பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, December 22, 2007

இளங்கோவனுக்கு அதிகாரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும் - கலைஞர்

தூக்கு தண்டனை கூடவே கூடாது: முதல்வர் கருணாநிதி கருத்து முழு பேட்டி கீழே...

தி.மு.க.,விற்கு மேலும் வலு சேர்ப்பது குறித்து, டில்லியில் முடிவு எடுக்கப்படும் என்று கூறினீர்களே; முடிவு என்ன?

தி.மு.க., என்பது தி.மு.க., அரசையும் குறிக்கும். அதற்கு வலுவூட்டும் வகையில் தான், பிரதமர் மற்றும் பல்வேறு துறைகளின் மத்திய அமைச்சர்களை சந்தித்து பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு, சில முக்கியமான கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன. உடனடியாக 300 மெகாவாட் மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கின்றனர். தமிழகத்தில் மத்திய பல்கலைக்கழகம் மற்றும் ஐ.ஐ.எம்., நிறுவனம் துவங்கப்பட வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன். இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று மத்திய அமைச்சர் அர்ஜுன் சிங் தெரிவித்திருக்கிறார்.

தமிழகத்தில் நக்சல்கள் ஊடுருவல் எந்த அளவிற்கு உள்ளது?

தேனியுடன் நிற்கிறது. அதைத் தாண்டாமல் தடுத்து நிறுத்தியுள்ளோம். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் குறைவு தான்.

மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று மத்திய அமைச்சர் இளங்கோவன் கூறியிருக்கிறாரே?

அவருக்கு அதிகாரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும்.

தமிழகத்தில் விடுதலைப்புலிகள் இல்லை என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால், நீங்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக ஜெயலலிதா தொடர்ந்து குற்றம் சாட்டுகிறாரே?

ஆங்கில பத்திரிகைகளுக்கு அவர் அளித்த பேட்டியை மீண்டும் படிக்க வேண்டும். "விடுதலைப் புலிகளுக்கு எம்.ஜி.ஆரும், நானும் (ஜெயலலிதா) உதவுகிறோம். அதில் ஒரு துளி கூட கருணாநிதி உதவி செய்யவில்லை' என்று பேட்டியில் கூறியிருக்கிறார்.

முல்லை பெரியாறு பேச்சுவார்த்தை எப்படி இருந்தது?

பெரியாறு அணையில் நீர்க்கசிவு இருப்பதாகவும், அதனால், புதிய அணை கட்ட வேண்டும் என்றும் கேரளா தெரிவித்தது. இரு மாநில இன்ஜினியர்களை தவிர்த்து, வேறு மாநில இன்ஜினியர்களைக் கொண்டு அணையின் நீர்க்கசிவை அளவிட்டு அவர்கள் கூறும் முடிவை இரு சாராரும் ஏற்கலாம் என்று நான் கூறினேன். அந்த முடிவை பரிசீலிப்பதாக கேரள முதல்வர் கூறியிருப்பது, ஆக்கப்பூர்வமானதாக இருக்கிறது.

தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில், 15 அம்ச திட்டத்திற்கு பா.ஜ., முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்களே?

பா.ஜ., முதல்வர்கள் மட்டுமல்ல, அவர்கள் கட்சியே எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. தி.மு.க.,வைப் பொறுத்தவரை, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களான முஸ்லிம், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு பாதுகாப்பு அரணாகத் தான் ஆரம்பம் முதல் இருந்து வருகிறது.

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் அ.தி.மு.க.,வைச் சேர்ந்த மூன்று பேருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது குறித்த அறிவிப்பு குறித்து என்ன கருதுகிறீர்கள்?

தூக்கு தண்டனை கூடவே கூடாது; அது தேவையில்லை என்று பல முறை நான் கூறி வருகிறேன். அந்த கருத்து உடன்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை.

0 Comments: