பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, October 08, 2007

அரைஞான் கயிறு மூலம் அட்ஜஸ்ட் செய்யபடும் ஜட்டி

எலாஸ்டிக் இல்லாத ஜட்டி என்ற பதிவிற்கு தொடர்புடைய இரண்டு கட்டுரைகள் - அழகிரியிடம் சமாதானம் பேசிய மாறன் சகோதரர்கள் ( குமுதம் ரிப்போட்டர் )
முடிந்தது யுத்தம் துவங்குது சமரசம்?! - ( ஜூவி கட்டுரை )

அழகிரியிடம் சமாதானம் பேசிய மாறன் சகோதரர்கள்
கட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல்!’ _ யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் இந்த வார்த்தைகள்தான் இப்போது மாறன் சகோதரர்களின் தாரக மந்திரம்!

தாத்தா கலைஞருடன் ஏற்பட்ட மனக்கசப்பைச் சரிசெய்ய, சித்தப்பா முரசொலி செல்வம், மற்றும் சித்தி செல்வி ஆகியோர் மூலமாக நடந்த ஆரம்ப கட்ட சமாதான முயற்சிகள் எந்தப் பலனையும் அளிக்காததால் கொஞ்சம் அப்செட் ஆனார்கள் மாறன் சகோதரர்கள். ஆனால் மிக விரைவிலேயே அதிலிருந்து மீண்டு, சில காய் நகர்த்தல்களைச் செய்து ஒரு காலத்தில் தங்கள் நிறுவனத்தையும், தங்களையும் வறுத்தெடுத்த விஜயகாந்தை சில பிரச்னைகளில் தங்களுக்குச் சாதகமாகப் பேச வைத்தார்கள்.

புதிதாக கட்சி தொடங்கியுள்ள சரக்குமாரை கலாநிதி மாறனே நேரடியாகச் சென்று சந்தித்துப் பேசி தொழில் ரீதியான சில விஷயங்களில் அவரது ஆதரவையும் பெற்றார். இதையடுத்து இந்த இருவர் சார்ந்த கட்சிகளின் செய்திகளுக்கு முக்கியத்துவம் தந்து தினகரனிலும் சன் டி.வி.யிலும் வெளியிடப்பட்டன.

அதே நேரத்தில் அ.தி.மு.க. தொடர்பான செய்திகள் குறிப்பாக ஜெயலலிதாவின் அறிக்கைகள் மற்றும் வைகோ தொடர்பான செய்திகளும் அதிக அளவில் இடம்பெற்றன. ‘எங்கே அடித்தால் தாத்தாவுக்கு வலிக்கும்’ என்று பேரன்கள் போட்ட கணக்கு கொஞ்சம் வேலை செய்யவே செய்தது. இவர்கள் எல்லாம் சேர்ந்து ஆட்சிக்கு எதிராக நாள்தோறும் பேசும் பேச்சுக்கள், அறிக்கைகள் இவ்வளவு முக்கியத்துவமாக வெளிவருவதைப் பார்த்து கலைஞரே எரிச்சலானதாக ஒரு தகவல் உண்டு.

இதே வேகத்தில் இன்னொரு காரியத்தைச் செய்யப் போய்த்தான் மாறன் சகோதரர்களுக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டது. விஜயகாந்த், சரத்குமார் மாதிரி, கேபிள் டி.வி. பிரச்னையிலும், டி.டி.ஹெச். அறிமுக பிரச்னையிலும் தங்களுக்கு ஆதரவாக ஜெயலலிதாவும் அறிக்கை வெளியிட்டால் ஒட்டுமொத்த பிரச்னையையே வேறுமாதிரி கொண்டுபோகலாம் என்று நினைத்து, சன் டி.வி. செய்திப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ராஜாவை விட்டு ஓ. பன்னீர் செல்வத்திடம் பேச வைத்தார்கள் மாறன் சகோதரர்கள். ‘ஆகட்டும் பார்க்கலாம். அம்மாவிடம் சொல்கிறேன்,’ என்கிற வார்த்தைகளைத் தவிர அப்போது எந்தப் பிடியும் தரவில்லை ஓ.பி.எஸ்.

ஆனால், அவர், ஜெயலலிதாவிடம் விஷயத்தைச் சொன்ன பிறகும் ஜெ. பாஸிடிவாக எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை என்பதை அறிந்து சோர்ந்துபோனார்கள் மாறன் சகோதரர்கள். இந்த நேரத்தில்தான் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மூலமாக டி.டி.ஹெச். விவகாரம் மேலும் விசுவரூபமெடுத்தது. குறிப்பாக மதுரை பகுதியில் இருந்த கேபிள் ஆபரேட்டர்கள் தாங்கள் பாதிக்கப்படுவதாகச் சொல்லி அழகிரியிடம் அடைக்கலம் ஆனார்கள்.

அடுத்தடுத்த நாட்களில் சன் நெட்வொர்க்கிற்கு சொந்தமான எஸ்.சி.வி. கேபிள் வயர்கள் ஆங்காங்கே வெட்டப்பட.... ஒரு கட்டத்தில் சன் குரூப் சானல்கள் எதுவுமே தெரியாத நிலை ஏற்பட்டது. விளம்பர வருமானங்களைத் தீர்மானிக்கும் டி.ஆர்.பி. ரேட்டிங்கிலும் இதன் விளைவுகள் எதிரொலித்ததாகச் சொல்கிறார்கள்.

இந்த நேரத்தில்தான் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு எஸ்.சி.வி. மாதிரி தானே ஒரு நிறுவனத்தைத் தொடங்கி கேபிள்தொழிலைச் செய்யப் போவதாக முடிவு செய்தார் அழகிரி. தங்களின் டி.டி.ஹெச். சேவை இன்னும் முழுமையாக அமலுக்கு வராத நிலையில் கேபிள் தொழிலும் கைவிட்டுப் போகும் நிலையை அழகிரியின் முடிவு உண்டாக்கும் என்பதால் மீண்டும் முரசொலி செல்வம் மூலமாகவே கலைஞரிடம் இப்பிரச்னையைக் கொண்டு சென்றார்கள் மாறன் சகோதரர்கள்.

சமாதானம் என்ற அளவில் இல்லாவிட்டாலும், ஒரே குடும்பத்திற்குள் கேபிள் தொழிலிலும் போட்டிகளை உருவாக்குவது நல்லதல்ல; போனால் போகட்டும் என்று நினைத்த கலைஞர், புதிதாக கேபிள் தொழில் செய்யும் எண்ணத்தைக் கைவிடும்படி அழகிரியை கேட்டுக் கொண்டார். எப்போதாவது கலைஞரிடம் கடும் கோபத்தை வெளியிடும் அழகிரி, அந்த நேரத்திலும் தனது கோபத்தைக் காட்டியதாகச் சொல்கிறார்கள், இந்த விவகாரத்தை அருகில் இருந்து கவனித்தவர்கள்.

‘‘அம்மா பெயரில் (தயாளு அம்மாள்) இருந்த சன் டி.வி.யின் பங்குகளை நம்மிடம் இருந்து வாங்கும்போதே அவர்கள் (மாறன் சகோதரர்கள்) நம்மை நன்றாக ஏமாற்றிவிட்டார்கள். அப்போதே நான் சொன்னதை நீங்கள் கேட்கவில்லை, நம்பவில்லை. இப்போதும் எதையோ சொல்லி உங்களை நம்ப வைக்கிறார்கள். நீங்களும் அதற்கு உடன்பட்டு விட்டு, என்னை இம்சிக்கிறீர்களே...’’ என்று சீறிய அழகிரி, தன் எண்ணத்தில் பிடிவாதமாகவே இருந்திருக்கிறார். அதன்பிறகு நீண்டநேர வாக்குவாதத்திற்குப் பிறகே கலைஞரின் சமாதானத்தை ஏற்று தன் முடிவை மாற்றிக் கொண்டிருக்கிறார் அழகிரி.

ஆனால் கோபம் மட்டும் குறையவில்லை. மேலும் சில நாட்கள் நீடித்த இந்தக் கோபம், கலைஞர் உண்ணாவிரதம் இருந்த அன்றுதான் கொஞ்சம் தணிந்ததாம்! அன்றைய தினம் கலைஞரை போனில் தொடர்பு கொண்ட அழகிரி, அவரது உடல்நிலை பற்றி விசாரித்துவிட்டு, தன்னுடைய மதுரை வீட்டில் இருந்தபடியே அவரும் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்.

இந்த சாந்தமான சூழ்நிலையைத்தான் மாறன் சகோதரர்கள் தங்களின் அடுத்த முயற்சிக்கு பயன்படுத்திக் கொண்டார்கள். அழகிரியின் கோபம் தணிந்துவிட்டதா என்பதை அவருக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்துத் தெரிந்து கொண்டு அவர்கள் செய்த காரியம்தான் நாம் முதல் பத்தியில் சொன்னது.

சர்ச்சைக்குரிய சர்வே முடிவுகளை தினகரனில் வெளியிட்டது... தயாநிதி பதவி இழந்தது... அடுத்தடுத்த சமாதான முயற்சிகள் தோல்வியில் முடிந்தது.. என எல்லா சம்பவங்களின் பின்னணி மற்றும் தொடர் நிகழ்வுகளின் மையமாக அழகிரியே இருந்து வந்திருக்கிறார். இப்போது தென் மாவட்டங்களில் சன் சேனல்கள் பிரச்னையின்றி ஒளிபரப்பாவதும் அழகிரியின் கைகளில்தான் இருகிறது என்பதை உணர்ந்து, அழகிரியிடமே சமாதானமாகப் போக முடிவெடுத்தார்கள் மாறன் சகோதரர்கள். மிகக் கடினமான இந்த முயற்சிக்கு இவர்கள் தேர்ந்தெடுத்தது எஸ்.சி.வி.யின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் விட்டல்!

இவர்தான் அண்மையில் மதுரைக்குச் சென்று அழகிரியைச் சந்தித்து மாறன் சகோதரர்களின் சார்பில் பல விஷயங்களை மனம்விட்டுப் பேசியதாகச் சொல்கிறார்கள். முழுக்க முழுக்க தொழில் சார்ந்த விஷயங்கள் மட்டுமே பேசப்பட்ட இந்த சந்திப்பின் முடிவில் அழகிரி ஓரளவுக்குச் சமாதானம் அடைந்ததாகவும் சொல்கிறார்கள்.

‘இந்தச் சந்திப்பின் போதே... அழகிரியின் ஆரம்ப கட்ட கோபத்திற்குக் காரணமான சன் டி.வி. பங்குகள் விற்பனை விஷயத்தில் ஏற்பட்டதாகச் சொல்லப்படும் சில ஏற்றத் தாழ்வுகளையும் உரியமுறையில் சரி செய்தபிறகுதான் இந்தச் சமாதானத்தை இவர்களால் எட்ட முடிந்தது’ என்ற தகவலும் சன் டி.வி. வட்டாரத்தில் இருந்தே வருகிறது. இந்த இறுதியான கணக்கு வழக்குகள் விவகாரத்தை கலைஞர் மற்றும் ஸ்டாலின் கவனத்திற்கு அழகிரி கொண்டு சென்று அவர்களின் ஒப்புதலையும் பெற்றார் என்றும் சொல்கிறார்கள்.

மொத்தத்தில் தொழில் ரீதியிலாக நடந்து முடிந்துள்ள இந்த சமாதானம் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டது. மாறன் சகோதரர்கள் தி.மு.க.வை மையமாக வைத்தோ, அல்லது தி.மு.க.வுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ அரசியலுக்குள் வரக்கூடாது என்ற தங்களின் முந்தைய எண்ணத்தில் கலைஞர், அழகிரி, ஸ்டாலின் மூவருமே உறுதியாக இருக்கிறார்கள் என்பதை மீண்டும் ஒரு முறை அழுத்தமாகச் சொல்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்!
முடிந்தது யுத்தம் துவங்குது சமரசம்?!

‘பனிப்போர் மெதுவாக முடிகிறதோ..? பனிமலை மெள்ள உருகுகிறதோ..? தி.மு.க. தரப்புக்கும் ‘சன்’ நிர்வாகத்துக்கும் இடையிலான ‘தாத்தா-பேரன்’ யுத்தம் உக்கிரம் குறைந்து ஏதோவொரு உடன்பாடு பிறக்கிறதோ..?!’

-இதுதான் விவரமான வட்டாரங்களில் இப்போது சூடான விவாதப் பொருள்.

நடப்பதையெல்லாம் நெருக்கமாகக் கவனிக்கக் கூடியவர்கள், பனிமலையின் முனையாகத் தெரியும் சில காட்சிகளை ஆதாரமாகச் சுட்டிக்காட்டத் துவங்கியிருக்கிறார்கள்.

வராத செய்திகள்!

அக்டோபர் 1-ம் தேதி முதல்வர் கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தார். அந்த சமயத்தில் சில விஷமிகள் ஆக்ரோஷம் கொண்டு, சென்னை அண்ணாசாலையில் உள்ள ஓர் உணவுவிடுதி மீது தாக்குதல் நடத்தினர். செய்தியை கவர் செய்த மீடியாக்களில் ‘சன்’ நிருபரும், கேமராமேனும்கூட இருந்தார்கள். சேதக் காட்சிகளைப் பதிவு செய்தார்கள். அதேதினம், முற்பகல் வரை... அரசு பஸ்கள் ஓடாமல் டெப்போவுக்குள்ளேயே முடக்கி வைக்கப்பட்டிருந்தன. அப்படி அவை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிற காட்சியை எடுக்கப்போன பத்திரிகையாளர்களில் சிலரை, ஆவேசக் கும்பல் ஒன்று மிரட்டித் தாக்கியது. அப்போதும் ‘சன்’ நிருபரும் கேமராமேனும் அந்தக் காட்சிகளையெல்லாம் பதிவு செய்தார்கள்.

ஆனால், மேற்சொன்ன காட்சிகள் இரண்டும் ‘சன்’னில் வெளியாகவில்லை!

பிரதமர் கையால் விருது!

சிறந்த சேவை செய்யும் 14 இந்திய நாளிதழ்களுக்கு விருது அறிவித்தது ஒரு தனியார் அமைப்பு. இந்த விருதை பிரதமர் மன்மோகன் சிங்கே தனது கையால் கடந்த 3-ம் தேதி அளித்தார். அதில் ‘தினகரன்’ நாளிதழுக்கும் பிரதமரே விருது அளித்துக் கெளரவித்தார்!

‘தாத்தா-பேரன்’ யுத்தத்துக்கான அடிப்படையே ‘தினகரன்’ வெளியிட்ட வாரிசு சர்வேதான். எனவே, அழகிரி உள்ளிட்ட தி.மு.க. தரப்பின் வேகமான தலைகள் அத்தனையும் ‘தினகரன்’ மீதுதான் தீவிர கோபத்தில் இருந்தன. அந்த நாளிதழுக்குப் பிரதமர் கையால் விருது கிடைக்கப்போவது தி.மு.க. தரப்புக்கு நிச்சயம் முன்கூட்டி தெரிந்தே இருக்கும். தி.மு.க. தரப்பு நினைத்திருந்தால், அந்த விருதை பிரதமர் வழங்காமல் வேறு யாரை விட்டாவது கொடுக்கும்படி செய்திருக்க முடியும். இது தெரிந்து, அனுமதிக்கப்பட்டே நடந்தது’’ என்பதே டெல்லி வட்டாரத்தில் பேச்சாக இருக்கிறது.

டீ.டி.ஹெச்-சுக்கும் நோ குறுக்கீடு!

பனிமலையின் முனைகள் இப்படி, இன்னொரு பெருமலையும் சத்தமின்றி அசைந்துகொடுத்தது பற்றி டெல்லி வட்டாரங்கள் பேசவே செய்கின்றன.

‘‘யுத்தம் அவர்களுக்குள் வெடித்ததுமே, கேபிள் தொழி லுக்கு இடையூறு தொடங்கியது. கம்பிவடத் தொழிலை நிம்மதியாக நடத்த முடியாது என்பதால்தான், அவசரமாக டீ.டி.ஹெச். தொடர்பான அத்தனை வேலைகளையும் ‘சன்’ தரப்பு முடுக்கிவிட்டது. ஆனால், மத்திய அரசின் தகவல் தொடர்புத் துறை மூலம் அதற்கும் இடையூறுகள் ஏற்படக்கூடும் என்ற அச்சம் இருந்தது. அந்த அச்சமும் இப்போது விலகிவிட்டதாகவே தெரிகிறது’’ என்கிறார்கள் டெல்லி பத்திரிகையாளர்கள்.

டீ.டி.ஹெச். தொழில்நுட்பத்துக்கு மாறுவதற்கான எல்லா தேவைகளையும் ஒரு வருடத்துக்கும் முன்பாகவே மத்திய அரசுக்குப் பூர்த்தி செய்து கொடுத்து விட்டது சன் தரப்பு. இடையில் ஒரு செயற்கைக் கோள் ஏவுவதில் சிக்கல்

வந்துதான் இந்த அளவுக்குத் தாமதமானது. அதற்குள் குடும்ப மோதல் வெடித்து விட்டது. இருந்தாலும், மத்தியத் தகவல் தொடர்புத் துறையின் மூலம் இடைஞ்சல் ஏற்படுத்த சிலர் நினைத்திருந்தார்கள். அந்த எண்ணமும்கூட இப்போது பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது.

சில விஷயங்கள் குறித்து சம்பிரதாயமாக ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அதற்கு சன் தரப்பிலிருந்து விளக்கம் பெறப்பட்டு... அதோடு விஷயம் இனிதே முடிந்துபோனதாகவும் சொல்பவர்கள் இருக்கிறார்கள்.

அழகிரியின் அமைதி...

கேபிள் ஆபரேட்டர்களின் வேலை நிறுத்தத்தின்போது, அது மிக உக்கிரமாக எதிரொலித்தது- மதுரை மற்றும் தென் மாவட்டப் பகுதிகளில்தான். கேபிள் அறுப்பு, எம்.எஸ்.ஓ. அலுவலகங்கள் கைப்பற்றுதல், ‘சன்’ சேனல்களை மட்டும் காட்டாமல் மற்ற சேனல்களை காட்டுதல் என்று பலவகையிலும் பலம் காட்டப்பட்டது. டீ.டி.ஹெச். இணைப்பின் முகவராகப் பதிவு செய்த சிலரை, காவல்நிலைங்களுக்கு அழைத்து ‘அன்பு எச்சரிக்கை’ விட்ட சம்பவங்களும் அரங்கேறின.

திடீரென மதுரை அமைதிப் பிரதேசம் ஆகிவிட்டது! ‘சுமங்கலி கேபிள் விஷன்’ இணைப்புகள் எந்த இடையூறும் இன்றி தெளிவாகச் செயல்படுகின்றன. பழைய ஆபரேட்டர்களே எப்போதும்போல் பயமின்றி செயல்படத் துவங்கியுள்ளனர். மிரட்டல் கும்பல்கள் காணாமல் போய்விட்டன.

அழகிரியிடம் போய்ச் சிலர், ‘அண்ணே! அடுத்து என்ன செய்யணும்?’ என்று ஆர்வத்தோடு கேட்டபோது... ‘எதுவும் செய்யாம இருந்தா... அதுவே போதும்! அவங்க தொழிலை அவங்க பார்க்கட்டும். நம்ம அரசியலை நாம கவனிப்போம்’ என்று சாந்தமுகத்தோடு சொல்லி அனுப்பியதாகவும், வியப்பூட்டும் விவரங்கள் மதுரை பக்கமிருந்து கசிகின்றன.

ஆமை வேக அரசு கார்ப்பரேஷன்!

கோட்டையில் அதிகாரிகள் கூடிய தென்ன..! முதல்வரே முன்னின்று ஆலோசித்ததென்ன..! ‘பூமிக்கு அடியில் மட்டும்தான் இனி கேபிள்கள் போகும். விருப்பமுள்ள கம்பெனிகள் மாநகராட்சிக்குப் பணம் கட்டி உடனே இடம் பிடியுங்கள்’ என்று சென்னை மாநகர மேயர் மா.சுப்ரமணியமே அறிக்கை விட்டதென்ன..! ஏதோ, நாலைந்து வாரத்திலேயே ‘அரசு கேபிள் கார்ப்பரேஷன்’ இயங்கத் தொடங்கி... அரசுக்கு பெருவாரியாக வருவாய் ஈட்டிக்கொடுத்துவிடும் என்பதுபோல்தான் துவக்கத்தில் காட்சிகள் தெரிந்தன. சன் தரப்பு டீ.டி.ஹெச். தொழில்நுட்பம் தொடர்பாக விளம்பரம் செய்த அதேதினம், ‘அரசும் இதேபோல் டீ.டி.ஹெச். துவங்க பரிசீலிக்கும்’ என்று தலைமைச் செயலாளரே போட்டி அறிவிப்பு செய்ததுகூட நடந்தது!

ஆனால், ‘பொங்கலுக்குத்தான் புது கார்ப்பரேஷன்’ என்றும், ‘இல்லையில்லை... அடுத்த வருடம் தமிழ்ப் புத்தாண்டுக்குத்தான்’ என்றும் சொல்லி... மெதுவாகக் காற்றை இறக்கும் விதமாக செய்திகள் வெளியாக ஆரம்பித்துள்ளன. ‘அரசு கேபிள் கார்ப்பரேஷனை’ நம்பி, ‘சுமங்கலி கேபிள் விஷனுக்கு’ எதிராக அறிக்கை விட்டு, பிரஸ்மீட் நடத்தி... முதல்வருக்கு நன்றி அறிவிப்பு மாநாடும் முடித்துவிட்ட நிலையில்.... சகிலன் அணியைச் சேர்ந்த கேபிள் ஆபரேட்டர்கள் குழம்பித்தான் போனார்கள்.

அமைச்சர் கொடுத்த ‘க்ளூ’!

சகிலன் தலைமையிலான கேபிள் ஆபரேட்டர் சங்கத்தினர், சில நாட்களுக்கு முன்பு கோவையில் ஒரு கூட்டம் நடத்தினார்கள். அதற்கு லோக்கல் அமைச்சரான பொங்கலூர் பழனிச்சாமியையும் அழைத்திருந்தார்கள். சகிலன் பேசும்போது, ‘‘ மாறன் சகோதரர்கள் டீ.டி.ஹெச். என்ற தொழிலில் நுழைந்து கேபிள் ஆபரேட்டர்களுக்குப் பெரும் துரோகம் செய்துவிட்டார்கள். நிறைய நம்பிக் கொண்டிருந்த சன் டி.வி-யும் நம் வயிற்றில் அடித்துவிட்டது. அவர்களின் ஏகபோக ராஜ்ஜியத்துக்கு முடிவு கட்ட அரசாங்கமே நமக்குத் துணை நிற்கிறது’’ என்று இடியாக முழங்கிவிட்டு உட்கார்ந்தார். அடுத்துப் பேசிய அமைச்சரோ, ‘‘யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசக்கூடாது. விருப்பு-வெறுப்பு இல்லாமல் நடுநிலையாக நாம் நடக்கணும். தயாநிதி மாறன் எனக்கும் நண்பர்தான். நீங்களும் நண்பர்கள்தான். யாருக்கும் பாதக மில்லாமல் வேண்டியதைச் செய்யலாம்’’ என்றாராம்.

இது எங்கோ உதைக்கிற மாதிரி இருக்கவே, கேபிள் ஆபரேட்டர்கள் தமிழ்நாடு முழுக்க ஒரு அவசர சர்வே நடத்தினார்களாம். மாறன் சகோதரர்களுக்கும் தி.மு.க-வுக்கும் விவகாரம் வெடித்த பிறகு, ‘சுமங்கலி கேபிள் விஷன்’ நிறுவனத்தின் இணைப்புகளை ஏற்கெனவே வாங்கி நடத்திக்கொண்டிருந்த தி.மு.க. பெரிய புள்ளிகள் மாறன் சகோதரர்களோடு தி.மு.க. தரப்புக்குப் பிரச்னை ஏற்பட்ட பின்னால் யாரெல்லாம் அதைவிட்டு விலகினார்கள் என்பதுதான் சர்வேயின் முக்கிய அம்சம். வந்த ரிசல்ட் உதைப்பை கூட்டிவிட்டதாம்.

ஈரோடு மாவட்டத்துப் பெரிய புள்ளி நீங்கலாக... வடமாவட்டங்கள், நாமக்கல் உள்பட பல்வேறு பகுதிகளிலும் சுமங்கலி கேபிள் விஷன் மீதுதான் தி.மு.க. புள்ளிகள் அதிக பற்றோடு இருப்பது தெரிந்ததாம். ‘பிசினஸ் வேறு... அரசியல் வேறு... எப்போ வருமோ அரசு கார்ப்பரேஷன்? அதை நம்பி இந்தத் தொடர்பை அவசரப்பட்டு துண்டிக்க முடியாது’ என்பதே இந்த தி.மு.க. புள்ளிகளின் கருத்தாக இருப்பதையும் கண்டுபிடித்தார்களாம் சர்வே குழுவினர். அதையடுத்து அவசரமாகக் கோட்டைக்குப் படையெடுத்தார்கள் டீ.டி.ஹெச். தொழில் நுட்பத்தை வேகமாக எதிர்க்கும் கேபிள் ஆபரேட்டர்கள்.

‘ஐயா, இதை நம்பலாமா?’

‘அரசு கேபிள் கார்ப்பரேஷன்’ தலைவராக அறிவிக்கப்பட்டு, இதற்காகவே டெல்லியிலிருந்து அவசரமாக மாற்றல் பெற்று வரவழைக்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரியான பிரிஜேஷ்வர் சிங்கிடம் போனார்களாம், இந்த கேபிள் ஆபரேட்டர்கள். ‘ஐயா, அரசை நம்பி உள்ளதையும் பகைத்துக் கொண்டோம். எப்பதான் வரும் நம்ம கேபிள் கார்ப்பரேஷன்?’ என்று கேட்டார்களாம். அவரும், ‘அதென்ன அத்தனை சாதாரண விஷயமா? அதற்கான அதி நவீன கருவிகளை சப்ளை செய்யச் சொல்லி, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு குளோபல் டெண்டர் விடப் போகிறோம். சீல் வைத்த டெண்டர்கள் வந்து சேர்ந்து, அதைப் பிரித்துப் பார்க்கவே அறுபதிலிருந்து தொண்ணூறு நாள் ஆகிவிடும். டெண்டர் விட்டு முடித்ததும் வேகமாக எல்லாம் முடியும்’ என்றாராம்.

சகிலன் தரப்பினரும் விடாமல், ‘ஐயா, இதை நம்பலாமா? சரி... நடக்கிறபடி நடக்கும். அதுவரை நாங்கள் என்ன செய்வது? அரசு டெண்டர் ஓகே ஆகிற வரையில் ‘ஹாத்வே’-காரர்களிடம் ஒரு ஒப்பந்தம் போடுங்கள். அவர்கள் மூலமாக சப்-கான்ட்ராக்ட்டில் ‘அரசு கேபிள்’ இணைப்புகளை நடத்துங்கள். எங்களுக்கும் வேலை கொடுங்கள். நமக்கான ஆட்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு வேலையும் கொடுத்துவிட்டால்... நமக்கே நமக்கென்று கருவிகளும் இணைப்பும் செட் ஆகிறபோது... சுலபமாக அதற்கு மாறிக் கொள்ளலாம், அல்லவா?’ என்று கேட்டார்களாம்.

‘கேட்டுச் சொல்கிறேன்’ என்று அனுப்பி வைத்த பிரிஜேஷ்வர் சிங், இரண்டு நாட்களுக்கு முன் தந்த பதில்- ‘அதெல்லாம் சரிப்பட்டு வராது! அரசேதான் முழுமூச்சாக கேபிள் கார்ப்பரேஷனை தொடங்கி நடத்தும். அதில் எந்த மாற்றமும் இல்லை’ என்பதுதானாம். கூடவே, ‘நீங்கள் எந்தவகையிலும் நம்பிக்கை இழக்க வேண்டாம். கிண்டி தொழிற்பேட்டையில்தான் அரசு கேபிள் கார்ப்பரேஷனுக்கான தலைமை ஆபரேட்டிங் அலுவலகம் அமையப் போகிறது. சென்னை, தஞ்சை, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் இதற்கு கிளை அலுவலகங்களும் அமைக்க முடிவாகிவிட்டது. பி.எஸ்.என்.எல். ஏற்கெனவே போட்டபடி இருக்கும் ‘ஆப்டிகல் ஃபைபர்’ தொழில்நுட்ப கேபிளைப் பயன்படுத்தி, உயர்தரமான ஒளிபரப்பைத் தருவது பற்றியும் அரசு கார்ப்பரேஷன் யோசித்து வருகிறது! இதை தமிழ்நாடு முழுவதிலும் உள்ள உங்கள் சங்கத்தினருக்குச் சொல்லி உற்சாகமூட்டுங்கள்’ என்றாராம்.

ஏன்... ஏன்... ஏன்?

‘இவை எல்லாமே, தொடர்பில்லாத வெவ்வேறு சம்பவங்களா... அல்லது ஏதோ ஒரு ரகசிய நூலிழையில் கோக்கப்பட்ட மணிகளா? இந்த மாற்றங்களெல்லாம் ஏன்... ஏன்?’ என்ற கேள்விகளுக்கு, விசாரிக்கும்போது வருகிற பதில்கள் யோசிக்க வைக்கின்றன-

விஜயகாந்த், சரத்குமார் ஆகியோரின் அறிக்கைகள் மற்றும் கட்சி நடவடிக்கைளுக்கு சன் டிவி. தரத்துவங்கிய முக்கியத்துவம், அவர்களுக்கு நல்ல ‘மைலேஜ்’ கொடுத்திருப்பதாகவே உளவு போலீஸ் அரசுக்கு அறிக்கை கொடுத்திருக்கிறது. போதாக்குறைக்கு வைகோவின் செய்திகளுக்குக் கிடைத்துள்ள முக்கியத்துவம், ம.தி.மு.க-வினரை சன் டி.வி. பக்கம் ரொம்பவே ஈர்த்திருக்கிறது. இதெல்லாம் தாண்டி, கடந்த சில வாரங்களாக... அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் சன் டி.வி. பற்றியே பேச்சாக இருக்கிறது. ஜெயலலிதாவின் அறிக்கை தயாரானதும், ‘ஏம்ப்பா... சன் டி.வி-க்கு அனுப்பியாச்சா?’ என்று தலைமைக் கழக நிர்வாகிகள் உரக்கக் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்வதையும் உளவு போலீஸ், அரசின் காதில் போட்டிருக்கிறது.

மொத்தத்தில், ‘‘அரசியல் பேதங்களைத் தாண்டிய வலுவான ஒரு கூட்டணியை சன் டி.வி. உருவாக்கத் தொடங்கிவிட்டது’’ என்பதே உளவுத் துறை தந்த செய்திகளின் சாராம்சம்.

இதுதான் காரணம்?!

சேது சமுத்திரத் திட்டம் தொடங்கி, முதல்வரின் ராமர் பேச்சுக்கான எதிர்ப்புகள் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய பல விஷயங்களுக்கு, தி.மு.க. தரப்பின் எதிர்வாதங்கள் மக்கள் மத்தியில் அழுத்தமாகப் போய்ச் சேரவில்லை என்று அறிவாலய வட்டாரத்துக்குத் தகவல் வந்ததாம். ‘முன்பெல்லாம் சன் செய்தியை தி.மு.க-வின் சார்புச் செய்தியாக நினைத்ததுபோல, இப்போது கலைஞர் தொலைகாட்சியின் செய்திகளை மக்கள் பார்க்கிறார்கள். அதனால், தி.மு.க. தரப்பின் தற்காப்பு வாதங்களைக் கலைஞர் தொலைகாட்சி மூலம் என்னதான் உரக்க எடுத்துவைத்தாலும், அவற்றை நடுநிலைப் பார்வையாக மக்கள் எடுத்துக் கொள்வதில்லை’ என்ற கருத்தும் வந்து சேர்ந்ததாம்.

மொத்தத்தில், ‘‘தி.மு.க. தலைமையோடு மோதல் வந்தபிறகு, சன் டி.வி-தான் நடுநிலை சேனல் என்ற எண்ணம் மக்களுக்கு வந்து விட்டது. அதில் விஜயகாந்த், சரத்குமார், ஜெயலலிதா போன்றவர்களின் செய்திகள் ஹைலைட் ஆகிக்கொண்டே வருவது நல்லதல்ல’’ என்ற முடிவுக்கே தி.மு.க. தரப்பு வரவேண்டி இருந்ததாம். இங்கிருந்துதான், சமாதானத்துக்கான விதை போடப்பட்டது என்று பெரிய வட்டாரத்தில் சொல்லத் துவங்கியிருக்கிறார்கள்.

