பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, April 07, 2008

'ஒரு' யுகாதி வாழ்த்து

இன்று யூகாதி பண்டிகையை முன்னிட்டு ஒரு சிறப்பான பழைய கட்டுரை. ஒரு 'ஒரு'வுக்காக... 'சுவடு' சிறுப்பத்திரிக்கையில் (20-4-79) மீரா எழுதியது.

ஒரு 'ஒரு'வுக்காக...

ஒரு நாவல், ஒரு மாதம், ஒரு ரூபாய் என்பது சமீபத்தில் என் சி.பி.எச் நிறுவனம், 'கல்பனா' பத்திரிகைக்கு விளம்பரம் வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரம் அந்தப் பத்திரிக்கையின் ஆசிரியர் பொறுப்பேற்றிருக்கும் ஜெயகாந்தனால் எழுதிக் தரப்பட்டதோ என்று நினைக்குமளவுக்கு அதில் அவர் முத்திரை இருக்கத்தான் செய்கிறது. அந்த முத்திரை, அந்த விளம்பரத்தில் உள்ள ஒவ்வொரு 'ஒரு'விலும் இருக்கிறது.

ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு 'ஆனந்த விகடன்' பத்திரிக்கையில் 'ஒரு பகல் நேரப் பாசஞ்சர் வண்டியில்' என்று ஜெயகாந்தன் ஒரு கதை எழுதியிருக்கிறார். அந்தக் கதைத் தலைப்பு அப்போது என்னைப் பெரிதும் கவர்ந்தது. ஒரு மந்திரத்தைப் போக கொஞ்சம் நாட்கள் என் நா அதை உச்சரித்துக் கொண்டிருந்ததை இப்போதும் என்னால் மறக்க முடியவில்லை தொடர்ந்து 'ஒரு வைத் பக்குவமாகப் பயன்படுத்தி நவீன தமிழ்நடைக்கு வலிமையும் வனப்பும் அளித்திருக்கிறார்.

இப்படிச் சொல்வதை வைத்துக் கொண்டு 'ஒரு'வின் நதி மூலம் ரிஷிமூலம்காண நான் ஜெயகாந்தனிடம் ஓடுகிறேன் என்று நினைக்க வேண்டாம். 'ஒரு ஊரிலே ஒரு ராசா இருந்தார்' என்ற கதைத்த நம் மும்பாட்டிகாலத்திலும் 'ஒரு'வுக்கு இடம் இருந்தது. ஆனாலும் ஜெயகாந்தனால் தான் அதற்குத் தனி மரியாதை கிடைத்திருக்கிறது என்பதே என் வாதம்.

ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது. ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது, ஒரு வாலிபம் மீண்டும் திரும்புகிறது, ஒரு மனைவி கடத்தப்படுகிறாள் ஒரு சொந்த வீடு வாடை வீடாகிறது ஒரு குடும்பத்தின் கதை - இப்படி பத்திரிகை நாடகம் திரைப்படம் என்று எங்கும் இன்று 'ஒரு' கொடி கட்டிப் பறக்கிறது என்றால் அதற்குக் காரணமானவரை கண்டு கொள்ள வேண்டுமா ?


ஒரு மனிதன், ஒரு வீடு ஒரு உலகம் என்றும் நாவலின் முன்னுரையில் தமிழ் இலக்கண மரபு தெரிந்திருந்தும் 'ஓர் உலகம்' என்று குறிப்பிடாமல் வேண்டுமென்றே 'ஒரு உலகம்' என்று தாம் குறிப்பிட்டதை ஜெயகாந்தன் விளக்கியுள்ளார்

ஒருலகப்பிரஜை என்பதற்கு ஓர் உலகப்பிரகை என்பதற்கும் பெரிய வித்தியாசம் உண்டு' என்று காட்டி அர்த்தம் நோக்கி 'ஒரு உலகம்' என்று பயன் படுத்தியதாகச் சமாதானம் சொல்லியிருக்கிறார்.

நம் இலக்கணப் பண்டிதர்கள் இந்த சமாதனத்தை அவ்வளவு எளிதாய் ஏற்றுக் கொள்வார்களா ? 'ஓர் மீதுள்ள மோகத்தை விட்டுவிடுவார்களா ?

ஒரு வித்தியாசமான அனுபவம்...

தமிழ் இலக்கண மரபில் அழுத்தமான பற்றுள்ள என் பண்டித நண்பர் ஒருவர் என்னை நோக்கிக்கோபத்தோடுவந்தார். கையிலிருந்து ஒரு புதுக்கவிதையை வாசித்து விட்டு இது என்ன தமிழ்க்கவிதையா இருபது வரிகள்கூட இல்லை இதில் அட்மிஷன் மெட்டீரியல்ஸ், என்ஜினியர் பார்மூலா, பார்மஸிஸ்ட் டுலோரியல் டபுள், ஆப்ட்ரால், மார்க்கெட் என்று எத்தனை ஆங்கில சொற்கள் என்று என்னிடம் அங்கலாய்த்துக் கொண்டார். அவர் கையிலிந்து அந்தப் புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன் இளசை அருணாவின் புதிய கவிதைத் தொகுதி அது. தலைப்பு எனக்கு வசமாகக் கை கொடுத்தது.

நண்பரே! வருத்தப்படாதீர்கள்... ஆசிரியர் அருணா முறையாகத் தமிழ் படித்தவர் நீங்கள் அடிக்கடி சொல்வீர்களே வரும்மொழி உயிரெழுத்தில் தொடங்கினால் 'ஓர்' என்றும் மெய்யெழுத்தில் தொடங்கினால் 'ஒரு' என்றும் பயன்படுத்த வேண்டும் என்று அந்த இலக்கண விதியை மீறாமல் 'ஓர் அப்நார்மலின் முனகல்' என்று தலைப்பு வைத்திருக்கிறார் பாத்தீர்களா என்று ஒரு போடு போட்டேன்.

என் பண்டித நண்பர் குளிர்ந்து போனார்.

* - *

என் நண்பரை விடவும் 'ஓர்' மீது தீவிரக் காதல் கொண்ட பண்டிதர்கள் இல்லாமல் இல்லை.

சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழ் கழகத்தின் மாநாட்டில் அவளுக்கென்று ஒரு இடம் என்று ஏதோ ஒரு பத்திரிக்கையில் தொடர்கதை வெளிவந்திருந்ததை கண்டித்துப் புலவர் ஒருவர் ஆவேசமாகப் பேசினாராம். தனக்கென்று அவர் ஏதும் இடம் கேட்டதாகத் தெரியவில்லை அவர் அவேசத்துக்குக் காரணமெல்லாம் 'அவளுக்கென்று ஓர் இடம்' என்றல்லாவா பெயரிடப்பட்டிருக்க வேண்டும். 'ஓர்' இருக்க வேண்டிய இடத்தில் ஒரு இருப்பதா ? இதைத் தன்மானமுள்ள தமிழர்கள் பார்த்துக் கொண்டிருப்பதா என்பது தான்.

* - *

உண்மையில் 'ஓர்' 'ஒரு' என்னும் எண்ணுப் பெயரடைகளில் முன் தோன்றி மூத்தது 'ஒரு' தான்... இதை ஒப்பிலக்கண வித்தகர் கால்டுவெல்லே சுட்டிக் காட்டியிருக்கிறார்.

நம்முடைய பத்திரிகை எழுத்தாளர்களுக்கு இந்த ரகசியம் தெரிந்தால் தானோ என்னவோ பழமையான 'ஒரு'வை விடக் கூடாது என்று வரிந்து கட்டிக்கொண்டு பேணி வளர்க்கிறார்கள்.

எங்காவது யாராவது ஒரு என்பதற்குப் பதிலாக வல்லின மெய்யைக் கையாண்டு 'ஒரு' என்று எழுதியிருந்தால் அதற்கு அவரைக் கோபிக்கக் கூடாது; கோயில் கட்டிக் கொண்டாட வேண்டும் 'ஒன்று' என்பதன் திரிபுதான் 'ஒறு' என்றும் அதுதான் ஆதிகாலத்து ஒரிஜனல் வடிவம் என்றும் தெரிந்து வைத்திருக்கும் அவரை வேறு எப்படிப் போற்றுவது ?

* - *

இங்கே ஒரு சர்வாதிகாரி வந்து பூட்டோ படம் இருக்க கூடாது என்று ஜியா தடை செய்ததைப் போல புதிய பெருமையும் பழைய புகழும் மிக்க 'ஒரு'வைத் தடை செய்ய முடியுமா ? அப்படி தடை விதித்தாலும் வெற்றி பெறமுடியுமா ? பக்தர்கள் ஸ்ரீராமஜெயம் எழுதுவதைப்போல் எங்கள் எழுத்தாளர்கள் இறுதிமூச்சுள்ளவ்ரை 'ஒரு ஒரு' என்று எழுதிக்கொண்டே இருப்பார்கள். ஓய மாட்டார்கள்.

அகிலனுக்கு டாக்டர் பட்டம் அளிக்க வேண்டும் என்று பேராசிரியர் 'நா தர்மராஜன் மதுரைப் பல்கலைக் கழகப் பேரவையில் தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார் ஏற்கெனவே பரிசுகளும் பட்டங்களும் பெற்று இலக்கிய உலகில் 'ஏகபோகம்' கொண்டாடும் ஒருவருக்கு டாக்டர் பட்டம் வேறா என்று கேட்கத் தோன்றுகிறது.

இதற்கு பதிலாக 'ஒரு'வின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட் ஒருவருக்கு டாக்டர் பட்டம் வழங்கச் சொல்லியிருக்கலாம் 'ஒரு குடும்பத்தின் கதை' என்று தாம் மொழி பெயர்த்த ருசிய நாவலுக்குப் பெயரிட்ட பேராசிரியருக்கு என் இந்த ஞாபக மறதியோ ?

பாஸ்வெல் எழுதிய டாக்டர் ஜான்சன் வாழ்க்கை வரலாற்று நூலில் கர்றபுள்ளி, அரைப் புள்ளிகள் எப்படி உபயோகப் படுத்தப்பட்டுள்ளன என்றூ ஆராய்ந்து ஒருவர் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறாராம். அங்கே இங்கேயும் எந்தெந்த எழுத்தாளர் எத்தனை எத்தனை இடங்களில் எப்படி எப்படி 'ஒரு'வை ஆராயலாமே; டாக்டர் பட்டம் பெறலாமே!
* - *
பத்திரிக்கை ஆசிரியர்களே !
வருங்காலம் 'ஒரு'வின் காலம் 'ஒரு'வுக்கு அதிக இடம் கொடுக்கும் பத்திரிக்கை ஆசிரியருக்கு ஞானபீடப் பரிசு போல் ஒரு பொரும் பரிசு கிடைத்தாலும் கிடைக்கலாம். தொலைநொக்கோடு செயல்படுங்கள்

அச்சக அதிபர்களே!
திரு.வி.க புத்தகம் அச்சிடப்போகிறார் என்றால் அப்போதெல்லாம் ஆச்சரியக் குறிகளை நிறைய வாங்கி வைத்துக்கொள்வார்களாம். இப்போது நீங்கள் வேண்டிய மட்டும் 'ஒரு'வை (முடிந்தால் இரண்டையும் ஒரே எழுத்தாக வார்க்கச் செய்து) வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இனிமேல் திருமண அழைப்பிதழ்' கூட ஒரு திருமண நடக்கப்போகிறது என்று அச்சிடப் பெறலாம். உ(பிள்ளையார் சுழி), 786, சிலுவைக் குறி என்று தனித்தனியாகப் பயன்படுத்தும் மங்களக் குறிக்குப் பதிலாக சகல மததினரும் சமரசமாக 'ஒரு'வைப் பயன்படுத்தக் கூடும். இப்போதே நீங்கள் தீர்க்கதரிசனத்தோடு 'ஒரு'வை வாங்கிக் குவிக்கவில்லை யென்றால் பின்னால் வருந்தக் கூடும். ஆண்களும் பெண்களும் மண்ணெண்ணெய்க் காகவும் லாரிகளும் பஸ்களும் டிசலுக்காகவும் வரிசையில் நிற்பதைப் போல் எழுத்து வார்ப்பகத்தில் 'ஒரு'வுக்காகத் தவங் கிடக்க நேரும்.
இரன்
கடசியாக -

மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் இராமநாதபுர மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து கிழக்குப் பதிக்கு தேவர் பெயரையும் மேற்க்குப் பகுதிக்குக் காமராசர் பெயரையும் வைக்கலாம் என்று தாங்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறீர்கள், அதற்குள் இங்கே எதிர்ப்புகள், சுவரெட்டி ஆர்ப்பாட்டங்கள்!

எதற்கு இந்த வீண் வம்பு ? பேசாமல் கிழக்குப் பகுதிக்கு 'ஒரு' மாவட்டம் என்று பெயர் வைத்து விடுங்களேன் புதுமை விரும்பிகள் தங்களைப் போற்றுவார்கள். மேற்க்குப் பகுதிக்கு என்ன பெயர் வைப்பது என்று யோசிக்க வேண்டாம். 'ஒரு' மறு மாவட்டம் என்று வைத்துவிடலாம்.

யார் யாருக்கோ எவ்வளவோ செய்கிறீர்கள். ஒரு 'ஒரு'வுக்காக இதைக் கூட செய்ய கூடாதா ?

மீரா
20-4-79


3 Comments:

Anonymous said...

கலக்கல் இட்லி வடை
ஜெயகாந்தனுக்கு ஞான பீட விருது வழங்க 1979லேயே “ஒரு” தீர்க்க தரிசனம். சபாஷ். தேடிப்பிடித்து போஸ்டிங் போட்ட உனக்கு “ஒரு” ஸ்பெஷல் சபாஷ்.

வர்ற 24ம் தேதி அவருக்கு பிறந்த நாள். அன்னிக்கு “ஒரு” அசத்தல் போஸ்டிங் இருக்குனு நெனைக்கிறேன்.

Anonymous said...

யுகாதியை பற்றி 'ஒரு' செய்தியும் இல்லையெப்பா.....:-))))))

Anonymous said...

யுகாதியை பற்றி 'ஒரு' செய்தியும் இல்லையெப்பா.....:-))))))