பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, October 17, 2007

சேது சமுத்திர திட்டம் - ரஜினி<->கலைஞர் வேண்டுகோள்

2005 மற்றும் 2006-ம் ஆண்டுகளுக்கான சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கு தமிழக அரசு விருது வழங்கும் விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நேற்று மாலை நடந்தது. இதில் "சேது சமுத்திர திட்டம் பற்றி வட இந்திய தலைவர்களுடன் கருணாநிதி பேசி, நல்ல தீர்வு காண வேண்டும்" - ரஜினி

ராமர் என்ற பெயரை நான் வெறுப்பவன் அல்ல, இந்த உண்மையை ரஜினிகாந்த் சாமியார்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும்" - கலைஞர்

முழு விபரம் கீழே....


ரஜினி பேச்சு:

ஒரு இந்திய குடிமகன் என்ற முறையில் நான் இங்கே ஒரு விஷயத்தை பேச விரும்புகிறேன். யாரும் தப்பாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

சேது சமுத்திர திட்டம் பற்றி பலவிதமான கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அதனால் லாபமாக இருக்குமா, ஆழம் இருக்குமா? என்றெல்லாம் கேட்கிறார்கள். `செண்டிமெண்ட்' ஆக ஒரு விஷயம் பூதாகரமாக பேசப்படுகிறது. அதன் `சீரியஸ்னஸ்' இன்னும் தமிழ்நாட்டுக்கு தெரியவில்லை. வட மாநிலங்களில் உள்ளவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

இந்த விஷயத்தை ஊதி, நெருப்பு மூட்டி, குளிர்காயப்பார்க்கிறார்கள். நமக்கு காரியம் நடக்கணும். வட இந்தியாவில் உள்ள தலைவர்கள் எல்லோரும் கலைஞரின் நண்பர்கள்தான். அவர்களிடம் பேசி, கலைஞர் இதற்கு ஒரு நல்ல தீர்வுகாண வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்கலைஞர் பதில் வேண்டுகோள்என்னுடைய அன்புக்கும் பாசத்திற்கும் உரிய தம்பி ரஜினிகாந்த் ஒரு வேண்டுகோளையும் இந்த விழாவிலே வைத்திருக்கிறார். வேண்டுகோள் வைக்கப்பட வேண்டிய இடங்கள் என்பது எது என்று அவருக்கு தெரிந்திருந்தாலுங் கூட இந்த வழியாக அந்த வேண்டுகோள் போய்ச் சேர வேண்டிய இடத்திற்கு போய் சேரட்டும், போய் சேரும் என்ற நம்பிக்கையோடு அவர் இந்த வேண்டுகோளை வைத்திருக்கிறார் என்றே நான் கருதுகிறேன்.

நம்முடைய செய்தித்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி இங்கே பேசும்போது, கலை கலைக்காக என்ற உரையை மாற்றி கலை மக்களுக்காக, நல்ல காரியங்களுக்காக, சில கொள்கைகளை பரப்புவதற்காக என்ற நிலையை திராவிட இயக்கம்தான் உருவாக்கிற்று என்று சொன்னார். இது அப்படியே பதிவாகுமேயானால், நான் இதை மறுக்கவில்லை - மறுக்க முடியாது. ஏனென்றால் அதிலே உண்மையும் இருக்கிறது. ஆனால் அரசியல் கருத்துக்களை, நாட்டுக்குத் தேவையான கருத்துக்களை மக்களுக்குத் தேவையான கருத்துக்களை, சமுதாயத்திற்கு தேவையான கருத்துக்களை, திராவிட இயக்கத்திற்கு முன்பு கூட கலை உலகத்திலே பலர் புகுத்தி இருக்கிறார்கள்.

முன்பே எங்களுக்கு வழிகாட்டியவர்கள், காங்கிரஸ் இயக்கத்திலே இருந்தார்கள், அவர்கள் நாட்டுப்பற்றை படங்களின் மூலமாக வளர்த்தார்கள் என்ற உண்மையை நாம் மறந்துவிட முடியாது. ஏனென்றால் வரலாறு உண்மையை மறைக்க பயன்படுமேயானால், சேது சமுத்திர திட்டமாக ஆகிவிடும்.

சரித்திரம் அல்ல

இதிகாசத்தையும் வரலாற்றையும் தனித்தனியாக பிரித்து பார்க்க வேண்டும். இதிகாசம் வேறு, வரலாறு வேறு, இதிகாசம் என்பது நாமாக செய்து கொள்கின்ற கற்பனை - சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் - அதாவது ராஜாஜி, இந்திய இதிகாசங்களை அவருடைய நடையிலே எழுதுவதில் வல்லவர். அவருக்கு ராஜ ரிஷி என்ற பெயரும் உண்டு. மூதறிஞர் என்றும் நாம் அவரை அழைத்துக் கொண்டிருக்கிறோம்.

அப்படிப்பட்ட ராஜாஜி ``சக்கரவர்த்தி திருமகன்'' என்ற ஒரு தொடர் ஓவியத்தை பத்திரிகையிலே எழுதினார். அது புத்தகமாக வந்திருக்கிறது. இன்றைக்கும் அந்த புத்தகத்தை வாங்கிப்பார்த்தால் அவர் அதில் எழுதிய முன்னுரையிலே என்ன குறிப்பிட்டிருக்கிறார் என்றால் ராமாயணம் என்பது ஒரு இதிகாசமே தவிர சரித்திரம் அல்ல. நான் இதிலே அடையாளம் காட்டுகின்ற ராமன் கடவுள் அவதாரம் அல்ல. ராமன் மனிதன்தான். ஒரு ராஜகுமாரன்தான், நல்லவன், நல்ல காரியங்களை செய்தவன், அவனிடத்திலே தெய்வீக அம்சம் என்று சொல்லப்படுகின்ற சில விஷயங்கள் இருந்தாலும் கூட ராமர் செய்ததை கடவுளின் வேலை என்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று நான் அல்ல, நம்முடைய அன்புக்கும், மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய மூதறிஞர் ராஜாஜியே எழுதியிருக்கிறார்.

புத்தகம் இருக்கிறது, தம்பி ரஜினி அவர்களுக்கு சந்தேகம் தேவையில்லை, இருக்காது. நான் சொன்னால் அவர் நம்புவார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. ஒரு வேளை நம்பாவிட்டால் காலையிலே அந்த புத்தகத்தை பக்கத்திலேதான் வீடு, கொடுப்பதற்கு தயாராக இருக்கிறேன். எழுதியதை பார்க்கலாம்.

எப்படி பெரியாருடைய கருத்துகள் முதலிலே சந்தேகத்திற்கு உரியவைகளாக இருந்து இன்றைய தினம் ரஜினியாலே ஏற்றுக் கொள்ளப்பட்டு, பரிமாறப்பட்ட பத்து பண்டங்களிலே எனக்கு பிடித்த பண்டங்களை நான் சுவைப்பேன், சுவைக்கிறேன் என்று குறிப்பிட்டாரோ, அதைப்போல் ராஜாஜி படைத்த பண்டங்களில் எங்களுக்கு பிடித்த பண்டம் ராமன் ஒரு ராஜகுமாரனே தவிர அவதார புருஷன் அல்ல, என்று ராஜாஜி குறிப்பிட்டதை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமா? வேண்டாமா?.

வெள்ளைக்காரன் காலத்தில்...

நாங்கள் அனைவரும் இந்த இயக்கத்தை ஒரு அறிவியக்கமாக நீண்ட காலமாக வளர்த்து ஆளாக்கி இன்றைக்கு பல வெற்றிகளை பெற்றிருக்கிறோம் சமுதாயத்துறையிலே என்றால் அது மிகையாகாது. அப்படிப்பட்ட ஒரு இயக்கத்தின் சார்பாக இன்னும் கூட சொல்கிறேன்.

அவர் குறிப்பிட்டார் சேது சமுத்திர திட்ட பிரச்சினையிலே இந்தியாவிலே இருக்கின்ற தலைவர்களோடு அமர்ந்து பேசி ஒரு நல்ல முடிவுக்கு வாருங்கள் என்று கேட்டார். இது உள்ளபடியே சந்தேகம் எழுந்தால் போகலாம். யார் இதை முதன் முதலாக ஆரம்பித்தார்கள் என்பதை என்னுடைய அருமை தம்பி ரஜினிகாந்துக்கு நான் தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். அவருக்கும் தெரியும்.

இந்த ராமர் பிரச்சினையை யார் முதன் முதலாக எழுப்பினார்கள் என்றால் நாம் அல்ல. இது ராமர் கட்டிய பாலத்தை இடிக்கிறார்கள் என்று சொல்லி, இந்தத் திட்டத்தையே குலைப்பதற்காக சில பேர் இந்தத் திட்டம் நமக்கு வரவிடக்கூடாது என்பதற்காக, தமிழ்நாட்டுக்கு வரக்கூடாது, வந்தால் தமிழ்நாடு வளர்ந்து விடும், பொருளாதாரத் துறையில் எல்லா துறையிலும் வளர்ந்து விடும். தமிழ்நாடு என்ற மாநிலம் வளர்ந்தால், மற்ற மாநிலங்கள் எல்லாம் குறிப்பாக வடமாநிலங்களுக்கு இதனால் ஏதோ ஆபத்து ஏற்படும், என்று தவறாகக் கருதி இதைக் கெடுப்பதற்காக சில யோசனைகளைச் செய்து இதற்கு ராமரைக்கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்.

கிருஷ்ணா நதிநீர்

ராமர் இடத்திலே எங்களுக்கு எந்த விதமான விரோதமும் கிடையாது. ராமருக்கும் எங்களுக்கும் இடையில் தனிப்பட்ட விரோதம் கிடையாது. ராமரை நாங்கள் வெறுப்பவர்கள் அல்ல. எந்த அவதார புருஷர்களாக இருந்தாலும், அவர்கள் அவதார புருஷர்களாக இருந்து நன்மைகளைச் செய்திருந்தால், அந்த நன்மைகளைப் பாராட்டக் கூடியவர்கள் தான் நாங்கள்.

ராமர் என்பதற்காக ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று கூறமாட்டோம். கிருஷ்ணா என்பதற்காக கிருஷ்ணா நதிநீரை வேண்டாமென்று சொல்லி விட்டோமா? கிருஷ்ணா நதிநீர் எங்களுக்கு வேண்டும், அந்த திட்டத்தை நிறைவேற்றி முடியுங்கள் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனும், மு.க.ஸ்டாலினும் தூது போய் விட்டு வந்தார்கள்.

ஆந்திராவிலே இருக்கின்ற சாய்பாபா அவர்களிடத்தில் சென்று கிருஷ்ணா நிதி திட்டத்தை நிறைவேற்றிக் கொடுங்கள் என்று சொல்லி, இங்கேயுள்ள அமைச்சர்களை அங்கே போகச் சொல்லி, அவரும் நிறைவேற்றுவதாக சொல்லி என்னுடைய இல்லத்திற்கே வந்து நிறைவேற்றித் தருகிறேன், பயப்படாதீர்கள் என்று கூறி விட்டு போய் நிறைவேற்றி கொடுத்திருக்கிறார் என்று சொன்னால், நான் அவரிடத்திலே கிருஷ்ணா என்று திட்டத்தின் பெயர் இருக்க கூடாது என்று சொன்னேனா? நீங்கள் கிருஷ்ணா என்று மாத்திரம் அல்ல, ராம கிருஷ்ணா திட்டம் என்றே வைத்துக்கொள்ளுங்கள். ராமரையும் சேர்த்து.

சேது சமுத்திர திட்டம்

இப்போது என்ன சொன்னேன்? என்ன சொல்கிறேன்? சேது சமுத்திரத்திட்டம் என்பதில் சேது என்கின்ற பெயர் உங்களுக்குப் பிடிக்காவிட்டால், சேது மன்னர்களின் பெயரால் அமைந்த ஒரு பகுதி அது, சேது மன்னர்கள் ஆண்ட பகுதி அது, நம்முடைய கமலுக்கு நன்றாக தெரியும். அவருடைய பரமக்குடி எல்லாம் அந்தச் சேது பூமியைச் சேர்ந்த இடம் ஆகும். அப்படிப்பட்ட சேது பூமிக்கு மன்னர்களாக இருந்தவர்கள் பெயரால் தான் சேது சமுத்திரம் என்ற அந்தப் பெயர் உருவாயிற்று. அந்தச் சேது திட்டத்தைத் தான் நாம் நிறைவேற்ற வேண்டுமென்று சொல்கிறோமே அல்லாமல், அந்தப் பெயர் வைக்கக்கூடாது என்று சொல்லவில்லை.

ஆயிரம் வருடமோ, இரண்டாயிரம் வருடமோ, வெள்ளைக்காரன் காலத்திலோ அல்லது அதற்குப் பிறகோ அதற்கு ராமர் பாலம் என்று பெயர் இருந்திருக்குமேயானால், நான் நிச்சயமாகச் சொல்கிறேன். உறுதியாகச் சொல்கிறேன். அந்தத்திட்டத்தை அந்தப்பெயரால் நிறைவேற்றுங்கள் என்று சொல்லியிருப்பேனே அல்லாமல், அந்தப்பெயர் வேண்டாம் என்று சொல்கின்ற முட்டாள் அல்ல நான் என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.

ரஜினி சொல்ல வேண்டும்

ஆக, எங்களுக்கு சேது சமுத்திரத்திட்டம் தேவை. அந்தத் திட்டத்தின் மூலமாக தமிழகத்திற்கு வளம் தேவை. வாழ்வுத்தேவை. தமிழர்கள் வெளிநாட்டோடு தொடர்பு கொள்ள வசதிகள் வாய்ப்புகள் தேவை. அதற்காகத் தான் அந்த திட்டத்தை நாம் கோருகிறோம்.

அந்த திட்டம் நிறைவேறுவதற்கு எனக்கு ஒரு யோசனையை தம்பி ரஜினி சொன்னார். என்னை விட அதிகமாக வட நாட்டிலே சுற்றுபயணம் செய்யக்கூடிய வாய்ப்பும், வசதியும் படைத்தவர் அவர். அவர் நினைத்தால் இமயமலை வரை சென்று சாமியார்களையெல்லாம் சந்திக்கக்கூடிய வாய்ப்பு அவருக்கு உண்டு.

எனவே நீங்கள் அங்கே செல்லும் இதைப்பற்றி ஒரு வார்த்தை சொல்லுங்கள். கருணாநிதி நாத்திகம் தான். அது வேறு விஷயம். ஆனால் கருணாநிதி ராமர் என்ற அந்தப்பெயரை வெறுப்பவரல்ல. அவருடைய தலைவர் பெரியாருக்கு பெயரே ராமசாமி. ஆகவே ராமர் என்ற பெயரை வெறுப்பவரல்ல என்று இந்த உண்மையை ரஜினி போன்றவர்கள் அவர்களுடைய செல்வாக்கோடு அங்குள்ள சாமியார்களுக்கெல்லாம் சொல்லி, அந்தச் சாமியார்கள் திருந்தினால் நாடு திருந்தும் என்பதை இந்த விழாவினுடைய செய்தியாக நான் தம்பி ரஜினிக்கு எடுத்து சொல்ல விரும்புகிறேன்.

வருங்காலம் பற்றி

எனக்கொரு வேண்டுகோளை விடுத்தார்கள். நான் அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். இது அண்ணன், தம்பிக்குள் ஒரு கருத்து பரிமாற்றம். இரண்டு பேரும் சேர்ந்து கருத்துகளை பரிமாறிக் கொண்டிருக்கிறோம். நான் பரிமாறியதை அவர் மனதிலே இருத்தி அவரும் சேர்ந்து இந்தத் திட்டத்திற்கு உறுதுணையாக இதனால் ஏற்படக்கூடிய நன்மைகளை, இதிலே மதம் குறுக்கிடக்கூடாது, சாதி குறுக்கிடக்கூடாது, கடவுள் தன்மை குறுக்கிடக்கூடாது. இதில் இதிகாசங்கள் குறுக்கிடக்கூடாது.

இதிலே குறுக்கிட வேண்டியதெல்லாம். நம்முடைய நல்வாழ்வு, எதிர்காலம், வருங்காலம் என்பதைப் பற்றி தான்நாம் சிந்திக்க வேண்டும் என்ற அந்த உண்மையை மக்களுக்கு எடுத்துக்கூறக் கூடிய அந்தப் பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும். எனவே நான் இப்போது இங்கே அவருக்கு விருது வழங்கவில்லை. இந்த வேண்டுகோளை வழங்கி விடை பெறுகிறேன்.

4 Comments:

ஹரன்பிரசன்னா said...

// எனவே நான் இப்போது இங்கே அவருக்கு விருது வழங்கவில்லை. இந்த வேண்டுகோளை வழங்கி விடை பெறுகிறேன்.
//

இது என்ன? எனக்கு புரியவில்லை. உங்களுக்குப் புரிகிறதா?

Anonymous said...

ஐயா இட்லி வடை இந்த ரஜினிகாந்து பேசியதன் மொழி பெயர்ப்பை இங்கு போட முடியுமா? மனுசன் என்னதான் சொல்ல வருகிறார்?

IdlyVadai said...

அனானி, ஹரன்பிரசன்னா ரஜினி, கலைஞர் பேசியது கவிதை மாதிரி இரண்டு முறை படிக்கனும், இல்லாட்டி புரியாது :-)

கலைஞர் கைத்தடி said...

/சேது சமுத்திர திட்டம் பற்றி பலவிதமான கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அதனால் லாபமாக இருக்குமா, ஆழம் இருக்குமா? என்றெல்லாம் கேட்கிறார்கள். /


/ இதிலே மதம் குறுக்கிடக்கூடாது, சாதி குறுக்கிடக்கூடாது, கடவுள் தன்மை குறுக்கிடக்கூடாது. இதில் இதிகாசங்கள் குறுக்கிடக்கூடாது. /

உப்பு இருக்கா என்றால் பருப்பு இருக்கு என்கிறார் கருணாநிதி. இவர் என்ன ராமர் போல பொறியாளர்ரா?@#*_@#$@$ *(*!^ *ினி- உனக்கு இருக்குதுடா #$@!$!$


சேது ஆதம் ராமர் பால இடிப்புத் சமுத்திர திட்டம், பெரியார், அண்ணா,ராஜாஜி, எம் ஜி ஆர், மற்றும் சாய்பாபா, ரஜினி, சாமியார், ஆகியோர் ஆசியுடன் நிரைவேறும். இந்த நாடகத்தில் கலைஞர்கள் குறுக்கிடக்கூடாது. ()த்துடா.