பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, December 17, 2007

ஆற்காடு வீராஸ்வாமி x ராமதாஸ் - பாகம்-2

ஒரே பதிவில் போடுவதால் படிக்க கஷ்டமாக இருக்கிறது என்று வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்கி இந்த பதிவு பாகம் இரண்டாக

ஆற்காடு வீராஸ்வாமி பேட்டி - ஜூவி
அன்புமணி ராமதாஸ் - பேட்டி''தமிழ்நாட்டில் மின்வெட்டு இருக்கிறதா இல்லையா... ஒளிக்காமல் சொல்லுங்கள்?''

''தமிழ்நாட்டில் மின்வெட்டு இல்லை என்று நான் எப்போதும் சொல்லவில்லை.

நாம் இப்போது உற்பத்தி செய்யும் மின்சாரத்தைவிட 800 மெகாவாட் நமக்குக் கூடுதலாகத் தேவை. மத்திய அரசின் தொகுப்பிலிருந்து நமக்குக் கிடைக்கவேண்டிய மின்சாரம்... அதாவது நெய்வேலி, கல்பாக்கம், ராமகுண்டம் போன்ற அனல் மின்நிலையங் களிலிருந்து கிடைக்க வேண்டிய 1000 மெகாவாட் மின்சாரம் நமக்குக் கிடைக்கவில்லை.

எப்போதும் ஜனவரி இருபதாம் தேதி வரை காற்று நன்றாக வீசும். ஆனால், இந்த வருடம் அக்டோபர் மாதம் முதலே காற்று சரிவர வீசவில்லை. இதனால் காற்றாலை மின்சாரமும் நமக்குப் போதுமான அளவு கிடைக்கவில்லை. இது இயற்கை செய்த சதி!

இன்னொரு தகவலும் உங்களுக்கு சொல்கிறேன்... தமிழகத்தில் செப்டம்பர் மாதம் வரையில் மின்சாரம் உபரியாக இருந்தது. மகாராஷ்டிரா, பஞ்சாப் போன்ற மாநிலங்களுக்கு அதை விற்பனை செய்தோம். இப்போது நமக்கு ஏற்பட்டுள்ள மின் தட்டுப்பாட்டை சமாளிக்க அஸ்ஸாம், ஹரியானா மாநிலங்களுடன் ஒப்பந்தம் போட்டு 300 மெகாவாட் மின்சாரம் வாங்க இருக்கிறோம்.

மின்தடையை முடிந்த மட்டிலும் குறைத்து இருக்கிறோம் என்பதே உண்மை.

இன்னொரு பக்கம், சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு 700 மெகாவாட் மின்சாரம் கூடுதலாகத் தேவைப் படுகிறது. இதற்கு தி.மு.க. ஆட்சியில் புதிய தொழிற் சாலைகள் ஏற்பட்டதும் ஒரு காரணம். தவிர, நம் மாநிலத்தில் மின் இணைப்புக்காக விண்ணப் பிக்கும்போது பயன் படுத்த கேட்கும் மின்சாரத்தைவிட அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். நடிகர் சரத்குமார்கூட, மின்வெட்டு பற்றி கேள்வி எழுப்பி இருக்கிறார். அதனைத் தவறு என்று நான் சொல்லவில்லை. ஆனால், சரத்குமார் தன் வீட்டுக்கு மின் இணைப்பு கேட்டபோது எவ்வளவு மின்சாரம் தேவை என்று கேட்டாரோ, அதைவிடப் பத்துமடங்கு மின்சாரம் இப்போது பயன்படுத்துகிறார்! குளிர்சாதன வசதி, வாஷிங் மிஷின், கிரைண்டர், மின்விசிறி, மின்சார மோட்டார் போன்ற பல அத்தியாவசிய வசதிகள் சரத்குமார் போன்றவர்களுக்கு அவசியம்தானே..?

இப்படித்தான் ஒவ்வொருவரும் தனக்கு இவ்வளவு மின்சாரம் தேவை என்று கேட்டு, கனெக்ஷனை வாங்கி, அதன் பிறகு நிறைய மின்சாரத்தைப் பயன்படுத்துகிறார்கள். அப்போது எதிர் பார்ப்பையும்விட கூடுதலாக மின்சாரம் தேவைப்படும்தானே?

