பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, April 22, 2008

விவேகானந்தர் இல்லத்தை அரசு கையகப்படுத்துகிறது...

சென்னை திருவல்லிக்கேணி பேருந்துகள் இனிமேல் வி.இல்லம் என்ற போர்ட் இல்லாமல் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை.

விவேகானந்தர் இல்லத்தை அரசு கையகப்படுத்தும் என்று தெரிகிறது. இதற்கு பதில் அங்கு மத்திய அரசு செம்மொழி ஆய்வு மையத்தை சென்னையில் நிறுவவுள்ளதாம். இவர்களுக்கு வேற இடமே கிடைக்கவில்லையா ?

இதுவே 'அண்ணா இல்லமாக' அல்லது அண்ணாவின் ஒன்றுவிட்ட பெரியப்பாவின் இல்லமாக இருந்தால் இது போல் செய்ய மாட்டார்கள். வாழ்க !

இந்த கட்டடத்தை பற்றி சில குறிப்புக்கள் கீழே


சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள விவேகானந்தர் இல்லத்தை வரும் 24ம் தேதிக்குள் காலி செய்து விடுமாறு, ராமகிருஷ்ணா மடத்துக்கு தமிழக அரசுத் தரப்பில் கெடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் ராமகிருஷ்ணா மட நிர்வாகிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

முன்பு கெர்னன் கோட்டை என்றும், பின்னர் ஐஸ் ஹவுஸ் என்றும் அழைக்கப்பட்ட பழமையான கட்டடம்தான் விவேகானந்தர் இல்லம். வங்கக் கடலை நோக்கி, மெரீனா கடற்கரையோரம் அமைந்திருக்கும் இந்த எழில் மிகு கட்டடம் வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது.

1897ல் அமெரிக்காவின் சிகாகோ நடந்த சர்வதேச மாநாட்டில் பேசிவிட்டு நாடு திரும்பிய விவேகானந்தர் இந்த கட்டடத்தில்தான் பிப்ரவரி 6 முதல் 15ம் தேதி வரை 9 நாட்கள் தங்கியிருந்தார்.

இங்கிலாந்து ஆட்சிக் காலத்தில் கப்பலில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஐஸ் கட்டிகள் இந்த கட்டிடத்துக்கு கொண்டு வரப்பட்டு இருப்பு வைக்கப்பட்டது. அதன் பின்னர் நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும். இதனால்தான் இதற்கு ஐஸ் ஹவுஸ் என்ற பெயர் வந்தது.

விவேகானந்தர் இந்த இல்லத்திற்கு வந்து நூறாண்டுகள் ஆனதையொட்டி 1999ம் ஆண்டு, விவேகானந்தர் இல்லத்தை, ராமகிருஷ்ணா மடத்திற்கு 10 ஆண்டு குத்தகைக்கு விட்டது அப்போதைய திமுக அரசு. இந்த இல்லத்தில் விவேகானந்தர் குறித்த கண்காட்சியகத்தை நடத்த வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.

அதன்படி அன்று முதல் இங்கு விவேகானந்தர் குறித்த நிரந்தர கலாச்சாரக் கண்காட்சி இடம் பெற்றுள்ளது. ரூ. 65 லட்சம் செலவில் இந்தக் கண்காட்சிக் கூடத்தை ராமகிருஷ்ணா மடம் அமைத்துள்ளது.

கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த கண்காட்சிக் கூடம் நல்ல சிந்தனை விருந்தாக அமைந்துள்ளது. பத்து ஆண்டு குத்தகை முடிய இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில் மேலும் 30 ஆண்டு குத்தகைக்கு இந்த கட்டடத்தைக் கேட்க ராமகிருஷ்ண மடம் தீர்மானித்திருந்தது.

ஆனால் இப்போது விவேகானந்தர் இல்லத்தைக் காலி செய்யுமாறு தற்போது நிர்ப்பந்தம் எழுந்துள்ளதாம்.

கடந்த 14ம் தேதி மாலை 6.15 மணிக்கு பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் அன்பழகன், கண்காணிப்புப் பொறியாளர் அண்ணாதுரை ஆகியோர் விவேகானந்தா இல்லத்திற்கு வந்து, ராமகிருஷ்ணா மட நிர்வாகி சுவாமி சகஜானந்தாவை சந்தித்து, கிரீன்வேஸ் சாலையில் உங்களுக்கு மாற்று இடம் தருகிறோம். இதை காலி செய்யுங்கள் என்று கூறியுள்ளனர்.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் ராமகிருஷ்ணா மட நிர்வாகிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். சட்டப்பூர்வ ஆலோசனைகளையும் அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

மத்திய அரசு செம்மொழி ஆய்வு மையத்தை சென்னையில் நிறுவவுள்ளது. இந்த மையத்தை விவேகானந்தர் இல்லத்தில் அமைக்க அரசு விரும்புவதாக தெரிகிறது. எனவேதான் ராமகிருஷ்ணா மடத்தை, இடத்தை காலி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே 100 ஆண்டுகளுக்கு முன்பு இங்குதான் ராமகிருஷ்ணா மடம் செயல்பட்டு வந்தது. பின்னர் 1906ம் ஆண்டு விவேகானந்தர் இல்லம் ஏலத்தில் விடப்பட்டு விட்டது. இதையடுத்து இந்த இடத்தைக் காலி செய்து விட்டு தற்போது மயிலாப்பூரில் உள்ள இடத்திற்கு இடம் பெயர்ந்தது. இந்த நிலையில் மீண்டும் ஒரு சிக்கலை விவேகானந்தர் இல்லத்தில் சந்தித்துள்ளது ராமகிருஷ்ணா மடம்.வி.இல்லத்தை பற்றி சில குறிப்புகள்.

சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்திருக்கும் "விவேகானந்தர் இல்லம்" பற்றி ஸ்ரீராமகிருஷ்ண விஸயம் ஆசிரியர் சுவாமி கமலாத்மானந்தரிடம் ஒரு நேர்முக உரையாடல்:

இந்த விவேகானந்தர் இல்லத்திற்கும், விவேகானந்தருக்கும் என்ன தொடர்பு?

தொடர்பு நிறையவே இருக்கிறது. இதைப் பற்றி நான் உங்களுக்குக் கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல வேண்டும்.

சுவாமி விவேகானந்தர் 1892-ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக வந்தார். அப்போதுதான் அவர் 1892-ஆம் ஆண்டு டிசம்பர் கடைசியில், கன்னியாகுமரியில் இப்போது விவேகானந்தர் நினைவுச் சின்னம் இருக்கும் குன்றின் மீது அமர்ந்து தியானம் செய்தார்.

அங்கிருந்து அவர் மதுரைக்கு வந்தபோது, ராமநாதபுர அரசர் பாஜ்கர சேதுபதியைச் சந்தித்தார்.

ராமேஜ்வரம், பாண்டிச்சேரி வழியாக சுவாமி விவேகானந்தர் சென்னைக்கு வந்தார்.

சென்னையில் அவர் மயிலாப்பூரில் தங்கினார்.

சென்னையில் அவருக்குச் சீடர்கள் பலர் உருவானார்கள்.

சென்னையில் இருந்தபோதுதான் சுவாமி விவேகானந்தர், அமெரிக்காவில் நடைபெற இருந்த சிகாகோ சர்வ சமயப் பேரவையில் கலந்து கொள்வதுப் பற்றி இறுதி முடிவெடுத்தார்.

சென்னை அன்பர்கள் தந்த ஊக்கத்தின் பேரில் அவர் அமெரிக்கா சென்றார்.

1893-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் நாள் சிகாகோவில் சர்வ சமயப் பேரவை நடைபெற்றது. அதில் இந்து மதத்தின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டு சுவாமி விவேகானந்தர் நிகழ்த்திய சொற்பொழிவுகள் அவருக்கு உலகளாவிய பெரும் புகழைத் தேடித் தந்தன.

அதைத் தொடர்ந்து அவர் சுமார் 4 ஆண்டுகள் மேலை நாடுகளில் தங்கி, வேதாந்தப் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பிறகு அவர் 1897-ஆம் ஆண்டு ஸனவரி 26-ஆம் நாள் இரண்டாம் முறையாகத் தமிழ் நாட்டிற்கு வந்தார்.

