பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, December 22, 2007

"பயம்' எனது பிறப்பிலேயே கிடையாது - ராமதாஸ்

"பயம்' எனது பிறப்பிலேயே கிடையாது. என் ரத்தத்திலும் கிடையாது. சிலரைப் பற்றிய கேள்விகளை நான் தவிர்ப்பதற்குக் காரணம், நான் அவர்களைப் பற்றி பேசினால், தெருவில் போகிற ஒரு பைத்தியக்காரனைக் கூப்பிட்டு, அதற்குப் பதில் சொல்ல வைப்பர். இந்த அமைப்பைச் சார்ந்த இவர், ராமதாசுக்கு பதிலடின்னு பத்திரிகையில் போடுவாங்க. அந்த வாய்ப்பை ஏன் கொடுக்கணும்?

'மானாட மயிலாடங்கிற நிகழ்ச்சி ஒண்ணு நடக்குது. கூடவே 'மார்பாட' என்கிற வார்த்தையையும் சேர்த்துப் போட்டுக்கலாம்னு... கஷ்டம்!''மற்ற கேள்வி (நல்ல) பதில்கள் கீழே...

''அரசாங்கத்தின் திட் டங்கள் எதுவும் மக்களைச் சென்றடையவிடாமல் தடுக்கிறீர்கள் என்கிற குற்றச்சாட்டுக்கு உங்களின் பதில் என்ன?''

''தமிழக அரசு நுழைவுத் தேர்வை ரத்து பண்ணியபோது, அதை ஆதரித்தோம். மற்றபடி, நாங்கள் பாராட்டுகிற அளவுக்கு இவர்கள் என்ன செய்திருக்கிறார்கள்? தேசியப் புள்ளிவிவரப்படி தமிழகத்தில் நிலம் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 26 சதவிகிதம். இதில் ஒரு சென்ட் நிலம் வைத்திருப்பவர்களும் உண்டு. ஏழைகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் என்று சொன்னார்களே, கொடுத்தார்களா?

துணை நகரம், சிறப்புப் பொருளாதார மண்டலம் என விவசாயி களிடம் இருக்கிற நிலங்களையும் பிடுங்குகிற வேலையைச் செய்வதை எப்படி அனுமதிக்க முடியும்? 200 ஏக்கர், 300 ஏக்கரில் பொதுத் துறை நிறுவனங்களே மின் நிலையங்களை அமைக்கும்போது, கடலூ ரில் அமைய உள்ள தனியார் மின் நிலையத்துக்கு ஏன் 1,300 ஏக்கர் நிலத்தைத் தாரை வார்க்க வேண்டும் என்று கேட்கிறேன். மக்களிடம் இருக்கிற கொஞ்சநஞ்ச நிலங்களையும் பிடுங்கிவிடத் துடிக்கிற தனியார் முதலாளிகளுக்கு, இந்த அரசு ஏன் துணை போகிறது? இதை எல்லாம் மறைக்க கவர்ச்சிகரமான இலவசங்களை அளிக்கிறார்கள். மக்களுக்குத் தேவை, இலவசங்கள் அல்ல. கல்வி, சுகாதாரம், வேலை வாய்ப்பு, சுயமரியாதை போன்ற அடிப்படை உரிமைகள்தான். ஆனால், அது எதுவுமே இங்கே நடக்கவில்லையே!

பாரெங்கும் 'பார்'! இதுதான் இவர்களின் சாதனை! விலை வாசி, சிமென்ட் விலை உயர்வு, அரிசிக் கடத்தல், பண்பாட்டுச் சீரழிவு என என்னால் ஏராள மாகப் பட்டியிலிட முடியும். மக்களுக்குத் தேவையான திட்டங்களைத் தீட்ட, இவர் களிடம் தெளிவான கொள்கைகளே இல்லை என்பதுதான் என் வருத்தம்!''

''ரிலையன்ஸ் கடைகளை மூடவேண்டும். இல்லாவிட்டால், பா.ம.க. நேரடி நடவடிக்கையில் ஈடுபடும் என அறிவித்தீர்கள். ஆனால், ரிலையன்ஸ் தமிழகமெங்கும் கடை விரித்துவிட்டதே?''

''இது லட்சக்கணக்கான சில்லறை வணிகர்களின் பிரச்னை என்பதால், போராட முன்வந்தேன். 30 ரூபாய், 40 ரூபாய்க்குக் காய்கறி வாங்கி, தலையில் சுமந்து விற்கும் ஏழை ஆயாக்களின் பிரச்னை இது.

