பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, October 05, 2007

சோ பேட்டி - குமுதம்

சேது சமுத்திரத் திட்டம், மதப் பிரச்னையாகி பந்த், போராட்டம் என்று பூதாகரமாகியுள்ள நிலையில், துக்ளக் ஆசிரியர் சோவைச் சந்தித்தோம். தனக்கேயுரிய பாணியில் தனது வாதங்களை அழுத்தமாக எடுத்துவைத்தார் அவர்.

பாரதிய ஜனதாவின் வேதாந்தி ‘தலையைக் கொண்டு வா’ என்கிறார். பதிலுக்கு தி.மு.க. வன்முறையில் இறங்குகிறது. இரண்டு தரப்பினரையும் நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

‘‘இரண்டுமே இரண்டு காட்டுமிராண்டித்தனம். வேதாந்தி கொடுத்த மறுப்பு இன்னமும் மோசம். கடவுள் இல்லை என்று பேசுகிறவர்கள் கழுத்தையாவது, நாக்கையாவது வெட்டவேண்டுமென்று பகவத் கீதையில் சொல்லியிருப்பதாகக் கூறுகிறார். அந்த மாதிரி கீதையில் எங்கும் சொல்லப்படவில்லை. பகவத்கீதையில் இல்லாத ஒரு வக்ரமான விஷயத்தை இப்படி அவர் சொல்வதே கூட இந்து மதத்திற்கு ஒரு இன்சல்ட்!

வேதாந்தியின் பேச்சை ஆட்சேபித்து பா.ஜ.க. அலுவலகங்களைத் தாக்க முனைந்த தி.மு.க.வினர் செயலும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தங்களது தொண்டர்களைத் தூண்டிவிடுகிற மாதிரி அமைச்சர் வீராசாமி பேசியது, அதற்குப்பின் தி.மு.க. அமைச்சர் மற்றும் முக்கியஸ்தர்கள் ரெளடிக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கித் தாக்குதலை நடத்தியது, போலீஸ் அதை வேடிக்கை பார்த்தது, இவை எல்லாமே ‘அரசு ஆதரவோடு நடந்த செயல்’ என்று தெளிவாகக் காட்டுகின்றன.’’

‘ராமர் பாலம் இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் அதை இடிக்கக்கூடாது என்கிறீர்கள். நானூறு வருட புராதனச் சின்னமான பாபர் மசூதியை இடிக்கிறீர்கள்’ என்று எதிர்த்தரப்பு கேட்பதில் நியாயமிருக்கிறதே?

‘‘பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு நான் கடும் கண்டனம் தெரிவித்தேன். ஆனால் அந்த இடிப்பிற்கும், இப்போது ராமர் பாலத்தை இடிக்கத் திட்டமிடுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. பாபர் மசூதியை இடித்தது ஒரு அராஜக கூட்டம். ஆனால் ராமர் பாலத்தை இடிக்க முனைகிறது மத்திய அரசு. அந்தக் கூட்டம் செய்தது குற்றம். இந்த அரசு செய்ய முனைவது அரசியல் சட்டத்திற்கு விரோதமான, மதச் சார்பின்மைக்கு எதி ரான செயல்!’’

உங்களைப் பொறுத்தவரை சேது சமுத்திரத் திட்டம் வேண்டுமா, வேண்டாமா?