அப்போது அவர் பாம்பன், ராமேஜ்வரம், ராமநாதபுரம், மானாமதுரை, பரமக்குடி, மதுரை, கும்பகோணம் ஆகிய ஊர்களில் சொற்பொழிவுகள் நிகழ்த்தியபடியே சென்னைக்கு வந்தார்.

சென்னைக்கு இரண்டாம் முறை வந்தபோது அவர் திருவல்லிக்கேணியிலுள்ள 'ஐஸ் ஹவுஸ்' என்ற கட்டிடத்தில் தங்கினார்.

அந்தக் கட்டிடம்தான் இப்போது 'விவேகானந்தர் இல்லம்' என்று அழைக்கப்படுகிறது.


விவேகானந்தர் இல்லம்... 1897-ஆம் ஆண்டு பிப்ரவரி 6 முதல் 14-ஆம் தேதி வரையில் ஒன்பது நாட்கள் சுவாமி விவேகானந்தர் இந்த ஐஜ் ஹவுஜ் கட்டிடத்தில் தங்கியிருந்தார்.

அப்போது அவர் சென்னையில் புகழ் பெற்ற ஆறு சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்.


... புதுப்பிக்கப்படுகிறது

இந்தக் கட்டிடத்திற்கு 'ஐஸ் ஹவுஸ்'என்ற பெயர் எதனால் ஏற்பட்டது?

நம்நாடு அந்நியர் ஆதிக்கத்தில் இருந்தபோது கப்பலிருந்து வரும் ஐஜ் பார்களை அடுக்கி வைக்க ஏற்ற வகையில் இக்கட்டிடத்தை ஐஜ் கிடங்காகப் பயன்படுத்தி வந்தனர். அதனாலேயே "ஐஜ் ஹவுஜ்" என்ற பெயர் ஏற்பட்டது.

"விவேகானந்தர் இல்லமாக" எப்போது இக்கட்டிடத்தின் பெயர் மாற்றப்பட்டது?

விவேகானந்தர் அங்கு தங்கியிருந்தபோது அந்தக் கட்டிடத்திற்கு "ஐஜ் ஹவுஜ்" என்றுதான் பெயர். பின்னர் விவேகானந்தரின் சீடரான பிலிகிரி ஐயங்காரால் வாங்கப்பட்டு "காஜில் கெர்னன்" (கருணை இல்லம்) என்ற பெயரைப் பெற்றது.

1963-ஆம் வருடம் விவேகானந்தரின் நூற்றாண்டு விழா சமயத்தில், இந்தக் கட்டிடத்திற்கு "விவேகானந்தர் இல்லம்" என்று தமிழ்நாடு அரசு பெயர் சூட்டியது.

விவேகானந்தரின் சென்னை விஸயமே ஸ்ரீராமகிருஷ்ணமடம் தமிழ்நாட்டில் ஆரம்பிக்க முக்கிய காரணமாயிற்று-இல்லையா?

ஆம். 1897-ஆம்ஆண்டு சுவாமி விவேகானந்தர் ஐஜ் ஹவுஜ் கட்டிடத்தில் தங்கியிருந்தபோது அவரிடம் சென்னை அன்பர்கள், "சென்னையில் ஸ்ரீராமகிருஷ்ண மடம் ஆரம்பியுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்கள்.

அவர்களின் வேண்டுகோளை விவேகானந்தர் ஏற்றுக் கொண்டார்.

அதன்படி விவேகானந்தர் கல்கத்தா சென்றதும், ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடர்களில் ஒருவரான சுவாமி ராமகிருஷ்ணானந்தரைச் சென்னைக்கு அனுப்பினார்.

சுவாமி ராமகிருஷ்ணானந்தர் 1897-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சென்னையில் ஸ்ரீராமகிருஷ்ண மடம் நிறுவினார்.

1897-ஆம் ஆண்டு முதல் 1906 வரையில் சுமார் 10 ஆண்டுகள், காஜில் கெர்னன் கட்டிடத்தில்தான் ஸ்ரீராமகிருஷ்ண மடம் இயங்கி வந்தது.

விவேகானந்தர் இல்லத்திற்கு முக்கியமாக வருகை புரிந்தவர்களைப் பற்றிக் கூறவும்.

அங்கு ஸ்ரீராமகிருஷ்ண மடம் இயங்கி வந்தபோது ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடர்களான சுவாமி சிவானந்தர், சுவாமி நிரஞ்சனானந்தர், சுவாமி திரிகுணாதீதானந்தர், சுவாமி அபேதானந்தர் ஆகியவர்கள் வந்திருக்கிறார்கள்.

இவர்களைத் தவிர ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் மூத்தத் துறவிகளான மகான்கள் பலர் அங்கு வந்திருக்கிறார்கள். சகோதரி நிவேதிதாவும் அங்கு வந்திருக்கிறார்.

ஸ்ரீசாரதா தேவியாரின் சீடர்கள், சுவாமி விவேகானந்தரின் சீடர்கள் உட்பட பெரியோர்கள் பலர் காஜில் கெர்னனுக்கு வந்திருக்கிறார்கள்.

ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் சார்பில் இக்கட்டிடத்தில் நடைபெற்ற முக்கியமான விழாவைப் பற்றிக் கூறவும்.

1902-ஆம் ஆண்டு ஸூலை 4-ஆம் நாள் சுவாமி விவேகானந்தர், பேலூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் மகாசமாதி அடைந்தார். அதற்கு அடுத்தாண்டு அதாவது, 1903-ஆம் ஆண்டு ஸனவரி மாதம் காஜில் கெர்னன் கட்டிடத்தில்தான் முதல் முறையாக "விவேகானந்தர் ஸயந்தி" கொண்டாடப்பட்டது.

இப்போது உலகில் எத்தனையோ இடங்களில் எவ்வளவோ பேர் விவேகானந்த ஸயந்தியைக் கொண்டாடுகிறார்கள்.

ஆனால் உலகில் முதல் முதலில் விவேகானந்த ஸயந்தி கொண்டாடப்பட்ட இடம் என்ற பெருமை காஜில் கெர்னனுக்கு (கருணை இல்லத்திற்கு) மட்டும் உண்டு.

ரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தக் கட்டிடத்தை ஸ்ரீராமகிருஷ்ண மடம் ஏன் இவ்வளவு காலமாகக் கவனிக்காமல் விட்டிருந்தது? இப்போதுதானே நீங்கள் இந்த விவேகானந்தர் இல்லத்தின் கட்டிடத்தைச் சீரமைக்கும் பணியை ஆரம்பித்திருக்கிறீர்கள்?

1897-ல் காஜில் கெர்னன் கட்டிடத்தில் மடம் ஆரம்பிக்கப்பட்டதே தவிர, அந்தக் கட்டிடம் ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்குச் சொந்தமான கட்டிடம் அல்ல.

1906-ஆம் ஆண்டு காஜில் கெர்னன் கட்டிடம் ஏலத்திற்கு வந்தது. அப்போது அந்தக் கட்டிடத்தை விலைக்கு வாங்கக் கூடிய பண வசதி ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்கு இல்லை.

1906-ஆம் ஆண்டு விவேகானந்தர் இல்லத்திலிருந்து இப்போது மயிலாப்பூரில் இருக்கும் இடத்திற்கு மடம் மாறியது.

1963-ஆம் ஆண்டு விவேகானந்தர் நூற்றாண்டு விழா இந்தியா முழுவதும் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. அப்போது விவேகானந்தர் இல்லத்தின் அருகிலிருக்கும் விவேகானந்தர் சிலையை ஸ்ரீராமகிருஷ்ண மடம் நிறுவியது.

அந்த ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளை அந்தச் சிலையின் அருகில் ஸ்ரீராமகிருஷ்ண மடம் கொண்டாடி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகளும், மடத்தின் பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொள்வது வழக்கம்.

பிறகு 1986-ஆம் ஆண்டு இந்திய அரசு சுவாமி விவேகானந்தர் பிறந்த ஸனவரி 12-ஆம் தேதியை 'தேசிய இளைஞர் தினம்' என்று அறிவித்தது. அப்போது முதல் ஒவ்வொரு வருடமும் ஸனவரி 12-ஆம் தேதியன்று, விவேகானந்தர் இல்லத்தின் அருகிலிருக்கும் விவேகானந்தர் சிலை அருகில், விவேகானந்த ஸயந்தியை தேசிய இளைஞர் தினமாக மாணவ மாணவிகளுக்காக ஸ்ரீராமகிருஷ்ண மடம் கொண்டாடி வருகிறது.

அன்றைய தினம் பல்வேறு கல்வி நிறுவனங்களையும் சேர்ந்த மாணவ மாணவிகள் நிறைய பேர் அங்கு கூடுவார்கள். அவர்களுக்கு ஸ்ரீராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த துறவிகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் சொற்பொழிவுகள் நிகழ்த்தும் வழக்கம் இருந்து வருகிறது.

விவேகானந்தர் இல்லத்தின் கட்டிடம் தமிழக அரசுக்குச் சொந்தமானது. அந்த இடத்தை நாங்கள் ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்குத் தரும்படி கடந்த பத்து ஆண்டுகளாகவே தமிழ்நாடு அரசிடம் அவ்வப்போது கேட்டுக் கொண்டிருந்தோம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதாவது, 1997-ஆம் ஆண்டு விவேகானந்தர் தாயகம் திரும்பிய நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டபோது, தமிழக அரசு விவேகானந்தர் இல்லத்தை ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்கு வழங்கியது.

அரசு வழங்கிய உடனேயே விவேகானந்தர் இல்லத்தின் கட்டிடத்தைச் சீரமைக்கும் பணியை ஸ்ரீராமகிருஷ்ண மடம் ஏன் மேற்கொள்ளவில்லை?

தமிழக அரசு விவேகானந்தர் இல்லம் கட்டிடத்தை மட்டும்தான் ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்கு வழங்கியது.

விவேகானந்தர் இல்லத்தைச் சேர்ந்த நிலப்பகுதியையும் தமிழக அரசு கொடுத்தால்தான், அங்கு இல்லத்தின் கட்டிடத்தைச் சீரமைக்கும் பணியை ஆரம்பிக்க முடியும் என்ற நிலை இருந்து வந்தது.

எனவே ஸ்ரீராமகிருஷ்ண மடம், இல்லத்தின் அருகிலிருக்கும் பகுதியையும் தரும்படி தமிழக அரசிடம் விண்ணப்பித்தது.

சுமார் இரண்டு ஆண்டுகளாகவே இது தொடர்பாக ஸ்ரீராமகிருஷ்ண மடம் தமிழக அரசுடன் தொடர்பு கொண்டிருந்தது.

இப்போது 1998 டிசம்பர் மாதத்தில்தான் அந்த இடத்தை தமிழ் நாடு அரசு ஸ்ரீராமகிருஷ்ண மடத்திற்கு வழங்கியது.

அப்படி டிசம்பரில் எங்களுக்கு அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து, ஜனவரி மாதமே விவேகானந்தர் இல்லத்தைச் சீரமைக்கும் பணியை ஆரம்பித்தோம்.

"விவேகானந்தர் இல்லம்" கட்டிடம் முதன்முதலில் எப்போது கட்டப்பட்டது? இக்கட்டிடத்தைச் சீரமைப்பதற்கு எவ்வளவு காலமாகும்? சுமாராக எவ்வளவு செலவாகும்?

இந்தக் கட்டிடம் 1842-ஆம் ஆண்டு கட்டப்பட்ட கட்டிடமாகும். இப்போது இங்கு கடந்த மூன்று மாதங்களாகக் கட்டிடத்தைச் சீரமைக்கும் பணியைச் செய்து கொண்டிருக்கிறோம்.

இன்னும் ஆறு மாதத்தில் கட்டிடம் முழுவதையும் சீரமைக்கும் பணி முடிவடைந்துவிடும்.

இந்தப் பணி எல்லா விதத்திலும் சிறப்பாக நடந்தேறுவதற்கு சுமார் 1.5 கோடி ரூபாய் செலவாகும் என்று மதிப்பிடப் பட்டிருக்கிறது. இதற்கு பொது மக்களைத் தாராளமாக நன்கொடை தந்து உதவும்படி கேட்டுக் கொள்கிறோம்.

விவேகானந்தர் இல்லக் கட்டிடம் சீரமைக்கப்பட்ட பிறகு இந்த இடத்தை ஸ்ரீராமகிருஷ்ண மடம் எப்படி பயன்படுத்த இருக்கிறது?

விவேகானந்தர் இல்லத்தை இந்திய கலாசார மையம் ஆக்குவதற்கு ஸ்ரீராமகிருஷ்ண மடம் பல்வேறு திட்டங்களை வகுத்திருக்கிறது.

இந்த இல்லம் சென்னை மாநகரத்தில் விவேகானந்தருக்கு ஒரு சிறந்த நினைவுச் சின்னமாக அமைய இருக்கிறது.

இங்கு சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை, அவர் உலகிற்கு வழங்கிய முக்கியச் செய்திகள் ஆகியவற்றை விளக்கும் ஒரு புகைப்படக் கண்காட்சியை அமைக்கயிருக்கிறோம்.

இங்கு விவேகானந்தரின் வாழ்க்கை, அவர் உலகிற்கு வழங்கிய முக்கியச் செய்திகள் ஆகியவற்றை விளக்கும் ஒரு புகைப்படக் கண்காட்சியை அமைக்கயிருக்கிறோம்.

இங்கு விவேகானந்தரின் கருத்துகள் ஆடியோ, வீடியோ கேசட்டுகள் மூலம் விளக்கப்படும்.

அதோடு இங்கு இளைஞர்களுக்கு இந்தியப் பாரம்பரியத்தின் கல்வியும், பயிற்சியும் அளிக்க இருக்கிறோம்.

சென்னையின் பெருமைக்கு மேலும் ஒரு பெருமையாக இந்த விவேகானந்தர் இல்லம் அமைய இருக்கிறது.

இந்தப் பணி சிறந்த முறையில் அமைந்து, நாட்டு மக்களுக்குப் பல விதங்களிலும் பயன்படுவதற்கு இறைவனிடம் பிரார்த்தனை செய்யும்படி உங்கள் எல்லோரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
( பேட்டி வருடம் : 1999 )தினமணி செய்தி

சென்னை விவேகானந்தர் இல்லத்தை காலி செய்ய அரசு நெருக்கடி!

சென்னை, ஏப். 21: சென்னை மெரீனா கடலோரம் கம்பீரமாகக் காட்சி தரும் விவேகானந்தர் இல்லத்தை இம் மாதம் 24-ம் தேதி வியாழக்கிழ மைக்குள் காலி செய்துவிட்டு, இடத்தைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு ராமகிருஷ்ண மடத்தைத் தமிழக அரசு மறைமுகமாக வற்புறுத்துவதா கத் தெரிகிறது.

"ஐஸ்-ஹவுஸ்' என்று அழைக்கப்பட்ட பழங்காலத்திய அந்த கட்டடத்தில்தான் சுவாமி விவேகானந்தர், 1897-ல் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடந்த சர்வதேச மத மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு நாடு திரும்பிய பிறகு பிப்ரவரி 6 முதல் 15-ம் தேதி வரை 9 நாள்கள் தங்கியிருந் தார்.

"கெர்னான் கேசல்' என்று அந்த கட்டடத்துக்குப் பெயர். பிரிட்டிஷார் காலத்தில், வெள்ளைக்கார துரைமார்களுக்காகக் கப்பலில் கொண்டுவந்த ஐஸ் கட்டிகளை முதலில் அந்தக் கட்டடத்தில் இறக்கி வைத்து, பிறகு நகரின் பல பாகங்களுக்கு அனுப்பிவந்தனர். எனவே அந்த கட்டடத்துக்கு "ஐஸ்-ஹவுஸ்' என்ற பெயரே பின்னாளில் நிலைத்தது. இவ்விதம் வரலாற்றுடன் தொடர்புள்ள அந்த கட்டடத்தை ராமகிருஷ்ண மடத்தாரிடம் ஒப்படைப்பதே பொருத்தமான செயல் என்று கருதி 1997-ல் தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி நடவடிக்கை எடுத்தார்.

விவேகானந்தரின் போதனை களை எடுத்துக்காட்டும் வகையில் ஓவியங்களும் விளக்கங்களும் கொண்ட அருங்காட்சியகமாக இந்த இல்லத்தைப் பராமரிக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு ராமகிருஷ்ண மடத்துக்கு இந்த கட்டடம் 1997 பிப்ரவரி 24-ல் குத்தகைக்கு தரப்பட்டது. அவர்களும் அவ்விதமே அதை புதுப்பித்து, 1999 டிசம்பர் 20-ம் தேதியிலிருந்து பொதுமக்கள் பார்வையிட அனுமதித்தனர். ஒரு மாதம் கழித்து, பத்தாண்டு குத்தகை என்று மடத்தாருக்கு அரசிடமிருந்து உரிய கடித மும் அனுப்பப்பட்டது. அதன்படி 2010 வரை ராமகிருஷ்ண மடத்துக்கு குத்தகை உரிமை இருக்கிறது.

விவேகானந்தர் இல்லம் தங்கள் வசம் ஒப்படைக்கப்பட்ட பிறகு அங்கு நிரந்தர காட்சிக்கூடம் வைக்க ராமகிருஷ்ண மடம் ரூ.65 லட்சத் தைத் திரட்டியது. அத்துடன் ரூ.30 லட்சத்தைத் தொகுப்பு நிதியாகவும் ஒதுக்கியது. இப்போது அந்த இல் லம் சென்னைவாசிகளை மட்டும் அல்ல, தமிழ்நாட்டின் பிற ஊர்க்கா ரர்களையும் பிற மாநிலத்தவரையும் வெளிநாட்டவரையும் ஈர்த்து வருகி றது.

2010-ம் ஆண்டுக்குப் பிறகு, மேலும் 30 ஆண்டுகளுக்குத் தங்களுக்கு இந்த இடம் குத்தகைக்குத் தரப்படும் என்று நம்பியிருந்த ராமகி ருஷ்ண மடத்தாருக்கு திடீர் அதிர்ச்சி; அரசு தரப்பிலிருந்து கண் காணிப்புப் பொறியாளர் அன்பழ கன், செயற்பொறியாளர் அண்ணா துரை ஆகிய இருவரும், இம் மாதம் 4-ம் தேதி மாலை 6.15 மணிக்கு ராமகிருஷ்ண மடத்துக்குச் சென்று சுவாமி சகஜானந்தரைச் சந்தித்தனர்.

""விவேகானந்தர் இல்லத்தை கிரீன் வேஸ் சாலையில் உள்ள வேறு ஏதா வது கட்டடத்துக்கு மாற்றிக் கொள்ள வேண்டும்'' என்றும், அதற் கேற்ப மாற்று பங்களாவைத் தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் தெரி வித்தனர்.

தமிழக முதல்வருக்கும் ராமகிருஷ்ண மடத்துக்கும் நெருக்கமான ஒரு தொழிலதிபர் மீண்டும் சுவாமி ஜியைத் தொடர்புகொண்டு, "ஏப்ரல் 24-ம் தேதிக்குள் இடத்தைக் காலி செய்து கொடுத்துவிடுங்கள்' என்று ஆலோசனை கூறினார்.

விவேகானந்தர் இல்லத்தில் தமிழ் செம்மொழி மையத்தை நிறுவ திமுக தலைமை விரும்புவதாகவும், அதற் காகத்தான் இந்தக் கட்டடத்தைக் கையகப்படுத்த விரும்புவதாகவும் தெரிகிறது. செம்மொழி மையத்தை நிறுவ வேறு பல இடங்கள் இருக்கும்போது, விவேகானந்தர் இல்லம் ஏன் குறி வைக்கப்படுகிறது என்பது தான் பலரின் கேள்வியாக இருக்கி றது.

பாரம்பரியக் கட்டடமான விவேகானந்தர் இல்லம் இடிக்கப்பட்டு அதே இடத்தில் புதிய அடுக்குமா டிக் கட்டடம் எழுப்பப்படக்கூடும் என்ற சந்தேகமும் பலருக்கு இருக்கிறது.

இந்த நெருக்கடியிலிருந்து மீள, அடுத்து என்ன செய்வது என்று சட்ட நிபுணர்களின் ஆலோசனையை ராமகிருஷ்ண மடம் நாடியிருக்கிறது.

விவேகானந்தர் இல்லம் இடிக்கப்பட்டு அதே இடத்தில் புதிய அடுக்குமாடிக் கட்டடம் எழுப்பப்படக்கூடும் என்ற சந்தேகமும் பலருக்கு இருக்கிறது.6 Comments:

senthil said...

விவேகானந்தர் உட்கார்ந்த இடம், நின்ற இடம், படுத்த இடம் எல்லாம் ராமகிருஷ்ண மடத்திற்கு எழுதித் தரவேண்டும் என்றால் இந்தியாவில் பாதியை எழுதி வைத்து விட வேண்டியது தான்.. அது கூட பரவாயில்லை சிகாகோ வில் அவர் பேசிய இடத்தையும் கூட ராமகிருஷ்ண மடம் கேட்குமா? அதற்கு அமெரிக்க அரசு சம்மதிக்க வேண்டுமே? - அப்படி தரவில்லை என்றால் அதற்கும் கருணாநிதி மேல் பழியைப் போட்டு விட வேண்டியதுதான்.

paanmai said...

@செந்தில்

அப்படியானால், திரு. எம்.ஜி.ஆர், அறிஞர் அண்ணா நினைவகங்களையும் இடித்துவிடலாமே ?? சம்மதமா ??

Tharuthalai said...

இந்த விவேக், தமிழ்நாடு வந்தப்ப, மணோன்மனியம் சுந்தரத்த "நீர் என்ன கோத்ரம்?"னு கேட்டாராமே? நிஜமா?

விவேக்க பொதைச்ச இடத்த வேணும்னா நினைவிடமா விட்டுத்தரலாம். ம.கோ.ரா, ராஜகோபாலன் -இவங்க தங்குன இடம் எல்லாம் நினைவு இடம்னா தமிழ் நாட்டுல ஒருத்தருக்கு கூட வீடு இருக்காது.

-------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'08)

Raam said...

சரி உங்களுக்கு தமிழ வளர்க்க வேற இடம் கிடைகலையா ?
இந்தியாவின் பெருமையை பேசிய ஒரு உத்தமர் நினைவிடம் அல்லவா இது?
அண்ணா சாலைல அண்ணா அறிவாலயம் னு ஒரு பெரிய கட்டிடம் இருக்கே? அங்க தமிழ வளர்க்க வேண்டியது தான?
@ தறுதல.. ரொம்ப நாள் இல்ல தமிழ் நாட்டுல நெசமாவே யாருக்கும் வீடு இருக்காது.. இப்பிடி எல்லாம் குடும்ப சொத்தா மாறினா..

Anonymous said...

"தமிழர்கள் ஹிந்துக்களே" என்று நிறுவும் சின்னம் விவேகானந்தர் இல்லம். ஹிந்து மதத்தின் தமிழ் வடிவை அகற்ற ஆபிரகாமிய நாசவாதிகள் விழைகின்றனர். கைக்கூலியான திராவிட கும்பல்கள், விவேகானந்தரை உலகிற்கு அறிமுகப்படுத்தியது தமிழர்களே என்ற உண்மையை அழிக்க விரும்புகின்றன. விவேகானந்தர் அமெரிக்கா செல்ல ஊக்கம் காட்டி அவரால் "தீரம் மிகு ஹிந்துக்கள்" என பாராட்டப்பட்டவர்கள் தமிழர்கள். விவேகானந்தர் பாராட்டிய தீரம் மிகு தெய்வீகத் தமிழர்களே, விழித்தெழுங்கள் ! தெய்வீக தமிழ் அருந்தி திராவிட இனவாத நஞ்சை அகற்றுங்கள் !

தீபக் வாசுதேவன் said...

"விநாச காலே விபரீத புத்தி" என்று சான்றோர் கூறுவதற்கிணங்க கருணாநிதியின் கொள்கைகள் நாட்டை சுடுகாடாக ஆக்கி விடுமோ என்ற அச்சம் வருகிறது. எத்தனை சீக்கிரம் தமிழகத்தில் 356 பிரயோகம் செய்கிறார்களோ, அவ்வளவு நன்மை.