பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, October 02, 2007

பந்த், உச்சநீதி மன்றம்,,,, - கேள்வி பதில் அறிக்கை - கலைஞர்

ஜெக்கு வாய்க் கொழுப்பு அதிகம்...6-வது பாதை தான் உகந்தது ....சேது சமுத்திர திட்டத்துக்கு எதிரானவர்களை மக்கள் புரிந்து கொள்வார்கள் கருணாநிதி கேள்வி பதில் அறிக்கை...

கேள்வி:- ``நுணலும் தன் வாயால் கெடும்'' என்பதைப் போல வாய்க் கொழுப்பெடுத்து அதிகார போதையில் தரம் கெட்ட வார்த்தைகளால் - ஜெயலலிதாவின் அறிக்கையின் துவக்கம் இது. எப்படி?

பதில்:- ``வாய்க் கொழுப்பு`` எங்கே அதிகம் என்பதற்கு இந்தக் கேள்வியின் துவக்க வார்த்தைகளே போதுமே!

கேள்வி:- கருணாநிதி முகத்தில் உச்ச நீதிமன்றம் கரி - அ.தி.மு.க.விற்கு கிடைத்த மகத்தான வெற்றி என்றும் ஜெயலலிதா அறிக்கைக்கு தலைப்பு அவரே கொடுத்து ஏடுகளுக்கு அனுப்பியிருக்கிறாரே?

பதில்:- தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் மிகவும் தேவையான ஒரு திட்டத்தை வலியுறுத்தி நடைபெறுவதாக இருந்த வேலை நிறுத்தம் கூடாது என்று தான் ஜெயலலிதா நீதி மன்றம் சென்றார். அந்த வழக்கிலே அவர் வென்றது என் முகத்திலே கரி என்கிறார்.

தமிழ்நாட்டு மக்களுக்காக குரல் கொடுத்து, அதிலே வெற்றி கிடைக்காதது என் முகத்திலே கரி என்றால், அதை நான் கேவலமாக நினைக்கவில்லை. தமிழ்நாட்டு மக்களின் திட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் சென்ற ஜெயலலிதா பற்றியும், அதிலே கிடைத்த வெற்றியை மகத்தான வெற்றி என்றும் அவர் பெருமைப்பட்டுக் கொண்டிருப்பதையும் தமிழ்நாட்டு மக்கள் தங்களுக்குள்ளாக நன்றாகப் புரிந்து கொண்டிருப்பார்கள். சேது சமுத்திரத் திட்டம் வேண்டும் என்று குரல் கொடுத்தவர் யார்? அதை எதிர்த்து நீதி மன்றம் சென்றவர் யார்? என்று புரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லாதவர்களா தமிழ்நாட்டு மக்கள்!

கேள்வி:- ஜெயலலிதா அறிக்கையில் - அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ராமர் பாலம் என்று குறிப்பிட்டு இருந்ததைக் காட்டினால் அரசியலை விட்டு விலகத் தயார் என்று நீங்கள் கூறியதை கோயபல்ஸ் முயற்சி என்று சொல்லியிருக்கிறாரே?

பதில்:- நான் கூறியதை கோயபல்ஸ் முயற்சி என்று கூறும் ஜெயலலிதா, உண்மையிருந்தால், ஆதாரம் இருந்தால், அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இத்தனையாவது பக்கத்தில் ராமர் பாலம் என்று குறிப்பிட்டிருக்கிறேன் என்று பதில் அளித்திருந்தால் அது ஏற்கத் தக்கதாக இருந்திருக்கும். அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாத அவர் நழுவி ஓடிவிட்டு, கோயபல்ஸ் என்றெல்லாம் அறிக்கை விட்டு விட்டால் போதுமா? அதனைப் படிக்கும் பத்திரிகையாளர்கள், கலைஞரின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாத நிலையில் இருக்கும் ஜெயலலிதாவை எண்ணி மனதிற்குள்ளாகவாவது எள்ளி நகையாட மாட்டார்களா? கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கத் தெரியாமல் ஜெயலலிதா எப்படியெல்லாம் சமாளிக்கப் பார்க்கிறார் என்று தான் அவர்கள் எண்ணிக் கொள்வார்கள்.

கேள்வி:- ஜெயலலிதா தனது அறிக்கையில் உங்களின் சொந்த ஆதாயத்திற்காக சரியாக ஆராயாமல் இத்திட்டம் தொடங்கப்பட்டு விட்டதாக சொல்கிறாரே?

பதில்:- அவர் இப்படி ஒரு செய்தியைக் கூறும்போது இதற்கான ஆதாரத்தைத் தெரிவித்துச் சொல்ல வேண்டும். அதற்கு யோக்கியதை இல்லையென்றால் வாயை மூடிக் கொண்டிருக்க வேண்டும். சரியாக ஆராயாமல் இத்திட்டம் தொடங்கப்பட்டு விட்டதாகக் கூறுகிறார்.