‘‘சேது சமுத்திரத் திட்டத்தால் பெரிய பொருளாதார நன்மைகள் விளையாது என்பதைப் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். ‘கால்வாய் போன்ற அந்த வழியே பெரிய கப்பல் வராது. அதற்குத் தேவையான ஆழமும் அகலமும் இருக்காது. டீசல் நிறையத் தேவைப்படும். இரு பக்கங்களிலும் மண்சரிந்து கொண்டே இருக்கும். அதனால் மண்ணை வாரும் வேலை மீண்டும் மீண்டும் நடக்கும்’ என்று விவரமறிந்தவர்கள் ஏற்கெனவே பலமுறை கூறி விட்டார்கள். இதற்கு மாற்றாக சில வழிகளைச் சொல்கிறார்கள். சுப்ரீம் கோர்ட்டிலேயே தனது பிரமாணப் பத்திரத்தில் மாற்று வழிகளை ஆராய்கிறோம் என்று அரசு சொல்லியும்கூட தி.மு.க. அமைச்சர் பாலுவும், அவரைத் தொடர்ந்து கலைஞரும் மாற்று வழி சாத்தியமில்லை என்றும், சேது பாலத்தை இடிக்கும் வழிதான் நிறைவேற்றப்படும் என்றும் கூறுவது நீதிமன்ற அவமதிப்பு ஆகும்!’’

‘ராமர் என்பதே ஒரு கற்பனைக் கதாபாத்திரமாக இருக்கும்போது அவர் எப்படி பாலம் கட்டமுடியும்’ என்று முதல்வர் கிண்டலடிக்கிறாரே?

‘‘ராமர் விஷ்ணுவின் அவதாரம் என்பது ஆத்திகர்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கை தனக்குத் தேவையில்லை என்பது அவரவர் இஷ்டம். ஆனால் அரசே முனைந்து, ‘இல்லை’ என்கிற வாதத்தை மக்கள் மீது திணிப்பது என்பது மதச்சார்பின்மைக்கு விரோதமான செயல்.

வெவ்வேறு நம்பிக்கைகள் கொண்ட கோடானு கோடி மக்கள் இந்த தேசம் முழுவதும் இருக்கும்போது, ஒரு நம்பிக்கையை மட்டும் பழித்துப் பேசுவேன் என்பது கோழைத்தனத்துடன் கூடிய துவேஷம் தவிர வேறொன்றுமில்லை.’’

‘நம் மதத்தைப் பற்றித்தானே நான் பேசமுடியும்’ என்கிறாரே கலைஞர்?

‘‘அவர் மனித இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் மனித இனத்தின் எல்லா நம்பிக்கைகளைப் பற்றிப் பேசினால் அது பகுத்தறிவு ஆகும். அவர் முதல்வராக இருப்பது இந்துக்களுக்கு மட்டுமல்ல... சொல்லப்போனால் மைனாரிட்டி மக்களுக்காகத்தான் பதவியிலிருப்பதாகச் சொல்கிறார். அப்போது மற்ற மதங்களும் தேவை. ஏனெனில் அது ஓட்டு சமாச்சாரம். பழித்துப் பேச மட்டும் இந்து மதம் தேவை. ஏனென்றால் பெரும்பாலான இந்துக்கள் மதரீதியாக வாக்களிப்பதில்லை. சரி, இவ்வளவு தூரம் தன்னை இந்து என்று உரிமை கொண்டாடுபவர், ‘எனக்கு கிருத்திகை விரதத்தில் நம்பிக்கை கிடையாது. அன்றுதான் நிறைய சாப்பிடுவேன். ரம்ஜான் நோன்பு அப்படிப்பட்டதில்லை. அது உடலையும், உள்ளத்தையும் தூய்மை யாக்கும்’ என்று சொல்வானேன்?

அடுத்தது ஒரு மதத்தைச் சார்ந்தவர், அந்த மதத்தின் நம்பிக்கைகளை எவ்வளவு வேண்டுமானாலும் தாழ்த்தி, அந்த மதத்தினர் மனதைப் புண்படுத்தலாம் என்று சட்டத்தில் இல்லை. மதநம்பிக்கை கொண்டவர்கள் மனங்கள் புண்படும்படி பேசுவது இந்தியன் பீனல் கோடு 295_ஏ, 298 ஆகிய பிரிவுகளின்கீழ் தண்டனைக்குரிய குற்றம். இந்தப் பிரிவுகளில் அந்தந்த மதங்களைச் சார்ந்தவர்கள், அந்தந்த மத நம்பிக்கைகளை திட்டிக்கொள்ளலாம் என்ற விதிவிலக்கு அளிக்கவில்லை!’’

அறிவியல் வளர்ச்சி இவ்வளவு தூரம் விஸ்வரூபமெடுத்து வரும் நிலையில், இப்படி புராணக் கதைகளைக் காட்டி வளர்ச்சித் திட்டங் களைத் தடுப்பது முறையா?

‘‘எவ்வளவுதான் ஒரு சமூகம் முன்னேறினாலும், தங்களுடைய கலாச்சாரத்தையோ, தொன்றுதொட்டு வரும் நம்பிக்கைகளையோ அழித்துவிட முயலக்கூடாது.

இன்னொரு விஷயம். கண்ணகி சிலையைப் போக்குவரத்து இடைஞ்சல் என்று ஜெயலலிதா அகற்றினார். அவர் சொன்ன காரணம் சரியா தவறா என்ற பிரச்னைக்குப் போகவில்லை. ஆனால் அதே இடத்தில் அந்தச் சிலையை வைத்தே தீருவேன் என்று கலைஞர் பிடிவாதம் பிடித்தது என்ன நம்பிக்கை? பகுத்தறிவு நம்பிக்கையா? மூடநம்பிக்கையா? அல்லது அரசியல் நம்பிக்கையா? சிலப்பதிகார நம்பிக்கையாக இருக்கமுடியாது. ஏனென்றால் சிலப்பதிகாரத்திலேயே ராமரைப்பற்றி கூறப்பட்டுள்ளது என்பது சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.

சேது சமுத்திரத் திட்டத்தைப் பொறுத்தவரை அதன் பொருளாதார பலன்கள் சந்தேகத்திற்குரியது. மாற்று வழிகளையெல்லாம் விட்டுவிட்டு ராமர் பாலத்தை இடித்துவிட்டுச் செல்வோம் என்று சொன்னால், அப்படிச் சொல்பவர்கள் சேது சமுத்திரத் திட்டத்தைவிட ராமர்பாலம் இடிக்கப்படுவதையே பெரிதாக விரும்புகிறார்கள் என்று அர்த்தமாகும்.’’

கருணாநிதியையும் பகைத்துக்கொள்ளக்கூடாது. மத்திய அரசும் கவிழக்கூடாது... என்ற இக்கட்டான நிலையில் மன்மோகன்சிங் அரசு குழம்புகிறதா?

‘‘குழம்பவில்லை. தெளிவாகத்தான் இருக்கிறார்கள். அதாவது தெளிவாகச் சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார்கள். ஒருபுறம் ஆதரவுக் கட்சியான தி.மு.க. மற்றொருபுறம் வடஇந்தியாவில் ஏற்படக்கூடிய ஓட்டு பாதிப்பு. இதற்கிடையே மத்தியஅரசு தத்தளிக் கிறது.’’

ராமர் கட்டிய அணையை அவரே அழித்துவிட்டதாக வால்மீகி ராமாயணத் தில் வருவதாக அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாசாரியார் சொல்லியிருக்கிறாரே?

‘‘அவர் பெரிய பண்டிதர். மேதாவி. அவர் நினைவிலிருந்து கூறியிருக்கிறாரோ என்னவோ? நான் வால்மீகி ராமாயண புஸ்தகத்தை வைத்துக்கொண்டு பேசுகிறேன். (பக்கத்தைக் காட்டுகிறார்) அவர் சொல்வது மாதிரி ராமர், தான் கட்டியதை தானே அழித்ததாக வால்மீகி ராமாயணத்தில் எங்கும் சொல்லவில்லை. இதற்கு மாறாக இலங்கையிலிருந்து புஷ்பக விமானத்தில் பறந்து வருகிறபோது வானத்திலிருந்து சீதைக்கு பல இடங்களைக் காட்டும் ராமர், ‘இதோ இந்த அணையைப் பார். இதன்மூலம்தான் நாங்கள் சமுத்திரத்தைக் கடந்து இலங்கை வந்தோம்’ என்று காட்டி மகிழ்கிறார். அது புனிதமானது என்றும் ராமரே சொல்கிறார். அந்தப் புனிதத்தை உடைக்கத்தான் இப்போது பகுத்தறிவு முயற்சி நடக்கிறது.’’

