பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, April 23, 2008

விவேகானந்தர் இல்லம் - ஜெ, சோ கருத்து

விவேகானந்த இல்லம் குறித்து ஜெ, சோ, சரத்குமார், நெல்லை கண்ணன், இல.கணேசன், அர்ஜுன் சம்பத், எஸ்.வி.சேகர் மற்றும் பலர்... கருத்து

ஜெயலலிதா
கனிமொழி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்காக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தை கருணாநிதி அபகரிக்க முயற்சி செய்வதாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழ் செம்மொழி மையத்தில் கனிமொழி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு முக்கிய பொறுப்புகள் தந்து அதன் மூலம் விவேகானந்தர் இல்லத்தை தனது குடும்ப சொத்தாக்க கருணாநிதி முயற்சி செய்து வருகிறார்.

இந்தியத் திருநாட்டின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தியவர் சுவாமி விவேகானந்தர். சிகாகோ மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் உரையாற்றிய பிறகு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள "ஐஸ் ஹவுஸ்' என்ற இடத்தில் 10 நாட்கள் தங்கியிருந்தார்.

அந்த இடத்தில் சுவாமி விவேகானந்தரின் போதனைகளை எடுத்துக்காட்டும் வகையில் ஓவியங்களும், விளக்கங்களும் கொண்ட அருங்காட்சியகம் அமைக்க, தமிழக அரசு அந்த இடத்தை ராமகிருஷ்ண மடத்துக்கு குத்தகைக்கு கொடுத்தது.

பொதுமக்களிடம் ரூ. 65 லட்சம் நிதி வசூலித்தும், மடத்தின் நிதியிலிருந்து ரூ. 30 லட்சம் செலவிட்டும் அந்தப் பணியை ராமகிருஷ்ண மடம் செய்து முடித்தது. "விவேகானந்தர் இல்லம்' என்று அழைக்கப்படும் அந்த இடம் தற்போது சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.

இப்படிப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க விவேகானந்தர் இல்லத்தை போற்றிப் பாதுகாக்க வேண்டியது நம் அனைவரது கடமையாகும். செம்மொழி ஆய்வு மையம் அமைக்க அந்த இடம் தேவைப்படுகிறது என்றும், விவேகானந்தர் இல்லத்தை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வேறு கட்டடத்துக்கு மாற்றிக் கொள்ளுமாறும் ராமகிருஷ்ண மடத்துக்கு ஆலோசனை வழங்கியதாகவும், நோட்டீஸ் அனுப்பியதாகவும், ஏப்ரல் 24-ம் தேதிக்குள் இடத்தை காலி செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தியதாகவும் செய்திகள் வந்துள்ளன.

முதல்வர் கருணாநிதியின் இந்த செயல் புனிதரான சுவாமி விவேகானந்தரை திட்டமிட்டு அவமதிப்பதுபோல் உள்ளது. தமிழ் மொழி, செம்மொழி என்று ஆரம்பித்து கனிமொழிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வாங்கித் தந்ததுதான் மிச்சம்.

மெரினா கடற்கரையில் பிரம்மாண்டமாக காட்சி அளிக்கும் விவேகானந்தர் இல்லத்தை குறுக்கு வழியில் அபகரித்து விடலாம் என்று கருணாநிதி திட்டமிடுகிறார் போலும். அவரின் இந்தச் செயலுக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது அறிக்கையில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

சோ
இந்து மத நம்பிக்கை தொடர்பானவற்றை இடிப்பதில் முதல்வருக்கு ஆர்வம் - சோ

இந்து மத நம்பிக்கையுடன் சம்பந்தப்பட்ட எதுவாக இருந்தாலும் அதை இடிப்பதில் முதல்வர் கருணாநிதி காட்டும் ஆர்வத்திற்கு "மதச்சார்பின்மை' என்ற பெயர் போலும் என மூத்த பத்திரிகையாளர் சோ ராமசாமி கூறியுள்ளார்.

விவேகானந்தர் இல்லத்தை இடித்துவிட்டு தமிழ் செம்மொழி மையத்தை அமைக்க அரசு முயற்சிப்பது தொடர்பாக "தினமணி' வெளியிட்ட செய்தி குறித்து அவர் தெரிவித்த கருத்துகள்:

செம்மொழி ஆய்வு மையம் அமைப்பதற்குச் சென்னையில் பல இடங்கள் இருக்கின்றன. குறிப்பிட்ட இடத்தில்தான் அதைத் தொடங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால், விவேகானந்தர் இல்லம் அப்படியல்ல. இந்தியாவின் தலைசிறந்த சிந்தனையாளர்களில் ஒருவரான அவர் தங்கிய இடம் என்பதால்தான் அந்த இடமே ராமகிருஷ்ணா மிஷனுக்குத் தரப்பட்டது.

சென்னை பக்கமே எட்டிப் பார்த்திராத கண்ணகிக்கு குறிப்பிட்ட இடத்தில்தான் சிலை இருக்க வேண்டும் என்பதில் முனைப்பு காட்டிய முதல்வர், விவேகானந்தர் தங்கியிருந்த இடத்தில் அவருடைய பெயரில் ஓர் இல்லமும், கண்காட்சி அரங்கமும் நடப்பதை ஏன் குலைக்க முயல்கிறார் என்று தெரியவில்லை.

இந்துமத நம்பிக்கைகளுடனோ, சிந்தனைகளுடனோ சம்பந்தப்பட்ட ஏதாவது ஓர் இடம் இருந்தால் -அது ராமர் பாலமாக இருந்தாலும் சரி, விவேகானந்தர் இல்லமாக இருந்தாலும் சரி -அதை இடித்துவிட வேண்டும் என்பதில் முதல்வர் காட்டும் ஆர்வத்திற்கு மதச்சார்பின்மை என்ற பெயர்போலும்.

தமிழக அரசு செய்ய முயற்சிக்கும் செயல் சட்ட ரீதியாகவும் சரி, தார்மிக ரீதியாகவும் சரி -ஏற்றுக்கொள்ள முடியாதது.

"எழுங்கள், விழிப்புணர்வு கொள்ளுங்கள்' என்பது விவேகானந்தரின் வாக்கு. முதல்வரின் கண்டிக்கத்தக்க போக்கு குறித்து தமிழகத்தின் நலன் விரும்புவோர் அனைவரும் இந்த உணர்வைப் பெற வேண்டும் என்றார் சோ ராமசாமி.

பெ.சு.மணி
பேரதிர்ச்சி - பெ.சு.மணி

"விவேகானந்தர் இல்லம் இடிக்கப்படுமா?' - என்ற செய்தியைப் படித்து பேரதிர்ச்சியுற்றேன்.

""இந்திய நாகரிகத்தின் தந்தை வடமொழி பேசும் இனம் என்றால், அதன் சிறந்த இனமான தமிழ் இனம் தாயினமாகும்'' என்றும், ""ஆதிகாலத் தமிழர்களின் தொன்மையோடு ஒப்பிட்டுப் பார்த்தால், ஆரியர்களும் செமிட்டியர்களும் வெறும் குழந்தைகளே'' என்றும் வரலாற்றாய்வு நோக்கில் சுட்டிக்காட்டியவர் சுவாமி விவேகானந்தர்.

சுவாமி விவேகானந்தரை "கண்டுபிடித்ததில்' தமிழகம் பெற்ற முதன்மையை ராமகிருஷ்ண மடத்தின் துறவிகள் நன்றியறிதலுடன் பாராட்டியுள்ளனர். இந்த ஆன்மிக பண்பாட்டு பாரம்பரியத்தின் சின்னமாகத் திகழும் விவேகானந்தர் இல்லம் ""இடிக்கப்படுமா'' எனும் வினாவிற்கு கட்சி, மத, இன எல்லைகளைக் கடந்து பண்பாட்டுச் சின்னத்தைப் பாதுகாப்பதில் புகழ்பெற்ற தமிழக அரசு ஆக்கபூர்வமான விடையைத் தரும் என எதிர்பார்க்கிறேன் என்று முதுபெரும் எழுத்தாளர் பெ.சு. மணி கருத்து தெரிவித்தார்.

சரத்குமார்
ஏற்புடையதல்ல - சரத்குமார்

விவேகானந்தர் இல்லத்தை காலிசெய்ய தமிழக அரசு கொடுத்துள்ள திடீர் நெருக்கடி அதிர்ச்சி அளிக்கிறது என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கூறினார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

"ராமகிருஷ்ண மடம் நிர்வகித்து வரும் "ஐஸ் ஹவுஸ்' என்று அழைக்கப்படும் விவேகானந்தர் இல்லத்தை வேறு இடத்துக்கு மாற்றச் சொல்லி, அதுவும் மூன்று நாட்களில் காலி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு திடீர் நெருக்கடி கொடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. 1997-ம் ஆண்டு முதல்வராக இருந்த கருணாநிதிதான் அந்த இடத்தை ராமகிருஷ்ண மடத்துக்கு குத்தகைக்கு கொடுத்தார். குத்தகை காலம் 2010-ம் ஆண்டுவரை இருக்கும்போது அவரே இந்த முடிவை அறிவித்திருப்பது ஆச்சரியத்தைத் தருகிறது.

சிகாகோ மாநாட்டில் உரையாற்றிய பிறகு பிப்ரவரி 6-ம் தேதி முதல் 15 வரை ஒன்பது நாட்கள் விவேகானந்தர் இந்த இல்லத்தில் தங்கியிருந்தார். இப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டடத்தை புராதன நினைவுச் சின்னமாக போற்றிப் பாதுகாக்க வேண்டும். விவேகானந்தர் ஆன்மிகவாதி என்பதைக் கடந்து, சமூக ஒழுக்கத்தை வலியுறுத்திய சமுதாய சிற்பி.

தமிழ் செம்மொழி மையம் அமைப்பதற்காகவோ அல்லது வேறு எந்த உபயோகத்திற்கோ இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கட்டடத்தை இடிப்பது ஏற்புடையதல்ல. எனவே இந்த அவசர முடிவை மாற்றி, விவேகானந்தர் அருங்காட்சியகம் அதே இடத்தில் தொடர்ந்து இயங்க தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும்' என்று சரத்குமார் குறிப்பிட்டுள்ளார்.

நெல்லை கண்ணன்
விவேகானந்தர் நினைவு இல்லத்தை அகற்றுவது அன்னைத் தமிழை அவமதிப்பதாகும் என்றார் இலக்கியவாதி நெல்லை கண்ணன்.

இதுகுறித்து நெல்லை கண்ணன் மேலும் கூறியதாவது:

"சிகாகோ மாநாட்டில் இந்து மதத்தின் சார்பில் விவேகானந்தர் உரையாற்றச் சென்றபோது, அவருக்குச் செலவு செய்து அவரை சிகாகோவுக்கு அனுப்பிவைத்தது ராமநாதபுரம் மன்னர் தமிழ்வளர்த்த பாஸ்கர சேதுபதி.

அவரை அனுப்பிவைத்தது மட்டுமல்ல, அத்தனை பெரிய வெற்றியை அமெரிக்க மண்ணில் அடைந்து வருகிற விவேகானந்தர் தமிழ்நாட்டில்தான் கப்பலில் வந்து இறங்க வேண்டும் என்று மன்னர் பாஸ்கர சேதுபதி ஏற்பாடு செய்தார்.

பாம்பன் துறைமுகத்தில் விவேகானந்தர் இறங்கும் நேரத்தில் உணர்ச்சிவயப்பட்ட மன்னர் கீழே அமர்ந்து, "என் தலையில் தங்களின் திருப்பாதங்களை வைத்து இறங்க வேண்டும்' என்றார் விவேகானந்தரிடம். ஆனால், விவேகானந்தரோ மன்னரின் தலையில் கைவைத்து தாண்டி வந்தார். பின்னர், விவேகானந்தர் ஏறிய குதிரை வண்டியை குதிரைக்குப் பதில் தானே இழுத்தார் மன்னர்.

அப்படி தமிழின் மீது மிகுந்த பற்று கொண்ட மன்னர் சேதுபதியால் வணங்கப்பட்ட விவேகானந்தரின் மண்டபத்தை இடித்துவிட்டு, அதில் செம்மொழி மையத்தை அமைப்பது என்பது மன்னர் பாஸ்கர் சேதுபதியையும் அவமதிப்பதாகும்.

அதுவரை உலகத்தில், ""சீமான்களே, சீமாட்டிகளே'' என அழைத்து வந்ததை மாற்றி ""சகோதர, சகோதரிகளே'' என்று பேசியவர் வீரத்துறவி விவேகானந்தர். விவேகானந்தரை உலகம் அறியச் செய்தது சேதுபதி மன்னர்தான். அப்படிப்பட்ட விவேகானந்தரின் நினைவு மண்டபத்தை இடித்துவிட்டு, அதில் செம்மொழி மையத்தை ஏற்படுத்தினால், தமிழ் மன்னரால் உலகிற்கு அனுப்பிவைக்கப்பட்ட ஒரு மாபெரும் வீரனின், அறிஞனின், ஒரு சமூக விஞ்ஞானியின் பெருமையை தமிழர்கள் இழிவுபடுத்தினார்கள் என்ற களங்கம் நமக்கு வந்து சேரும். அந்த அவமானம் தமிழர்களுக்குச் சேருவதை தமிழக அரசு உடன் தடுத்து நிறுத்த வேண்டும். ""ஓர் ஏழைக் குழந்தையின் பசிக்கு ஒரு துண்டு ரொட்டி தர முடியாத, ஒரு இளம் விதவையின் கண்ணீரைத் துடைக்க முடியாத எந்த ஒரு மதத்தையும் நான் மதம் என்று ஏற்றுக்கொள்ள மாட்டேன்'' என்று சொன்ன மிகப்பெரிய சிந்தனையாளர் விவேகானந்தர். அப்படிப்பட்டவரது நினைவு இல்லத்தை அப்புறப்படுத்துவது அன்னைத் தமிழை அவமதிப்பதாகும் என்றார் நெல்லை கண்ணன்.

இல.கணேசன்
அரசு வழங்கிய விவேகானந்தர் இல்லத்துக்கான உரிமையை ரத்து செய்ய எந்த அவசியமும் எழவில்லை என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் இல. கணேசன் கூறினார்.

இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

பாரத தேசத்தில் வாழ்ந்த துறவிகள் அனைவருமே தேசபக்தர்கள் என்றாலும் சுவாமி விவேகானந்தர் மட்டுமே தேசபக்த துறவி என அழைக்கப்பட்டவர். இப்பொழுது பேசப்படுகிற பகுத்தறிவு வாதம், சமூக நீதி, மூடப்பழக்கங்களை சாடல், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணுதல் எல்லாவற்றையும் அவரைவிட ஆழமாக, ஆணித்தரமாக பரப்பியவர் எவருமில்லை.

அவர் பாரத நாட்டில் தங்கியிருந்த இடங்கள் எல்லாம் வரலாற்றுச் சின்னங்களாக போற்றப்படுகின்றன. அந்த வகையில் சுவாமி விவேகானந்தர் சென்னையில் சில நாள்கள் தங்கியிருந்த ஐஸ்ஹவுஸ் கட்டடம், விவேகானந்தர் இல்லமாக செயல்பட்டு வருகிறது.

அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காக, ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பயன்படுத்திக் கொள்ள நீண்டகால உரிமம் வழங்குவது உண்டு.

அப்படி வழங்கப்பட்ட இடம் எந்த நோக்கத்துக்காக தரப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவேறாது இருந்தாலோ, தவறாகப் பயன்படுத்தப்பட்டாலோ அதை அரசு திரும்ப எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால் விவேகானந்தர் இல்லம் எந்த நோக்கத்துக்காக ஸ்ரீராமகிருஷ்ண மடத்துக்கு வழங்கப்பட்டதோ அதே நோக்கத்தில் எந்தவித பிசிறில்லாமல் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. எனவே அரசு உரிமத்தை இடையில் ரத்து செய்ய எந்த அவசியமும் எழவில்லை. அந்த இடத்தில் செம்மொழி மையம் அமைய உள்ளதாகத் தெரிகிறது. செம்மொழி மையம் தேவைதான். செம்மொழி மையம் எந்த இடத்திலும் அமைத்துவிடலாம். ஆனால் "விவேகானந்தர் தங்கியிருந்த இடம்' என்கின்ற பெருமை எல்லா இடத்துக்கும் கிடைத்து விடாது. நாடு முழுவதும் விவேகானந்தர் வாழ்க்கையுடன் தொடர்புடைய பல இடங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆன்மிகத்தில் நாட்டம் இல்லாத கம்யூனிஸ்டுகள் ஆளும் மாநில அரசு கூட விவேகானந்தரை மதிக்கிறது.

எனவே தமிழக முதல்வர் கருணாநிதி இந்த விஷயத்தில் தலையிட்டு விவேகானந்தர் இல்லத்துக்கு தரப்பட்டுள்ள உரிமத்தை 2010-க்கு பின்னும் 30 ஆண்டுகள் நீட்டிக்கவேண்டும் என்று இல. கணேசன் கூறியுள்ளார்.

அர்ஜுன் சம்பத்
இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத்:
விவேகானந்தர் இல்லத்தை இடிக்கும் முயற்சி தமிழர்களின் மீது தொடுக்கப்பட்ட போர் என்று இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:

ராணிமேரி கல்லூரியை இடித்துவிட்டு தலைமைச் செயலகம் கட்ட ஜெயலலிதா முயற்சித்தபோது அதை திமுக எதிர்த்தது.

ராணிமேரி கல்லூரிக்கு கொடுத்த முக்கியத்துவத்தை விவேகானந்தர் இல்லத்துக்கு கொடுக்க மாட்டேன் என்று கூறுவது கண்டிக்கத்தக்கது. விவேகானந்தர் தமிழர்களின் மீது மிகவும் அன்பும் பாசமும் கொண்டவர். அவர் வெளிநாட்டுக்குச் செல்ல நிதி திரட்டி கொடுத்தவர்கள் தமிழர்கள். விவேகானந்தர் இல்லத்தின் ஒரு செங்கல்லை பிரிக்கக் கூட நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றார்.

எஸ்.வி.சேகர்
எஸ்.வி. சேகர் (மயிலாப்பூர் எம்.எல்.ஏ): விவேகானந்தர் இல்லத்தை காலி செய்யச் சொல்லிவிட்டு தமிழ் செம்மொழி மையத்தை அமைக்கும் அரசின் முடிவு முற்றிலும் தவறானது.

தமிழ் செம்மொழி மையத்தை எங்கு வேண்டுமானாலும் அமைக்கலாம். விவேகானந்தர் இல்லத்தை, அவர் தங்கியிருந்த அந்த இடத்தைத் தவிர வேறு எங்கும் அமைக்க முடியாது.

கர்நாடகத்தைப் பின்பற்றி, தமிழக அரசும் விவேகானந்தர் இல்லத்தை ராமகிருஷ்ண மடத்திடம் ஒப்படைத்துவிட வேண்டும்.

எல். நடராஜன் (சமூக சேவகர், கே.கே.நகர்): கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது ராணி மேரி கல்லூரியை இடிப்பதற்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்தது. தற்போது உண்மையான கலாசார சின்னத்தை தி.மு.க. அரசு இடிக்கிறது.

ஓம் பிரகாஷ் ராய் (ஆசிரியர், அசாம்): விவேகானந்தர் இல்லம் சுற்றுலாத்தலம் மட்டுமல்ல, ஆன்மிகத் தலமும் கூட. வெளி மாநிலங்கள், வெளிநாட்டுப் பயணிகளிடம்கூட இந்த இடம் பிரபலமாக உள்ளது. அரசு இந்த முடிவைக் கைவிட வேண்டும்.

எஸ். மோகன் (சென்னை): அந்த செய்தியைப் பார்த்தது முதல் இதயம் முழுக்க வலியுடன் இந்த விவேகானந்தர் இல்லத்தில் அமர்ந்துள்ளேன். இந்த இடம் எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் கோயில் போன்றது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன் இருந்தேன். அப்போது, விவேகானந்தர் இல்லத்துக்கு வந்தவுடன் அந்த எண்ணம் நீங்கியது.

( நன்றி: தினமணி )

2 Comments:

Anonymous said...

இது குறித்து ஒரு பெட்டிஷன் ஆன்லைனில் இடப்பட்டிருக்கிறது. அனைவரும் கையெழுத்து இட்டு உங்கள் கண்டனங்களையும் தெரிவிக்கவும்

தமிழக அரசு தனது காவல் தெய்வங்களான அண்ணாத்துரை, ராமசாமி நாய்க்கன் போன்றோரின் நினைவிடங்களை இதே ரீதியில் அகற்றக் கோருமா? ஒரு பால் தினகரன் நினைவிடத்தையோ ஒரு அப்துல் சமது நினைவிடத்தையோ இதே ரீதியில் கை வைக்கத் துணியுமா? அது என்னங்கடா இந்து மதச் சின்னங்களை மட்டும் இடிப்பது களவாடுவது, அபகரிபப்து என்று கிளம்புறீங்க? அதில் ஒரு செங்கல் உருவப்பட்டாலும் கருணாநிதியின் குடும்பமே விளங்காமல் போகும், அவன் குடும்பமே தலைமுறைக்கு இதற்கு பதில் சொல்லியாக வேண்டும். கருணாநிதியே பாவம் சம்பாதித்தது போதும் இத்துடன் நிறுத்திக் கொள்

கீழ்க்கண்ட பெட்டிஷனில் அனைவரும் கையெழுத்திடவும்

http://www.petitiononline.com/vi220408/petition.html

Anonymous said...

"தமிழர்கள் ஹிந்துக்களே" என்று நிறுவும் சின்னம் விவேகானந்தர் இல்லம். ஹிந்து மதத்தின் தமிழ் வடிவை அகற்ற ஆபிரகாமிய நாசவாதிகள் விழைகின்றனர். கைக்கூலியான திராவிட கும்பல்கள், விவேகானந்தரை உலகிற்கு அறிமுகப்படுத்தியது தமிழர்களே என்ற உண்மையை அழிக்க விரும்புகின்றன. விவேகானந்தர் அமெரிக்கா செல்ல ஊக்கம் காட்டி அவரால் "தீரம் மிகு ஹிந்துக்கள்" என பாராட்டப்பட்டவர்கள் தமிழர்கள். விவேகானந்தர் பாராட்டிய தீரம் மிகு தெய்வீகத் தமிழர்களே, விழித்தெழுங்கள் ! தெய்வீக தமிழ் அருந்தி திராவிட இனவாத நஞ்சை அகற்றுங்கள் !