பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, October 09, 2007

(கர்)நாடகத்தில் நடந்த காட்சிகள்மீண்டும் பாரதிய ஜனதா-மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசை அமைக்க திடீர் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அது பாஜக மேலிடத்தின் மறுப்பால் நிறைவேறாமல் போனது.

நேற்று நடந்த காட்சிகளின் தொகுப்பு.


முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக பாஜக தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை ஆளுநர் ராமேஷ்வர் தாக்குரைச் சந்தித்து கடிதம் அளித்தனர்.

இதைத் தொடர்ந்து குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்தது. இந்நிலையில் திங்கள்கிழமை காலை காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் பிருதிவிராஜ் சவாணும், அதைத் தொடர்ந்து கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்களும் தனித் தனியாக ஆளுநரைச் சந்தித்துப் பேசினர்.

அப்போது குமாரசாமி அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று ஆளுநரை அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

இந்நிலையில் மதச்சார்பற்ற ஜனதா தளம் நம்பிக்கை மோசடி செய்துவிட்டதாகக் கூறி, பாஜக பிரசாரத்தை தும்கூரில் திங்கள்கிழமை துவக்கியது.

முன்னதாக பாஜக தலைவர்கள் எதியூரப்பா, அனந்தகுமார், ஈஸ்வரப்பா, சதானந்த கெüடா உள்பட முன்னணித் தலைவர்கள் தும்கூர் சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசுவாமியை சந்தித்து ஆசி பெற்றனர். அப்போது சுவாமிகள் அதிகார மாற்றம் ஏன் ஏற்படவில்லை என்று எதியூரப்பாவிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதை அறிந்த குமாரசாமி, பாஜக தலைமையில் ஆட்சி அமைய மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் ஆதரவை அளிக்க தீர்மானித்துள்ளார்.

இதையடுத்து தும்கூரில் உள்ள எதியூரப்பாவுக்குத் தகவல் பறந்தது. அவர் உடனடியாக ஹெலிகாப்டரில் பெங்களூர் திரும்பினார். அதைத் தொடர்ந்து மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர்கள் எதியூரப்பாவைச் சந்தித்து குமாரசாமியின் விருப்பத்தைத் தெரிவித்துள்ளனர்.

"திங்கள்கிழமை மாலை ஆளுநரைச் சந்தித்து குமாரசாமி தனது அமைச்சரவை ராஜிநாமா கடிதத்தை கொடுப்பார். அதைத் தொடர்ந்து பாஜக தலைமையில் புதிய கூட்டணி அரசு அமைய தனது கட்சியின் ஆதரவுக் கடிதத்தை கொடுப்பார்' என்று அந்தப் பேச்சுவார்த்தையின்போது எதியூரப்பாவுக்குத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் அனைவரும் ஆளுநர் மாளிகைக்குச் செல்ல இரு வோல்வோ பஸ்கள் முதல்வரின் அலுவலக இல்லமான "கிருஷ்ணா' முன் கொண்டுவந்து நிறுத்தப்பட்டன.

இந்த மாற்றங்கள் குறித்து எதியூரப்பா, பாஜக தலைவர் ராஜ்நாத்சிங்குடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.

ஆனால் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் எந்தவித உறவும் இனி வேண்டாம் என்று ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக கூறிவிட்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து எதியூரப்பா பேச்சுவார்த்தையை கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இந்தத் தகவல் "கிருஷ்ணா' இல்லத்தில் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் கூட்டத்தை நடத்திக்கொண்டிருந்த குமாரசாமிக்குத் தெரிவிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து மீண்டும் கூட்டணி ஏற்படுத்தும் திட்டம் கைவிடப்பட்டது. எம்எல்ஏக்களை ஆளுநர் மாளிகைக்கு அழைத்துச் செல்லும் திட்டமும் கைவிடப்பட்டது.

கிருஷ்ணா இல்லத்திலிருந்து காரில் ஆளுநர் மாளிகைக்குச் சென்ற குமாரசாமி, தனது அமைச்சரவையின் ராஜிநாமா கடிதத்தை கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.


0 Comments: