பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, December 29, 2007

நம்பிக்கை தரும், இந்த வெற்றி !

மோடியின் வெற்றி பற்றி துக்ளக் தலையங்கம் ( நன்றி துக்ளக் )


நல்லது நடந்திருக்கிறது. குஜராத் மாநிலத் தேர்தல் முடிவுகள், ஒரு முதல்வரினுடைய நேர்மையின் வெற்றி; அவருடைய நிர்வாகத் திறனின் வெற்றி. இம்மாதிரி இந்நாட்டில் அடிக்கடி நடப்பதில்லை; இம்முறை இது நடந்திருக்கிறது என்பது திருப்திக்குரிய விஷயம்.

எத்தனை எதிர்ப்புகளைச் சந்தித்து, மோடியின் தலைமையில் பா.ஜ.க.
இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறது என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால்தான், இந்த வெற்றியின் முக்கியத்துவம் நமக்குப் புரியும். "சென்ற இடமெல்லாம், பெரும் கூட்டங்களைச் சந்தித்து, பெண்களை எல்லாம் கவர்ந்துவிட்டார்' என்று கூறப்பட்ட
– சோனியா காந்தியின் கடுமையான தாக்குதல்கள்; மோடி மீண்டும் ஆட்சிக்கு
வந்தால், அந்த "மரணத்தின் வியாபாரி' கையில் குஜராத் சிக்கிவிடும் என்று அவர் விடுத்த மிரட்டல்கள்; மிகவும் நல்லவர் என்று எல்லோராலும் அறியப்பட்ட பிரதமர் மன்மோகன் சிங்கின் தீவிர பிரச்சாரம்; மோடியையும், பா.ஜ.க.வையும் பொய்யர்கள், ஏமாற்றுப் பேர் வழிகள் என்று அந்த நல்லவரே கூறிவிட்ட சூழ்நிலை; பா.ஜ.க.வில் மோடியின் நிர்வாகத்தில் தங்களுக்குப் பயன் கிட்டவில்லை என்பதால், அக்கட்சியை விட்டு வெளியேறி, காங்கிரஸ் வேட்பாளர்களாகவும், சுயேச்சைகளாகவும்
போட்டியிட்டு பா.ஜ.க.வின் ஓட்டுக்களைப் பறித்துவிட முனைந்த, பா.ஜ.க. அதிருப்தியாளர்களின் ஓட்டுப் பிளவு முயற்சிகள்; கோத்ரா ரயில் எரிப்பைத்
தொடர்ந்து குஜராத்தில் நடந்த கலவரங்களும், நிகழ்ந்த கொலைகளும் மோடியினால் நடத்தப்பட்டவை என்று சித்தரிக்க முனைந்த, தெஹல்கா தயாரிப்பு வீடியோ
காட்சிகள்; அதை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி, "மோடி கொலைகாரர் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது' – என்று தீர்ப்பளித்து, அவரை தண்டிக்குமாறு குஜராத் வாக்காளர்களை வற்புறுத்திய டெலிவிஷன் சேனல்களின் அவதூறுகள்; "மோடி வெறியர், பா.ஜ.க. மதவெறிக் கட்சி' என்றெல்லாம் கூறி, குஜராத் தேர்தலை
காங்கிரஸுக்குச் சாதகமாக்கி விட, வரிந்து கட்டிக்கொண்டு, தேர்தல் பிரச்சாரத்தில்
இறங்கிய பத்திரிகை உலகம்; பா.ஜ.க.விலேயே இருந்துகொண்டு, மோடியைத் தேர்தலில் வீழ்த்தி, பா.ஜ.க.வை தோற்கடித்து, தன்னுடைய கோபத்தைத் தீர்த்துக்கொள்ள முயற்சித்த கேசுபாய் பட்டேலின் துரோகம்; அவரும் அவருடைய ஆதரவாளர்களும் உருவாக்கிய ஜாதி ரீதியான பிரச்சாரம்... என்ற பன்முனைத் தாக்குதலைச் சந்தித்து, மோடியும் அவர் தலைமையில் பா.ஜ.க.வும் கண்டுள்ள
வெற்றி இது.

எதனால் இது சாத்தியமாயிற்று? பா.ஜ.க.வினர் காட்டிய முனைப்பு; அத்வானி போன்ற அகில இந்தியத் தலைவர்களின் பிரச்சாரம்; அருண் ஜேட்லி போன்றவர்களின் உழைப்பு; இவை எல்லாவற்றிற்கும் மேலாக நரேந்திர மோடி மக்களிடையே பெற்றிருக்கிற நம்பகத்தன்மை; அவருடைய நிர்வாகத்தில் குஜராத் கண்டிருக்கும் முன்னேற்றம் – இவைதான் பா.ஜ.க.வின் இந்த வெற்றிக்குக் காரணம்.

ஒரு அதிசயிக்கத்தக்க, பிரமிப்பைத் தரக் கூடிய விஷயம் இந்தத் தேர்தலில்
நடந்திருக்கிறது. மீண்டும் முதல்வர் பதவி ஏற்பதற்காக தேர்தல் களத்தில்
இறங்கியுள்ள, ஒரு மாநில முதல்வர் மீது, எதிர்க்கட்சிகளினால் ஒரு ஊழல் புகாரைக் கூட கூற முடியாமல் போய்விட்ட தேர்தல் இது. வேறு எந்த மாநில முதல்வருக்கும் இப்படிப்பட்ட பெருமை கிட்டியதில்லை. மோடி ஆறு வருடங்கள் ஆட்சி புரிந்தும்
– அவரை வெறுத்து, தூஷித்து, கரித்துக் கொட்டி பிரச்சாரம் செய்கிற
அரசியல்வாதிகளும், பத்திரிகைகளும், டெலிவிஷன் சேனல்களும், மிகக் கடுமையாக முனைந்தும் – ஒரு ஊழல் குற்றச்சாட்டைக் கூட அவர் மீது சுமத்த அவர்களால் முடியவில்லை. இன்றைய சீர்கெட்ட அரசியலில், ஒரு மாநில முதல்வர் இப்படிப்பட்ட நேர்மையாளராகத் திகழ முடியும் – என்று நரேந்திர மோடி நிரூபித்திருக்கிறாரே, அதுதான் அவரது மிகப்பெரிய வெற்றி.

சாதாரணமாக நேர்மையாளராகத் திகழ்பவர்கள், செயல் முனைப்பில் குறைபாடு உடையவர்களாக இருப்பார்கள் என்பது, நம் நாட்டு அரசியலில் உள்ள ஒரு பலவீனம். ஆனால் மோடி இப்படிப்பட்டவரல்ல; அவருடைய செயல் திறன் வியக்கத்தக்கதாக இருக்கிறது. அரசியல் ரீதியாக, எதிர்ப்பைச் சந்திப்பதிலும் சரி; நிர்வாக ரீதியாக துணிவுடனும், உறுதியுடனும் செயல்படுவதிலும் சரி, அவர் புதிய அத்தியாயங்களையே எழுதி வருகிறார்.

அவருடைய நிர்வாகத் திறனையும் உறுதியையும் காட்ட ஒரு உதாரணம் :
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளிப்பதை அவர் நிறுத்த முனைந்தபோது, பெரும் எதிர்ப்புக் கிளம்பியது; ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கூட அவரைக் கடுமையாக எதிர்த்தனர். மோடி, விவசாயிகளிடம், "இலவச மின்சாரம் தந்தால் – அது ஒவ்வொரு தினமும், மின்சார
விநியோகத்திற்கு வசதியான நேரத்தில்தான் உங்களுக்குக் கிடைக்கும்; மாறாக நீங்கள் கட்டணம் செலுத்தி மின்சாரம் பெறுவதாக இருந்தால், அது ஒவ்வொரு தினமும் 24 மணி நேரமும் கிட்டும். எது வேண்டும்? எப்போது வரும், எப்போது போகும் என்று சொல்ல முடியாத இலவச மின்சாரமா? அல்லது எப்போதும் வரும் என்கிற, கட்டணம் செலுத்திப் பெறப்படுகிற மின்சாரமா?' என்று கேட்டார்.

விவசாயிகள், கட்டண மின்சாரத்தையே ஏற்றார்கள்; இலவச மின்சாரம் போயிற்று. அவர்களுக்கு, 24 மணி நேர மின்சார சப்ளை கிட்டியது; ஆனால் சிலர் மின்சாரத் திருட்டில் இறங்கினார்கள். பார்த்தார் மோடி. மின்சாரம் திருடிய ஒரு லட்சம்
விவசாயிகளுக்கு, மின்சார சப்ளை ரத்தாகியது. "ஓட்டு வங்கி' என்று நினைத்து,
அஞ்சி, விவசாயிகள் விஷயத்தில் "வம்பு வேண்டாம்' என்று ஒதுங்கிவிடுகிற
நிர்வாகங்களையே எல்லா மாநிலங்களிலும் கொண்ட நமது நாட்டில் – குஜராத்தில், ஒரு லட்சம் விவசாயிகளுக்கு, மின்சார திருட்டு காரணமாக, மின்சார சப்ளை நின்றது. அவர்கள் தவறை உணர்ந்தனர். நிலைமை சீரடைந்தது. இலவச மின்சாரம் போயிற்று; விவசாயிகளுக்கு 24 மணிநேர மின்சாரம் கிட்டியது. விவசாயிகளுக்குத் திருப்தி; நிர்வாகத்திற்கு வெற்றி. இது மோடியின், நிர்வாக பாணி.

இம்மாதிரி நிர்வாகம் இருப்பதால்தான் – "குஜராத் மிக நன்றாகச் செயல்படுகிற நிர்வாகம் உள்ள மாநிலம்; நிதி நிர்வாகத்திலும் சரி, நீர் நிர்வாகத்திலும் சரி, சமூகத்தில் செய்கிற பணிகளிலும் சரி, முதன்மையாக நிற்கிற மாநிலம் குஜராத்' என்று திட்டக்கமிஷனே – மத்திய காங்கிரஸ் அரசின் கீழ் இயங்குகிற திட்டக்கமிஷனே
– தனது அறிக்கையில் கூறியது.

ராஜீவ் காந்தி அறக்கட்டளை – சோனியா காந்தியின் தலைமையில் இயங்குவது; மத்திய அமைச்சர்கள் சிலரை உறுப்பினர்களாகக் கொண்டது. அந்த அமைப்பினால் நியமிக்கப்பட்ட குழு, குஜராத்தை "இந்தியாவின் முதல் மாநிலம்' என்று
தேர்ந்தெடுத்தது. "பொருளாதார சுதந்திரம், ஊழலின்மை, அரசின் குறுக்கீடு இல்லாமை, சட்டம் – ஒழுங்கு, மக்கள் வாழ்விற்குப் பாதுகாப்பான சூழ்நிலை, வேலை நிறுத்தத்தினால் தொழில் நஷ்டம் இல்லாமை – ஆகிய பல அம்சங்களிலும், மிக நன்றாகச் செயல்பட்டு, குஜராத் முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது' – என்று அந்த அமைப்பு கூறியது.

"ஹிந்துத்துவம் பேசுகிறார்' என்று வர்ணித்து மோடியை வீழ்த்த காங்கிரஸ் முனைந்து வந்தது; அதுவும் பலிக்கவில்லை. ஹிந்துத்துவத்தில் தான் கொண்டுள்ள நம்பிக்கையை மோடி மறைத்ததில்லை; ஹிந்துத்துவம் என்பது, மதரீதியானது அல்ல – என்று
சுப்ரீம் கோர்ட்டே கூறியிருக்கிறது; மக்கள் மனதிலும் இது ஒரு மதவெறி நிலையாகக் காணப்படவில்லை.

நிர்வாகத்திலும், நேர்மையிலும் மற்ற மாநில முதல்வர்களுக்கெல்லாம் ஒரு முன்மாதிரியாக மோடி திகழ்கிறார். அப்படிப்பட்டவர் பெற்றிருக்கிற வெற்றி, நேர்மைக்குக் கிடைத்துள்ள வெற்றி.

"நேர்மையாளர்களுக்கும், திறமையாளர்களுக்கும் இனி இடமே கிடையாதா?' என்று நினைத்து மக்கள் விரக்தியுறுகிற வகையில் போய்க்கொண்டிருக்கிற நம் நாட்டு
அரசியலில் – மோடி பெற்றிருக்கிற வெற்றி, மக்கள் மனதில் நம்பிக்கை துளிர்க்க வழிசெய்யும்.


3 Comments:

அருண் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!
இந்த புத்தாண்டில் நீங்கள் மேலும் மேலும் நல்ல பல பதிவுகளை போட வாழ்த்துகள் மற்றும் வேண்டுகோள்.

Anonymous said...

நன்றி!

Interesting artciles by Arun Shorie..
http://www.indianexpress.com/story/254969.html
http://www.indianexpress.com/story/255484.html
http://www.indianexpress.com/story/255906.html
Must read for secularists and dk-types.

Anonymous said...

ஒரு அதிசயிக்கத்தக்க, பிரமிப்பைத் தரக் கூடிய விஷயம் இந்தத் தேர்தலில்
நடந்திருக்கிறது. மீண்டும் முதல்வர் பதவி ஏற்பதற்காக தேர்தல் களத்தில்
இறங்கியுள்ள, ஒரு மாநில முதல்வர் மீது, எதிர்க்கட்சிகளினால் ஒரு ஊழல் புகாரைக் கூட கூற முடியாமல் போய்விட்ட தேர்தல் இது. வேறு எந்த மாநில முதல்வருக்கும் இப்படிப்பட்ட பெருமை கிட்டியதில்லை. மோடி ஆறு வருடங்கள் ஆட்சி புரிந்தும்
– அவரை வெறுத்து, தூஷித்து, கரித்துக் கொட்டி பிரச்சாரம் செய்கிற
அரசியல்வாதிகளும், பத்திரிகைகளும், டெலிவிஷன் சேனல்களும், மிகக் கடுமையாக முனைந்தும் – ஒரு ஊழல் குற்றச்சாட்டைக் கூட அவர் மீது சுமத்த அவர்களால் முடியவில்லை. இன்றைய சீர்கெட்ட அரசியலில், ஒரு மாநில முதல்வர் இப்படிப்பட்ட நேர்மையாளராகத் திகழ முடியும் – என்று நரேந்திர மோடி நிரூபித்திருக்கிறாரே, அதுதான் அவரது மிகப்பெரிய வெற்றி.