பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, April 10, 2008

கர்நாடகா தேர்தல் பற்றி கலைஞருக்கு ஏன் கவலை - இல.கணேசன்

எங்கள் எலும்பு நொறுங்கினாலும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம்' என்று பேசிய முதல்வர் கருணாநிதி, திடீரென ஒகேனக்கல் திட்டத்தை இப்போதைக்கு ஒத்தி வைப்பதாகக் கூறியிருப்பது, அரசியல் வட்டாரங்களில் பெரும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. முதல்வரின் இந்த மனமாற்றத்துக்கு அரசியல் உள்நோக்கம் இருப்பதாகப் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

ஒகேனக்கல் பகுதிக்குள் தன் பரிவாரங்களுடன் நுழைந்து பிரச்னையைத் தொடங்கியவர், கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவர் எடியூரப்பா. அப்போதே அவருக்கு அக்கட்சியின் தமிழகத் தலைவர் இல.கணேசன் கண்டனம் தெரிவித்தார். இப்போது இத்திட்டத்தை தாற்காலிகமாக நிறுத்திவைப்பதாக கலைஞர் அறிவித்ததையும் கடுமையாகக் கண்டித்துள்ள இல.கணேசனை நேரில் சந்தித்தோம்.
கேனக்கல் பிரச்னையைத் தொடங்கிய எடியூரப்பாவின் செயலை, தொடக்கத்திலேயே கண்டித்தவர் நீங்கள். ஒகேனக்கல் பிரச்னையை எப்படிப் பார்க்கிறீர்கள்?

''அநியாயத்தை எதிர்த்துக் குரல் கொடுப்பதில் எந்தத் தவறுமில்லை. ஒகேனக்கல் பகுதிக்குள் எடியூரப்பா நுழைந்துவிட்டதாக எனக்குத் தகவல் கிடைத்ததும் அதைக் கண்டித்தேன். மேலும் அங்கு சென்ற எடியூரப்பா, ஒகேனக்கல் யாருக்குச் சொந்தம் என்று சர்வே நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதனால், அடுத்த நாளே அந்தப் பகுதிக்குச் சென்று நானும் ஆய்வு நடத்தினேன்.

ஒகேனக்கல் பகுதியில் ஓடும் காவிரிக் கரையைக் கடக்கத் தொங்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அதைக் கடந்து சென்றால் வழுக்குப் பாறைகள் அதிகமாக இருக்கும். அங்கு செல்பவர்கள் வழுக்கி விழாமல் இருக்க தடுப்புக் கம்பிகளை அமைக்க தமிழக அரசு முயன்றபோது, அந்த இடமும் கர்நாடகத்துக்குச் சொந்தம் என்று அம்மாநிலத்தவர்கள் அதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.

அந்த இடத்தில் நின்று கொண்டு என் செல்போனில் உள்ள ஜி.பி.எஸ்., என்கிற குளோபல் பொசிஷனிங் சிஸ்டத்தை இயக்கினேன். அது விண்வெளிக் கலத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால், உலகில் எந்த மூலையில் நாம் இருக்கிறோம் என்பதைக் காட்டிவிடும். அப்படி நாங்கள் பார்த்த போது அந்த இடம் கர்நாடக எல்லையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தெரியவந்தது. விண்வெளிக்கலத்தில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அப்படியிருக்கையில், மறுபடியும் எல்லைகளை சர்வே செய்யத் தேவையில்லை என்பதுதான் என் கருத்து.''

ஏற்கெனவே காவிரிப் பிரச்னைக்கு முட்டுக்கட்டை போடும் கர்நாடகக்கட்சிகள், அதில் இருந்து வரும் தண்ணீரை எடுக்க எப்படி அனுமதிக்கும்?

''என்னிடம் நிறையப் பேர் இந்தக் கேள்வியைக் கேட்கிறார்கள். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் என்பது கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. காவிரிப் பிரச்னை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஆனால், ஒகேனக்கல் திட்டத்தை எதிர்த்து யாரும் இதுவரை நீதிமன்றத்துக்குச் செல்லவில்லை. மேலும் காவிரியில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் நிரம்பி வழியும் போது தமிழகத்துக்கு வருகிறது. கர்நாடகத்தை ஆள்பவர்கள் திறந்துவிடும் தண்ணீர் தமிழகத்துக்கு வருவது கிடையாது. ஆண்டவன் அருளால் கிடைக்கும் தண்ணீர்தான் ஒகேனக்கலில் ஓடுகிறது.

இரு மாநிலத்தையும் பிரிக்கும் பில்லுகுண்டு பகுதி தமிழகத்துக்குள்தான் இருக்கிறது. அங்கிருந்து தண்ணீர் எடுத்துத்தான் இரு மாவட்டங்களுக்கும் வழங்க இருக்கிறோம். அங்கு ஓடும் காவிரியின் மறுகரை கர்நாடகத்துக்குள் இருக்கிறது. வேண்டுமென்றால் அவர்களும் அங்கிருந்து தண்ணீர் எடுத்துக்கொள்ளட்டும். ஆனால், அப்படி எடுத்தாலும் அதைப் பயன்படுத்துவதற்கு அங்கு யாரும் இல்லை என்பதுதான் உண்மை. ஆகவே, இந்தத் திட்டத்தை யார் எதிர்த்தாலும் அது கண்டிக்கத்தக்கதுதான்.''

அப்படியென்றால் நீங்களே எடியூரப்பாவிடம் பேசலாமே?

''இரு மாநிலங்களுக்கு இடையே இதுபோன்ற பிரச்னைகள் வரும் போது தேசியக் கட்சிகள்தான் பாதிக்கப்படுகின்றன. கருத்துச் சொல்லாமல் அமைதியாக இருந்தால் துரோகம் என்கிறீர்கள். கருத்துச் சொன்னால் இரட்டை வேடம் போடுகிறது என்பீர்கள். ஒகேனக்கல் பிரச்னையில் எங்களுடைய கண்ணோட்டத்தை எங்கள் கட்சியின் தேசிய தலைமைக்குத் தெரிவித்துள்ளோம். அதேபோல் அவரும் தெரிவித்திருப்பார். ஆனால், வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களுக்கு ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த் திட்டம் அவசியம் என்பதை உணர்ந்து, அந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்ததே 1998_ல் மத்திய அரசில் ஆட்சி செய்த பா.ஜ.க.தான். அப்போது கர்நாடகத்தில் இருந்த எந்தக் கட்சியும் இதை எதிர்க்கவில்லை. அப்படியிருக்கையில், அப்போதைய தி.மு.க. அரசும், அதற்குப் பின் வந்தவர்களும் ஏன் அதை நிறைவேற்றவில்லை என்று உரிய விசாரணை நடத்த வேண்டும்.

இப்போதும் கர்நாடகத்தில் மறைமுகமாக மத்திய அரசின் ஆட்சிதான் நடக்கிறது. இங்கே தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் இருக்கிறது. அப்படியென்றால், இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில் காங்கிரஸுக்கு என்ன சிக்கல் இருக்க முடியும்?''

த் திட்டத்தை எதிர்த்து கர்நாடகத்தில் நடக்கும் வன்முறைகளால் அங்குள்ள தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்களே?

'' 'எலும்பை நொறுக்கினாலும் இத்திட்டத்தை நிறைவேற்றுவோம்' என்று தான் கலைஞர் பேசினார். அதை எஸ்.எம்.கிருஷ்ணா அம்மாநில மக்களிடம் ஏதோ அவர்கள் எலும்பை நொறுக்குவோம் என்று சொன்னதாக தவறாகச் சித்திரித்தார். அதன் காரணமாகத்தான் அங்கு வன்முறை வெடித்தது.''

ஒகேனக்கல் திட்டத்தை தாற்காலிகமாக நிறுத்தியதில் ஏதாவது உள்நோக்கம் இருப்பதாகக் கருதுகிறீர்களா?

''ஒகேனக்கல் பிரச்னையை வைத்து, அம்மாநிலத்தில் ஆட்சி அமைத்து விடலாம் என்று காங்கிரஸ் நினைக்கிறது. அதற்கு மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க.வும் உதவுகிறதோ என்றுதான் எங்களுக்குத் தோன்றுகிறது. கர்நாடகத்தில் தேர்தல் நடக்கும் வேளையில் வன்முறைகள் நடந்தால், அம்மாநிலக் கட்சிகள்தான் கவலைப்பட வேண்டுமே ஒழிய, தமிழக முதல்வர் ஏன் கவலைப்பட்டு நம் மக்களுக்குப் பயன்படும் திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும்?''

அப்படியென்றால், இப்பிரச்னையில் கலைஞருக்கும் மத்திய அரசுக்கும் ஏதாவது ரகசிய உடன்பாடு இருக்கும் என்கிறீர்களா?

''தமிழகத்துக்குச் சொந்தமான பகுதியில் ஓடும் காவிரியில் இருந்து தண்ணீர் எடுத்து நம்முடைய மக்களுக்கு குடிநீராக வழங்குவதை எதிர்க்க கர்நாடகர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. அப்படியிருக்கையில், அம்மாநிலத்தில் தேர்தல் முடிந்து ஆட்சிக்கு வரும் கட்சியுடன் பேச்சு நடத்தி ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றுவதாக முதல்வ்ாகூறி, இத்திட்டத்துக்கு அனுமதி வழங்க கர்நாடகத்துக்கு உரிமை உள்ளது என்று மறைமுகமாக ஒப்புதல் அளித்துள்ளார். அது அவரது நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

சொந்த மாநிலமான தமிழக மக்களின் நலனை விட, காங்கிரஸ் கட்சியின் வெற்றி அவருக்கு முக்கியமாகப்படுகிறதோ என்று நாங்களும் சந்தேகப்படுகிறோம்'' என்று முடித்துக்கொண்டார் இல.கணேசன்.
( நன்றி: ரிப்போட்டர் )

0 Comments: