பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, October 28, 2007

என் அப்பா கொடுத்த அட்வைஸ் - தி.மு.கவினர் நம்பாதே - கேப்டன் நச் பேட்டி

கேப்டன் படம் நல்லா இருக்கோ இல்லையோ, அவர் பேட்டி எப்போதும் சூப்பர், சரியான பாயிண்டுகளை பிடிப்பார்...

தே.மு.தி.கவின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவை பிரமாண்டமாக நடத்தி முடித்த கையோடு தனது அடுத்த படமான ‘அரசாங்கம்’ பட ஷூட்டிங்கிற்காக கனடா சென்று சமீபத்தில் திரும்பியிருக்கிறார் விஜயகாந்த். அங்கிருந்தபடியே தமிழக விவகாரங்கள் தொடர்பாக அவ்வப்போது அறிக்கைகள் வெளியிட்டு பரபரப்பு குறையாமல் பார்த்துக் கொண்டார். இப்போது மீண்டும் கட்சி நடவடிக்கைகளில் பிஸியாகிவிட்ட விஜயகாந்தை அவரது கட்சி அலுவலகத்தில் சந்தித்தோம். அதிலிருந்து...உங்கள் கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவை நடத்தி முடித்திருக்கிறீர்கள். உங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் உங்களுக்கு நெருக்கடிகளும் வந்திருக்குமே?

‘‘நெருக்கடிகள் வந்து கொண்டுதான் இருக்கிறது. எங்கள் கட்சித் தொண்டர்கள் மீது பொய் வழக்குப் போடுவதாக போலீஸை வைத்து மிரட்டுகிறார்கள். இட்லி கடை வைத்திருந்தால் சுகாதாரம் சரியில்லை என்று சொல்லி, சுகாதார அதிகாரிகளை வைத்து மிரட்டுகிறார்கள். இரும்புக் கடை வைத்திருந்தால் திருட்டு வழக்குப் போடுவதாக மிரட்டுகிறார்கள். இதுதவிர, எங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு ஒரு லட்சம், இரண்டு லட்சம் என்று விலை பேசுகிறார்கள். ஆளுங்கட்சி தரும் இந்த நெருக்கடிகள் ஒருபுறம் இருக்க, தி.மு.கவின் தோழமைக் கட்சித் தலைவர்கள் சிலரும் கலைஞரிடம் போய் ‘விஜயகாந்தை எந்த வகையிலாவது கட்டுப்படுத்த வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார்கள். வளர்ந்து வரும் கட்சியை நசுக்க நினைப்பது எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே தி.மு.கவுக்கு கைவந்த கலை. நான் மக்களுக்குச் சேவை செய்ய வந்திருக்கிறேன். இவர்களின் மிரட்டலுக்கெல்லாம் நான் அடிபணிய மாட்டேன். அப்படி அடி பணிந்திருந்தால் போன சட்டமன்றத் தேர்தலிலேயே நான் யாருடனாவது கூட்டணி வைத்திருக்க வேண்டும்.’’

‘இன்று புதுக்கோட்டை, நாளை செயின்ட் ஜார்ஜ் கோட்டை’ என்ற உங்கள் கட்சியினரின் கோஷத்தை, தி.மு.க முரசொலியில் கிண்டலாக விமர்சித்திருக்கிறதே?

‘‘அவர்கள் ஐம்பது வருட கட்சியை வைத்திருக்கிறார்கள். அதை வைத்து ஆண்டு அனுபவித்து வருகிறார்கள். அதற்கு பாதிப்பு என்றால் கிண்டலடிக்கத்தான் செய்வார்கள். அவர்கள் அனுபவித்து வரும் சுகத்தை இழக்கப் போகிறார்கள் என்பது தெரிந்ததால்தான், அதை இழந்துவிடக்கூடாது என்ற பதற்றத்தில் இப்படி கிண்டலடிக்கிறார்கள். ‘குள்ளர் சாஸ்திரி, குழப்பத்தின் மேஸ்திரி’ என்று சாஸ்திரியையும், ‘பக்தவத்சலம் அண்ணாச்சி, பருப்பு விலை என்னாச்சு?’ என்று பக்தவத்சலத்தையும் கிண்டலடித்தவர்கள்தான் இவர்கள். இப்போது மட்டும் விலைவாசி எப்படி இருக்கிறதாம்.? ‘நானும் ஒரு கம்யூனிஸ்ட்டுதான், அணுசக்தி விவகாரத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் கருத்தை ஏற்கிறேன்’ என்றெல்லாம் சொல்லும் கலைஞர், விலைவாசி உயர்வை எதிர்த்து கம்யூனிஸ்ட்டுகள் நடத்தும் போராட்டத்தை ஆதரிப்பாரா?. 1967_க்கு முன்பாக தி.மு.கவினர் என்னவெல்லாம் கோஷம் போட்டார்களோ, அது அத்தனையும் அவர்களுக்கே இன்று பொருந்தும். அந்தளவுக்கு ஊழலும் பெருகியிருக்கிறது. வறுமையும் ஒழிந்தபாடில்லை. அதில் எல்லாம் இவர்கள் கவனம் செலுத்தவில்லை. இவர்களின் கிண்டலை எல்லாம் நான் பொருட்படுத்தப் போவதில்லை.’’

உங்களைச் சிறையில் தள்ள முயற்சி நடப்பதாக சொல்லியிருந்தீர்களே.. எதை வைத்து அப்படிச் சொன்னீர்கள்?

‘‘ஏதாவது ஒரு வகையில் என்னுடைய செல்வாக்கை, என்னுடைய நற்பெயரைக் கெடுக்க, குறைக்க தி.மு.க தொடர்ந்து முயற்சிக்கிறது. இதையெல்லாம் தாண்டி எங்கள் கட்சியை நோக்கி இளைஞர்களும், மாற்றுக் கட்சியினரும் வந்த வண்ணம் இருக்கிறார்கள். இதை அவர்களால் தடுக்க முடியவில்லை. என்னுடைய குதிரை மண் குதிரை, பொய்க்கால் குதிரை என்று அவர்களால் சொல்ல முடியவில்லை. நான் சொல்லும் கருத்துக்களுக்கு இவர்கள் பதில் அளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதை வைத்தே, நானும், எனது கட்சியும் வளர்ந்து வருகிறோம் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இது அவர்களுக்கும் புரிந்ததால்தான் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி, என்னை சிறையில் தள்ள முடியுமா என்று முயற்சிக்கிறார்கள். அதைத்தான் சொன்னேன்.’’

தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் அநீதிகளை அகற்றும் வல்லமை கொண்ட கட்சியுடன்தான் கூட்டு என்று தீர்மானம் போட்டீர்களே... அப்படி என்ன அநீதி நடந்துவிட்டது?

‘‘சில நாட்களுக்கு முன்பு கலைஞர் வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாட்டு நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும்தான் தான் எந்த முடிவையும் எடுப்பதாகச் சொல்லியிருக்கிறார். கடந்த எட்டு ஆண்டுகளில் பி.ஜே.பி, காங்கிரஸ் என இரண்டு கட்சிகளிடமும் மாறி மாறி கூட்டு வைத்து செல்வாக்கோடு இருக்கிறாரே.. காவிரித் தண்ணீரை இவரால் பெற்றுத்தர முடிந்ததா? தன்னுடைய சொந்தப் பிரச்னை தீர வேண்டும் என்பதற்காக இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்த கச்சத்தீவை இவரால் மீட்டுத் தர முடிந்ததா? இதுமாதிரியான உரிமைகளைக் காப்பாற்ற முடிந்ததா? நான் எவ்வளவு சொன்னாலும் அவர்(கலைஞர்) பயப்பட மாட்டார். போஸ்டர் அடித்து ஒட்டினாலும் பயப்பட மாட்டார். ஆனால், ஒரு துண்டு சீட்டைப் பார்த்து பயந்துவிடுவார். பின்னாளில் தேசியக் கட்சிகளோடு கூட்டணி சேரும் நிலை வந்தால் இதுபோன்ற உரிமைகளை தமிழகத்திற்கு பெற்றுத் தர வேண்டும் என்று நிர்ப்பந்திப்போம். கலைஞராலும் இந்த நிர்ப்பந்தங்களைச் செய்ய முடியும். ஆனால், அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கிறோமே, பொறுமையாகத்தான் போக வேண்டும் என்று சாக்குச் சொல்வார். காவிரிக்காக தனது அமைச்சர் பதவியை வாழப்பாடியார் தூக்கி எறிந்தாரே, அந்தத் துணிவோடு நீங்களும் பதவியைத் தூக்கி எறிய வேண்டியதுதானே? தமிழ்நாட்டு மக்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருந்திருந்தால் இந்நேரம் அதைச் செய்திருப்பார்கள். ஏன் செய்யவில்லை?’’

நீங்கள் சொல்லும் இந்த அநீதிகளை களையும் வல்லமை காங்கிரஸ், பி.ஜே.பி. ஆகிய இரண்டு கட்சிகளுக்குத் தானே இருக்கிறது? ‘‘ஏன் மக்கள் நினைத்தால் கம்யூனிஸ்ட்டுகள்கூட அந்தப் பட்டியலில் வருவார்களே? ஆனால் நாங்கள் அந்தத் தீர்மானத்தைப் போட்டபோது எங்கள் மனதில் எந்தக் கட்சியும் இல்லை. அதற்கான சூழ்நிலை வரும்போது அதுபற்றிப் பேசலாம்.’’

‘கூட்டணி விஷயத்தில் நாம் ஒன்று நினைத்தால் தெய்வம் ஒன்று நினைக்கிறது’ என்று சொன்னீர்கள். நீங்கள் என்ன நினைத்தீர்கள்? தெய்வம் என்ன நினைத்தது?

‘‘தனியாக நான் ஒன்றும் நினைக்கவில்லை. விஜயகாந்த் தனியாக நின்றால் எந்தக் காலத்திலும் வெற்றிபெற முடியாது என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் தெய்வம் நினைத்தால் தனித்து நிற்கும்போதே எனக்கு வெற்றியை தேடித்தர முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. கட்சி ஆரம்பித்து இந்த மூன்று ஆண்டுகளில் ஒரு பொதுத்தேர்தல், ஒர் உள்ளாட்சித் தேர்தல், இரண்டு இடைத் தேர்தல்கள் என போதுமான அனுபவத்தைப் பெற்றிருக்கிறோம். அந்த நேரங்களில் மக்களின் நாடித்துடிப்பை நேரில் சென்று பார்த்து உணர்ந்தவன் என்ற அடிப்படையில்தான் நான் பேசுகிறேன். அதனால் யாருடைய விமர்சனத்தைப் பற்றியும் நான் கவலைப்பட மாட்டேன். நான் தெய்வத்தையும், மக்களையும் நம்புகிறேன்.’’

பி.ஜே.பி. மற்றும் காங்கிரஸ் பற்றிய உங்களின் பார்வை எப்படி இருக்கிறது?

‘‘பி.ஜே.பியை மதவாதக் கட்சி என்று விமர்சிக்கிறார்கள். ஆனால் இவர்கள் (தி.மு.க) கூட்டு வைக்கும்போது மட்டும் அதை மறந்துவிடுவார்கள். ராமர் பற்றிய சர்ச்சை பெரிதானதும் காங்கிரஸ் காரர்களும்போய், ராமருக்கு ஆரத்தி எடுக்கிறார்கள். பொதுவில் பார்த்தால் இந்த இரண்டு கட்சிகளாலும் பெரிய அளவில் எந்தப் பிரச்னையும் இல்லை. அதன் தோழமைக் கட்சிகளால்தான் பிரச்னையே. மற்றபடி, காங்கிரஸைப் பற்றி என் அப்பா என்னிடம் நிறையச் சொல்லியிருக்கிறார். நானும் கவனித்து வருகிறேன். கருப்புச் சட்டைக்காரர்களை(தி.மு.கவினர்) நம்பாதே என்று சொன்னதை நான் இன்னமும் நினைவில் வைத்திருக்கிறேன்.’’

‘தி.மு.க, அ.தி.மு.க இருவருமே திருடர்கள்’ என்று நீங்கள் சொன்னது கொஞ்சம் அதிகப்படியாகத் தெரியவில்லையா?

‘‘லஞ்சம், ஊழலை வைத்துத்தான் அப்படிச் சொன்னேன். கோயில் உண்டியலில் போட்ட பணத்தை எடுத்துக் கொள்பவரை நீங்கள் என்னவென்று சொல்வீர்கள்? அதேபோல அரசு கஜானாவில் உள்ள மக்களின் வரிப்பணத்தை ஊழல் செய்து எடுப்பவர்களை வேறுமாதிரியா சொல்ல முடியும்? நான் சொன்ன வார்த்தை கொஞ்சம் கடுமையாக இருக்குமே தவிர, அதற்கான காரணம் அப்பட்டமான உண்மை.’’

தமிழ்நாட்டில் ஆறு முதலமைச்சர்கள் இருப்பதாகச் சொல்லி இருக்கிறீர்கள். யாரைக் குறிப்பிடுகிறீர்கள்?

‘‘பத்திரிகைக்காரர்களுக்கே அது தெரியும். நீங்களே யார் யார் என்று அடையாளம் கண்டு கொள்ளலாம். அந்தளவுக்கு இப்போது முதலமைச்சரைத் தாண்டி அதிகார மையங்களின் எண்ணிக்கை கூடியிருக்கிறது.’’

திராவிடர்_தமிழர் பிரச்னை மீண்டும் கிளம்பியிருக்கிறது. இதன்மூலம் உங்களை தனிமைப்படுத்த முயற்சி நடப்பதாக நினைக்கிறீர்களா?

‘‘திராவிடர் என்றால் யார்? தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்ற மொழிகளைப் பேசுபவர்கள்தான் திராவிடர்கள். பண்டையத் தமிழர்தான் இன்றைய திராவிடர். அப்படியானால் இந்த விமர்சனத்தைச் செய்பவர்கள் உண்மையான தமிழர்கள் இல்லையா என்பதை அவர்கள்தான் விளக்க வேண்டும். எம்.ஜி.ஆரையே மலையாளி என்று விமர்சித்து அவரை தனிமைப்படுத்த முயற்சித்தார்கள். என் மீது குற்றம் சாட்ட அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்பதால் இப்படி ஒரு முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். இதற்கு பதிலடி தருவதற்காக நான் பேச ஆரம்பித்தால் நிறைய விஷயங்களைப் பேச வேண்டியிருக்கும். உண்மையைச் சொல்லப்போனால் எம்.ஜி.ஆர் மீது செய்யப்பட்ட விமர்சனம், என் மீதும் செய்யப்படுவதில் எனக்கு சந்தோஷம்தான்.’’

ராமர்பால விவகாரத்தில் நடக்கும் சர்ச்சைகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இதில் உங்களின் நிலை என்ன?

‘‘சேது சமுத்திரத் திட்டம்தான் முக்கியம் என்றால் ராமர் இருக்கிறாரா, இல்லையா என்ற விவாதத்தை ஆரம்பித்திருக்கக்கூடாது. தி.மு.க தலைவராக கலைஞர் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். ஆனால் எல்லோருக்கும் பொதுவான முதலமைச்சர் பதவியில் அமர்ந்த பிறகு, அப்படி பொதுவானவராக நடந்து கொள்வேன் என்று சத்தியப் பிரமாணமும் எடுத்த பிறகு, விமர்சனங்களை ஜாக்கிரதையாக வெளியிட வேண்டும். அனைத்து மத மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். அணுசக்தி ஒப்பந்தத்தைப் பற்றி பேசும்போது ‘அது திரிசங்கு சொர்க்கமாகவே இருக்கட்டும்’ என்று சொல்லும் கலைஞர், சொர்க்கத்தையும் நரகத்தையும் நம்புகிறாரா? ஆக, தனக்கு வேண்டுமென்றால் ஒரு விமர்சனம்.. வேண்டாமென்றால் இன்னொரு விமர்சனம்... என்ற நிலைப்பாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த திட்டத்தைப் பொறுத்தவரை சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்ததுபோல, அவசியமில்லாத விஷயத்தை ஊதிப் பெரிதாக்கியவர் கலைஞர்தான். எனவே, இந்தத் திட்டம் தாமதமானாலோ, ரத்து செய்யப்பட்டாலோ அதற்குக் கலைஞர்தான் முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும்.’’