டாக்டர் ராமதாஸ் 'மின்தட்டுப் பாட்டை ஏன் முன்கூட்டியே சமாளித்து அதற்கேற்ப திட்டமிடவில்லை?' என்கிறார். நாங்கள் திட்ட மிட்டுத்தான் மதுராந்தகம் அருகே செய்யூரில் மின்சார நிலையம் அமைக்க முன்வந்தோம். உடனே, 'அங்கே அமைக்கக்கூடாது' என்று ராமதாஸ் ஆர்ப்பாட்டம் நடத்தினார். உடன்குடியில் தொடங்கலாம் என்றபோதும், தியாகவல்லியில் தனியார் மூலம் மின் உற்பத்தி நிலையம் அமைக்க அனுமதிக்கலாம் என்றபோதும்கூட இதே கதைதான். அவரைப் பொறுத்தவரையில், தி.மு.க-வுக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் வந்துவிடக் கூடாது என்ற ஒரே அச்சம்தான்! கடலோர பகுதியில் அமையவிருக்கும் இந்தத் திட்டங்களை 'விளைநிலத்தில் அமைப்பது தவறு' என்கிறார். கடலோரம் எப்படி விளைநிலம் ஆகும்? ராமதாஸ் போராட்டம், அறிக்கையெல்லாம் மக்களுக்கு சிரிப்பைத்தான் வரவழைக்கிறது!''

''ராமதாஸ், குறிப்பாக உங்களைக் குறிவைத்து அறிக்கைத் தாக்குதலில் இறங்க, தனிக் காரணம் உண்டா?''

''டாக்டர் எல்லோர் மீதும்தான் குறிவைத்தார். முதலில் லாட்டரி சீட்டு பற்றி பேசினார். இப்போது அதுபற்றிப் பேசுவதில்லை. அதன்பிறகு போதை பாக்கு வியாபாரிகளைப் பற்றிப் பேசினார். இப்போது பேசவில்லை... இதெல்லாம் ஏன்..? அவர்தான் சொல்ல வேண்டும்!

'இருநூற்று ஐம்பது ஏக்கர் ஏரிக்கரை விளைநிலத்தில் கல்லூரி கட்டி இருக்கிறார் ராமதாஸ்' என்று நான் சொன்னதும் 'நூற்றாண்டுக்கு மேல் அந்த இடம் பயன் படாமல் இருந்தது' என்கிறார். 'விளைநிலம் என நிரூபித் தால் அரசியலை விட்டு விலகத் தயார்' என்கிறார். அவர்கள் கல்லூரி அமைந்திருக்கும் இடம் அவர்களால் விலைக்கு வாங்கப்பட்டபோதே விளைநிலங்களாகத்தான் இருந்தன. அவற்றின் 'ரெவின்யூ ரிக்கார்டு' என்று சொல்லப்படும் சிட்டா அடங்கல் வாங்கிப் பார்த்தால் தெரியும். இதுபோல, அரசு புறம்போக்கு நிலம்கூட வன்னியர் அறக்கட்டளையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் என்னிடம் ஆதாரம் இருக்கிறது. ஆனால், அவரோடு லாவணி கச்சேரி பாடுவதற்கு எங்களுக்கு நேரம்தான் இல்லை...''


( சட்டத்திற்கு விரேதமாக புறம்போக்கு நிலங்களை ஆக்கரமிப்பு செய்தார் என்று ஆதாரம் இருக்கு என்றால் ஏன் சட்டபடி நடவடிக்கை எடுக்க கூடாது ? )


''முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சென்னை யிலுள்ள தாதாக்களுக்கெல்லாம் நீங்கள்தான் அடைக் கலம் தருவதாக சொல்லியிருக்கிறாரே?''

''எனக்கு தாதாக்கள் யாரையும் தெரியாது. ஜெயக்குமார் போன்றவர்களை மட்டும்தான் தெரியும்!''

''ராமதாஸ் உங்களுக்கு பதில் சொல்லும் அறிக்கையில் 'அப்பு' என்ற பெயரை குறிப்பிட்டுள்ளாரே...! அவர் குறிப்பிடும் 'அப்பு' யார் என்று உங்களுக்குத் தெரியும் தானே...?''

''ராமதாஸ் குறிப்பிடுவது யாரை மனதில் வைத்து என்று புரிகிறது. ஆனால், அவருக்குத் தைரியமிருந்தால் கிசுகிசு பாணியில் சொல்லாமல் வெளிப்படையாக சொல்லட்டும். அதன்பிறகு நான் பதிலடி கொடுக்கிறேன்!''

''சரி... தி.மு.க. கூட்டணி யில் பாட்டாளி மக்கள் கட்சி இருக்கிறதா இல்லையா?''

''இதற்கு பதிலை டாக்டர் ராமதாஸ்தான் சொல்ல வேண்டும். 'தேர்தலுடன் கூட்டணி முடிந்து விட்டது' என்கிறார். அவரேதான், '2011 வரை தி.மு.க. ஆட்சியை ஆதரிப்போம்' என்கிறார்! தினம் ஒரு குற்றச்சாட்டு சொல்லிக் கழக ஆட்சியை விமர்சிக்கிறார். இதற்கு எல்லாம் எங்களுக்கு உண்மையாகவே பொருள் புரியவில்லை! தி.மு.க-வைப் பொறுத்தவரை, நாங்களாக யாரையும் கூட்டணியை விட்டு வெளியேற்றுவது இல்லை. அவர்களாக வாய்க்கு வந்தபடி பேசி வெளியேறினால், நாங்கள் என்ன செய்ய முடியும்?''

''நெல்லை இளைஞர் அணி மாநாட்டுக்குக் கூட்டணிக் கட்சி என்ற முறையில் டாக்டருக்கு அழைப்பு உண்டா?''

''தம்பி மு.க.ஸ்டாலின் இளைஞர் அணி சார்பில் டாக்டர் ராமதாசுக்கு அழைப்பு அனுப்பி இருக்கிறார். அவருக்கு மட்டுமல்ல... எல்லா தோழமைக் கட்சிகளுக்கும் அழைப்பு அனுப்பி இருக்கிறார்!''

''மாநாட்டில் டாக்டர் ராமதாஸ் பேச வாய்ப்பு உண்டா?''

''யார் யார் பேசுவார்கள் என்று முரசொலியில் விளம் பரப்படுத்தி இருக்கிறார்களே... அவர்களுக்கு மட்டுமே பேச அனுமதி. பொருளாளர் என்ற முறையில் எனக்கோ, முதன்மை அமைப்புச் செயலாளர் என்ற முறையில் அமைச்சர் துரைமுருகனோகூட மாநாட் டில் பேச அனுமதி இல்லை.''

''ஸ்டாலினுக்கு எப்போது புரமோஷன்?''

''அதைத் தலைவர் முடிவு செய்வார். தம்பி ஸ்டாலினுக்கு எப்போது பதவி உயர்வு தரவேண்டும் என்பது அவருக்குத் தெரியும். 'ஸ்டாலின் தலைமை ஏற்கத் தயார்' என்று கடந்த இரண்டு ஆண்டுகாலமாக பேராசிரியர் சொல்லி வருகிறார். என்னைப் போன்றவர்களுக்கும் தம்பி ஸ்டாலின் தலைமை ஏற்பதில் எந்த சங்கடமும், தயக்கமும், ஆட்சேபணையும் இல்லை. ஆனால், உங்களுக்கு நான் சொல்லிக்கொள்வது- அவர் தலைவரின் மகன் என்பதால் அல்ல... மிசாவில் எங்களோடு சிறையில் இருந்தபோது அவர் அடிபட்டு, உதைபட்டு சிட்டிபாபு அவர்களால் காப்பாற்றப்பட்டு, இன்றைக்கு மாதத்தில் இருபத்தைந்து நாட்கள் மனைவி மக்களை எல்லாம் விட்டுவிட்டு சுற்றுப்பயணம் செய்து, இந்த நாட்டுக்கும் கட்சிக்கும் உழைக்கிறார். அவர் தலைமை ஏற்க இதைவிட என்ன தகுதி வேண்டும்?''

''கனிமொழி எம்.பி. எப்போது மத்திய அமைச்சர் ஆவார்?''

''இந்த மாதிரி கேள்வி எல்லாம் என்னிடம் நீங்கள் கேட்கக் கூடாது. இதுபற்றி முடிவு எடுக்கும் இடத்தில் இருப்பவர் தலைவர் கலைஞர். 'கனிமொழிக்கு அமைச்சராகும் தகுதி இருக்கிறது' என்பதற்கு, சில தினங்களுக்கு முன் மாநிலங் கள் அவையில் அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரித்து அவர் பேசிய பேச்சே சாட்சி. மற்றபடி யாரை அமைச்சராக்க வேண்டும் என்பதையெல்லாம் தலைவர் கலைஞர்தான் முடிவு செய்வார்!''

''தனியாருக்கான அனல் மின் நிலைய அனுமதி வழங்கக் காரணம், 'உங்களுக்கு வேண்டிய ஒருவருக்குக் காட்டும் சலுகைதான்' என்று டாக்டர் ராமதாஸ் சொன்னார். உடனே நீங்கள், 'இதுபற்றி பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகனிடம் கேட்டுக் கொள்ளுங்கள்' என்று பதில் சொன்னீர்கள். வேல்முருகனிடம் அப்படி என்ன மர்மம் இருக்கிறது?''

''நான் அவசரப்பட விரும்பவில்லை. வேல்முருகன் சொல்கிறாரா என்று கொஞ்சநாள் பார்ப்போமே... அவர் சொல்லவில்லையென்றால், அதன்பிறகு நான் சொல்கிறேன். இப்போதுகூட அனல் மின்நிலையத்துக்கு அனுமதி தர இருந்த இடம் என்று வேல்முருகன் ஏர் உழுவதுபோல் ஒரு படம் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. அதுகூட பொய்தான்! மின் நிலையம் அமைய இருந்த இடத்துக்கு 500 மீட்டர் தள்ளி இருந்த இடத்தில் உழுவது போல் போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு, அனல் மின் நிலையத்துக்கான இடம் என்று உண்மைக்குப் புறம்பாகக் கூறுகிறார். நான் வம்புக்காக ஆதாரமில்லாத விஷயங்களைப் பேசுவது கிடையாது. எல்லா மர்மத்துக்கும் என்னிடம் ஆதாரம் இருக்கிறது. தேவையானால், உரிய நேரத்தில் அதனை வெளிப்படுத்துவேன்!''

''தமிழ்நாட்டில் புதிய திட்டப்படி 'ஆறரை ஆண்டு மருத்துவக் கல்வி திட்டம் அமலுக்கு வராது' என்று முதல்வர் சொல்லி இருக்கிறாரே? இந்த சட்டம் இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங் களுக்கும் பொதுவானதுதானே..?''

''இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறிய பிறகு தானே அமலுக்கு வரமுடியும்..! அங்கே இந்த சட்டத்தை காங்கிரஸ் ஆதரிக்காது. பி.ஜே.பி. ஆதரிக்காது. கம்யூனிஸ்ட்கள் ஆதரிக்கமாட்டார்கள். தி.மு.க-வும் ஆதரிக்காது. அப்புறம் எப்படி இந்த சட்டம் நிறைவேறும்? டாக்டர் அன்புமணி மட்டும் ஐந்தரை ஆண்டு மருத்துவக் கல்வி படித்துவிட்டு டாக்டர் ஆவாராம். மற்றவர்கள் எல்லாம் ஆறரை ஆண்டு, ஏழரை ஆண்டு படிக்க வேண்டும் என்று வற்புறுத்தினால் எப்படி..?''

''உத்தரமேரூரில் ஒரு திருமண வீட்டில் உங்களைப் பற்றி, 'மின்வாரியத்தில் கிளார்க்காக இருந்தவர்தானே' என்றும், 'எதிர்க்கட்சிகளுக்கு உளவு சொன்னவர்தானே' என்றும் ராமதாஸ் பேசியதாக செய்தி வெளியாகி இருக்கிறதே?''

''இதுபற்றி நான் சொல்வதற்கு எதுவுமில்லை. அவரை மாதிரி தரம்தாழ்ந்த அரசியல் செய்து எனக்கு ஒருபோதும் பழக்கமில்லை. எல்லாவற்றையும் என் தலைவர் கவனித்துக் கொண்டிருக்கிறார். அவர் அறிவுரையின்படி நடந்து கொள்வேன்!''

அன்புமணி ராமதாஸ் சேலத்தில் பேட்டி: (17/12/07)

தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்களில் நவீன வசதிகளை செய்யவும், விரிவாக்கம் செய்யவும் நடப்பு ஆண்டுக்கு ரூ.450 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் பீகார், மத்தியப் பிரதேசம், உ.பி போன்ற பின் தங்கிய மாநிலங்களுக்கும் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மருத்து மாணவர்கள் கட்டாய கிராமப்புற சேவை குறித்து நான் இப்போதைக்கு ஒன்றும் சொல்வதற்கு இல்லை. இப்பிரச்சனை குறித்து ஆய்வு செய்ய சாம்பசிவ ராவ் கமிட்டி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 4 வாரத்தில் இதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்த பின்னரே இந்த பிரச்சனை முடிவுக்கு வரும்.

ஆற்காடு வீராசாமிக்கும், மருத்துவர் ராமதாசுக்கும் இடையிலான அறிக்கைப் போர் முடிந்து விட்டது. அவர் ஏதோ சொன்னார். அதற்கு ராமதாஸ் பத்திரிக்கையாளர்களை வன்னியர் அறக்கட்டளைக்கு நேரில் அழைத்துச் சென்று உண்மையை விளக்கினார்.

திமுக கூட்டணியில் பாமக அங்கம் வகித்தாலும், மக்கள் பிரச்சனைகள் சுட்டிக்காட்டும் எதிர்கட்சியாகவே செயல்படும். பொதுமக்கள் பிரச்சனைகளை சொல்ல ஒருபோதும் தயங்கமாட்டோம்.

சிறப்பு பொருளாதார மண்டலம், விமான நிலைய விரிவாக்கம், துணை நகரம் அமைப்பது தொடர்பாக நாங்கள் நியாயமான எதிர்ப்புகளை காட்டினோம். எந்த ஒரு திட்டத்துக்காகவும், விவசாய நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்பதுதான் எங்களின் நிலைப்பாடு.

துணை நகரம் அமைக்கும் இடத்தை பாமகவினர் ஆக்கரமிப்பு செய்திருப்பதால் தான் அத்திட்டத்தை எதிர்ப்பதாக இப்போது ஆற்காடு வீராசாமி கூறி வருகிறார். அவர்கள் அரசுதானே நடக்கிறது. ஆக்கிரமிப்புகள் நடந்திருந்தால் தயங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே.

ஒட்டுமொத்த வன்னியர் சமூகத்துக்கும் ராமதாஸ் தான் பிரதிநிதியா என்று ஆற்காடு வீராசாமி கேட்டுள்ளார். இவரே தான், ஒவ்வொரு வன்னியரும் தங்களது வீடுகளில் ராமதாசின் புகைப்படத்தை வைத்து பூஜிக்க வேண்டும் என்று 2 கூட்டங்களில் பேசியுள்ளார்.

ஆற்காடு வீராசாமி என்ன சொன்னார் என்பதற்கெல்லாம் இனியும் சொல்வதற்கு ஒன்றுமில்லை. நேரம் வந்தால் நாங்களும் சொல்ல வேண்டியதை சொல்வோம்.

கோடை காலத்தில் மின்வெட்டு வரும். ஆனால் தமிழகத்தில் குளிர்காலத்தில் கூட மின்வெட்டு வருகிறது. இதற்கு அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவில் தமிழகம் தான் சுகாதாரத்தில் முதல் மாநிலமாக உள்ளது. இதே இப்படி என்றால் மற்ற மாநிலங்கள் எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள்.

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, நல்வாழ்வுத்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து ரூ.600 கோடியை பசுமை தாயகம் அமைப்புக்கு ஒதுக்கி விட்டதாக என்மீது குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

கிருஷ்ணசாமி என்று ஒருவர் அரசியலில் இருக்கிறார் என்பதையே மக்கள் மறந்து நெடு நாட்களாகிவிட்டது. நானும் அரசியலில் இருக்கிறேன் என்பதை மக்களுக்கு நினைவூட்டவே இப்படி ஏதாவது கூறி வருகிறார். அரசு நிதியில் இருந்து ரூ.600 கோடியோ, 6 கோடியோ அல்லது 6 பைசாவோ கூட எடுக்கவில்லை.

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கெட்டுவிட்டதாக அமைச்சர் துரைமுருகனும் கூறியுள்ளார். தாதாக்கள், குற்றவாளிகள் எல்லாம் அரசியலில் புகுந்தால் இப்படித்தான் நடக்கும் என்றார் அன்புமணி.

பாகம் - 1

2 Comments:

cgs said...

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கெட்டுவிட்டதாக அமைச்சர் துரைமுருகனும் கூறியுள்ளார். தாதாக்கள், குற்றவாளிகள் எல்லாம் அரசியலில் புகுந்தால் இப்படித்தான் நடக்கும் என்றார் அன்புமணி.

இதச்சொல்லும்போது அன்புமணி கண்ணாடி பார்திருப்பாரா?இவருடய குடும்பமும் தானே சில தாதாக்களுக்கு அடைக்கலம் கொடுத்து தேர்தலை சந்தித்ததாக செய்தி வந்தது?

புண்ணாக்கு கோவிந்தன்.. said...

ராமதாசும்..ஆற்காட்டாரும் அடிச்சிகிட்டங்க...பெரிய மருத்துவ குடிக்கு சப்போர்ட் ஆக சின்ன மருத்துவ குடி வந்திருக்காக...

ஆற்காட்டருக்காக.. எந்த செவிடன் வரபோரங்க..??