பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, October 21, 2007

வைகோ பேட்டி...

வைகோ பேட்டி அதிமுக கூட்டணி, மூன்றாம் அணி, பிறந்த நாள் கொண்டாட்டம்...

அ.தி.மு.க.,வுடன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீங்கள் கொண்டுள்ள கூட்டணி எப்படி உள்ளது?

இரண்டு கட்சியினரிடமும் பரஸ்பரம் மதிப் பும், மரியாதையும், நல்லெண்ணமும் உள்ளது. அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா முதல் தொண்டர்கள் வரை எல்லா மட்டத்திலும் நெருக்கம் உள்ளது. பரஸ்பர அன்பும் மதிப்பும் கட்சிக்கு வலுவூட்டுகிறது. எங்களது கட்சியின் தனித்தன்மையை சமரசம் செய்து கொள்ளாமல் கூட்டணி நீடித்து வருகிறது.

நீங்கள் இடம்பெற்றுள்ள மூன்றாவது அணி எந்த நிலையில் உள்ளது?

மூன்றாவது அணியில் தற்போது செயல்பாடுகள் இல்லை. இந்த அணியைப் பொறுத்தமட்டில் அ.தி.மு.க.,வின் நிலை தான் ம.தி.மு.க.,வின் நிலை.

காங்கிரஸ் அல்லது பா.ஜ., போன்ற தேசிய கட்சிகளின் கூட்டணி இல்லாமல் எப்படி பார்லிமென்ட் தேர்தலை சந்திப்பீர்கள்?

மத்தியில் ஒரு கட்சி ஆட்சி என்ற நிலை இனிமேல் எந்தக் காலத்திலும் இருக்காது. மாநிலக் கட்சிகளின் ஆட்சி தான் அமையும். அல்லது மாநிலக் கட்சிகளின் தயவில் தான் மத்தியில் ஆட்சி அமையும். நாடு முழுவதும் செல்வாக்கு பெற்ற தேசிய கட்சி எதுவுமே இல்லை. தேசிய கட்சிகளின் செல்வாக்கு குறைந்து கொண்டே வருகிறது. எனவே, தேசிய கட்சிகளை சார்ந்து தான் அரசியல் உத்தியை வகுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

மத்திய அரசு கவிழும் என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே?

இப்போதும் சொல்கிறேன். அடுத்த ஆண்டு மத்தியில் தேர்தல் வரும். குஜராத், இமாச்சல பிரதேச தேர்தலுக்காக மத்திய அரசு கவிழாது என்ற தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர். காங்கிரசுக்கு ஐந்தாண்டுகள் ஆதரவு அளித்துவிட்டு மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும் கம்யூனிஸ்ட்டுகளால் தேர்தலை சந்திக்க முடியாது. எனவே, இடையிலேயே ஆட்சியை கவிழ்த்து விடுவார்கள்.

காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தியை முன்னிலைப்படுத்துவது குறித்து?

ராகுல் காந்தியை முன்னிலைப்படுத்தி உத்தரப்பிரதேசத்தில் படுதோல்வி அடைந் தார்கள். இப்போது கட்சியில் ராகுலை முன்னிலைப்படுத்துவதால் காங்கிரஸ் கட்சிக்கு எந்த முன்னேற்றமும் ஏற்படாது.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னியரசு கைது செய்யப்பட்டு ஒரே நாளில் விடுதலை செய்யப்பட்டிருப்பது குறித்து?


சுனாமி நிவாரணப் பொருட்களை அவர் அனுப்பியுள்ளார். அவர் மீது தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவர் பிணையில் விடுதலை ஆவதற்கு போலீசார் ஒத்துழைப்பு அளித்தது மகிழ்ச்சி. ஆனால், இதே நிலைப்பாட்டை ம.தி.மு.க., அமைப்புச் செயலர் கைது செய்யப்பட்ட போது போலீசார் எடுக்கவில்லை. தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து ஆறு மாதங்கள் சிறையில் அடைத்தது பழிவாங்கும் போக்கு.

இந்தியாவில் இருப்பதைப் போல் தமிழர் களுக்கு இரண்டு மாநிலங்கள் ஒதுக்கி இலங்கைப் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்ற கருத்து உள்ளதே?

இது வெறும் கானல் நீர். தமிழர்களுக்கு உரிய உரிமைகளை 50 ஆண்டுகளாக கொடுக்காமல் இலங்கை அரசு மறுத்து வருகிறது. எனவே, இத்தகைய அதிகாரப் பகிர்வு சாத்தியம் இல்லை. தமிழ் இனத்தை அழிக்கும் முயற்சியில் இலங்கை இனவாத அரசு ஈடுபட்டு வருகிறது. ஐ.நா., மனித உரிமைக் குழு அலுவலகம் அமைக்கக் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசுக்கு மத்திய அரசு மறைமுகமாக உதவிகளை செய்து வருகிறது. இது தமிழர்களுக்கு செய்யும் பச்சை துரோகம். மத்திய அரசில் இடம் பெற்றுள்ள கட்சிகள் இந்த துரோகத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். குறிப்பாக முதல்வர் கருணாநிதி பொறுப்பேற்க வேண்டும்.

நீங்கள் பிறந்த நாள் கொண்டாடுவதில்லை ஏன்?

எனக்கு பிறந்த நாள் கொண்டாடும் ஆடம் பரத்தில் விருப்பம் இல்லை. கட்சியின் பிறந்த நாள் தான் கொண்டாடப்பட வேண்டியது. கட்சி தான் நிரந்தரம். நான் நிரந்தரம் இல்லை.

பார்லிமென்ட், சட்டசபை தேர்தல்களில் போட்டியிடாமல் ஒதுங்குவது ஏன்?

பார்லிமென்ட் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டு கட்சி எல்லைகளை மறந்து மக்களுக்காக சிறப்பாக பணியாற்றி உள்ளேன். அனைவரும் மெச்சுகிற அளவுக்கு என்னால் பணியாற்ற முடியும் என்று நிரூபித்துள்ளேன். பார்லிமென்ட் தேர்தலில் குறைந்த இடங்கள் கிடைத்ததால் போட்டியிடவில்லை. சட்டசபை தேர்தலில் வெளியில் இருந்தே பணியாற்றலாம் என்ற எண்ணத்தில் போட்டியிடவில்லை. நான் போட்டியிடாதது அனைவருக்கும் வருத்தம் தான். அதற்காக பதவிக்கே வர மாட்டேன் என்று சொல்லவில்லை. மக்கள் எனக்கு கொடுக்கும் கடமையை செய்வேன். அடுத்த தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளின் கருத்துப்படி முடிவெடுக்கப்படும்.
( நன்றி: தினமலர் )

0 Comments: