பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, December 07, 2007

மலேசிய விவகாரம் - சோ கருத்து

மலேசிய விவகாரம் பற்றி இந்த வாரம் துக்ளக் தலையங்கம்.


மலேசிய விவகாரம், புதிதாகக் கிளம்பியுள்ள பிரச்சனை அல்ல. மலேசியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து, இருந்து வருகிற பிரச்சனை, இப்போது பலரின் கவனத்துக்கு
வந்திருக்கிறது. இப்போது கூட, இது பெரிய பிரச்சனையாக உருவெடுத்ததற்குக் காரணம், மலேசிய அரசு காட்டிய சகிப்புத்தன்மையின்மைதான். அமைதியாக ஊர்வலம் நடத்திய இந்திய வம்சாவளியினர் (குறிப்பாக தமிழ் பேசுகிறவர்கள்) மீது, போலீஸ் நடத்திய கடும் தாக்குதல்தான், இந்தப் பிரச்சனையின் திசையில், இந்திய கவனத்தைத் திருப்பி இருக்கிறது.

மலேசியாவில் இந்திய வம்சாவளியினரின் போராட்டம்...

"மலேசிய அரசியல் சட்டமே, "மண்ணின் மைந்தர்கள்' – அதாவது மலேசிய
முஸ்லிம்கள் – விசேஷ உரிமைகள் பெற்றவர்கள் என்று விதித்திருக்கிறது' – என்பது, விவரமறிந்த ஒருவர் கூறுகிற தகவல். இதைத் தவிர, தேசிய வேலைவாய்ப்புத் திட்டம் போன்றவற்றின் மூலம், இந்திய வம்சாவளியினர், மற்றும் சீன வம்சாவளியினர் ஆகியோருக்கு பல உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இவையெல்லாம் பல
வருடங்களாக இருந்து வருகிற பிரச்சனைகள்.

இது தவிர, ஹிந்து கோவில்கள் பல, அரசினால் தகர்க்கப்பட்டன என்ற புகாரும்
எழுந்துள்ளது. போக்குவரத்திற்கு இடைஞ்சல் – போன்ற காரணங்களினால் பல ஹிந்து கோவில்கள் இடிக்கப்பட்டிருந்தால், அது சகிக்கப்பட வேண்டியதே; இந்தியாவிலும் இம்மாதிரி "இடிப்பு'கள் அவ்வப்போது நடக்கின்றன என்பதை மறப்பதற்கில்லை. ஆகையால், என்ன காரணத்திற்காக கோவில்கள் இடிபட்டன என்பது தெரியாமல், இதை ஒரு பிரச்சனையாக்குவதில் அர்த்தமில்லை.

இந்திய வம்சாவளியினருக்கு சம உரிமை இல்லை என்பது பிரச்சனை; அதற்கு அவர்கள் அமைதியாகத் தெரிவித்த எதிர்ப்பு, போலீஸாரின் அத்துமீறலுக்கு உள்ளாகியது என்பது கண்டனத்திற்குரியது.

( போலீஸ் இந்த ஊர்வலத்துக்கு அனுமதி தரவில்லை என்று சோவிற்கு தெரியாதா ? )

தமிழக முதல்வர், இதுபற்றி கவலை தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு
இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதியது புரிந்துகொள்ளக் கூடியதே; அவர் அப்படி கவலை தெரிவித்திருக்கா விட்டால், எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வின் கண்டனத்திற்கு உள்ளாகி இருப்பார்; இப்போது தனது கவலையை அவர் பதிவு செய்துவிட்டார்; அதனால் மலேசியாவில் பிரச்சனை தீரா விட்டாலும், அவருடைய பிரச்சனை தீர்ந்தது.

இதற்கு மலேசிய மந்திரி ஒருவர், "உங்கள் வேலையை பார்த்துக்கொண்டு போங்கள்' என்ற முறையில் பேசியிருப்பது, தேவையற்ற கண்டனம். உலகில் ஒரு நாட்டில், ஒரு பகுதி மக்களுக்கு ஏற்படுகிற பிரச்சனை பற்றி, மற்ற பல நாடுகளில் கவலை தெரிவிக்கப்படுவது, இன்றைய உலகில் சர்வ சகஜமானது. அதுவும், பல நாடுகளிலும், வெவ்வேறு நாட்டினர் வந்து குடியேறுவதும், அவர்களுடைய சந்ததியினர் அந்தந்த நாடுகளின் குடிமக்களாகவே ஆவதும், இன்றைய உலகில் தவிர்க்க முடியாதவை.
இந்தச் சூழ்நிலையில், தனது நாட்டில் நடப்பது பற்றி வேறு எந்த நாடும் எதுவும் பேசக்கூடாது என்பது நடக்கிற காரியமல்ல.

( அங்கு இந்தியர்களாக இருப்பவர்கள் மூன்றாம் வம்சாவளியினர். அவர்கள் மலேசியா நாட்டு குடியுரிமை பெற்றவர்கள்.)

"இது எங்கள் உள்நாட்டு விவகாரம்; அதில் மற்றவர்கள் தலையிட வேண்டியதில்லை' என்று மலேசிய மந்திரி சொல்லியிருந்தால் – அது இன்றைய உலக வழக்கை ஒட்டிய பதிலாக இருந்திருக்கும். ஆனால் அவர் இதைக் கடந்து, அதிகமாகப் பேசிவிட்டார். இதனால், இந்தியப் பாராளுமன்றத்தில் பல கட்சிகளும், மலேசியாவை கண்டிக்க முற்பட்டன. விவகாரத்தை பெரிதுபடுத்தியது மலேசிய மந்திரியின் சாதனை.

அடிப்படைப் பிரச்சனையைப் பொறுத்த வரையில் – "ஒரு பகுதி மக்கள் விசேஷ உரிமை பெற்றவர்கள்; மற்றவர்கள் இரண்டாம்தர குடிமக்களே' என்ற நிலைமை எந்த நாட்டிலும் நீடிப்பது, ஸர்வம் உலக மயம் என்கிற இன்றைய சூழலில், சம்பந்தப்பட்ட நாட்டிற்கு பல சிக்கல்களைத் தோற்றுவிக்கும். அமைதியான முறையில் தெரிவிக்கப்படுகிற கோரிக்கைகளைப் புறக்கணிப்பது, வன்முறைக்கு வித்திடும். இதை எல்லாம் மலேசிய அரசு உணரும்படி செய்வது, அந்நாட்டின் நட்பு நாடுகளின் கடமை.

இந்திய வம்சாவளியினரும் தங்கள் அணுகுமுறையில் ஒரு மாற்றம் காண வேண்டும். இது இந்திய வம்சாவளி "ஹிந்துக்கள்' பிரச்சனை – என்று அவர்கள் இதை அணுகினால், அது மதப் பிரச்சனையாகி, தீராத சிக்கல்களைத் தோற்றுவிக்கும்; நியாயமான கோரிக்கைகளை அரசின் முன் வைப்பதில் – ஹிந்துக்கள் அல்லாத மற்ற மதங்களைச் சார்ந்த இந்திய வம்சாவளியினரும் தங்களோடு சேர்ந்து நிற்பதற்கு, இந்த எதிர்ப்பாளர்கள் வழி காண வேண்டும். இது "தமிழ் பேசுகிறவர்கள்'பிரச்சனை, அல்லது "ஹிந்துக்கள்' பிரச்சனை என்கிற குறுகிய வட்டத்தில், இந்திய வம்சாவளியினரின் சம உரிமை கோரிக்கைகள் சிக்கிவிட்டால் – அது பலவீனப்பட்டுப் போகும்.

( மதம் சம்பந்தமாக பேசாமல் இருப்பது இந்த பிரச்சனையை மேலும் வளர்க்காமல் இருக்க உதவும் இல்லை குரங்கு கையில் பூமாலை கதை தான்! )

அதேபோல, இந்தியா கவலை தெரிவித்தாலும், தமிழக அரசியல் கட்சிகள் அக்கறை காட்டினாலும், இவர்களுடைய உதவியை மலேசிய இந்திய வம்சாவளியினர் நாடக்கூடாது. அப்படிச் செய்தால், அது அவர்களை, அவர்களுடைய நாட்டு மக்கள் மனதில் – வேற்று நாட்டவர் ஆக்கிவிடும்; மலேசிய அரசின் இன்றைய அணுகுமுறைக்கு அது வலுகூட்டும்.

தவிர, இந்த விவகாரம், குறுகிய காலத்தில், இங்கு மறக்கப்படும்; அதையும் மலேசிய இந்திய வம்சாவளியினர் மனதில் கொள்வது நல்லது. மலேசிய அரசியல்வாதிகளிடம் ஏமாந்தது போதாதென்று, இந்திய அரசியல்வாதிகளிடமும் ஏமாற வேண்டிய
அவசியம் என்ன?

( நன்றி: துக்ளக் )

0 Comments: