பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, October 05, 2007

பந்த் - பத்திரிக்கைகளின் பந்தாட்டம்

பந்த், உச்சநீதிமன்ற எச்சரிக்கை பற்றி ஆனந்த விகடன், குமுதம் தலையங்கம்
( கல்கி தலையங்கம் இங்கே பிறகு அப்ட்டே செய்கிறேன் )

குமுதம் தலையங்கம் - ஆதங்கம்

பந்த்துக்கு அரசியல் கட்சிகள் அழைப்பு விடுக்க முடியாது. அது அடிப்படை உரிமைகளுக்கு இடையூறு செய்யும் செயல், மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் செயல், உத்தரவைத் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். எச்சரிக்கையாக இருங்கள். நெருப்புடன் விளையாடாதீர்கள்! என்று சொல்லியிருக்கிறது உச்சநீதிமன்றம்.

சேதுசமுத்திரத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதற்கான பந்த் என்கிறது தமிழக அரசு.

திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டியவர்களே அவர்கள்தானே? தி.மு.க.வைச் சேர்ந்தவர்தானே அந்தத் துறையின் அமைச்சர்? அப்படியானால் தாங்கள் சரியாகச் செயல்படவில்லை என்பதை அவர்களே ஒப்புக்கொள்வதாகத்தானே அர்த்தம்?

இப்போது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு உண்ணாவிரதம் என்று திசை திருப்பப்பட்டாலும், நாடெங்கும் பஸ்கள் ஓடவில்லை. பெரும்பாலானா கடைகள் திறக்கப்படவில்லை. டாஸ்மாக் கடைகள் மட்டும் அகலத் திறந்திருந்தன!

சம்பளம் வாங்கும் முதல் தேதியன்று அதுவும் மறுநாள் அரசு விடுமுறையாக இருக்கும் தினத்தில் இப்படி அலைக்கழிக்கிறார்களே... சம்பந்தப்பட்டவர்கள், இவர்கள் நடத்தும் தொலைக்காட்சிகளையோ, நிறுவனங்களையோ அன்றைய தினம் இழுத்து மூடியிருக்கலாமே? அப்பாவி கடைக்காரர்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் மட்டும் ஏன் இந்த சோதனை? என்பதுதான் நடுத்தர மக்களின் எண்ணம்.

வெறும் கடையடைப்பா? உண்ணாவிரதமா? என்பதல்ல பிரச்னை. சேது சமுத்திரத் திட்டம் தமிழர்களுக்குப் பலன் தரும் திட்டம் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால், நடுத்தர அப்பாவி வாக்காளர்களின் தினசரி வாழ்க்கை பாதிக்கப்படாமல் அவற்றைச் செய்யுங்கள் என்பதுதான் பொது மக்களின் ஆதங்கம்.
ஆனந்த விகடன் தலையங்கம் - கருமமே கண்ணாயினார்!


‘தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய மத்திய அரசு தயங்கக் கூடாது’ என்று கோபம் காட்டியிருக்கிறது உச்ச நீதிமன்றம். தமிழக ஆளும் கூட்டணியில் அதற்குச் சில எதிர்வினைகள்..!

‘கோர்ட் சொன்னால் என்ன... பஸ்ஸை நிறுத்திப் பார்ப்போமே என்று என்னைப் போன்றவர்கள் எங்கள் தலைவரிடம் சொன்னோம்!’ என்று உண்ணாவிரத மேடையில் நின்று பொங்கியிருக்கிறார் ஓர் அமைச்சர்.

‘கர்நாடக அரசும் கேரள அரசும் தீர்ப்புகளை மதிக்காமல் போனபோது, உச்ச நீதிமன்றம் ஏன் இதுபோன்ற கடுமையைக் காட்டவில்லை?’ என்று கேட்டிருக்கிறார் இன்னொரு தலைவர்.

உணர்வுகளில் என்னதான் வேகம் இருந்தாலும்... கடைசியில் என்ன ஆனது? நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள் அவசரமாக ‘ஓட்டப்பட்டன’; ‘மூடப்பட்ட’ கடைகள் காவல்துறை உந்துதலோடு ‘திறக்கப்பட்டன’; அரசு ஊழியர்கள் உடனே ஆஜராகும்படி அழைக்கப்பட்டனர்!

‘வேண்டாம் அரசு பந்த்’ என்று உச்ச நீதிமன்றம் சொன்னதும், ‘அதே நாளில் வேறு வழியில் எதிர்ப்பைக் காட்டுவோம்’ என்று உணர்ச்சிவசப்பட்டிருக்கத் தேவையில்லை! உண்ணாவிரதப் போராட்டத்தை, ஒரே ஒருநாள் மட்டும் தள்ளிவைத்து, அந்தத் தத்துவத்தின் ஆதிகர்த்தாவான மகாத்மா காந்தியின் பிறந்த நாளன்று நடத்தியிருந்தால்... உணர்வுகள் இன்னும்கூடப் பலமாக வெளிப்பட்டு இருக்குமே! அரசு விடுமுறை என்பதால், எந்தக் கேள்விக்கும் இடமில்லாமலும் போயிருக்கும்.

தமிழகத்தின் நலனுக்காகவே சேது சமுத்திரத் திட்டத்தைக் கொண்டுவருவது அரசின் நோக்கமாக இருந்தால்... இனியாவது, உணர்ச்சிவேகத்தில் முடிவுகள் எடுக்கக் கூடாது; யார் வாய்க்கும் அவல் போடக் கூடாது; யார் பெரியவர் என்கிற கெளரவ யுத்தத்துக்கு வழிவகுக்கக் கூடாது; நோக்கமே மறந்துபோகுமளவு விவகாரம் திசை திரும்பிச் செல்ல துளியும் இடமளிக்கக் கூடாது!

கருமமே கண்ணாயினார்க்கு இவையும்தான் தகுதிகள்!கல்கி தலையங்கம்
“பந்த் நடத்தக்கூடாது என்றுதானே உச்சநீதிமன்றம் கூறி யது? உண்ணாவிரதம் இருக்கக்கூடாது என்று சொல்லவில் லையே!” என்று பேசுவது முதல்வா¢ன் வயதுக்கும் அந்தப் பதவி யின் கௌரவத்துக்கும் பெருமை சேர்க்காத விதண்டாவாதம்!

உச்சநீதிமன்றம், ராமர் பாலத்தை இடிக்காமல் மாற்று மார்க்கத்தில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற இயலுமா என்பது குறித்து அறிக்கை தர மத்திய அரசுக்கு மூன்று மாத அவகாசம் தந்திருக்கிறது. நீதிமன்றத்தின் இந்த ஆணையை மதித்து நடப்பதில் மத்திய அரசிலுள்ள தி.மு.க. அமைச்சர்களுக்கு மட்டும் என்ன இக்கட்டு இருக்க முடியும்? பல திட்டங்கள் வருடக் கணக்கில் தாமதமாகிறபோது அதற்குக் காரணம்கூட தராமல் அரசு அலட்சியம் காட்டுகிறது. டி.ஆர்.பாலுவின் அமைச்சகப் பொறுப்பில் உள்ள சென்னை கத்திபாரா மேம்பாலம் கட்டும் பணிகூட மீண்டும் தாமதமாகியிருக்கிறது. அதற்கு சிமெண்ட் பற்றாக்குறை தொடங்கி, கட்டுமான மாறுதல்வரை பல காரணங் கள் கூறப்படுகின்றன. இந்தத் தாமதத்தால் சென்னைவாசிகள் ஏற்கெனவே அனுபவித்துவரும் போக்குவரத்து இடையூறு நீட்டிக்கப்படப்போகிறது.
ஆனால், சேது சமுத்திரத் திட்டத்தின் மூன்று மாத தாமதத்தைப் பொறுக்க முடியாமல் பொங்கியெழுந்து நாட்டையே இரண்டாக்கிக் கொண்டிருக்கிறது தி.மு.க.! அக்கட்சியின் ஆதரவால் ஆட்சியில்
இருக்கின்ற பாவத்துக்காக, மத்திய அரசும் கருணாநிதி முடிவை
ஆதா¢த்ததன் மூலம், உச்சநீதிமன்றத்தை அவமதித்துள்ளது.