ஜெயலலிதா மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டு வந்ததை தவறு என்று சொல்லியிருக்கிறீர்களே?

‘‘கடந்த ஆட்சியின்போது எங்கள் மீது இப்படி கொண்டுவரவில்லையா என்று தி.மு.கவினர் கேட்கிறார்கள். அப்போது கொண்டுவரப்பட்ட மூன்று உரிமைப் பிரச்னைகளுமே சட்டமன்றத்திற்கு வெளியே சட்டமன்றத்தைப் பற்றி எழுதியதாலும், பேசியதாலும்தான் கொண்டுவந்தார்கள். இப்போது ஜெயலலிதா கூறிய குற்றச்சாட்டில் சட்டமன்றம் தொடர்பான எந்த வார்த்தையும் இல்லை. அதனால்தான் தி.மு.கவின் முடிவை விமர்சித்தோம். ஜெயலலிதாவின் குற்றச்சாட்டால் இவர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் நீதிமன்றத்தை அணுகியிருக்கலாம். அப்படியே கடந்த ஆட்சியில் ஜெயலலிதா தவறு செய்திருந்தாலும் அந்த தவறான முன்னுதாரணத்தை இவர்கள் ஏன் பின்பற்ற வேண்டும்?. மூத்தவர், பெரியவர், மூதறிஞர், அனுபவம் உள்ள முதல்வர் என்றெல்லாம் அழைக்கப்படும் கலைஞர் இந்த தவறான தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை என்று யோசித்திருக்க வேண்டாமா?. முதலில் ஆட்சியாளர்கள் தனது எதிரிகளைப் பழிவாங்குவதைக் கைவிட வேண்டும். பழைய சம்பவங்களை மேற்கோள் காட்டி அடுத்த சந்ததியினரை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லக்கூடாது. வருங்கால தலைமுறையினருக்கு நல்ல எண்ணங்கள் பிறக்கும் வகையில் செயல்பட வேண்டும்.’’

தி.மு.க, அ.தி.மு.கவுக்கு மாற்றாக உருவாகி வருகிறீர்கள். இந்த நேரத்தில் புதிய கட்சிகளின் வரவு உங்களை பாதிக்குமா? உங்களுக்குப் போட்டியாக அவர்களை நினைக்கிறீர்களா?

‘‘எத்தனை கட்சிகள் வேண்டுமானாலும் வரட்டும். யார் வேண்டுமானாலும் ஆரம்பிக்கட்டும். எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை. என்னைப் பொறுத்தவரை மக்கள் மீது நான் வைத்துள்ள நம்பிக்கையை ஒருபோதும் இழக்கமாட்டேன். மக்களுக்கும் யார் யார் எப்படி என்ற விவரங்களெல்லாம் நன்றாகவே தெரியும்.’’

ஜெயலலிதாவின் பாதுகாப்பு விஷயத்தில் எழுந்துள்ள சர்ச்சை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

‘‘இவர் தனக்கு குண்டு துளைக்காத கார் வேண்டும் என்கிறார். அவர்களோ கொடுத்ததை வாங்க மறுத்தார் என்கிறார்கள். இதுமாதிரியான கூத்துக்கள் வெளிவருவது நல்லதுதான். மக்களும் நடந்ததைத் தெரிந்து கொள்ளட்டும். என்னைப் பொறுத்தவரை நியாயமான பாதுகாப்பை அரசு தரும்போது அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். பிரதமருக்கே அம்பாசிடர் கார்தான் தருகிறார்கள். அதை ஏற்க மறுத்து வேறுமாதிரி கேட்பதில் நியாயம் இல்லை என்றே நினைக்கிறேன்.’’

எந்தவித காரணமும் சொல்லாமல் அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்படுகிறது. இதுபற்றி என்ன சொல்கிறீர்கள்?

‘‘இதே விஷயத்தை ஜெயலலிதா செய்தபோது தி.மு.கவினர் விமர்சித்தார்கள். அதில் நியாயம் இருந்தது. ஆனால் இவர்களும் அதையேதான் இப்போது செய்கிறார்கள். இப்போது மட்டுமல்ல எப்போதுமே இவர்கள் இப்படித்தான். வந்தவர், போனவர், சொந்தம், பந்தம் என்று யார் சொன்னாலும் அதைக் கேட்டுக்கொண்டு இலாகாக்களை மாற்றுகிறார்கள். இந்த விஷயத்தில் முதலமைச்சருக்கு பிரத்யேக உரிமை இருக்கிறது என்றாலும் ஓர் அமைச்சர் என்ன தவறு செய்தார்.... எதற்காக மாற்றுகிறோம்... என்பதை மக்களுக்கு வெளிப்படையாகச் சொல்லாமல் இப்படி மாற்றுவது ஆரோக்கியமானது அல்ல. ஆனால், அப்படிச் சொன்னால் ஊழல் விவகாரம் வெளியில் வந்துவிடுமே என்பதால் அதைச் செய்ய இவர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். கூட்டணிக் கட்சிகளும் இதைக் கண்டு கொள்ள மறுக்கிறார்கள். இந்த ஆட்சியில் தவறு நடக்கிறது என்று சொல்லிக்கொண்டே ஐந்தாண்டுகளுக்கு ஆதரவு தொடரும் என்கிறார்கள். அப்படியானால் ஐந்தாண்டுகள் வரை இவர்கள் அடிக்கும் கொள்ளைக்கு ஜால்ரா தட்டப் போகிறார்களா? மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.’’

கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லாதது பற்றி பிரதமர் விரக்தி தெரிவித்திருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

‘‘ஏற்கெனவே ஒப்புக் கொண்ட திட்டங்களில் தோழமைக் கட்சிகள் சரிவரக் கை கொடுக்கவில்லை என்பது இந்தப் பேச்சின் மூலம் தெரிகிறது. அமைச்சரவையில் இடம்பெற்று, அமைச்சரவைக் கூட்டத்தில் சில விஷயங்களை ஒப்புக் கொண்டுவிட்டு வெளியில் எதிர்ப்பது நியாயம் இல்லை. அணுசக்தி விவகாரத்தில் இவ்வளவு நாட்களாக வாய் திறக்காமல் இருந்த கலைஞர், இப்போது கம்யூனிஸ்ட்டுகளை மேற்கோள் காட்டி நழுவலான கருத்துக்களைச் சொல்கிறார். அணுசக்தி முக்கியமல்ல. ஆட்சி, பதவி தான் முக்கியம் என்கிறார். பதவி வெறியும், மோகமும்தான் இதற்குக் காரணம். அடிக்கின்ற கொள்ளையை மொத்தமாக அடித்துவிட வேண்டும் என்று நினைப்பதால்தான் ஆட்சி முக்கியம் என்கிறார் கலைஞர். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் எல்லா அமைச்சர்களும் இப்போது வசூலை வாரிக் குவிக்கிறார்கள். டிரைவர், கண்டக்டர் தொடங்கி போலீஸ் வேலை வரை எல்லாவற்றுக்கும் லஞ்சம் தந்தால்தான் வேலை கிடைக்கிறது. ஏதாவது ஒரு சொத்தை ஏலத்தில் விட்டால் அதை அமைச்சர்கள்தான் பினாமி பெயரில் வாங்குகிறார்கள். இவர்கள் இப்படி ஊழல் செய்வதைப் பார்த்து அதிகாரிகளும் தைரியமாக ஊழலில் ஈடுபடுகிறார்கள். ஒரு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மகன்கள் சொந்தமாக மின் உற்பத்தி நிலையம் அமைக்கிறார்கள் என்றால் எவ்வளவு கொள்ளை அடிக்கிறார்கள் என்று நீங்களே கணக்குப் பார்த்துக் கொள்ளுங்கள். கடந்த ஆட்சியில் குற்றம் சாட்டப்பட்ட ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் இன்று முதல்வர் அலுவலகம் வரை முக்கியப் பதவிகளில் அமர்ந்திருக்கிறார்கள் என்றால் ஊழல்தானே காரணம். இந்த ஊழல்களைச் செய்ய முடியாமல் போய்விடுமோ என்ற அச்ச உணர்வினால்தான் ஆட்சி போகக்கூடாது என்று சொல்லி, நாட்டுநலன் சார்ந்த திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள். இவர்களை நினைத்து பிரதமர் விரக்தி அடைந்ததில் வியப்பில்லை.’’