ரிலையன்ஸ் கடைகளுக்கு முன்னால் சென்று நின்று, கடைக்கு வருபவர்களின் கால் களில் விழுந்து கெஞ்சினோம். சில்லறை வணிகர்களின் வாழ்க்கையைச் சொல்லிக் கதறினோம். அதே ரிலையன்ஸ் கடைகளின் மீது கற்களைவிட்டு அடித்து நொறுக்க எனக்கு எவ்வளவு நேரம் ஆகும்?

இப்போதும் சொல்கிறேன், ராம தாசுக்கு வன்முறை மீது நம்பிக்கை கிடையாது. எனது கட்சியினரும் அப்படித்தான். ஆனால் உரிமை மறுக்கப்பட்ட, கொஞ்சம் கொஞ்ச மாக வாழ்வுரிமையை இழக்கிற மக்கள் பொங்கி எழும்போது, அவர்களும் என்னைப் போலவே அமைதியாகப் போராடுவார்கள் என்று சொல்ல முடியாது!''

''கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க செய்தது 'பச்சைத் துரோகம்' என்றீர்கள். 'தி.மு.கவில் இருவரைத் தவிர, மற்ற அனைவருமே மோசமானவர்கள்.அ.தி.மு.கவில் இருவரைத் தவிர, மற்ற அனைவருமே நல்லவர்கள்' என்றீர்கள். அந்தக் கருத்துக்களில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கிறதா?''

''இப்போதும் அப்படித்தான். அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. ஆற்காடு வீராசாமி கொடுத்த அறிக்கையைப் பார்த்தாலே, அவர்கள் மாறியது போலத் தெரிய வில்லையே!

'நிர்வாகம் சீரழிந்திருக்கிறது... காவல் துறையின் நுரையீரல் முழுக்கக் கெட்டுப்போயிருக்கிறது... கள்ளச் சாராயம் பெருகியிருக்கிறது' என நான் ஒரு விமர்சனம் சொன்னால், உடனே '7,000 கோடி ரூபாய் டாஸ் மாக்கில் இருந்து வருமானம் வருகிறது. பூரண மதுவிலக்கைக் கொண்டுவந் தால் கள்ளச்சாராயம் பெருகிவிடும்' என்கிறார்கள். ஒரு அரசு பேசுகிற பேச்சா இது?''

''மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மேலும் ஓராண்டு கிராமச் சேவை என்றாலே போராடுகிறார்கள். நீங்களோ கிராமச் சேவையை இரண்டு ஆண்டுகள் ஆக்க வேண்டும் என்கிறீர்களே... ஏன்?''

''மருத்துவ வசதிகள் இல்லாத கிராம மக்கள்தான் இந்தியாவில் அதிகம். அதனால்தான் அரசு மருத்து வக் கல்லூரிகளில் அரசுச் செலவில் படிக்கும் மாணவர்களை, கிராமங் களுக்கு சென்று ஊதியத்துடன் ஓராண்டு வேலை செய்யச் சொல்கிறார் மத்திய அமைச்சர். வேலூரில் உள்ள தனியார் சி.எம்.சி. கல்லூரியில் படிக் கும் மாணவர்கள், படித்து முடித்ததும் இத்தனை ஆண்டு பணியாற்றவேண்டும் என அங்கே எழுதி வாங்கிக்கொள்கிறார்கள். சிங்கப்பூரில் 10ம் வகுப்பு படித்த மாணவன்... அவன் பிரதமரின் மகனாகவே இருந்தாலும் கட்டாயம் ராணுவச் சேவை செய்தாகவேண்டும் எனச் சட்டம் இருக்கிறது. ஆனால்,இட ஒதுக்கீட்டின் முழு பலனையும் அனுபவித்த இந்த மாணவர்கள், இட ஒதுக்கீட்டைஎதிர்ப் பவர்களுடன் இணைந்துகொண்டு கிராமச் சேவைக்கு எதிராகப் போராடுவதுதான் வேதனை அளிக்கிறது. ஒரு வருடத்தில் எங் களின் தலை வழுக்கை ஆகிவிடும் என மாதக்கணக்காகப் போராடும் இந்த மாணவர்கள், உயர் கல்வி நிறுவனங்களில் 27% சதவிகித ஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி நாங்கள் போராடியபோது எங்களை ஆதரித்து ஏன் வீதிக்கு வரவில்லை?

