பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, December 02, 2007

`தசாவதாரம்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா - ஜாக்கிசான் கலந்துகொள்கிறார்

கமலஹாசன் நடித்த `தசாவதாரம்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில், `ஹாலிவுட்' நடிகர் ஜாக்கிசான் கலந்துகொள்கிறார். இந்த விழாவில், இந்தி நடிகர்கள் அமிதாப்பச்சன், சாருக்கான் ஆகியோரும் கலந்துகொள்கிறார்கள்.

பிகு: தசாவதாரம், பொங்கலுக்கு வெளிவராது என்று கமல் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
சிவாஜியை விட தசாவதாரம் ஹைப் கொஞ்சம் அதிகமாக இருக்கும் போல் தெரிகிறது !


கமலஹாசன் 10 வேடங்களில் நடித்துள்ள படம், `தசாவதாரம்.' இந்த படத்தை ரூ.50 கோடி செலவில், ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்து இருக்கிறார். கே.எஸ்.ரவிகுமார் டைரக்டு செய்து இருக்கிறார். கமலஹாசன் ஜோடியாக அசின், ஜெயப்பிரதா, மல்லிகா ஷெராவத் ஆகிய மூவரும் நடித்து இருக்கிறார்கள்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. எடிட்டிங், டப்பிங், பின்னணி இசை சேர்ப்பு ஆகிய வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் பிப்ரவரி மாத இறுதியில் நிறைவடைந்து விடும். தமிழ் புத்தாண்டு வெளியீடாக படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறார்கள்.

`தசாவதாரம்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் நடைபெற இருக்கிறது. மிக பிரமாண்டமான முறையில் விழாவை நடத்த ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

விழாவில் `ஹாலிவுட்' நடிகர் ஜாக்கிசான் கலந்துகொண்டு, `தசாவதாரம்' படத்தின் பாடல்களை வெளியிடுகிறார். இந்தி நடிகர்கள் அமிதாப்பச்சன், சாருக்கான் ஆகிய இருவரும் பெற்றுக்கொள்கிறார்கள்.

மலையாள பட உலகின் `சூப்பர்ஸ்டார்கள்' மம்முட்டி, மோகன்லால், தெலுங்கு பட உலகின் `சூப்பர்ஸ்டார்கள்' சிரஞ்சீவி, நாகார்ஜுன், கன்னட பட உலகின் `சூப்பர்ஸ்டார்கள்' விஷ்ணுவர்தன், ரவிச்சந்திரன் ஆகியோரும் விழாவில் கலந்துகொள்கிறார்கள்.

`தசாவதாரம்' படத்தின் தயாரிப்பாளரான `ஆஸ்கார் பிலிம்ஸ்' ரவிச்சந்திரன் அமெரிக்கா சென்று, ஜாக்கிசானை நேரில் சந்தித்து, `தசாவதாரம்' படவிழாவில் கலந்துகொள்ளும்படி அழைத்தார். (ஜாக்கிசான் நடித்த ஆங்கில படங்களை ரவிச்சந்திரன்தான் இந்தியாவில் வினியோகம் செய்து வருகிறார். அதனால் இருவருக்கும் ஏற்கனவே அறிமுகம் இருக்கிறது.)

அப்போது, கமலஹாசன் 5 வயது குழந்தை பருவத்தில் இருந்து நடித்து வருவதாக ஜாக்கிசானிடம், ரவிச்சந்திரன் தெரிவித்தார். 5 வயது முதல் 54 வயது வரை கமலஹாசன் தொடர்ந்து நடித்துக்கொண்டிருக்கிறார் என்பதை கேள்விப்பட்டு, ஜாக்கிசான் வியப்பு அடைந்தார்.

கமலஹாசன் நடித்த வேறு சில படங்களின் `கிளிப்பிங்ஸ்,' `தசாவதாரம்' படத்தின் பாடல் காட்சிகள் மற்றும் 10 வேட காட்சிகளையும் ஜாக்கிசானுக்கு, ரவிச்சந்திரன் திரையிட்டு காண்பித்தார். 90 வயது பாட்டி வேடத்தில் இருந்த கமலஹாசனை பார்த்து, ஜாக்கிசான் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார்.

`தசாவதாரம்' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் நிச்சயமாக கலந்துகொள்கிறேன் என்று அவர் சம்மதம் தெரிவித்தார்.

ஜாக்கிசானுடன் இந்திய திரையுலக பிரபலங்களும் கலந்துகொள்வதால், சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்டமான முறையில் விழாவை நடத்த ஏற்பாடு செய்துவருகிறார்கள்.


1 Comment:

Anonymous said...

உலக நாயகன் பட்டத்திற்கு ஏற்ப உலகம் முழுவதும் கலை ஞானியின் புகழ் ஓங்குக !!!

நன்றி இட்லி வடை !