அதற்கும் மேலே..!

இதையெல்லாம் தாண்டி, ‘‘சன் தரப்பினருக்குத் தொடர்ந்து பிரச்னைகளை ஏற்படுத்தி வந்தால்... ஒரு மீடியாவாக விஜயகாந்த் போன்றவர்களை ஆதரிப்பதோடு இல்லாமல், அவர்களையே கேடயமாக்கிக்கொண்டு, தக்க நேரம் வரும்போது தி.மு.க-வுக்கு எதிராக நேரடியாகவே சன் தரப்பு பகிரங்கமான யுத்தத்தில் இறங்கக்கூடும்’’ என்றொரு தகவலும் ஆளுங்கட்சிக்கு வந்து சேர்ந்ததாம். அதை உறுதிப்படுத்தும் வகையில், ‘‘எங்கள் செய்திகளை உரிய முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுவதற்கு நன்றி’’ என்று வைகோ, விஜயகாந்த் மற்றும் சரத்குமார் ஆகியோர் நேரடியாக சன் தரப்பிடம் பேச ஆரம்பித்துவிட்டதாகவும் செய்திகள் ஆளுங்கட்சியை எட்டியதாம்.

மத்தியில் குழப்பம், விரைவில் தேர்தல் என்றெல்லாம் சவால் மேகங்கள் கறுக்கத் துவங்கிவிட்ட நிலையில்... சன் டி.வி-யை தங்களுக்கு எதிர்ப்பு நிலையிலிருந்து மாற்றுவதே புத்திசாலித்தனம் என்பதே ஆளுங்கட்சித் தரப்பு எடுத்த சமீபத்து முடிவாம்!

களமிறங்கினார் ஆற்காட்டார்..!

மோதல் வெடித்த முதல் நிமிடத்தி லிருந்தே, தி.மு.க. தலைமைக்கும் சன் தரப்புக்கும் இடையிலான சாதக-பாதக பேச்சுக்கள் அனைத்தையும் நடத்திக் கொண்டிருப்பவர் அமைச்சர் ஆற்காடு வீராசாமிதான். ஆற்காட்டார்தான் இத்தனை பிரச்னைகளையும் ஊதி விட்டவர் என்ற சன் தரப்பு வருத்தத்தை வெளியிட்ட சமயத்தில்கூட, ‘நான் ஒரு கருவி மட்டுமே’ என்று அவர்கள் காதுக்குப் போய்ச் சேருகிற மாதிரி விளக்கங்கள் அளித்துக் கொண்டிருந்தார் ஆற்காட் டார். பெங்களூருவில் உள்ள தனது மகள் செல்வியின் இல்லத்துக்கு முதல்வர் விசிட் அடித்த சமயத்தில், அங்கே அவர் தயாநிதி மாறனைச் சந்திப்பார் என்று பரபரப்பாகப் பேச்சு வர... அதற்கான ஏற்பாடுகளை கவனிப்பது ஆற்காட்டார்தான் என்றெல்லாம் கூறப்பட்டது.

இந்நிலையில், முதல்கட்டமாக அழகிரியிடம் பேசி அவரை ‘ஆஃப்’ செய்யும் வேலைகள் ஆற்காட்டார் மூலம் துவங்கிவிட்டதாகவும்... ‘‘எந்த காலத்திலும் அவர்கள் அரசியல் பக்கம் வரக்கூடாது என்ற உறுதிமொழி முதலில் தேவை! கூடவே, அவர்கள் ஏற்கெனவே நாம் வைத்த டிமாண்ட்டில் எந்தளவுக்கு நிறைவேற்றுவார்கள் என்பதையும் பேசுங்கள். சம்மதப்பட்டால் மேற்கொண்டு யோசிக்கலாம்’’ என்று அழகிரியிடமிருந்து சிக்னல் வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. முதல்வர் மகள் செல்வி போன்றவர்களும் இந்த முதல் சிக்னலை பிடிமானமாக்கி, மளமளவென்று முன்னேற ஆரம்பித் துள்ளதாகவும்.... ‘‘உடைந்த உறவு இனி சேராது. அதேசமயம், தொல்லைகள் எதுவும் இருக்காது. இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லோருக்கும் சவுக்கியமே’’ என்று தி.மு.க. பெரிய இடமும் இறங்கி வந்திருப்பதாகவே பேசப்படுகிறது.

‘‘பேச்சுவார்த்தை வெவ்வேறு தளங்களில் மாறிமாறி நடக்கிறது. அதற்கு இடைப்பட்ட காலத்தில் தெரியும் சமிக்ஞைகளைத்தான் வெளி உலகம் பார்க்கிறது’’ என்கிறார்கள், மீடியா வட்டாரத்தைச் சேர்ந்த விவரமான சிலர்!

0 Comments: