பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, April 16, 2008

தமிழ் புத்தாண்டு - தமிழர் புத்தாண்டு

இந்த பதிவில்...
1. கலைஞர் கண்டனம்
2. கலைஞர் கவிதை
3. தினமணி தலையங்கம்
4. தினமணி கட்டுரை


தை முதல் நாள் தமிழ் புத்தாண்டு என்ற அறிவிப்பை கேலி, கிண்டல் செய்வதா? கருணாநிதி கண்டனம்

கடந்த கவர்னர் உரையின்போது அறிவிக்கப்பட்டது-பொங்கல் திருநாளை தமிழர் திருநாளாக அறிவித்து அந்நாள் முதல் நம்முடைய ஆண்டு கணக்கை மேற்கொள்வோம். இது நாம் கணித்தது அல்ல. பெரும்புலவர் மறைமலை அடிகளார் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட புலவர்கள் கூடி அன்றைக்கு பெரியார் போன்றோருடைய ஆலோசனைகளை எல்லாம் பெற்று அவர்கள் யாத்துத்தந்தது, வகுத்துத் தந்தது நம்முடைய தமிழ் வருட கணக்கு.

நமக்கு இருக்கிற வருடங்கள் எல்லாம் வருடப்பிறப்பு என்றாலும் கூட- ஒரு ஆண் வருட, இன்னொரு ஆண் வருடி அதன் மூலமாக பிறந்த வருடப்பிறப்புகள்தான் அந்த வருடப்பிறப்புகள் என்ற காரணத்தால் நம்முடைய வருடப்பிறப்பு, தமிழனுடைய வருடப்பிறப்பு இதுதான் -வள்ளுவருடைய ஆண்டு தான் நாம் வருடப் பிறப்பாக ஆண்டுப் பிறப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறுதியிட்டு முடிவு செய்து அரசின் சார்பாக சட்டப்பேரவையிலே அனைவருடைய ஏகோபித்த கருத்தையும் பெற்று வெளியிடப்பட்ட அந்த செய்தியை இன்றைக்கு பத்திரிகைகளிலே பார்த்தால் கேலிக்குரியதாக, கிண்டலுக்குரியதாக, அவை எல்லாம் விமர்சிக்கப்படுகிற காட்சியை நாம் காண்கிறோம்.

அவற்றை பார்க்கும்போது எனக்கு வருத்தம் இல்லை. எனக்கு ஒருவகையிலே இதில் மகிழ்ச்சிதான். நம்முடைய தமிழனை எப்படியாவது, யாராவது, கேலிசெய்து தூண்டிவிட்டால்தான் அவன் சொரணையோடு எழுந்து நடமாடுவான். அவன் உலகத்திற்காக செய்ய வேண்டிய, தமிழுக்காக ஆற்ற வேண்டிய காரியத்தை செய்வான் என்ற முறையிலே தான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மகிழ்ச்சியை நீடிக்க வைக்கிற வீரம், இந்த மகிழ்ச்சியை நாமெல்லாம் இன்று பெற்றிருப்பதற்கு என்ன காரணம் என்பதை நீங்கள் எல்லாம் சிந்திக்கும் வகையில் இந்த நாள் பயன்பட வேண்டும் என்று நான் கருதுகிறேன்.கலைஞர் கவிதை
தை முதல் நாளே புத்தாண்டு: தமிழ் ஆண்டின் சிறப்பை குலைக்க முயலும் எந்த புலம்பலுக்கும் இடம் இல்லை கருணாநிதி கவிதை

"ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த பிள்ளையின்
பேரை வைத்துத் தான் ஆண்டுக் கணக்கு வைப்போம்-
அறுவடைத் திருநாளாம் பொங்கல் நாளை
ஆண்டின் தொடக்க நாள் என்று ஆன்றோர் சான்றோர்
அறுதியிட்டுக் கூறிய பின்னும் அதனையேற்று
வள்ளுவர் ஆண்டினை வண்டமிழர் ஆண்டென்று கூறவே,
எள்ளத்தனை இன உணர்வும் கொள்ள மாட்டோம்"-
பள்ளந்தனில் விழுகின்ற பொட்டுப் பூச்சியாய்;
பழைய பஞ்சாங்கத்தில் பதுங்குவதோ பகுத்தறிவு?
தமிழ் ஆண்டுத் தொடக்கம் தைத் திங்கள் முதல் நாள் என்பதை
இமிழ் கடல் வேலித் தமிழகப் பேரறிஞர் மறைமலையடிகள் தலைமையில்
அமிழ்தெனும் கருத்தாய் ஆய்ந்தறிந்து கண்டார்-
அறம் பொருள் இன்பம் எனும் அருங்குறள் யாத்த அய்யன்
அரும் பெரும் பெயரால் திருவள்ளுவர் ஆண்டென அரசுச்சார்பில் அன்று;
அறிஞர் மன்றில்-ஆன்றோர் அவையில் -தை முதல் நாள் தமிழ் ஆண்டு முதல் நாள் என்றோம்
ஆலோசனை சொல்லித் தமிழரை மேலும் வளர்ப்பதற்கு அக்கறையற்றோர்
பூலோகம் இருண்டதெனப் பூனை போல் இரு கண்களை மூடிக்கொண்டு;
"ஆலோலம்" பாடுகின்றார் அரும்பி விட்ட தமிழ் உணர்வை விரட்டுதற்கு!
ஆரியத்தைத் தூக்கி நிறுத்துவதே சிலர் குறிக்கோள் என்றால்
அவர்தம் செய்கைக்கு நாம் குறுக்கே நிற்க விரும்பவில்லை-
ஆனாலும் எம் குறிக்கோளாம் குறள்வழித் தமிழ் ஆண்டின் சிறப்பைக்
குலைப்பதற்கு எந்தக் கூட்டத்தின் புலம்பலுக்கும் இடம் தருவது இல்லை என்போம்.பகுத்தறிவல்ல, பாசிசம்! ( தினமணி தலையங்கம் )

தைத் திங்கள் முதல்நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்று அரசு அறிவித்துவிட்டது என்பதால், சர்வதாரி ஆண்டு தை மாதம் தான் பிறக்க வேண்டும் என்று கூறும் வேடிக்கை அரங்கேறுகிறது. அண்டை மாநிலம் கேரளத்திலும், வடக்கே பஞ்சாபிலும், கிழக்கே அசாமிலும், அது ஏன், இந்தோனேஷியா மற்றும் கொரியா வரை புத்தாண்டு கொண்டாடும்போது, அது தவறு, நான் மட்டும் தை மாதம் தான் புத்தாண்டு கொண்டாடுவேன் என்று சொன்னால், அது அவரவர் விருப்பம். அதை யாரும் ஆட்சேபிக்கப் போவதில்லை.

அதேநேரம், அரசு அறிவித்தது என்பதற்காக சமயச் சடங்குகளை மாற்ற வேண்டும் என்று அழிச்சாட்டியம் செய்வதும், அதிகாரம் இருக்கிறது என்பதற்காக அரசு ஆணைப்படிதான் ஆலயங்களில் வழிபாடுகள் நடத்தப்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதும், ஆட்சியாளர்களின் பாசிச மனப்போக்கைப் படம்பிடித்துக் காட்டுகிறது என்பது மட்டுமன்றி மக்களாட்சித் தத்துவத்தில் இவர்களுக்கு எந்த அளவுக்கு நம்பிக்கை இருக்கிறது என்பதையும் வெளிப்படுத்துகிறது.

அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழுள்ள ஆலயங்களில், வருடப்பிறப்பை ஒட்டி எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது என்றும், புது வருடப் பஞ்சாங்கம் படிப்பது போன்ற சடங்குகளை நடத்தக்கூடாது என்றும் வாய்வழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழ்ப் புத்தாண்டு தை மாதம் பிறக்கும் என்று உத்தரவிடத்தான் ஆட்சியாளர்களுக்கு அதிகாரமே தவிர, சர்வதாரி ஆண்டு வழக்கம்போலச் சித்திரையில் தொடங்கக்கூடாது என்று உத்தரவு போடும் அதிகாரம் இருக்கிறதா என்ன?

மக்கள் சர்வதாரி ஆண்டு சித்திரையில் பிறக்கிறது என்று நம்பினால், அந்த நம்பிக்கைக்கு ஏற்ப ஆலயங்களில் பூஜைகள் செய்ய விரும்பினால் அதைத் தடுக்கும் உரிமையோ, மக்களின் மத நம்பிக்கைகளில் தலையிடும் உரிமையோ எந்த அரசுக்கும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கவில்லை. நமது அரசியல் அமைப்புச் சட்டம் இறைமறுப்புக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல, மக்களின் வழிபாடு மற்றும் மத நம்பிக்கைகளில் ஆட்சியாளர்கள் தலையிடுவதையும் ஏற்றுக் கொள்ளவில்லை.

இறைமறுப்புக் கொள்கையைப் பகுத்தறிவு என்று கொள்வதேகூடத் தவறு. உலகின் மிகப்பெரிய விஞ்ஞானிகளும், உலக மக்கள்தொகையில் ஏறத்தாழ 99 விழுக்காடு மக்களும், தலைமுறை தலைமுறையாக நமது மூதாதையரும் நம்புகிற விஷயத்தை மறுப்பது என்பது வள்ளுவர் வழியில் கூறுவதாக இருந்தால், பலகற்றும் கல்லாத அறிவிலாதவர்கள் செயல். அதைவிடப் பெரிய அறியாமை, மக்களின் நம்பிக்கைகளைச் சட்டம் போட்டுத் தகர்த்துவிடலாம் என்கிற அதிகார மமதை.

அரசின் சட்டமும், வாய்வழி உத்தரவும் எந்த அளவுக்கு மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதை தமிழகத்திலுள்ள ஆலயங்களில் நேற்று கூடிய மக்கள் வெள்ளம் தெளிவுபடுத்தியது. பஞ்சாங்கம் படிக்கப்படவில்லை என்றாலும் பஞ்சாங்க விற்பனை சற்றும் குறையவில்லை. சிறப்பு வழிபாடுகள் செய்யப்படவில்லை என்றாலும், அத்தனை ஆலயங்களிலும் அர்ச்சனைகளும் அபிஷேகங்களும் அலங்காரங்களுமாக சர்வதாரி வருடப்பிறப்பு அமர்க்களப்பட்டது.

தங்கள் குடும்பத்தினரையே இறைமறுப்புக் கொள்கையை ஏற்றுக்கொள்ளச் செய்ய முடியாதவர்களும், தங்களது சுற்றமும் உறவும் சமயச் சடங்குகள் செய்வதைத் தடுக்க முடியாதவர்களும், தாங்களேகூட தங்களது பதவியையும் அதிகாரத்தையும் தக்க வைத்துக்கொள்ள சில மூடநம்பிக்கைகளைக் கடைப்பிடிப்பவர்களும் ஊருக்கு உபதேசம் செய்வதும், ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி மதச் சடங்குகளில் தலையிடுவதும் சிரிப்பைத்தான் வரவழைக்கிறது. மக்கள் ஏற்றுக்கொள்ளாத சட்டங்களை நடைமுறைப்படுத்திவிட முடியாது என்பதுகூட இவர்களுக்கு ஏன் புரியவில்லை?

கவிஞர் கண்ணதாசனின் கவிதை வரிகள் ஞாபகத்துக்கு வருகின்றன.

""நதிபோகும் திசையை மாற்றி

நடக்கட்டும் வடக்கே என்பான்;

மதியம் தன் வானை எட்டு

மண்ணிலே விழட்டும் என்பான்;

இதுமுதல் கடல்நீ ரெல்லாம்

இனிக்கட்டும் தேன்போல் என்பான்;

அதிகாரி போடும் ஆணைக்(கு)

அடங்காமல் வேறென் செய்ய?''

முகம்மது பின் துக்ளக், ஒளரங்கசீப் வரிசையில் சரித்திரத்தில் இடம்பிடித்தே தீர வேண்டும் என்று அடம்பிடித்தால், அதைத் தடுக்கவா முடியும்? ஆனால், "சர்வதாரி' ஆண்டு சித்திரையில்தான் பிறக்குமே தவிர தை மாதம் பிறக்காது!


தடுமாறும் தமிழ்ப் புத்தாண்டு - ஓர் அலசல்
தமிழ்ப் புத்தாண்டு என்பதும், தமிழர் புத்தாண்டு என்பதும் இன்று வெவ்வேறு மாதிரி என்று ஆகிவிட்டது. இந்தப் பிரச்னையை அரசியல் ரீதியாகவும், மத ரீதியாகவும்தான் அனைவரும் அணுகுகிறார்களே தவிர விஞ்ஞான ரீதியாக அணுகத் தயங்குகிறார்கள். பகுத்தறிவு பேசுபவர்களும், விஞ்ஞானம் பற்றிப் பேசுபவர்களும் இந்த விஷயத்தில் அரசியல்தான் பேசுகிறார்கள் என்பதுதான் வேடிக்கை.

இந்த மாதம் ஏப்ரல் 5 அன்று சந்திரன் சூரியனுக்கு அண்மையில் வசித்தது. "அண்மை வாசி' தானே அமாவாசை? ஏப்ரல் 20 அன்று சந்திரன், சித்திரை நட்சத்திரத்தில் நிலைப்பதாகத் தோன்றும். கன்னி ( யண்ழ்ஞ்ர்) உடுக்கணத்தில் "ஆல்ஃபா வெர்ஜினிஸ்' என்னும் விண்மீனே நாம் கூறும் சித்திரை. இதற்கு வானவியலில் "ஸ்பைக்கா' ( நல்ண்ஸ்ரீஹ) என்றும் பெயர். அதுவே பண்டைய சித்திரை மாதத் தொடக்கம். சந்திரன் சஞ்சரிக்கும் உடுக்கணத்தின் பெயராலேயே அந்தந்த மாதத்தை நாம் "திங்கள்' என்று குறிப்பிடுகிறோம்.

அவ்வாறே, அடுத்த பௌர்ணமி அன்று (2008 மே 19) விசாக நட்சத்திரத்தில் தோன்றும். அந்த "விசாக' மாதம் வைகாசி என்கிறோம். இது எல்லாம் நம் நாட்காட்டிகள் தரும் தகவல்கள் தாம். ஆனால் விஷயம் அது அல்ல.

பண்டைத் தமிழர் வானவியல் ஆதாரப்படி, தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் சித்திரை தான். தமிழ்ச் சங்க இலக்கியங்களில் நெடுநல்வாடை எனும் சங்கப் பாடல் காட்டும் ஓர் உண்மை இங்கு முக்கியம் ஆனது. ""ஆடு தலையாக விண்ணூர்பு திரிதரு வீங்கு செலன் மண்டிலம்'' (160 - 161) என்கிற வரிகளில் பண்டைய தமிழர் வானவியல் திறன் விரிகிறது. கோப்பெருந்தேவியின் கட்டிலுக்கு நேர் மேலாக "ஆடு தலை'யாகப் பன்னிரெண்டு உடுக்கணங்கள் தோற்றமும் விதான ஓவியமாகச் சித்திரிக்கப் பெற்றுள்ளது. அதில் மேஷம் ( அழ்ண்ங்ள்) ஆகிய ஆடு உருவம் கொண்ட தலையாய உடுக்கணம் முதலில் சுட்டப் பெறுகிறது.

ஆனால் சித்திரை முதல் தேதி என்பது ஏப்ரல் 13 ஞாயிறு, அரசு விடுமுறை - தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்பு என்று நாட்காட்டிகள் அசடு வழிந்தன. உள்ளபடியே ஆண்டுத் தொடக்கம் மட்டுமல்ல, நாட்காட்டிகளும், நாள் கணக்குகளுமே காலந்தரமாகத் திருத்தப்பட வேண்டியது அவசியம்.

இப்படி ஆண்டு, மாதம், நாள் கணக்குகளை மாற்றுவது சரியா? என்றால் வரலாற்றில் இத்தகைய செய்திகள் நடந்தேறி இருக்கின்றன.

பூமி சூரியனைச் சுற்றி வர ஆகும் 365.242 சூரிய நாள்களைப் பண்டைய உரோமானியர் பத்து சம பாகங்கள் ஆக்கி மாதங்களாக வகுத்தனர். அந்தப் பத்து மாதங்களுக்கு முறையே மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்டு என மன்னர்கள், தெய்வங்கள் பெயர்களைச் சூட்டினர். பின்னர் ஏழாவது ("சப்த' - செப்டம்பர்), எட்டாவது ("அஷ்ட' - அக்டோபர்), ஒன்பதாவது ("நவ' - நவம்பர்), பத்தாவது ("தச' - டிசம்பர்) என்ற அடிப்படையில் கிரேக்கப் பெயர்களால் குறிப்பிட்டனர். இங்கு வடமொழிச் சொற்களும் கிரேக்கப் பெயர்களும் ஒலி அமைப்பில் ஒத்துப் போகின்றன என்பது ஆய்வுக்கு உரியது.

எப்படியோ, பிற்காலத்தில் ஆண்டு பன்னிரண்டு பாகங்களாகப் பிரிக்கப்பட்டது. இறுதி இரண்டு மாதங்களுக்குப் புதிதாக ஜனவரி, பெப்ரவரி என்ற தெய்வப் பெயர்கள் சூட்டப்பெற்றன.

எனினும், பிற்காலத்தில் எட்டாம் போப் கிரகோரி என்பவர் "கூதிர் சந்தி' அடிப்படையில் கிரகோரியன் நாட்காட்டி ( எழ்ங்ஞ்ர்ழ்ண்ஹய் இஹப்ங்ய்க்ங்ழ்) ஒன்றை வரையறுத்தார். வானத்தில் தென்கோடியில் சூரியன் விலகிய பின் மீண்டும் வடக்கு முகமாக ஏறத் தொடங்கும் நாள் "கூதிர் சந்தி' ( ரண்ய்ற்ங்ழ் நர்ப்ள்ற்ண்ஸ்ரீங்). இது டிசம்பர் 21 அன்று நிகழும்.

இன்றைக்குத் திருவள்ளுவர் ஆண்டு மாதிரியே அன்றைக்குக் கிறிஸ்து பிறந்த நாளையொட்டி ஜனவரி முதல் நாள் அந்த நாட்காட்டியின் முதல் நாள் ஆயிற்று. டிசம்பர் 25 அன்று கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுவது பிந்தைய வரலாறு. அந்த நாட்காட்டியில் ஜனவரி தொடங்கிப் பத்தாவதான டிசம்பர் பன்னிரண்டாம் மாதமும் ஆயிற்று.

விஷயத்துக்கு வருவோம். பூமி சூரியனைச் சுற்றி வருவதால் இங்கிருந்து கவனிப்போருக்குச் சூரியன் வானில் வெவ்வேறு விண்மீன் கூட்டங்களின் ஊடாகப் பயணம் செல்வது போல் தோன்றும். இதுவே சூரியவீதி. அதனைப் பன்னிரண்டு சம பிரிவுகளாகப் பகுத்து அவற்றிற்கு ""ராசி வளையம்'' ( ழர்க்ண்ஹஸ்ரீ) என்று பெயரிட்டு வழங்குகிறோம். ஆயின், சூரியனின் இந்த சஞ்சாரத்தை இரவில் விண்மீன்களிடை காண்பது இயலாது அல்லவா? ஆதலால் சூரியனுக்குப் பதிலாக நமது திங்களாகிய சந்திரன் பௌர்ணமியாக இயங்குவதைக் கவனித்தனர் நம் முன்னோர்.

சூரியன் வடக்கு நோக்கிய உத்தராயணப் பயணத் தொடக்க நாளில் பூமியில் இரவுப் பொழுதும், பகற்பொழுதும் சமமாக 12 மணி நேர அளவாக அமையும். இதுவே வசந்த சமநோக்கு நாள் ( யங்ழ்ய்ஹப் ங்வ்ன்ண்ய்ர்ஷ்). சங்க காலத்தில் அந்த வசந்த சமநோக்கு நாளில் சூரியன் மேஷ ராசியில் இயங்கியது. சித்திரைத் திருவிழா இதுவே.

ஆனால் இந்த வசந்த சமநோக்கு நாளில் வானவியல் சம்பவங்கள் இன்றைக்கு 2008 மார்ச் 21 அன்றே நிகழ்ந்துவிட்டன. சங்க காலத் தமிழர் கணக்குப்படி பங்குனி மாதமே தமிழ்ப் புத்தாண்டு பிறந்துவிட்டது.

இங்கு தான் உதைக்கிறது. அதற்குத் தீர்வாக, வானவியல் கருத்துகள் சிலவற்றை ஆராய்வோம். பூமியும் சூரியனும் தொடர்ந்து இடம் பெயர்ந்த வண்ணம் இருக்கின்றன. இன்று நமக்கு நிலையானதாகத் தோன்றும் "போலாரிஸ்' ( டர்ப்ஹழ்ண்ள்) துருவ நட்சத்திரமே நிலையானது அல்ல. கி.மு. 4000 - 3000 வாக்கில் காளைமுகத் தோற்றங் கொண்ட "ரிஷப' ( இடப) ராசியில் வசந்த சமநோக்கு நாள் அமைந்தது. அன்றைக்கு தூபான் ( பட்ன்க்ஷஹய்) எனும் விண்மீனே நம் துருவ நட்சத்திரமாக இருந்தது.

இதில் இன்னொரு வேடிக்கை. கி.பி. 14000 ஆண்டில், அதாவது இன்றிலிருந்து சுமார் 12000 ஆண்டுகளுக்குப் பிறகு - ""அபிஜத்'' ( யங்ஞ்ஹ) எனும் விண்மீனே நமது புதிய துருவ நட்சத்திரமாக நிலைபெறுமாம்.

பூமியின் சுழற்சி அச்சு தலையாட்டம் போடுவதனால் அதன் துருவ நட்சத்திரமும் இவ்விதம் இடம் மாறி வருகிறது. சராசரியாக ஒவ்வொரு 2000 ஆண்டுகளுக்கும் ஒருமுறை வீதம் மெல்ல வசந்த சமநோக்கு நாள் ஒவ்வொரு ராசியாக முன்னேறி வருகிறது. 4000 ஆண்டுகளுக்கு முன்னால் இடபம், 2000 ஆண்டுகளுக்கு முன்பு மேஷம், இன்று மீனம்.

அவ்வாறே, அன்றைய குளிர்காலச் சம்பிரதாயங்களான தைந்நீராடல், தைப்பொங்கல் முதலிய நிகழ்ச்சிகள் இன்று மார்கழிக் குளிர்காலப் பூசைகள், பண்டிகைகள் ஆகிவிட்டன. பண்டைய கார்த்திகை ஒளிவிழாக்கள் தீபாவளி என்ற பெயரில் ஐப்பசியிலுமாக முன்னேறி வருகின்றன. அதாவது இன்று வசந்த சமநோக்கு நாளில் சூரியன் மேஷ ராசியில் இல்லை. மீனத்தில் இருக்கிறது. உள்ளபடியே, சூரியனின் உத்தராயண சஞ்சாரம் தொடங்கி ஒரு மாதம் ஆயிற்று.

அவ்வாறே, ஆறு மாதங்கள் வடக்கே சஞ்சரித்த சூரியன் செப்டம்பர் 21 அன்று தெற்குப் பயணம் தொடங்கும். அதுவே இலையுதிர் சமநோக்கு நாள் ( அன்ற்ன்ம்ய்ஹப் ங்வ்ன்ண்ய்ர்ஷ். மூன்று மாதங்கள் கழித்துச் சூரியன் தெற்கே 23.5 பாகை தாழ்ச்சியினைத் தொடும். தென்கோடியில் சூரியன் இறங்கிய பின் மீண்டும் வடக்கு முகமாக ஏறத் தொடங்கும் நாள் "கூதிர் சந்தி' ( ரண்ய்ற்ங்ழ் நர்ப்ள்ற்ண்ஸ்ரீங்). டிசம்பர் 21 அன்று நிகழும் பண்டைய நாளில் இது மகர ராசியில் நிகழ்ந்தது. அதனைக் "காப்ரிகார்னஸ்' ( இஹல்ழ்ண்ஸ்ரீர்ழ்ய்ன்ள்) என்பர்.

ஆழ்கடல் நன்னீரோட்டத்தின் கடவுளாகக் கருதப்படும் பாபிலோனிய ""இயா'' ( உஹ) எனும் தெய்வக் குறியீடு மகரம் எனும் நீர்ப்பிராணி. செம்மறியாட்டின் உடலும், மீனின் வாலும் கொண்ட அபூர்வத் தோற்றத்துடன் அது சித்திரிக்கப்பட்டது. அதன் பெயராலேயே 23.5 பாகை தெற்கு அட்ச ரேகைக்கு மகர ரேகை என்று பெயர். இன்று இது "தனுசு ரேகை' என்று பெயர் மாற்றப்பட வேண்டும்.

திருவள்ளுவர் காலத்தில் வசந்த சமநோக்குநாள் மேஷத்தில் நிகழ்ந்தது. இலையுதிர் சமநோக்கு நாள் துலாம் உடுக்கணத்தில் ஐப்பசித் திங்களில் நிகழ்ந்தது. கூதிர் சந்தி மகர ராசியில் நிகழ்ந்தது. அதுவே தை மாதம். ஆனால் இன்றோ, திருவள்ளுவ ஆண்டின் அந்தக் குளிர்காலச் சந்தியானது முன் கூட்டியே மார்கழியில் (டிசம்பர் 21 வாக்கில்) நிகழ்ந்து விடுகிறது. அப்போது சூரியன் தனுசு ராசியில் நிலைபெறுகிறது.

ஆதலால் இனி, மகர சங்கராந்திக்குப் பதில் "தனுசு சங்கராந்தி'யில் மார்கழி மாதமே உழவர் திருநாளாகிய "தைப்பொங்கல்' கொண்டாடி விடுவது தான் நியாயம். அதாவது டிசம்பர் மத்தியில் "புதிய' தை மாதமும் வர வேண்டும். தமிழர் போற்றும் திருவள்ளுவர் ஆண்டு அதாவது டிசம்பர் 21 அன்று தான் கொண்டாடப்பட வேண்டும்.

பகுத்தறிவு, விஞ்ஞானம் என்று பேசுபவர்கள் மாற்றங்களை ஏற்படுத்த விரும்பினால் முறையாக வானசாஸ்திர ரீதியாக மாற்றங்களை ஏற்படுத்தி இருக்க வேண்டும். இப்போது நிகழ்த்த முயற்சித்திருக்கும் மாற்றங்கள் அரசியல்தானே தவிர விஞ்ஞானபூர்வமானதல்ல!

(கட்டுரையாளர்: நெல்லை சு. முத்து - விஞ்ஞானி, ஸ்ரீஹரிகோட்டா)

8 Comments:

Sangumaama said...

ஆராயாமல், அலசாமல் கீழ்தரமான அரசியல் ஆதாயங்களுக்காக தி.மு.க அரசு வீம்புக்காக ஒரு கேவலமான தமிழ் புத்தாண்டு மாற்று சட்டத்தை கொண்டு வந்து..அசிங்கப்பட்டுக் கொண்டது.. கவலை வேண்டாம்...அடுத்த ஆட்சி வந்தால் இந்த சட்டம் காணாமற் போகும்..
இந்து மத கோட்பாடுகளையே விமரிசித்து, கேவலப்படுத்தி வரும் இவர்கள்.. டிசம்பர் 25 ம் தேதி கிறிஸ்துமஸ் இல்லை.. மே 15 ம் தேதி தான் என்று கூற தைரியம் உண்டா ? அல்லது ரம்ஜான் தேதி யை மாற்ற தான் முடியுமா ? ஆப்பு வைத்து விடுவார்கள் அந்த சமூகத்தினர்...

இளிச்சவாயன் இந்து தானே...அதனாலே எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆடுவோம் என.. . நாட்டுல எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கு .. மக்களோட வாழ்கை தரத்தை உயர்த்தணும், அடிப்படை மருத்துவ வசதி, படிப்பு, லஞ்ச ஒழிப்பு..என்று.. இதெல்லாம் விட்டுட்டு, புத்தாண்டு மாற்றுறது தேவையா ??

ச்சீ ..விடுங்கய்யா !! எக்கேடோ கேட்டு போகட்டும்... அரசியல் இவ்வளவு சீப் ஆக செய்ய கூடாது...

ஜயராமன் said...

கரு.நா.நிதியின் ஆபாச பேச்சு அவரின் மனநிலையை, தரத்தை காட்டுகிறது. இவரை ஒரு தமிழ்த்தலைவர் என்று நினைப்பவர்கள்தாம் இது குறித்து வெட்கப்பட வேண்டும்.

அருபது வருஷங்கள் பிறந்த கதை ஒன்றும் ஆபாசமில்லை. இது குறித்து அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் போன வாரம் ஒரு பதிவு (மீண்டும்) எழுதியிருக்கிறார். ஆனால், புழுவுக்கு மலமும், சந்தனமும் ஒன்றுதான். இவருக்கு எல்லாம் ஆபாசமாய் தெரிகிறது. பரிதாபப்பட வேண்டியவர் இவர்.

நன்றி

ஜயராமன்

Anonymous said...

நெல்லை முத்து அவர்கள் ஒரு புகழ்பெற்ற அறிவியல் அறிஞர். அவர் கேட்கும் கேள்விகள் நியாயமானவை. அவர் முதுகில் நூல் ஓடவில்லை என்பதால் கலைஞருக்கு பதில் சொல்வது கடினமாகிறது. இல்லாவிட்டால் வழக்கமான "ஆரி"ப்போன ஒப்பாரியை வைத்திருப்பார். அது முடியாமல் போகவே, சொரணை கெட்ட தமிழன் என்று வழக்கம்போல தமிழர்களை திட்டுகிறார். இவரும் தமிழர்தானே, இவரும் அதை சொரணை கெட்டுதானே இருக்கிறார்!

இவரின் தையில் புத்தாண்டு என்ற அபத்தத்தை உலக தமிழர்கள் எல்லாரும் ஏக மனதாக புறக்கணித்து சித்திரை புத்தாண்டை சிறப்பாக கொண்டாடியுள்ளார்கள். மலேசியா தொடங்கி, சிரிலங்கா, விடுதலைப்புலிகள் வழியாக கனடா வரை உலகெங்கிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடந்துள்ளன. அதனால், நம் தலைவருக்கு எரிச்சல் அதிகமாகி உள்ளது. அவ்வளவுதான்.
( edited)

IdlyVadai said...

அப்டேட் - கலைஞர் கவிதை

Anonymous said...

ivar sonnal?? athu nadanthuduma?
puthandu thamizhukkum themizharkkum chittirai thaan...

Indhu ethirpu kolkaiye pagutharivaga ninaikum oruvar, moodathanamana visayathai munvaithu pesukirathu comedy....

valarchi panikalil neram selvidamal intha mathiri seithaal thamizh mattumalla oru punnakum valarathu...

Anonymous said...

Sarvadikari yenna pulambinalum Sarvadari varushappirappu nalla murayil kondatappatuvittathu. Nallidayam padaithor kalangavendam.

Anonymous said...

நீங்கள் சொல்லும் தமிழ் வருடங்களுக்கு ஒன்று கூட தமிழ் பெயர் இல்லையே !அப்புறம் எப்படி ஐயா தமிழ் புத்தாண்டு என்று சொல்கிறீர்கள்? இடையில் வந்தவர்களுக்கு வடமொழி பெயரில் அறுபது ஆண்டுகளை தமிழகத்தில் திணிக்க உரிமை இருந்திருக்கிறது என்றால் இப்பொழுது மானமுள்ள தமிழனுக்கு அதை மாற்ற உரிமை இல்லையா?

Rajendran said...

யார் யார் என்ன கூறினாலும் நாங்கள் எங்கள் பண்பாட்டை கேவலபடுத்தும் அந்நியர்களையும் அவர்களின் சமஸ்கிருத ஆதிக்கத்தையும் ஏற்கவே மாட்டோம். அறிவியல் பார்வையில் வாழவே நாங்கள் விரும்புகிறோம். நாங்கள்தான் எங்களை பற்றி முடிவு செய்யும் உரிமை கொண்டவர்கள். ஆரியர்களையும் அவர்களின் கலாச்சாரத்தையும் நாங்கள் ஏன் எங்கள் பண்பாடாக எங்கள் தலை விதியாக கொள்ளவேண்டும்? எங்களின் தேவைகளை நாங்களே பூர்த்தி செய்து கொள்ளுவோம். எங்களுக்காக ஆரியர்களாகிய நீங்கள் எந்த கவலையும் அக்கறையையும் கொள்ளவேண்டாம். முதலில் நீங்கள் நேர்மையாக நாணயமாக வாழ கற்றுக்கொள்ளுங்கள். ஆனால் அது உங்களின் ரத்த ஓட்டத்துக்கு எதிரானது அல்லவா? புரிகிறது.