பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, October 30, 2007

கிருஷ்ணசாமி மீது தாக்குதல் - ராமதாஸ், விஜயகாந்த் அறிக்கை

நாட்டில் யாரும் யாரையும் குத்தலாம் என்ற நிலை உள்ளது - விஜயகாந்த்
காவல் துறையின் ஈரல் கெட்டுவிட்டது என்றும் காவல் துறைக்கு ஈரலே இல்லை என்று அண்மை காலமாக சொல்லப்பட்டு வந்திருக்கிறது - ராமதாஸ்

முழு அறிக்கைக்கு ...


விஜயகாந்த் கண்டனம்

நாட்டில் யாரும் யாரையும் குத்தலாம் என்ற நிலை உள்ளது. இது தவிர்க்கப் பட வேண்டும். எல்லா உயிருக்கும் மரியாதை கொடுக்கவேண்டும்.

இப்போது நடைபெற்றுள்ள சம்பவத்தைப் பார்க்கும்போது, சட்டம்ஒழுங்கு நிலைமை எந்த அளவுக்கு உள்ளது என்பதை நீங்களே யூகித்துக்கொள்ளலாம். ஒரு அரசியல் கட்சித் தலைவருக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை எப்படி இருக்கும் என்பதை நினைத்துப்பாருங்கள்.பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை...

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் எம்.கிருஷ்ணசாமி முதுகுளத்தூர் அருகே நேற்று வன்முறையாளர்களால் தாக்கப் பட்டிருக்கிறார். இந்தக் கொலை வெறித் தாக்குதலில் இருந்து அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்திருக்கிறார். வேறு யாரையோ தாக்கத் திட்டமிட்டவர்கள். அடை யாளம் தெரியா மல் இவரைத் தாக்கியிருக்கிறார்கள் என்று காவல்துறையினர் சந்தேகப்படுவதாகவும், அதனால் இந்தத் தாக்குதல் சம்பவத்தை அவர்கள் மிகக் கடுமையான நிகழ்வு என்று எடுத்துக்கொள்ளவில்லை என்றும் காவல் துறை வட்டாரத் தகவல்களை மேற்கொள் காட்டி சில பத்திரிகைகளில் செய்தி வெளிவந்திருக்கிறது. இது உண்மை என்றால் தமிழகக் காவல்துறையினரின் இந்த மெத்தனப் போக்கு மிக வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.

பசும்பொன் முத்துராம லிங்கத் தேவரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதை யொட்டி அந்தப் பகுதி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப் பட்டிருப்பதாக கடந்த சில நாட்களாக அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டு வந்திருக் கிறது. தென் மாவட்ட ஆட்சியர்களும், காவல் துறை உயர் அதிகாரிகளும் பல முறை கூடி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்திருக்கிறார்கள். எந்த வித அசம்பாவித சம்பவமும் நடந்து விடாமல் தடுப்பதற்கான அனைத்து முன் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றெல்லாம் அதிகாரிகள் அன்றாடம் தெரிவித்து வந்திருக்கிறார்கள்.

இவற்றையெல்லாம் மீறி காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் அந்தப் பகுதியில் கொலை வெறி கும்பலால் தாக்கப்பட்டிருக்கிறார். முதுகுளத்தூர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர் சென்று கொண்டிருந்த போது அவரது பாதுகாப்புக்காக ஒரு காவலர் கூட உடன் செல்லவில்லை என்று சொல்லப்படுகிறது. சம்பவம் நடந்த இடத்திற்கு மிக அருகாமையில் உள்ள ஒரு ஊரில் காவலர்கள் குவிக்கப்பட்டிருந்ததாகவும் அவர்கள் கூட இந்தத் தாக்குதல் பற்றிய சதி செயலை முன்கூட்டியே அறிந்து அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை என்றும் தெரியவருகிறது.

எனவே பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் மேற்கொண்ட ஏற்பாடுகள் அனைத்தும் மேலோட்டமாக எடுக்கப் பட்டிருக்கும் நடவடிக்கையை தான் என்பதும் முன்கூட்டியே அறிந்து வருமுன் காக்கும் நடவடிக்கைகள் காவல் துறையினர் கோட்டை விட்டிருக்கிறார்கள் என்பது இந்தத் தாக்குதல் சம்பவம் புலப்படுத்துகிறது. உளவுத்துறையினர் சரியாக செயல்பட்டிருந்தால் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மீதான கொலைவெறித் தாக்குதலை தடுத்து நிறுத்தி இருக்கமுடியும். அவருடன் பாதுகாப்புக்காக காவலர்கள் சென்றிருந்தாலும் தாக்குதலைதடுத்திருக்க முடியும்.

பாதுகாப்பு என்பது குறிப்பிட்ட ஓரிரு தலைவர் களுக்கு மட்டும் தான் என்கிற கண்ணோட்டத்துடன் செயல்படும் போக்கை காவல்துறையினர் மாற்றிக் கொள்ள வேண்டும். ஆட்சியில் இருப்பவர்களுக்கும், ஆட்சியில் இருந்தவர்களுக்கும், குறிப்பிட்ட சில குழுக்க ளால் அச்சுறுத்தல் உள்ளவர்களுக்கும் மட்டுமே பாதுகாப்பு என்ற பாகுபாடான நிலைமை கூடாது. அத்துடன் ஒவ்வொரு தலைவரும் நீதிமன்றத்திற்குச் சென்றுதான் தங்களுக்குத் தேவையான பாதுகாப்பை கோரி பெற வேண்டும் என்ற நிலைமை ஏற்படுவது காவல் துறையினருக்கும் அரசுக்கும் இழுக்கைத் தேடித் தரும் என்பதை உணர்ந்து செயல்பட முன்வரவேண்டும்.

வேறு யாரோ என்று நினைத்து தவறுதலாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரை தாக்கியுள்ள நிகழ்வை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு முக்கிய தலைவர்கள் அனை வருக்கும் பாதுகாப்பு அளிக்கக் காவல்துறையும், அரசும் முன் வரவேண்டும்.

தமிழகக் காவல்துறை மிக உன்னதமான நிலையில் இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் கடந்த சில வருடங்களாகக் காவல் துறையைப் பற்றி தெரிவிக்கப்பட்டு வந்துள்ள கருத்துக்கள் அதன் நற் பெயருக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை. காவல் துறையின் ஈரல் கெட்டுவிட்டது என்றும் காவல் துறைக்கு ஈரலே இல்லை என்று அண்மை காலமாக சொல்லப்பட்டு வந்திருக்கிறது.

அ.தி.மு.க. ஆட்சி என்றால் ஜெயலலிதாவின் ஏவலுக்கு கட்டுப்பட்டு செயல்படும் காவல்துறை என்றும், தி.மு.க. ஆட்சி என்றால் கலைஞரின் கட்டளைக்கு பணிந்து நடக்கும் என்றும் மாறி மாறி தமிழக காவல் துறை குற்றச்சாட்டுக்கு இலக்காகி வந்திருக்கிறது. இந்த நிலைமை மாற வேண்டும். மக்களின் பாதுகாவலர்கள் என்ற பெயர்தான் தமிழக காவல் துறைக்கு பெருமை சேர்ப்பதாக இருக்கும். இழந்து விட்ட பழைய உன்னத நிலையை அடைய உதவும் என்பதை உணர்ந்து காவல் துறை செயல்பட முன்வர வேண்டும். ஆட்சியில் யார் இருந்தாலும் அவர்களும் நமது காவல்துறை இழந்து விட்ட பெருமையை மீண்டும் பெற உறுதுணையாக இருக்க வேண்டும்.

0 Comments: