பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, April 25, 2008

மதியின் கார்ட்டூன்கள் வெளியீடு - படங்கள்

மதியின் கார்ட்டூன்கள் வெளியீடு பற்றி பத்ரி, வலைப்பதிவில் படித்திருப்பீர்கள். அந்த நிகழ்ச்சியின் படங்கள்....


செய்தி:
நல்ல கார்ட்டூன்கள் தோல்வியின் வலிகளை மறக்கச் செய்யும், வெற்றிக்கு தூண்டுகோலாக அமையும் என்றார் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்.

தினமணி கார்டூனிஸ்ட் மதி வரைந்த 'அடடே' கேலிச் சித்திரங்களின் 6 தொகுதிகளை சென்னை மியூசிக் அகாடமியில் வெளியிட்டார் கலாம்.

எழுத்தாளர் ஜெயகாந்தன், தமிழறிஞர் சாலமன் பாப்பையா, நடிகை மனோரமா, நாடகக் கலைஞர் கிரேசி மோகன், தினமணி மற்றும் எக்ஸ்பிரஸ் குழும அதிபர் மனோஜ் சொந்தாலியா உள்ளிட்டோர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், ஊடகத்தில் கேலிச் சித்திரங்களின் பங்கு எனும் தலைப்பில் கலாம் ஆற்றிய உரையிலிருந்து...

கார்ட்டூன்கள் எனப்படும் கேலிச் சித்திரங்கள் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கண்ணாடி போன்றவை. கார்ட்டூன்கள் எனும் வார்த்தைக்கு கேலிச்சித்திரம் எனும் தமிழ்ப் பதம் சரியானதுதானா என்று எனக்குச் சந்தேகமாகத்தான் உள்ளது. காரணம் இதில் வெறும் கேலியும் கிண்டலும் மாத்திரம் தொனிப்பதில்லை. அதையும் தாண்டி பல கருத்துக்களை உள்ளடக்கியவை கார்ட்டூன்கள். வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகளின் பிம்பங்கள்தான் கார்ட்டூன்கள்.

முதன்முதலில் கார்ட்டூன்களை வெளியிட்டு மிகப்பெரிய அளவில் சுதந்திர வேட்கையைத் தூண்டியவர் மகாகவி பாரதியார். ஒரு பக்க தலையங்கத்தின் அர்த்தத்தை ஒரு சிறிய கார்ட்டூன் சொல்லிவிடும்.

தோல்வியில் துவண்டுவிழும் நேரங்களில் ஒரு உற்சாக மருந்தாகக் கூட கார்ட்டூன்கள் செயல்படும். ஒரு உதாரணம் பாருங்கள்... 1979-ம் ஆண்டு, இரவு பகலாக நாங்கள் அரும்பாடுபட்டு உருவாக்கிய பிஎஸ்எல்வி ராக்கெட் தோல்வியடைந்துவிட்டது. சுமார் ஒருமாத காலம் இந்த தோல்வியிலிருந்து விடுபட முடியாமல் தவித்தோம்.

அப்போது இந்திய விண்வெளித்துறை பற்றி அதுவரை வந்திருந்த கேலிச் சித்திரங்களை எங்களிடம் காட்டினார்கள். அவற்றைப் பார்த்துவிட்டு வாய்விட்டுச் சிரித்தோம். மன இறுக்கம் குறைந்தது. தோல்விக்கு ஒரு மருந்தாகவும் அது அமைந்தது. அதே நேரம் ஒரு வைராக்கியம் பிறந்து அதுவே அடுத்த வெற்றியைச் சாதிக்கத் தூண்டுகோலானது. நல்ல கார்ட்டூனுக்கு இலக்கணம் அதுதான்.

சரியாக ஒரு மாதம் கடுமாயாகப் போராடி 1980ம் ஆண்டு மீண்டும் பிஎஸ்எல்வியைச் செலுத்துவதில் பெரும் வெற்றி கண்டோம். அன்றிலிருந்து நான் எப்போது நாளிதழ்களைப் பிரித்தாலும் முதலில் தேடுவது கார்ட்டூன்களைத்தான்.

எனது பத்திரிகை நண்பர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நான் எப்போதும் சொல்வது, கார்ட்டூன்களுக்கு நல்ல முக்கியத்துவம் கொடுங்கள், முதல் பக்கத்தில் போடுங்கள் என்பதுதான். அதற்குக் காரணம், நல்ல கார்ட்டூன்களுக்கு சமுதாய விழிப்புணர்வை ஏற்படுத்தும் மாபெரும் சக்தி உண்டு.

ஒருமுறை டொரண்டோவில் நடைபெற்ற தியாகராஜ ஆராதனையின்போது, ஒரு ஆறு வயது சிறுமி, 'யார் இந்த தியாகராஜர் அங்கிள்?' என்றாள்.

என்னால் அவளுக்கு விஷயத்தைப் புரிய வைக்க முடியவில்லை. ஆனால் ஒரு நல்ல கார்ட்டூன் இந்த வேலையைச் செய்துவிடும். மதி போன்ற கார்ட்டூனிஸ்டுகள் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

2020ல் இந்தியா வல்லரசாக வேண்டுமெனில் நாட்டில் உள்ள அரசியல்- சமூக- பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் முதலில் களையப்பட வேண்டும். இந்த நாட்டில் 54 கோடி இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு முதலில் விழிப்புணர்வை ஏற்படுத்த கார்ட்டூனிஸ்ட்கள் முயற்சிக்க வேண்டும்.

திருவள்ளுவர் சொன்னதுபோல, லட்சியங்கள் உயர்வானதாக இருந்தால்தான் வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை எட்ட முடியும் என்றார் கலாம்.

மதியின் கேலிச்சித்திரங்கள் ஏற்படுத்திய தாக்கம் குறித்து எக்ஸ்பிரஸ் குழும நிர்வாக ஆசிரியர் மனோஜ் சொந்தாலியா பேசினார்.

முன்னதாக மதியின் கார்ட்டூன்கள் தொகுப்பை கலாம் வெளியிட அவற்றின் பிரதிகளை எழுத்தாளர் ஜெயகாந்தன், பேராசிரியர் சாலமன் பாப்பையா, நடிகை மனோரமா, சுவாமி ஆத்மகனானந்தஜி, கிரேஸி மோகன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

கிழக்குப் பதிப்பகத்தின் பத்ரி ஷேஷாத்ரி நன்றி கூறினார்.
தினத்தந்தி எப்போதும், கார்ட்டூன்களை கேலிசித்திரம் என்று சொல்லாது, கருத்து படம் என்று தான் சொல்லும் :-)

6 Comments:

Anonymous said...

ஏற்கனவே விற்பனையில் உள்ள, பலரும் வாங்கிய கேலிச்சித்திரப் புத்தகத்திற்கு வெளியீட்டுவிழாவா?

இதுவே நல்ல கேலிதான்.

கிழக்கிற்கு தன்மானம் என்ற ஒன்று கிடையாது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான், ஆனால் ஏபிஜேக்கு?

2008 பிப்ரவரி தமிழினியில் "ஹோமரின் இலியத்திற்கு அருகிலேயே சிவாஜி the boss ஐ நூலாக்கி அடுக்குவதில் பதிப்பாளருக்கு எந்தக் கூச்சமுமில்லை" என்பது நினைவில் வருவதை தவிர்க்க முடியவில்லை.

Boston Bala said...

பத்ரி முழுக்கால் சட்டை அணிந்திருந்தாரா போன்ற ஜனரஞ்சகமான விஷயங்களுடன் இன்னொரு பதிவு இடலாமே

IdlyVadai said...

//பத்ரி முழுக்கால் சட்டை அணிந்திருந்தாரா போன்ற ஜனரஞ்சகமான விஷயங்களுடன் இன்னொரு பதிவு இடலாமே//

நான் முழுசா வளந்துட்டேன் அதனால் இதை எல்லாம் இப்ப எழுதுவதில்லை. பா.ராகவன் எழுதுகிறாரா என்று பாருங்கள், அவரும் வந்திருந்தார் இந்த விழாவிற்கு :-)

Anonymous said...

நான் முழுசா வளந்துட்டேன் அதனால் இதை எல்லாம் இப்ப எழுதுவதில்லை

you mean வெந்துட்டேன் :)

ஜெயகாந்தன் இப்போதெல்லாம் நல்லி குப்புசாமிக்கு போட்டியாக நிறைய கூட்டங்களில் மேடையில் இருக்கிறார்
போலிருக்கிறது.வயசான காலத்தில்
இப்படியாவது அவரை யாராவது
கவனித்தால்தான் உண்டு.தாத்தா-பாட்டி எழுத்தாள தம்பதி இருந்தால்
இன்னும் வசதி :).அப்படி யாரும்
இல்லை போலும்.

விற்பனையில் உள்ள புத்தகத்திற்கு
வெளியீட்டு விழா வைத்து ஒரு புதுமை படைக்க வேண்டும் என்று
கிழக்காளர்கள் முடிவு செய்திருக்கலாம்.
”"ஹோமரின் இலியத்திற்கு அருகிலேயே சிவாஜி the boss ஐ நூலாக்கி அடுக்குவதில் பதிப்பாளருக்கு எந்தக் கூச்சமுமில்லை"”
தமிழினிக்கு புத்தக தீண்டாமை
கொள்கையெல்லாம் உண்டா? இலியத்திலிருந்து 20 அடித்தள்ளி
பிற புத்தகங்கள் இருந்தால்தான்
இலியத்தின் காவிய மணம் பரவுமா:)
இலியத்தை பாத்ரூமில் வைத்துப்
படித்தால் பதிப்பாளர் தூக்கி மாட்டிக்
கொள்வாரா?

Subramanian said...

In the dias no reciepient of the publication go themselves and receive the Booklet from the Ex PRESIDENT HONOROUBLE ABDUL KALAM; instead HE HIMSELF has gone nearer to the reciepient and handed over the book to them; This makes me upset very much and to think why beloved ABDUL KALAM Is ATTENDING SUCH FUNCTIONS, WHO doesn't know even how to respect the EX PRESIDENT - suppamani

Anonymous said...

அட ஒரு நல்ல விஷயம் கவனிசிங்களா... மாலைமுரசு நாளிதழில் கார்ட்டூன் வெளி வருகிறது பார்த்தீர்களா. நல்ல முயற்சி பாராட்டுக்கள்.