பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, April 07, 2008

ஒக்க கேள்வி - ராமதாஸ் நிறைய பதில் - கலைஞர்

ராமதாஸ் - கலைஞர் வழக்கம் போல் அறிக்கை போர்

ராமதாஸ் கேள்வி
கருணாநிதியின் குற்றச்சாட்டு

ஒகேனக்கல் குடிநீர் திட்டத்திற்கு அ.தி.மு.க.வும் மற்ற எதிர்க்கட்சிகளும் தி.மு.க. அரசுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்ற நிலையில் தோழமைக்கட்சியான பா.ம.க. நிறுவன தலைவர் மட்டும் குறை சொல்லியிருக்கிறார் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி குற்றச்சாட்டை சுமர்த்தி இருக்கிறார்.

அவர் சுட்டிக்காட்டியிருக்கிற அ.தி.மு.க.வின் தலைவரும், வேறு சிலரும் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையை படித்து பார்த்ததற்கு பின்னரும் முதல்-அமைச்சர் கருணாநிதி இப்படி கூறியிருப்பது பெரும் வியப்பாக இருக்கிறது.

தவறா?

நான் என்ன குறையை சுட்டிக்காட்டினேன்? 1998-ம் ஆண்டிலேயே மத்திய அரசின் ஏற்பளிப்பும், கர்நாடக அரசின் ஒப்புதலும் கிடைத்து விட்ட ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை உடனடியாக நிறைவேற்றி முடிக்காமல், காலம் கடத்தியது ஏன்? என்ற கேள்வியை எழுப்பினேன்.

நான் சுட்டிக்காட்டியது தவறா? முதல்-அமைச்சர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூட, இந்த குடிநீர் திட்டத்திற்கு 1998-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மத்திய நீர்வள அமைச்சகம், காவிரி ஆற்றிலிருந்து 1.4 டி.எம்.சி. தண்ணீரை எடுத்துக்கொள்ள தடையில்லா சான்று வழங்கியது என்பதை ஒப்புக்கொண்டு இருக்கிறார்.

அப்படியானால் தடையில்லா சான்று வழங்கப்பட்ட இந்த திட்டத்தை கடந்த 10 ஆண்டுகளாக நிறைவேற்றி முடிக்கவில்லை என்பது உண்மை தானே? இதில் குற்றச்சாட்டு என்பதோ, குறை சொல்வது என்பதோ எங்கே இருக்கிறது?

விளக்கம்

ஜப்பானிய நிதி நிறுவனத்தின் உதவிக்காக இந்த திட்டம் கடந்த 10 ஆண்டுகாலமாக கிடப்பில் போடப்பட்டு வந்திருப்பதாக முதல்-அமைச்சர் விளக்கம் அளித்து இருக்கிறார்.

புளோரைடு கலந்த குடிநீரை குடித்து பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வரும் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் ஜப்பான் நிதியுதவி கிடைக்கும் வரையில் காத்திருக்க வேண்டும் என்பதற்கு என்ன கட்டாயம் இருக்கிறது?

சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஆண்டுதோறும் வரவு, செலவு செய்கிற ஒரு மாநில அரசு, தன்னுடைய சொந்த நிதி ஆதாரத்திலிருந்து சுமார் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கான ஒரு குடிநீர் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து, நிறைவேற்றி முடிக்க முடியாதா?

என்ன நியாயம் இருக்கிறது?

2006-2007-ம் ஆண்டு பட்ஜெட்டில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு காவிரியிலிருந்து குடிநீர் எடுத்துச் செல்வதற்காக ரூ.671 கோடி மதிப்பிட்டிலான ஒரு புதிய திட்டம் அறிவிக்கப்பட்டு, அந்த ஆண்டே உடனடியாக ஆரம்பிக்கப்பட இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு நல்ல குடிநீர் வழங்க வேண்டும் என்பது முக்கியம் தான். அதைப்போலவே இன்னும் சொன்னால், அதை விட கொஞ்சம் அதிகமாகவே தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் புளோரைடு கலந்த தண்ணீரை குடித்து அவதிப்படுகிற மக்களுக்கு நல்ல குடிதண்ணீர் வழங்க வேண்டும் என்பது முக்கியமில்லையா? அவசிய, அவசரமில்லையா?

ஒகேனக்கல் குடிநீர் திட்டம் மட்டும் ஜப்பான் நாட்டின் நிதி உதவி கிடைத்தால் மட்டுமே நிறைவேற்றப்படும். ஜப்பான் நாட்டின் நிதி உதவி கிடைக்கிற வரையில், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் காத்திருக்க தான் வேண்டும் என்பதிலும் என்ன நியாயம் இருக்கிறது.

வியப்பாக உள்ளது

2006-ம் ஆண்டு பதவிக்கு வந்த தற்போதைய தி.மு.க. அரசு மூன்று நிதிநிலை அறிக்கைகளை தாக்கல் செய்திருக்கிறது. ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் இலவச கலர் டி.வி. பெட்டிகளை வழங்கும் திட்டத்தை நிறைவேற்ற 750 கோடி ரூபாய் அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. அப்படியானால் இது வரை இலவச கலர் டி.வி வழங்குவதற்காக 3 முறையும் சேர்த்து மொத்தம் ரூ.2,250 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு காவிரியிலிருந்து குடிதண்ணீர் கொண்டு வருவதற்கு இதில் பாதி அளவு நிதியே போதும், அப்படியிருக்கும் போது, ஜப்பான் நிதிநிறுவனம் உதவவேண்டும் என ஏன் காத்திருக்க வேண்டும்? இந்த மாவட்டங்களை சேர்ந்த அப்பாவி மக்கள் மட்டும் என்ன பாவம் செய்து விட்டார்கள்? என்ற ஆதங்கத்தின் வெளிப்பாட்டில் தான் என்னுடைய கேள்வியாக எழுந்தது. சொன்னதை செய்வோம், செய்வதையை சொல்வோம் என்று இதுவரை சொல்லி வந்த முதல்-அமைச்சர், இப்போது எதையும் சொல்வது சுலபம், செய்வது கடினம் என்று பேச ஆரம்பித்திருப்பது வியப்பாக இருக்கிறது.

கோர்ட்டுக்கு இழுப்பார்கள்

கர்நாடகத்தில் தேர்தல் நடந்து முடிந்து அங்கே புதிய அரசு பதவியேற்கும் வரையில் போராட்டத்தை கைவிடுவோம், அமைதி காப்போம் என்று முதல்-அமைச்சர் திடீரென்று அறிவிப்பு செய்திருக்கிறார்.

இது சரியா? தவறா? என்ற சர்ச்சைக்குள் செல்ல விரும்பவில்லை. ஆனால், கர்நாடகத்தில் தேர்தல் முடிந்து அங்கே யார் ஆட்சிக்கு வந்தாலும், ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பார்களா? அதற்கு என்ன உத்தரவாதம்? இன்றைக்கு வெற்றிக்களிப்பில் இருக்கும் எஸ்.எம்.கிருஷ்ணா போன்றவர்கள் பதவிக்கு வந்ததும், இந்தப்பிரச்சினையை சுப்ரீம்கோர்ட்டு எடுத்து செல்ல மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? இதற்கு முன்னர் சுப்ரீம் கோர்ட்டு போய் பிரச்சினையை இழுத்தடித்த வரலாறுகளுக்கு சொந்தக்காரர் தானே அவர்.

தேர்தலுக்கு பிறகு ஆட்சிக்கு வந்ததும், ஒகேனக்கல் பிரச்சினையை சுப்ரீம்கோர்ட்டுக்கு எடுத்து சென்று முடிந்த மட்டும் இன்னும் பல ஆண்டுகளுக்கு இந்த திட்டத்தைக் கிடப்பில் போட முயற்சிக்க மாட்டார் என்பதற்கு என்ன உத்திரவாதம்? இவைகளுக்கெல்லாம் உறுதிமொழி பெறப்பட்டு இருக்கிறதா? இந்த கேள்விகளுக்கெல்லாம் காலம் தான் பதில் சொல்ல வேண்டும். ஏனெனில் காலம் தான் சரியான நீதிதேவன்.கலைஞர் பதில்
ராமதாசுக்கு பதில்

கேள்வி:- ஒகேனக்கல் குடிநீர் திட்டம் பற்றி பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் மற்ற எதிர்க்கட்சிக்களும் உங்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்ற நிலையில் உங்களுடைய தோழமைக் கட்சியான பா.ம.க.வின் நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் 1998-ம் ஆண்டிலேயே மத்திய அரசின் ஏற்பளிப்பும், கர்நாடக மாநில அரசின் ஒப்புதலும் கிடைத்து விட்ட போதிலும், அதனை உடனடியாக நிறைவேற்றி முடிக்காமல், பத்தாண்டு காலம் கிடப்பிலே போட்டது ஏன் என்று குறை சொல்லியிருக்கிறாரே?

பதில்:- உடனடியாக நிறைவேற்றப்படவில்லை என்ற ஆதங்கத்தில் அவர் அவ்வாறு தெரிவித்திருக்கலாம். ஆனாலும் அவருடைய அந்தக் கேள்விக்கும் பதிலளிக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது.

ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவழிக்கப்பட வேண்டிய திட்டம் அது. நினைத்தவுடன் அத்தகைய ஒரு திட்டத்தை நிறைவேற்றி விட முடியாது. 1997-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பிலே இருந்த போதே, அப்போதைய தர்மபுரி மாவட்டத்தில் இருந்த இரண்டு நகராட்சிகள், 14 பேரூராட்சிகள், 13 ஊராட்சி ஒன்றியங்களில் இருந்த 4,101 குடியிருப்புகளுக்கு காவேரி நீரை ஆதாரமாகக் கொண்ட ஒகேனக்கல் குடிநீர் திட்டத்திற்கு 576 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டு - ஜப்பானிய நிதி உதவி பெறுவதற்காக அந்தத் திட்டம் மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தடையில்லா சான்று

அதே 1997-ம் ஆண்டு ஜூலை மாதத்தில், இந்தக் குடிநீர் திட்டத்துடன் சுகாதார வசதிகளை உள்ளடக்கியதான ஒரு திட்டம் 636 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாற்றம் செய்யப்பட்டு, ஜப்பான் நாட்டு நிதிநிறுவனத்தின் உதவிக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

1998-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் - காவேரி ஆற்றிலிருந்து இத்திட்டத்திற்குத் தேவைப்படும் 1.4 டி.எம்.சி. நீர் எடுப்பதற்கான தடையில்லாச் சான்றினை அளிக்குமாறு மத்திய அரசின் நீர்வள அமைச்சகத்திற்கு விண்ணப்பிக்கப்பட்டது.

29-6-1998 அன்று மத்திய அரசின் நீர்வள அமைச்சகத்தின் செயலாளர், கர்நாடக - தமிழ்நாடு அதிகாரிகளின் கூட்டத்தைக் கூட்டி, இத்திட்டத்திற்கு காவேரியிலிருந்து நீர் எடுப்பது குறித்து கலந்தாலோசித்தார்.

1998-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், மத்திய அரசின் நீர்வள அமைச்சகம், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு காவேரி ஆற்றிலிருந்து 1.4 டி.எம்.சி. தண்ணீரை, தமிழ்நாட்டின் பங்கிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமென்று தடையில்லாச் சான்று வழங்கியது.

ஜப்பான் குழு

1998-ம் ஆண்டு டிசம்பர் மாதம், தர்மபுரி மாவட்டத்தில் விடுபட்டிருந்த மற்றப் பகுதிகளையும் இணைத்து 1008 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் திருத்தி அமைக்கப்பட்டது.

1998-ம் ஆண்டு மே மாதம், பொக்ரானில் நடைபெற்ற அணுசக்தி சோதனையைத் தொடர்ந்து ஜப்பான் நாட்டு நிதிநிறுவனம், இந்திய நாட்டின் எந்தவொரு புதிய திட்டத்திற்கும் நிதி உதவி வழங்குவதை நிறுத்தி வைத்து விட்டது.

2001-ம் ஆண்டு வரை பல்வேறு முயற்சிகளில் நிதி திரட்ட முற்பட்டு முடியாத நிலையில், இத்திட்டத்தை உலக வங்கி போன்ற பிற பன்னாட்டு நிதி நிறுவனங்களிடம் உதவி பெற கோரிக்கை வைக்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதிலும் எந்தவிதமான சாதகமான பதிலும் கிடைக்காத நிலையில், 2005-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், இத்திட்டத்தினை ஜப்பானிய நிதி உதவி பெற ஜப்பானிய நிதி நிறுவனத்திற்கு பரிந்துரைக்குமாறு மத்திய அரசு மீண்டும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

2006-ம் ஆண்டு மே மாதம், மீண்டும் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதும், இத்திட்டத்தை ஜப்பானிய நிதி நிறுவனத்திற்கு நிதி உதவி பெறும் பொருட்டு அனுப்பி வைத்தது. தொடர்ந்து இதிலே தீவிரமாக முயற்சித்ததின் விளைவாக, 2006-ம் ஆண்டு ஜூன் மாதம், ஜப்பானிய நிதி நிறுவனம் இத்திட்டம் குறித்து உண்மை கண்டறியும் குழு ஒன்றை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்தது.

ரூ.1334 கோடி மதிப்பீடு

அதே 2006-ம் ஆண்டு ஜூலை மாதம் 17-ம் நாள், ஜப்பானிய நிதி நிறுவனத்தின் செயல் இயக்குநர் தமிழ்நாட்டிற்கு வருகை தந்து, என்னையும், உள்ளாட்சித் துறை அமைச்சரையும் சந்தித்த போது, இத் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

2007-ம் ஆண்டு ஜனவரி மாதம் - ஜப்பானிய நிதி நிறுவனத்தின் தொடர்புக்குழு தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் திட்டப் பகுதிகளை பார்வையிட்டது.

2007-ம் ஆண்டு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை - ஜப்பானிய நிதி நிறுவனத்தின் பல்வேறு தொழில் நுட்பக் குழுக்கள் இத்திட்டத்தைப் பற்றிய ஆய்வினை மேற்கொண்டன.

2007-ம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ஜப்பானிய நிதிநிறுவனத்தின் இறுதி ஆய்வுக் குழு இத்திட்டம் பற்றிய அறிக்கையை ஆய்வு செய்தது. இதன்படி, இத்திட்டத்தின் மதிப்பீடு ரூபாய் 1,334 கோடி ரூபாயாக உயர்ந்தது.

2008-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இத்திட்டத்தினை ஜப்பான் வங்கியில் நிதி உதவி பெறக்கூடிய திட்டங்களில் ஒன்றாக சேர்க்கப்பட்டது.

அஜாக்கிரதையான முடிவு

2008-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6-ம் தேதி, ஜப்பான் நாட்டுத் தலைநகர் டோக்கியோவில், தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர், ஜப்பான் நிதிநிறுவனத்தின் உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து இத்திட்டத்திற்கான ஒப்புதலை பெற்றார். இதே திங்கள் 26-ம் தேதி நானே நேரில் சென்று இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவினையும் ஆற்றியிருக்கிறேன். (அந்நாள் வரையில் கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என்பதையும் அதற்கான ஆயத்தங்கள் நடைபெறவில்லை என்பதையும் நினைவூட்டுகிறேன்)

இவ்வளவிற்கும் பிறகாவது, பத்தாண்டு காலமாக இத்திட்டத்தைத் தொடராமல் கிடப்பில் போட்டு விட்டதைப் போன்ற குற்றச்சாட்டுகள் கூறப்பட மாட்டாது என்று நம்புகிறேன். இதனால் தான் சில நாட்களுக்கு முன்பே சொல்வது சுலபம், செய்வது கடினம் என்று சொல்லியிருந்தேன்.

இதைத் தான் சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு நிர்வாகத்தில் முடிவுகள் எடுக்கும்போது - `குயிக் டிசிசன்' (விரைவான முடிவு) எடுக்கப்படலாம், `ஹேஸ்டி டிசிசன்' (அஜாக்கிரதையான முடிவு) எடுக்கப்படக் கூடாது என்று சொல்லியிருந்தேன்.

துரோகம் என்கிறார்களே?

கேள்வி:- சொத்துக்கள் சேதமும், வாகனங்கள் தீக்கிரையாவதும், மனித உயிர்களுக்கு ஆபத்து விளைவிப்பதும் - தடுக்கப்பட வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன், ஒகனேக்கல் திட்டத்திற்காக இப்போது நடைபெறும் கிளர்ச்சியை; கர்நாடக மாநிலத் தேர்தல் முடியும் வரையில் நிறுத்தி வைக்க வேண்டுமென்று நமது தமிழக முதல்-அமைச்சர் என்ற முறையில் தாங்கள் விடுத்த வேண்டுகோளை, தமிழ்நாட்டில் சில கட்சியினர் பெரிய துரோகம் என்றும் - சரணாகதி என்றும் - வர்ணித்து அறிக்கை விட்டுள்ளார்களே?

பதில்:- பல ஆண்டுகளுக்கு முன்பு அரியலூரில் ரெயில் கவிழ்ந்து வரலாறு காணாத உயிர்ச் சேதமும், பொருள் சேதமும் ஏற்பட்டது. அந்த வேதனையான சோகச் சூழ்நிலையில் கூட; அரியலூருக்கு அருகில் உள்ள சமூக விரோதிகள், அந்தகார இருட்டில் ஆற்றில் மிதந்த பிணங்களின் கை, காது, கழுத்துக்களில் அணிந்திருந்த நகை நட்டுக்களைத் திருடிக் கொண்டு போனார்கள் என்ற இதயமற்ற செயல்கள் நிறைந்த நிகழ்ச்சிகள் செய்திகளாக வெளிவந்தனவே - அதற்கு இடம் தராமல் இப்போது "விபத்து'' தவிர்க்கப்படுவதை அத்தகைய விஷமிகள் விரும்புவார்களா? விரும்ப மாட்டார்கள்!

அவசரம் ஏன்

மேலும் எனது அறிக்கையில் ஒகனேக்கல் திட்டம் அறவே கைவிடப்படுகிறது என்று சொல்லவில்லை. கர்நாடக மாநிலத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. தற்போது அங்கே முடிவெடுக்கக் கூடிய அளவிற்கு ஒரு அரசு இல்லை. அதனால் ஒரு மாதத்திற்கு இதனை ஒத்திவைக்கலாம் என்று கூறியிருக்கிறேனே தவிர, திட்டமே வேண்டாம் என்று சொல்லிவிடவில்லை.

பேரவையில் அறிவிக்காமல், அனைவரையும் கலந்து பேசாமல் அறிக்கை விடலாமா என்று சிலர் கேட்கிறார்கள். பேரவை மூன்று நாட்களுக்கு தொடர்ந்து விடுமுறை. அனைத்துக் கட்சித் தலைவர்களையும் கலந்து கொண்டு பேரவையில் அறிவிப்பதென்றால், அதற்குள் இரண்டு மாநிலங்களிலும் பல உயிரிழப்புகளும், உடைமை நாசங்களும் ஏற்படுவதற்கு இடம் தந்து விடுவதாக அமைந்து விடும்.

அதற்காக அவசரமாக அந்த அறிக்கை வெளியிடப்பட்டது. அறிக்கை விடுத்த நேரத்தில் கூட நான் ஒகனேக்கல் பிரச்சினையில் அக்கறை காட்டிய அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், உண்ணாநோன்பிருந்த திரையுலகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் எனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்து தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்ச்சியை வரவேற்றிருக்கிறேன் என்பதில் இருந்தே யாரையும் கலந்து கொள்ளக் கூடாது என்ற எண்ணமோ, மமதையோ கிஞ்சிற்றும் எனக்கில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

பாராட்டுகிறேன்

கேள்வி:- வணிகர் சங்க தலைவர்களில் ஒருவரான வெள்ளையன், தங்கள் வேண்டுகோளை மதித்தும் - "ஒகேனக்கல்'' விவகாரத்தில் நீங்கள் கொண்டுள்ள உறுதியை நம்பியும் - அவர் அறிவித்திருந்த ஆர்ப்பாட்டத்தை ஒத்திவைத்துள்ளது பற்றி?

பதில்:- வெள்ளையன் போல என் வேண்டுகோளை மதிப்பது மட்டுமல்ல; ஒகனேக்கல் திட்டம் வர வேண்டும் என்பதில் காட்டுகிற உறுதியையும் நான் பாராட்டாமல் இருக்க முடியுமா? பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.

காகிதப் புலிகள்

கேள்வி:- தமிழர்க்கும், தமிழ்நாட்டுக்கும் தாங்கள் துரோகம் செய்து விட்டதாக பழ.நெடுமாறன் சொல்லுகிறாரே?

பதில்:- நெடுமாறன் போன்றவர்களுக்கு ஜெயலலிதாவின் "பொடா'' பாணி அரசியல் தான் துரோகமற்றதாகத் தெரியும்! அண்ணாவுக்கும் - அடுத்து காமராஜருக்கும் - பின்னர் குமரி அனந்தனுக்கும் - பிறகு மூப்பனாருக்கும் துரோகம் செய்தது "யார்?'' என்று கேட்டால் உண்மையான துரோகத்தின் மொத்த உருவத்தை அடையாளம் காணலாம். பாவம்; புலிகள் பெயர் சொல்லி பல வழிகளில் பொருளீட்டும் காகிதப் புலிகள்!

காங்கிரஸ் நலன் கருதியல்ல

கேள்வி:- காங்கிரஸ் கட்சியின் வேண்டுகோளுக்காகத் தான் தாங்கள் இவ்வாறு முடிவெடுத்திருப்பதாகச் சொல்கிறார்களே?

பதில்:- காங்கிரஸ் கட்சித் தரப்பிலிருந்து யாரும் அப்படிப்பட்ட வேண்டுகோளை என்னிடம் வைக்கவில்லை. இதைப்பற்றி பேசவும் இல்லை. அப்படி ஒரு கட்சியின் நலன் கருதி நான் அந்த அறிவிப்பை செய்யவில்லை. இரண்டு மாநிலங்களிலும் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதை எண்ணி எடுக்கப்பட்ட முடிவுதான் அது. அதாவது மனிதநேய முடிவு - மாநிலங்களின் ஒற்றுமைக்கான முடிவு!

2 Comments:

Anonymous said...

ஏன் சார் அம்மாவின் அறிக்கை கண்ணுல படலையா! அதுக்கு அய்யா கிட்ட இருந்து ஒரே சொதப்பல் !

We The People said...

//அண்ணாவுக்கும் - அடுத்து காமராஜருக்கும் - பின்னர் குமரி அனந்தனுக்கும் - பிறகு மூப்பனாருக்கும் துரோகம் செய்தது "யார்?''//

என்னது ஜெயலலிதா இவர்களுக்குமா துரோகம் செய்திருக்கிறார்!!! ஏங்க உண்மையா??