மத்திய அரசை நிலைகுலைய வைக்க தற்போது எந்த ஆயுதமும் இல்லாத நிலையில் முன்பு அயோத்தி பிரச்னையை எடுத்துக்கொண்டதுபோல இப்போது ராமர் பாலத்தை எடுத்துக்கொண்டுள்ளதா பி.ஜே.பி.?

‘‘அப்படி அவர்கள் கையில் எடுத்துக்கொள்ளும்படி வசதியான ஒரு ஆயுதத்தைக் கொடுப்பானேன்? ராமர் சேது இடிப்பு கிடையாது என்று மத்திய அரசு அறிவித்துவிட்டால் இந்த ஆயுதம் பயனற்றுப் போய் விடுமே!’’.

நன்றி: குமுதம்

5 Comments:

ஜயராமன் said...

இட்லி வடை அய்யா,

இன்னும் இந்த வார துக்ளக்கில் ஜோசியர் வரதன், காளிமுத்து விளம்பர பக்கங்கள்தான் பாக்கி.

அவற்றை எப்போது உங்கள் பதிவில் எதிர்பார்க்கலாம்?

நன்றி

ஜயராமன் said...

இட்லி வடை சார்,

நான் போட்ட என் முந்திய பின்னூட்டம் வேறு இடுகையில் போட வேண்டியது. மாற்றி இந்த இடுகையில் வந்துவிட்டது. அதனால் என்ன, நீங்களே எடுத்து சரியான இடத்தில் பிட் செய்துகொண்டு விடுங்கள். ப்ளீஸ்,

;-)))

Anonymous said...

//ராமர் சேது இடிப்பு கிடையாது என்று மத்திய அரசு அறிவித்துவிட்டால் இந்த ஆயுதம் பயனற்றுப் போய் விடுமே!’’.
//

அஸ்கு புஸ்கு..
அப்புறம் வாங்கிய கமிஷனை திருப்பி கொடுத்துவிட்டால், அந்த பணத்தை சோ கொடுப்பாரா?

Anonymous said...

//நான் போட்ட என் முந்திய பின்னூட்டம் வேறு இடுகையில் போட வேண்டியது. மாற்றி இந்த இடுகையில் வந்துவிட்டது. /

அதை சரியான இடுகையில் பாலா என்ற சரியான பெயரில் வெளியிடும்படி அமுக கேட்டுகொள்கிறது

ஜெயக்குமார் said...

//வெவ்வேறு நம்பிக்கைகள் கொண்ட கோடானு கோடி மக்கள் இந்த தேசம் முழுவதும் இருக்கும்போது, ஒரு நம்பிக்கையை மட்டும் பழித்துப் பேசுவேன் என்பது கோழைத்தனத்துடன் கூடிய துவேஷம் தவிர வேறொன்றுமில்லை.’’

அதாவது யாரை அடிச்சா திருப்பி அடிக்க மாட்டானோ அவன மட்டும்தான் நாங்க அடிப்போம்..

ராமர்பாலமோ அல்லது ஆதாம் பாலமோ அல்லது மனல் மேடோ எங்களுக்கு வேண்டியது அதை தோண்டும் காண்ட்ராக்டும் அதன் மூலம் கிடைக்கபோகும் வருமானமும்.. அதை தடுக்க நினைக்கும் எந்த மூடர்களையும் நாங்கள் விடுவதாயில்லை.. அவ்வளவே..

நல்லவேளை ஜெயலலிதா ஆட்சியில் இல்லை. இருந்திருந்தால் இந்நேரம் அங்கு கப்பல் வெள்ளோட்டம் ஓடியிருக்கும்.. உச்சநீதிமன்றமாவது, மக்கள் எதிர்ப்பாவது.. கருனாநிதியாயிருந்ததால் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்.. அவ்வளவே..