பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, February 23, 2008

விஜயகாந்த் பேட்டி - மன்னிப்பு கேட்கா விட்டால் வழக்கு கலைஞர் எச்சரிக்கை!

"கலைஞர் பேசாத அநாகரீக வார்த்தைகளா" என்ற தலைப்பில் குமுதம் வார இதழ் விஜயகாந்த் பேட்டியை இந்த வாரம் வெளியிட்டது. அதில் கலைஞர் 'பாவடை நாடா' பற்றிய பேச்சை விஜயகாந்த குறிப்பிட்டு பேசியிருந்தார்.

முதல்- அமைச்சர் கருணாநிதிக்கு களங்கம் ஏற்படும் வகையில் இந்த பேட்டி உள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதை கண்டித்து முதல்-அமைச்சர் கருணாநிதி, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கும், குமுதம் வார இதழ் ஆசிரியர் ராமச்சந்திரன் மற்றும் வெளியீட்டாளர் செல்வரங்கம் ஆகியோருக்கும் வக்கீல் நோட்டீசு அனுப்பி உள்ளார்....

இந்த பூச்சாண்டிக்கு எல்லாம் கேப்டன் பயப்படமாட்டார்


குமுதத்தில் வந்த விஜயகாந்த் பேட்டி
சமீபகாலமாக தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தலைவர் விஜயகாந்த் கலக்குகிறார். ஆளுங்கட்சிக்கு எதிராக சரமாரியாக குற்றச்சாட்டுகளை அடுக்குவதும், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் எதிர்த் தாக்குதலில் இறங்குவதும் தமிழக அரசியலில் இப்போதே தேர்தல் நேரத்து ஜுரம். கேப்டனை அவரது அலுவலகத்தில் சந்தித்தோம். தி.மு.க. அரசுக்கு எதிராக புதிய கணைகளைத் தொடுத்தவர் பேச்சில் நிறைய காரம்! அவ்வப்போது அவருக்கேயுரிய பிரத்யேக நமட்டுச் சிரிப்பு.

‘சட்டசபைக்கு வராமல் சந்து முனையில் சிந்து பாடுகிறார்’ என்று உங்களை முதல்வர் கிண்டலடிக்கிறாரே?

ஜெயலலிதாவின் ஆட்சியின்போது இவர் ஐந்து வருடங்கள் சட்டசபையில் சிந்து பாடினாரா அல்லது கோபாலபுரம் சந்துல சிந்து பாடினாரா? எதிர்க்கட்சி தலைவி என்ற முறையில் ஜெயலலிதா இரண்டு தடவை வந்தாரே! இவர் வெறும் கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு போயிருக்கார். நான் பல தடவை பேசியிருக்கேன். ஸ்டாலின் முதற்கொண்டு எல்லா மந்திரிகளின் ரூமிற்கும் போயிருக்கேன். கலைஞரையே மூணு தடவை பார்த்திருக்கேன். இந்தத் தொடரின்போது தொண்டரின் மறைவுக்காக என் தொகுதிக்கு போயிருந்தேன்.

வெள்ள நிவாரணப் பணிகளைப் பார்வையிட கடலூர் பக்கம் வந்த முதல்வர் மந்தாரகுப்பம் வரை வந்துவிட்டு போயிருக்கார். என் தொகுதியில் தண்ணீர் தேங்கலையா? சரி, அப்படித்தான் சட்டசபையில் உருப்படியாக என்னதான் பேசுகிறார்கள்? ‘ஐம்பது வருஷம் முன்ன நீ என்ன பண்ணினே?’ என்று பேசவா அங்கே போறோம்! நான் மக்கள் மன்றத்தில் பேசியதால்தான் இவ்வளவுதூரம் எனக்கு பதில் சொல்றார். சட்டசபையில் நான் பேசியபோது ஒரு தடவையாவது பதில் தந்திருக்கிறாரா? சந்து முனையில் ஓட்டுக் கேட்கப் போறீங்களே... பேசக்கூடாதா? (குரலை உயர்த்துகிறார்)

தை திங்கள் தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளதற்கு மற்றவர்கள் விழா எடுக்கும் போது, தமிழர் என்ற முறையில் நீங்கள் அதை வரவேற்கக்கூட இல்லையே?

நாட்டில் ஆயிரத்தெட்டு பிரச்னை இருக்கு. இதுவா இப்போது பிரச்னை? வருஷப்பிறப்பு என்றால் ஜனவரி_1 என்பது மக்கள் மனதில் பதிந்துவிட்டது. அதேபோல் தமிழ் வருஷம் என்றால் சித்திரைதான் என்று பதிந்துவிட்டது. நாட்டின் திட்டகமிஷன் ‘ஏழையின் சதவிகிதத்தைக் குறையுங்கள்’ என்றால் அது கூடிக்கிட்டே போகிறது. குஜராத் மாதிரி அதைப் பத்து சதவிகிதத்திற்கு கொண்டு வந்துவிட்டால் அதுவல்லவா சாதனை! இதுவா சாதனை? இதனால் வேலைவாய்ப்பு ஒழிந்துவிடுமா? ஊழல்தான் ஓடிவிடுமா?

வள்ளுவர் கோட்டத்தில் ஜெகத்ரட்சகன் ஏரியா புராவும் ஜிகினா விளக்குப் போட்டு ஒரு விழா கொண்டாடினாரே... எதற்கு? ‘தை’க்கா? (சிரிக்கிறார்) வாலாஜாபாத்தில் மதுபான ஆலையை அனுமதித்தால் வள்ளுவர் கோட்டத்தில் விழா எடுக்கலாம்! நாளைக்கு விருதுநகரில் இன்னொருத்தருக்குக் கொடுத்தால் விழுப்புரத்தில் பாராட்டு விழா நடத்தலாம். இந்த ஊழலை மக்கள் பேசுகிறார்கள் சார்!

உங்களுக்கு அடக்கம் தேவை... ஆணவம் கூடாது என்கிறாரே முதல்வர்?


அடடா... அடக்கத்தைப்பற்றி, அரசியல் நாகரிகம் பற்றி இவர் பேசலாமா? அந்தக் காலத்தில் இந்த ‘அடக்கமான தலைவர்’ எவ்வளவு பேசியிருக்கார் தெரியுமா? காமராஜரையும், ராஜாஜியையும் இவர் பேசாத பேச்சா? எல்லாமே பேப்பரில் இருக்கு. மதுரையில் இந்திராகாந்தியை கறுப்புக் கொடி காட்டி அடித்தவர்கள்தானே... இவர்கள்! நான் அந்த பயங்கரத்தை கண்ணால பார்த்து ஓடினவன். அப்போ எனக்குச் சின்ன வயசு.

சட்டசபையில் திராவிடநாடு பற்றிய ஒரு கேள்வியை எழுப்பினார் காங்கிரஸின் அனந்தநாயகி. இவர் உடனே எழுந்து, ‘நாடாவைக் கழற்றி பாவாடையை தூக்கிப் பார். அங்கே தெரியும்’ என்றார். சட்டசபை அல்லோலகல்லோலப்பட்டது. அரசுக் கோப்பின் நாடாவை அவிழ்த்து பார்ப்பதைத்தான் அப்படி சொன்னதாக அப்புறம் வியாக்யானம் தந்தார். கச்சத்தீவுப் பற்றி எனக்குத் தெரியாது என்கிறாரே.... சட்டசபையில் அனந்தநாயகி கேள்விக்கு இவர் பதில் சொன்னதே ஞாபகம் இருக்கே?

காமராஜர்... காமராஜர் என்று இப்போது முழங்குகிறாரே... விருதுநகரில் பெருந்தலைவர் காமராஜரை தோற்கடிக்கவேண்டும் என்று ஒரே மூச்சில் நின்றவர்தான் இவர். அண்ணா ‘வேண்டாம்’ என்றதையும் கேட்கவில்லை. இவர் பணத்தை எடுத்துக்கிட்டுப் போய்க் கொடுத்தார் _ திருட்டுத்தனமாக! யாரிடமிருந்து அடக்கத்தை கற்றுக் கொள்வது? என்னை எறும்பு என்றார். ஆமை என்றார். இப்போது சந்துல சிந்து பாடறார் என்கிறார். ஆணவத்தில் பேசுவது யார்?

கூட்டணி விஷயத்தில் ரொம்பவும் குழம்புவதுபோல தெரிகிறதே... பொதுக்கூட்டங்களில் மக்களிடம் அவ்வப்போது கேட்கிறீர்கள். கூட்டணி வைத்தால் கரை சேரலாம் என்று நினைக்கிறீர்கள். அதேசமயம் மரியாதை போய்விடும் என்று பயப்படுகிறீர்கள்... இப்படியா குழம்புவது?

நான் ஸ்டெடியாகத்தான் இருக்கேன் (சிரிக்கிறார்). என் விசுவாசிகளைக் கேட்கிறேன். தப்பில்லையே. ஒண்ணும் ஒண்ணும் இரண்டு உண்மை. நானும் மக்களும் கூட்டு வைச்சாலும் இரண்டுதானே! ஏன் எல்லாக் கட்சியிலிருந்தும் ஐந்து, ஐந்து சதவிகிதத்தினர் பிரிந்து வந்து எனக்கு ஓட்டுப் போடக்கூடாது? தவிர, இதுவரை ஓட்டுப் போடாத இளசுகள் எத்தனைப் பேர் நாளைக்கு தே.மு.தி.க.வுக்கு ஓட்டு போடப்போகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?

‘தி.மு.க. ஆட்சியின் நல்ல திட்டங்களையெல்லாம் அலங்கோலம் என்று விபரமில்லாமல் பேசுகிறார்’ என்று முதல்வர் உங்கள் மீது குற்றஞ்சாட்டுகிறாரே?

நல்ல கதை! சிமெண்ட் அலங்கோலத்தைப் பாருங்கள். முதலில் தாசில்தாரிடம் திட்டத்தோடு கொடுக்கச் சொல்கிறீர்கள். அப்புறம் பிளான் இல்லாமல் கொடுக்கலாம் என்கிறீர்கள். அப்புறம் 200 மூட்டை தர்றேன் என்கிறீர்கள். சிமெண்ட்டை இந்த விலைக்குத்தான் கொடுக்கணும்னு ஆர்டர் போடவேண்டியதுதானே... ஏன் 160 ரூபாய்க்கு தரமுடியாதா? 200 ரூபாய் என்கிறார்கள். காஞ்சிபுரத்தில் ‘அரசாங்கம்’ படப்பிடிப்பின்போது ஜனங்களை இதுசம்பந்தமாக கேட்கிறேன்.

‘‘அட நீங்க வேற சார்... தாசில்தாரிடமிருந்து எல்லோரையும் பார்த்து லஞ்சம் கொடுத்துட்டு வாங்கறதும், வெளியில் 250 ரூபாய் கொடுக்கறதும் ஒண்ணுதான்’’ என்கிறார்கள். இது அலங்காரமா அலங்கோலமா?

இலவச டி.வி. தர்றேன் என்கிறீர்கள். ரேஷன் கார்டைப் பார்த்துத் தரவேண்டியதுதானே... எதற்காக முதல் நாள் ராத்திரி போய் டோக்கன் தருகிறீர்கள்? அதில்தான் முறைகேடு. தமிழகத்தில் வேலையில்லாதவர்களுக்கு வேலை தந்ததாகச் சொல்லும் இவரது புள்ளி விவரமும் தப்பு. சேது சமுத்திர திட்டம் பற்றி இவரிடம் யாராவது கருத்துக் கேட்டோமா? இவரது கருத்துக் கோளாறால்தான் பிரச்னை ஆனது.

பேனர், கட்_அவுட் கூடாது என்று முழங்குகிறார். நீங்கள் வேலூருக்குப் போய் பார்த்திருந்தால் தெரியும். சட்டத்தைப் போட்டவரே மீறுகிறார்.

‘எம்.ஜி.ஆரின் வேனை திருப்பித்தர வேண்டும்’ என்று ராமாவரத்திலுள்ள அவரது வாரிசு ஒருவர் கேட்டிருக்கிறாரே?

அவருக்கு என்ன உரிமை இருக்கு? அவர் யார் என்றே தெரியாதே? எம்.ஜி.ஆர். நடந்து போன பாதையை இடிச்சுப் போட்டது யார்? அந்தத் தோட்டத்தையே சின்னா பின்னப்படுத்தியவர் இந்த விஜயன். தவிர எனக்குக் கொடுக்கப்பட்ட வேன், அன்பளிப்பு. அதைக் கேட்கும் உரிமை இவர்களுக்கு இல்லை. கொடுத்தவர்கள் கேட்கட்டும். நான் பிறந்ததிலிருந்து எம்.ஜி.ஆர். ரசிகன். ரசிகர்கள் அன்பால் ‘கறுப்பு எம்.ஜி.ஆர்.’ என போஸ்டர் போடுகிறார்கள்..



வக்கீல் நோட்டீஸ்
27-2-2008 தேதியிட்ட குமுதம் வார இதழில் நீங் கள் (விஜயகாந்த்) பேட்டி கொடுத்துள்ளீர்கள். அதில் முதல்-அமைச்சர் கருணாநிதி குறித்து நீங்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் தவறானவை, அடிப்படை ஆதாரம் இல் லாதவை.

பேட்டியில் நீங்கள், "சட்ட சபையில் திராவிட நாடு பற்றிய ஒரு கேள்வியை எழுப்பி னார் காங்கிரசின் அனந்த நாயகி. இவர் உடனே எழுந்து, நாடாவைக் கழற்றி பாவா டையை தூக்கிப்பார் அங்கே தெரியும் என்றார். சட்டசபை அல்லோகலப்பட்டது. அரசுக் கோப்பின் நாடாவை அவிழ்த்து பார்ப்பதைத்தான் அப்படி சொன்னதாக பிறகு வியாக் யானம் தந்தார். கச்சத் தீவுப் பற்றி எனக்குத் தெரியாது என்கிறாரே- சட்டசபையில் அனந்தநாயகி கேள்விக்கு இவர் பதில் சொன்னதே ஞாபகம் இருக்கே''- என்று தெரி வித்துள்ளீர்கள்.

முதல்-அமைச்சர் கருணா நிதி இதை வன்மையாக மறுக் கிறார். சட்டசபையில் எந்த ஒரு உறுப்பினரும் இப் படி அவரிடம் கேள்வி எழுப் பியதே இல்லை என்று கூறுகி றார். குறிப்பாக அனந்தநாயகி இத்தகைய கேள்வி எதுவும் கேட்கவில்லை. அதற்கு நான் இப்படி பதில் சொல்லவும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அனந்தநாயகி எந்த தேதியில் இப்படி ஒரு கேள்வி கேட்டார் என்று நீங் கள் சொல்லவில்லை. அது போல முதல்-அமைச்சர் கருணாநிதி எப்போது, இப்படி பதில் சொன்னார் என்றும் குறிப்பிட வில்லை.

மலிவான அரசியல் ஆதாயம் தேடவும், தன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே இப் படி ஒரு கேள்வி பதில் பேசப் பட்டதாக நீங்கள் (விஜய காந்த்) வேண்டும் என்றே பேட்டி அளித்துள்ளதாக முதல்-அமைச்சர் கருணா நிதி கருதுகிறார். நாட்டின் மூத்த அரசியல் தலைவரான அவரை நீங்கள் தவறான எண்ணத்துடன் அவமானப் படுத்தும் வகையில் குற்றச் சாட்டுக்களை கூறி இருக்கி றீர்கள். அவருக்கு இருக்கும் மரியாதையை சீர்குலைக்கும் வகையில் உங்கள் கருத்துக்கள் உள்ளது.

அந்த பேட்டி முழுவதும் பொய் மூட்டைகளாக உள்ளது. அதில் எதுவும் அடிப்படை இல்லாதது. நீங்கள் சொன்னது போன்ற எந்த விவாதமும் சட்டசபையில் நடக்கவில்லை. சட்டசபையில் அதற்கான குறிப்புகளும் இல்லை. எனவே இந்த பேட்டி மூலம் நீங்கள் சட்டசபை உறுப்பினர் நடத்தை விதிகளை மீறி உள்ளீர்கள்.

உங்களால் கூறப்பட்டுள்ள இந்த கேள்வி-பதில் பெண்களை மிகவும் இழிவு படுத்துவதாக உள்ளது. முதல்-அமைச்சர் கருணா நிதியின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் எண்ணத்தில் நீங்கள் இப்படி அபாண்டமான பொய்யை கூறியுள்ளீர்கள். பொது வாழ்வில் அவருக்கு கண்ணியத்தை மாசுப்படுத்த இப்படி தர்மமே இல்லாமல் கருத்து தெரிவித்து இருக்கி றீர்கள்.

இந்த தவறான தகவலை ஆய்வு செய்து உறுதிப்படுத்திக் கொள்ளாமல் குமுதம் ஆசிரி யரும், வெளியீட்டாளரும் பிர சுரித்துள்ளார்கள். இது தவறானது. ஒரு மூத்த தலைவரின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் இந்த கருத்தை யாராலும் ஏற்க இயலாது.

தவறாக தகவல் தெரி வித்த உங்கள் பேட்டி முக்கியத் துவம் கொடுத்து பிரசுரிக்கப் பட்டுள்ளது. இவை இந்திய தண்டனை சட்டம் பிரிவு 499,500,501 மற்றும் 502ன்படி குற்றமாகும். இந்த சட்டத்தின் கீழ் உங்களை தண்டிக்க
முடியும்.

எனவே முதல்-அமைச்சர் கருணாநிதி சொல்லாததை நீங்கள் திரித்துப் பேசியதற்காக 2 நாளில் நிபந்தனையற்ற மன் னிப்பு கேட்க வேண்டும். உங் களது மன்னிப்பு தகவல் அனைத்து முக்கிய நாளிதழ் களிலும் இன்னும் 2 நாளில் வரவேண்டும். அதோடு குமுதம் இதழின் அடுத்த வார இதழிலும் உங்களது மன்னிப்பு இடம் பெற வேண்டும்.

இல்லையெனில் உங்கள் மீது குற்றவியல் வழக்கு தொடரப்படும். உங்கள் மீது சிவில் மற்றும் கிரிமினல் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் இனி எதிர்காலத் தில் முதல்-அமைச்சர் கருணாநிதி பற்றி எந்த அடிப்படை இல்லாத தகவல்களையும், பொய்யான கருத்துக்களையும் நீங்கள் (விஜய காந்த்) பேசக்கூடாது. மீறினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

2 Comments:

Anonymous said...

இதை இன்று சொல்லும் விஜயகாந்த் ஒரு காலம் வரை கலைஞரின் அன்புத் தம்பியாக இருந்தார்.அப்போது இதெல்லாம்
தெரியவில்லையா.
கலைஞரின் கடந்த காலப் பேச்சுகள், 71-76ல் ஆடிய ஆட்டம் அதையெல்லாம் இன்று கேட்பதால்
என்ன பலன்.
விஜயகாந்த இன்றைய ஊழல்களைப்
பற்றி பேசினால் போதும். ப்ழைய
குப்பைகளை கிளற வேண்டாம்.
கலைஞர் அதைக் காட்டி விவாதத்தை
திசை திருப்புவார்.

அருண்மொழி said...

gapபுடனின் ஜகா!!!

குமுதம் வார இதழின் நிருபர் வி.சந்திரசேகரன் என்பவர் தானாகவே எனது கட்சிக்காரரின் அலுவலகத்திற்கு வந்து, அவரைத் தூண்டுவதைப்போல- உங்கள் கட்சிக்காரரால் பல நேரங்களில் என் கட்சிக்காரர் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளையெல்லாம் தொகுத்து பல கேள்விகளைக் கேட்டார். எந்த விதமான உள்நோக்கமும் இல்லாமல், எனது கட்சிக்காரர் கேட்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் பதிலளித்தார். எனது கட்சிக்காரரின் பதில்கள், அவர் கூறியவாறு அப்படியே வெளியிடப்படவில்லை. தவறாகவும், முறை தவறியும் தேவையற்ற வகையிலும் 27.2.2008 அன்று குமுதம் இதழில் அவைகள் வெளியிடப்பட்டன. டேப்பில் அந்த பேட்டி பதிவும் செய்யப்பட்டது. எனது கட்சிக்காரர் சில பகுதிகளை அவரது டேப்பில் அழித்து விடும்படி கூறிய பின்னரும், அந்த பகுதிகள் என்ன காரணத்தாலோ அந்த இதழிலே வெளியிடப்பட்டுள்ளது.

கருணாநிதியை மதிக்க கூடியவர்

உங்கள் நோட்டீசிலே குறிப்பிட்டு இருப்பதைப் போல தங்கள் கட்சிக்காரரின் பெயருக்கு களங்கம் ஏற்படும் படியாக ஏதுவும் கூறவில்லை என்பதை என் கட்சிக்காரர் தெரிவித்துக் கொள்கிறார். எனது கட்சிக்காரர், நிருபருக்கு பேட்டி அளித்த போது, உங்கள் கட்சிக்காரரை எப்போதும் தான் மதிக்கக்கூடியவர் என்றும், அவரை `கலைஞர்' என்று தான் அழைப்பது வழக்கம் என்றும், `கருணாநிதி' என்று கூட உச்சரிக்க மாட்டார் என்றும் கூறியதையெல்லாம் கூட வேண்டுமென்றே குமுதம் இதழ் வெளியிடாமல் தவிர்த்து விட்டது என்றும் என் கட்சிக்காரர் தெரிவிக்கிறார்.