வேளாண் கல்லூரி மாணவர்களின் போராட்டத்தை இரண்டே நாட்களில் முடிவுக்குக் கொண்டுவருகிறது தமிழக அரசு. ஆனால், மருத்துவ மாணவர்களின் போராட்டம் மாதக் கணக்காக நீள்கிறது என்றால், அதற்குப் பின்னால் இருக்கும் சூத்திரதாரிகள் யார் என்று தெரியாதா என்ன?''

''காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, சேது கால்வாய் ஆகியவற்றில் தமிழகத்துக்கு நன்மை கிடைக்கும் வாய்ப்பு நழுவிப் போகிறதே..?''

''கடந்த 40 வருடங்களில் தி.மு.கவும் அ.தி.மு.கவும் தலா 20 வருடங்களைப் பங்கிட்டுக்கொண்டன. ஆனால், எந்த வாழ்வாதாரப் பிரச்னையும் இறுதித் தீர்வை எட்டவே இல்லை. இவை ஒட்டுமொத்தமான தமிழ் மக்களின் பிரச்னைகள். பல லட்சம் விவசாயிகளின் வயிற்றுப் பிரச்னைகள். ஆனால், ஏனோ தானோ என்று அணுகியதன் விளைவு, காவிரி மீதான நமது உரிமையை இழந்தோம். முல்லைப் பெரியாறு அணையி லும் அப்படித்தான். பாலாற் றிலும் நமது உரிமையைஇழந்து கொண்டு இருக்கிறோம். பிரச்னை வரும்போதெல்லாம், சும்மா பேருக்கு ஒரு வழக்கு போடுகிறார்களே தவிர, உண் மையான அக்கறை இவர்களி டம் இல்லை.

நதி நீர்ப் பிரச்னையில் ஆழ மான அறிவும் தெளிவும் உள்ள நிபுணர்கள், பெரிய வர்கள் இங்கே பல பேர் இருக் கிறார்கள். அவர்களை அழைத் துப் பேசி, பிரச்னையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில்... மத்திய அரசுக்கு எதிரான நெருக்கடியைக் கொடுத்து, ஐந்து மாநில முதல் வர்களையும் கூட்டி, பிரதமர் தலைமையில் தீர்வு காண வேண்டிய பொறுப்பு, தமிழக முதல்வருக்கு இருக்கிறது. இது விருப்பமோ, வேண்டுகோளோ அல்ல... உரிமைக் குரல்!''

''சினிமாவில் சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் நடிக்கக் கூடாது என ரஜினிக்கும் விஜய்க்கும் கோரிக்கை வைத்தனர். சினிமாவைக் கடுமையாக விமர்சிக்கும் நீங்கள், அவர்கள் இனி புகைப்பது போல நடிக்க மாட்டோம் என்கிறபோது பாராட்டத் தவறுவது நியாயமில்லையே?''

''மத்திய அமைச்சர் அன்புமணியே ரஜினிக்கும் விஜய்க்கும் நன்றி சொல்லியிருக்கிறாரே! சினிமாவில் உள்ள கலாசாரச் சீரழிவுகளை நான் கண்டித்த போது, 'இந்த ராமதாசுக்கு வேறு வேலையே இல்லை... இவர் என்னவோ கலாசார போலீஸ் மாதிரி நடந்துகொள்கிறார்' என்றார்கள். ஆனால், நாங்கள் சொன்னதன் நியாயத்தை இன்று நடிகர்களே உணர்ந்துவிட்டது நல்ல நாகரிகம். அன்புமணியின் கோரிக்கையை ஏற்று, சினிமாவில் இனி புகைக்கிற காட்சியில் நடிக்க மாட்டோம் என அறிவித்திருக்கிற ரஜினிக்கும் விஜய்க்கும் என் மனமார்ந்த நன்றி. இதை விகடன் மூலமாகவே தெரிவிக்கிறேன்!

''விஜயகாந்த்தைப் பற்றிக் கேட்டால், பேச மறுக்கிறீர்கள்; திருமாவளவன் சினிமாவில் நடிப்பதைப் பற்றிக் கேட்டால், அது அவரது தனிப்பட்ட விஷயம் என்கிறீர்கள். உங்களுக்கு அவர்களைப் பார்த்து பயமா?''

''பயமா?! அது எனது பிறப்பிலேயே கிடையாது. என் ரத்தத்திலும் கிடையாது. நீங்கள் கேட்ட வார்த்தையை வாபஸ் வாங்கணும். சிலரைப் பற்றிய கேள்விகளை நான் தவிர்ப்பதற்குக் காரணம், நான் அவர்களைப் பற்றி பேசினால், தெருவில் போகிற ஒரு பைத்தியக்காரனைக் கூப்பிட்டு, அதற்குப் பதில் சொல்ல வைப்பார்கள். அதையும் பத்திரிகையில் ஒரு பெரிய செய்தியாகப் போடுவார்கள். இந்த அமைப்பைச் சார்ந்த இவர், ராமதாசுக்கு பதிலடின்னு போடுவாங்க. அந்த வாய்ப்பை ஏன் கொடுக்கணும்? அதனால்தான் சில கேள்விகளைத் தவிர்க்கிறேன்.''

''மலேசியாவில் இந்திய வம்சாவளி மக்கள் மீது இனப் பாகுபாடு காட்டப்படுகிறது என உலகம் முழுக்கக் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. இந்த நேரத்தில் நடிகர் சங்கம் அங்கே சென்று கலைவிழா நடத்தி நிதி திரட்டப் போகிறதே?''

''நான் மலேசியாவில் தமிழர் நிகழ்ச்சி ஒன்றுக்காகப் போயிருந்தபோது, 'சினிமா நடிகர்கள் இங்கே வந்தால் சேர்த்துக்கொள்ளாதீர்கள். சினிமா நடிகர்கள் கொஞ்சநஞ்சம் இருந்த தமிழ்ப் பண்பாட்டையும் தமிழ்நாட்டிலேயே கெடுத்துவிட்டார்கள். இங்கேயும் வந்து உங்களையும் கெடுப்பார்கள்' எனத் தெளிவாகச் சொல்லிவிட்டு வந்திருக்கிறேன்.''

''கலைஞர் தொலைக்காட்சியை நீங்கள் பார்ப்பதுண்டா? அதில் உங்களைக் கவர்ந்த நிகழ்ச்சி என்ன?''

''சினிமா ஏற்கெனவே தமிழர்களின் பண்பாட்டைச் சீரழித்துவிட்டது. இன்னும் கொஞ்சம் இருப்பதையும் வேகமாகச் சீரழிப்பது யார் எனத் தொலைக்காட்சிக்கும் சினிமாவுக்கும் போட்டி நடக்கிறது. நான் கூட நகைச்சுவையாகச் சொன்னதுண்டு... 'மானாட மயிலாடங்கிற நிகழ்ச்சி ஒண்ணு நடக்குது. கூடவே 'மார்பாட' என்கிற வார்த்தையையும் சேர்த்துப் போட்டுக்கலாம்னு... கஷ்டம்!''

''தி.மு.கவில் மு.க.ஸ்டாலினைத் தலைமைக்கு கொண்டுவரும் ஏற்பாடுகள் தீவிரம் அடைந்திருப்பதாகத் தெரிகிறது. ஒருவேளை, இந்த ஆட்சிக் காலத்திலேயே மு.க.ஸ்டாலினை முதல்வராக்கினால், அதை ஆதரிப்பீர்களா?''

''அவர்கள் யாரை வேண்டுமானாலும் தலைவராகக் கொண்டுவரட்டும். அது அவர்களின் கட்சி எடுக்கிற முடிவு. மற்றபடி, மு.க.ஸ்டாலினை முதல்வராக்கினால் வரவேற்பேன்.''

''தி.மு.கவின் இந்த ஓராண்டு ஆட்சிக்கு எத்தனை மதிப்பெண்கள் கொடுக்கலாம்?''

''மதிப்பெண்கள் போடுகிற மாதிரியோ, பாராட்டுகிற மாதிரியோ என்ன சாதனைகள் செய்திருக்கிறார்கள்? ஒருவேளை, நான் தவறாகப் பேசலாம். உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்... அவர்கள் என்ன செய்தார்கள்.?''

''தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்கிறது?''

''சட்டம்தான் இருக்குது. ஒழுங்கு இல்லை!''

( நன்றி: ஆனந்த விகடன் )

1 Comment:

LOK said...

நாடளுமன்றத்தில் தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிர் நீத்த தியாகிகளின் மனைவி கங்கா தேவியின் கண்ணீர் பற்றி நீங்கள் ஒரு பதிவு போடுவீரிகள் என எதிர்பார்த்தேன். ராமதாசுடன் நின்று விட்டீர்களே