அடுத்த தேர்தலுக்கு தி.மு.க, அ.தி.மு.க இல்லாத மூன்றாவது அணியை அமைக்கப் போவதாக ராமதாஸ் சொல்லியிருக்கிறார். நீங்களும் அதில் இணைய வாய்ப்புண்டா?

‘‘நிச்சயமாக நான் யாருடனும் கூட்டு வைக்க மாட்டேன். தனித்து நின்றால் வெற்றி பெற முடியுமா என்று கேட்கிறார்கள். மக்கள் நினைத்தால் யாரும் ஆட்சிக் கட்டிலில் அமர முடியும். மக்கள் புரட்சி, மவுனப் புரட்சி என்று இவர்கள் அடிக்கடி சொல்கிறார்களே, அப்படி ஒன்று நடந்தால் நாங்களும் ஆட்சியைப் பிடிக்க முடியும். அது நடக்கத்தான் போகிறது. பொறுத்திருந்து பாருங்கள்.’’

( நன்றி: குமுதம் ரிப்போட்டர் )

14 Comments:

cgs said...

இப்போதைக்கு காப்டன் தாஅன் ஒரே கலங்கரை விளக்கு

ஹரன்பிரசன்னா said...

நல்ல பேட்டி. பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.

மின்னல்ப்ரியன் said...

கேப்டன் பேட்டி சென்னை மழைக்கு சூடான சுக்கு காபி ,,,இன்னொரு முக்கியமான விஷயம் தமிழில் எழுத !!


சில மாதங்களுக்கு முன்னர், ஹிந்திக்கு transliteration அறிமுகப்படுத்திய கூகிள் சில வாரங்களுக்கு முன்னர் தமிழில் எழுதும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதனால் தமிழில் டைப் செய்ய ஒரு கம்ப்யூட்டரும் இணைய இணைப்பு தவிர font, client application என்று ஒரு புண்ணாக்கும் தேவையில்லை.இங்கே க்ளிக்க http://www.google.com/transliterate/indic/Tamil#

மின்னல்ப்ரியன் said...

கேப்டன் பேட்டி சென்னை மழைக்கு சூடான சுக்கு காபி ,,,இன்னொரு முக்கியமான விஷயம் சில மாதங்களுக்கு முன்னர், ஹிந்திக்கு transliteration அறிமுகப்படுத்திய கூகிள் சில வாரங்களுக்கு முன்னர் தமிழில் எழுதும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதனால் தமிழில் டைப் செய்ய ஒரு கம்ப்யூட்டரும் இணைய இணைப்பு தவிர font, client application என்று ஒரு புண்ணாக்கும் தேவையில்லை. இங்கே க்ளிக்க http://www.google.com/transliterate/indic/Tamil#

(Tharuthalai) said...

என்ன கொடுமை இது சரவணன்? இவர் எதுக்கு கேப்டனா இருந்... என்ன கொடுமை இது சரவணன்? இவர் எதுக்கு கேப்டனா இருந்தாரு? மாற்றம் கொண்டு வருவேன்னு சொல்லிகிட்டே, என்னவெல்லாம் செய்யக்கூடாதோ அதெயெல்லாம் செய்யுறாரே?

பேட்டில சொல்லிகும்படியா ஒன்னும் இல்ல. முக்கியமான பிரச்சனைகள்ள வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம் வரும்போதுதான் இவரு பயணம் செய்யுற ரெண்டு குதிரையில ஒன்னு கழண்டுக்கும்னு நினைக்கிறேன். அதுவரைக்கும் அரிதாரத்தவச்சு ஒப்பேத்தலாம். (இதுவும் என் *கருத்து*தான்)

-------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)

Jahe said...

கேப்டனை அவர் நடிச்ச "நரசிம்மா" படத்தை அஞ்சு வாட்டி தொடர்ச்சியா பாக்க சொல்லுங்கய்யா...அப்பால பாப்போம்...அவர் அரசியல்ல continiue பண்ணுராரான்னு ....

லொள்ளு சபா காமெடில "சிம்மா" என்ற டாயலோகுக்கு...பதில்...Pre-Paid சிம்மா ... போஸ்ட்-Paid சிம்மா ன்னு reply வரும்.... அது தான் ஞயாபகதுக்கு வருது....

--- இஞ்சி தின்ற குரங்கு....

Subramanian said...

Tharuthalai and Jahe ...

If you could explain where all Vijayakanth wrong in his statement?

May be when he comes to power he might not bound to what he said today...But can you explan....

-Jai Hind!!!

Anonymous said...

Ippadiyae konjam nanjam nallathu seiyalamnu ninaikuravangala kindal adichukittae irunga.. neegalum urpattuduveenga .. naadum urupatudum...
ungalukku ellam karunanithi , illa jayalalitha thaan laikku...

Anonymous said...

I bet u r not the original idlyvadai

கலைஞர் கைத்தடி said...

படிக்க நல்லாத்தான் இருக்கு..

/தமிழ்நாட்டில் ஆறு முதலமைச்சர்கள் இருப்பதாகச் சொல்லி இருக்கிறீர்கள். யாரைக் குறிப்பிடுகிறீர்கள்?

‘‘பத்திரிகைக்காரர்களுக்கே அது தெரியும். நீங்களே யார் யார் என்று அடையாளம் கண்டு கொள்ளலாம். அந்தளவுக்கு இப்போது முதலமைச்சரைத் தாண்டி அதிகார மையங்களின் எண்ணிக்கை கூடியிருக்கிறது.’’/கலைஞர், ஸ்டாலின், கனிமொழி, அழகிரி, அப்புறம் யாரு அந்த இரண்டு பேர்?

Jahe said...

ஐயா சுப்பரமணி, பஞ்ச் டயலாக் பேசுறது சினிமா காரவுகளுக்கு கை வந்த கலை... கேப்டன் ஒண்ணும் புதுசா செஞ்சிடலை.. எவனோ எழுதி கொடுக்கிறத ரமணா பாணிலே அடிச்சி வுடுராரு.. உங்கள மாதிரி பொது ஜனம் அத்த படிச்சிட்டு இங்கன எங்கள கொடயுறிங்க...

-- மறுபடியும் இஞ்சி தின்ற குரங்கு...

Subramanian said...

//Jahe said...
ஐயா சுப்பரமணி, பஞ்ச் டயலாக் பேசுறது சினிமா காரவுகளுக்கு கை வந்த கலை... கேப்டன் ஒண்ணும் புதுசா செஞ்சிடலை..
//

I could remember a "Thirukural"

"Epporul yaar vai katpinum Apporulin Mei porul kaanpathu arivu"

- Jai Hind!

Jahe said...

I could remember a "Thirukural"

"Epporul yaar vai katpinum Apporulin Mei porul kaanpathu arivu"

- Jai Hind!


அது வேற வாயி .... இது நாற வாயி.... ஞாபகம் இருக்கா ? வடிவேலு டயலாக்..

Subramanian said...

//Jahe said...
அது வேற வாயி .... இது நாற வாயி.... ஞாபகம் இருக்கா ? வடிவேலு டயலாக்

I really dont understand what u r trying to say.

Anyhow, I had a good laugh :)

-Jai Hind