக்கிட்ட, 'உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியலைண்ணே'ன்னு சொன்னேன். 'அமெரிக்கா போய் நம்மூர்ப் பெருமையை நல்லபடியாப் பேசிட்டு வர்றதுதான் நீ எனக்கு செய்யிற கைம்மாறு'ன்னு சொல்லிட்டுக் கிளம்பினார்!'' --உணர்ச்சிப் பெருக்கோடு சொல்லிமுடித்தார் செபின்.

அந்த நெகிழ்ச்சியான தருணங்கள் பற்றி ஸ்டாலினிட மும் பேசினோம். ''என் வாழ்க்கையில் மறக்க முடியாத அரிய விழா அது. தனக்குப் பார்வை யில்லை என்பதை ஒரு பொருட்டாக நினைக்காமல், தன்னம் பிக்கையைத் தன்னுள் தேக்கிவைத்திருக்கும் செபினை எவ்வளவு பாராட்டினாலும்தகும். பள்ளிப் படிப்பில் முதலி டம், உலக அறிவில் உச்சம் என செபினிடம் இருந்த திறமைகளைக் கண்டு வியந்துபோனேன். என் சட்டமன்றத் தொகுதிக்குள் வரும் சிறுமலர் பார்வையற் றோர் பள்ளி மாணவியான செபின், அமெரிக்கா செல்ல நிதி தந்து உதவுமாறு தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன். அவர்களும் கனிவோடு அதைப் பரிசீலித்து முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து அந்தத் தொகையை செபினுக்கு வழங்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். அந்த நிதியைப் பெற்றுக்கொள்ள வந்தபோது தன் பிறந்தநாள் விழாவுக்கு செபின் அழைப்பு விடுத்தார். அதை ஏற்று அவருடைய இல்லத்துக்குச் சென்றேன். இதில் வியப்படைய எதுவும் இல்லை. செபின் விஷயத்தில் எல்லாப் புகழும் தமிழக முதல்வர் அவர்களையே சேரும். செபின், தன் வாழ்க்கையின் எல்லா உயரங்களுக்கும் செல்ல என் மனமார்ந்த வாழ்த்துக்கள்'' என்றார் ஸ்டாலின்.

ஸ்டாலினுக்கும் செபினுக்கும் ஜூ.வி-யின் வாழ்த் துக்கள்!

5 Comments:

Anonymous said...

'இட்லிவடை' வாழ்க்கையில் மறக்க முடியாத கட்டுரை ..

You are so kind heart person? I can't believe...

Keep on writing good things without any hidden agenda.

Thxs

rm_slv said...

மிக நல்ல செய்தி ஒரு அற்புதமான காரியத்தை செய்திருக்கிறார், இது அவரின் எதிர்கால சாதனைகளுக்கு இன்னும் வலுசேர்க்கும்,ஒரு நல்ல அடையாளமாக தெரிகிறது.

வெங்கட்ராமன் said...

ஸ்டாலின் இந்த செயல் கண்டிப்பாக பாராட்டுக்கு உரியது.

அதே போல் தேவையில்லாத மற்ற வீண் விளம்பரங்களை தவிர்த்தால் மற்றவர்களிடம் இருந்து கண்ண்டிப்பாக அவர் வித்தியாசப் படுவார்.

devarajan said...

eventhough i dont like dmk and its ideology, i really like the gesture shown by mr.stalin. this is what we expect from u sir, not any cheap politics. surely u can win our hearts by this kind of care u take for the poor and downtrodden people. Thank you.

தீபக் வாசுதேவன் said...

ஸ்டாலின் ஒரு அருமையான இணைய தளத்தை நிர்வகித்து வருகிறார். பார்த்தீர்களா:

http://www.mkstalin.net/