பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, December 25, 2007

அதிமுக, தேமுதிக மோதலுக்கு திமுக தான் காரணம் - விஜயகாந்த்

அதிமுக, தேமுதிக மோதலுக்கு திமுக தான் காரணம். நல்ல கூத்து

மதுரையில் தேமுதிகவும், அதிமுகவும் நேற்று மோதிக் கொண்ட சம்பவத்திற்கு திமுகவின் சதி செயல்தான் காரணம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பரபரப்பான குற்றச்சாட்டை கூறியிருக்கிறார்.
.
தேமுதிகவின் வளர்ச்சியை கண்டு அஞ்சியும், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து விடுவோமோ என்ற பயத்திலும் எங்கள் கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்று இந்த சதி செயல் நடை பெற்றுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மதுரையில் எங்கள் கட்சி யினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே நடந்த மோதல் சம்பவம் முழுக்க முழுக்க திமுகவின் சதி வேலையாகும். பெரியார் மற்றும் எம்ஜிஆரின் நினைவு நாள் ஒன்றாக வருவதால் இவர்களுக்கு அஞ்சலி செலுத்த பல்வேறு அரசியல் கட்சிகளும் இதில் கலந்து கொண்டு அமைதியாக செல்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டியது காவல்துறையின் கடமையாகும்.

ஆனால் மதுரையில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற தேமுதிகவினரையும், அதிமுக வினரையும் ஒரே நேரத்தில் கலந்து கொள்ள செய்து மோதலை உண்டாக்கியிருக்கிறார்கள்.

மாலை அணிவிப்பதற்கு போதுமான அளவு நேரம் ஒதுக்கீடு செய்திருந்தால், இந்த பிரச்சனை ஏற்பட்டிருக்காது. வேண்டுமென்றே இரு அரசியல் கட்சிகளையும் மோத விட்டு காவல்துறை வேடிக்கை பார்த்துள்ளது.

இந்த பிரச்சனை தொடர்பாக அதிமுகவினர் புகார் கொடுத் திருந்தால், தேமுதிகவினரை கைது செய்திருக்கலாம் அல்லது தேமுதிக வினர் புகார் செய்திருந்தால் அதிமுக வினரை கைது செய்திருக்கலாம்.

ஆனால் இரண்டு கட்சிகளை சேர்ந்த யாருமே புகார் செய்யாத போதும் காவல்துறையினர் சிலரை கைது செய்திருக்கிறார்கள். பொதுமக்கள் தரப்பில் தனிப்பட்ட சிலர் புகார் தந்ததாக காவல் துறையினர் கூறியிருக்கிறார்கள். அந்த தனிப்பட்ட நபர்கள் யார் என்பதை காவல்துறையினர் தெரிவிக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் அஞ்சலி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. எந்த இடத்திலும் பிரச்சனை இல்லை. ஆனால் மதுரையில் மட்டும் பிரச்சனை என்றால், அதில் தான் எங்களுக்கு சந்தேகம் ஏற்படுகிறது.

முதலில் கல்வீசியது யார் என்பதை போலீசார் கண்டு பிடிக்க வேண்டும். அவர்களை கண்டுபிடித்தால், பிரச்சனையில் ஈடுபட்டது யார் என்ற உண்மை தெரியவரும். தேமுதிக வளர்ந்து வரும் கட்சி. இந்த உண்மை அனைவருக்கும் தெரியும். எனவே திட்டமிட்டே எங்களுக்கு கெட்ட பெயர் உண்டாக்க வேண்டும் என்று மதுரை மோதல் சம்பவத்தை திமுகவினர் நடத்தியிருக்கிறார்கள் என்று நான் குற்றம்சாட்டுகிறேன்.

தேமுதிக வளர்ந்து வருகிறது என்ற பயம் ஒரு பக்கம்; காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொள்வார்களோ என்ற பயம் மறுபக்கம். அதனால் தேமுதிகவை ஆளுங்கட்சியினர் அழிக்க பார்க்கிறார்கள்.

மதுரை சம்பவத்தில் தேமுதிகவினர் மீது பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அரசியல் ஆதாயத்திற்காக தேமுதிக வினரை கைது செய்தது கண்டனத்திற்குரியது என்றார் விஜயகாந்த்.

பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
குஜராத் தேர்தல் வெற்றி என்பது நரேந்திர மோடிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. அவர் நல்லதை செய்தார்; அதனால் வெற்றி பெற்றார். சொன்னதை அவர் செய்தார்; அதனால் அவரை மக்கள் தேர்ந்தெடுத்தார்கள்.

பொதுவாக கருத்துக்கணிப்புகளை நான் ஏற்றுக் கொள்வதில்லை. அந்த வகையில் லயோலா கருத்துக்கணிப்பு முடிவுகளையும் நான் ஏற்கவில்லை. கிறிஸ்துமஸ் விழாவை நாங்கள் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி கொண்டாடி வருகிறோம். பக்ரித் பண்டிகையின் போதும் நாங்கள் ஏழைகளுக்கு இறைச்சி கொடுத்தோம். அதேபோல கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டும் நாங்கள் கேக் மற்றும் பிரியாணி வழங்கி வருகிறோம்.

இதேபோல தமிழர் திருநாளான பொங்கல் விழாவையும் கொண்டாட உள்ளோம். இது தொடரும். இதுபோல செய்தால், வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்களிடையே சகோதரத்துவ உணர்வு ஏற்படும். அதற்கான அடித்தளத்தை தேமுதிக ஏற்படுத்தியுள்ளது கூட்டணி குறித்து கேட்கிறீர்கள். என்னுடைய தலைமையை ஏற்றுக் கொள்ளும் கட்சிகளுடன்தான் தேமுதிக கூட்டணி வைத்துக் கொள்ளும்.

முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி அவராகவே எங்கள் கட்சிக்கு வந்தார். இப்போது அவராகவே சென்றுவிட்டார். மேற்கொண்டு ஒன்றும் சொல்வதற்கு இல்லை என்றார் விஜயகாந்த்.

( செய்தி: மாலைமலர் )

1 Comment:

Anonymous said...

See the rejoinder to this from Madurai Police Commisioner at the URL mentioned below.

http://www.dinamani.com/epaper/epapermainarchives.aspx?queryed=1&eddate=12/27/2007

Vijayakanth did not open his mouth after this.