நீதிமன்றங்களை அரசே மதியாத நாட்டில், அமைதியும் மக்களின் பாதுகாப்பும் அச்சுறுத்தலுக்குள்ளாகின்றன. எப்பேர்ப்பட்ட பெரும்பான்மை ஜனநாயக ஆட்சியும் நீதியை மதியாதபோது கொடுங்கோன்மையாகத்தான் மாறும். தமிழ்நாட்டிலோ ஒரு சிறு பான்மை அரசே கொடுங்கோன்மை அரசாகி, போக்குவரத்து, வர்த்தகம், சராசா¢ வாழ்க்கை என அனைத்தையும் ஸ்தம்பிக்கச் செய்திருக்கிறது! கட்சித் தொண்டர்களின் வன்முறையும் நிகழ்ந்திருக்கிறது.

உச்சநீதிமன்றம் பந்த் நடத்தக்கூடாது என்று ஆணை பிறப்பித்த உடனேயே முதல்வர் தி.மு.க. தொழிற்சங்கத் தலைவர்களையும் கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் அழைத்துப் பேசி, பந்த் வாபஸ் பெறப்பட்டிருக்க வேண்டும். அப்படி கௌரவமாக நடந்துகொள்ளாமல், உண்ணாவிரதத்துக்கு அறைகூவல் விடுத்ததன் மூலம், வழக்கு
நிலுவையில் உள்ள நிலையில் உச்சநீதிமன்றத்தை மீண்டும் ஒரு முறை அவமதித்திருக்கிறார் முதல்வர்.

“நீதிபதிகள் லஞ்ச-ஊழலுக்கு அப்பாற்பட்டவர்களல்ல!” என்று உச்சநீதிமன்றம் குறித்துக் கூறிய டி.ஆர்.பாலு, சென்னை உயர்நீதிமன்றம் பந்துக்குச் சாதமாகத் தீர்ப்பு அளித்ததை மறந்துவிட்டுப்
பேசியிருக்கிறார்!

“ஞாயிறு அன்று உச்சநீதிமன்ற அமர்வுக்கு அவசியம் என்ன?” என்று கேட்பதும் “சோனியாவும் பிரதிபா பாட்டீலும் இருக்கும்வரை
தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வராது” என்று கொக்கா¢ப்பதும் மத்திய அரசின் பெரும்பான்மை பலத்தைத் தி.மு.க. நிர்ணயிக்கிறது என்கிற ஒரே ¨தா¢யத்தில்தான்.

இதையெல்லாம் மத்திய அரசு மௌனமாகப் பொறுத்துக் கொண்டிருப்பதும் தி.மு.க.வை முறைத்துக்கொள்ள முடியாது என்கிற அச்சத்தில்தான்; பதவி ஆசையில்தான்.

‘மக்களுக்காகப் பதவியில் இருக்கிறோம்; அவர்களுக்கு உகந்ததைச் செய்ய வேண்டும்’ என்பதை மறந்துவிட்டு, தி.மு.க. தலைவர்
தவறிழைத்துவிட்டார். தாம் ராமபிரானை இழித்துப் பேசியதை மூடி மழுப்புவதற்காக ‘சேது சமுத்திரத் திட்டத்துக்கு முட்டுக்கட்டை முயற்சி’ என்று பிரச்னையை திசை திருப்பி, அந்தப் பொய்யை நிலைநாட்டும் ஆர்வத்தில் ஜனநாயக மரபுகளைக் காவுகொடுத்துவிட்டார்.

ஆட்சியிலிருப்பவர்கள் மன அடக்கத்துடன் செயல்பட வேண்டும் என்று கூறியிருப்பது தனிமனித உயர்வுக்காக மட்டுமல்ல; மன அடக்கமே
சீரீய சிந்தனைக்கு அடிகோலி நாட்டை உயர்த்த முடியும்

1 Comment:

IdlyVadai said...

கல்கி தலையங்கம் அப்டேட்