சேது சமுத்திரத் திட்டத்தின் தொடக்க சுற்றுச் சூழல் ஆய்வுகளை மேற்கொள்ள தேசிய சுற்றுச் சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம் நியமிக்கப்பட்டது. இந்த ``நீரி'' நிறுவனம் கால்வாய் தோண்டுவதற்கு 5 மாற்றுப் பாதைகளை பரிசீலித்தது. இந்த நிறுவனம் சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான தொடக்க சுற்றுச் சூழல் ஆய்வுகள் குறித்து மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனங்கள் துறை அமைச்சகத்தின் முன்னிலையில் கருத்து விளக்கங்கள் அளிக்கப்பட்டன. அப்போது புதிய ஆய்வுகளை மேற்கொள்வதற்கு அப்போது பா.ஜ.க. மந்திரியாக இருந்த அருண் ஜேட்லி தான் ஒப்புதலே அளித்துள்ளார். அந்த ஆய்வுப் பொறுப்பும் ``நீரி'' நிறுவனத்திடம் தான் தரப்பட்டது. இந்த நிறுவனம் 2002 அக்டோபரில் தனது ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்தது. இந்த அறிக்கைகள் பரிந்துரைகள் எல்லாம் ஆராயப்பட்டு அதன் பின்னர் தான் அதுவும் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. அரசு மத்தியிலே இருந்த போது தான் தற்போதைய ஆறாவது பாதை தான் உகந்தது என்று முடிவு செய்யப்பட்டது.


இதுதவிர 2004 செப்டம்பர் முதல் 2005 பிப்ரவரி வரை ஆறு கடலோர மாவட்டங்களில் 3 சுற்றுகளாக 14 இடங்களில் பொது மக்கள் கருத்தறியும் கூட்டங்கள் நடத்தப்பட்டது. அப்போதும் ராமர் பாலம் என்ற பெயரை யாரும் ஒரு முறை கூட உச்சரிக்கவில்லை. இந்த விவரங்கள் எதுவும் தெரியாமல், திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டுகளுக்குப் பிறகு, நன்கு ஆராயாமல் தொடங்கப்பட்டு விட்டது என்று ஜெயலலிதா புலம்புகிறார்.

கேள்வி:- மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை செயல்படுத்துவதில் அ.தி.மு.க. எப்போதும் முன் நிற்கும் என்று ஜெயலலிதா கூறியிருக்கிறாரே?

பதில்:- அவரது ஆட்சியிலே மூடப்பட்ட உழவர் சந்தை திட்டம், பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம், நமக்கு நாமே திட்டம், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், எஸ்மா, டெஸ்மா சட்டங்கள், தொழிலாளர்கள், அரசு அலுவலர்களுக்கு போனஸ் மறுப்பு போன்ற திட்டங்கள் எல்லாம் இதற்கு எடுத்துக்காட்டுகள் என்று ஜெயலலிதா கூறிக் கொள்ளலாமா? அவர் ஆட்சியில் மூடப்பட்ட இதுபோன்ற திட்டங்களையும், தற்போது இந்த ஒன்றரை ஆண்டுகளில் கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சாதனைகளையும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாமே!


கேள்வி:- ராமர் பாலத்தை இடிக்காமல் இந்தத் திட்டத்தை நிறைவேற்ற ஐந்து மாற்றுத் திட்டங்கள் மத்திய அரசுக்கு தரப்பட்டுள்ளதாகவும், ராமர் பாலத்தை இடிக்காமல் வேறு பாதையை பரிசீலிக்கலாம் என்றும் ஜெயலலிதா சொல்கிறாரே?

பதில்:- இரண்டு முறை முதல்- அமைச்சராக இருந்தவர் இப்படி அறியாமையாக இருக்கிறாரே! இவர் கூறுகிற ஐந்து பாதைகளும் ஏற்கத் தக்கதல்ல என்று விஞ்ஞான ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், சுற்றுப்புறச் சூழல் ரீதியாகவும் ஆய்வு செய்யப்பட்டு முடிவு செய்யப்பட்டு விட்டது. இப்போது போய் அந்தத் திட்டங்களைப் பரிசீலிக்கலாம் என்கிறார் ஜெயலலிதா.

அதுமாத்திரமல்ல; திட்டம் தொடங்கப்பட்டு ஓராண்டிற்குப் பிறகு, திட்டத்தை மாற்றலாம் என்றால் எவ்வளவு நிதி விரயமாகும், மீண்டும் எவ்வளவு காலம் தாமதமாகும் என்பதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் கூறுகிறார்.

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், ஜெயலலிதா நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டிருப்பது - இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 6-வது பாதையைத் தானே? அப்போது அவர்கள் கேட்டுக் கொண்ட பாதையில் தானே இப்போது திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்தப் பாதையை ராமர் பாலம் உள்ளது என்றால் - அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அந்தப் பாதை வழியாக சேது திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டது ஏன்?

கேள்வி:- சேது கால்வாய்த் திட்டத்தின் மூலம் தமிழகத்தின் பொருளாதாரம் மேம்படும் என்பதும், கப்பல் பயணத்தில் செலவுகள் குறையும் என்பதும் உண்மையல்ல என்று ஜெயலலிதா நேற்று அறிக்கையில் தெரிவித்திருக்கிறாரே?

பதில்:- இவ்வாறு கூறும் ஜெயலலிதா, இதே சேது சமுத்திரத் திட்டத்தைப் பற்றி தேர்தல் அறிக்கையில் சொல்லியிருப்பது என்ன?

``சேது சமுத்திரத் திட்டத்தால் நம் நாடு மட்டும் அல்ல, தென்கிழக்கு ஆசிய நாடுகளும், கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள நாடுகள் அனைத்தும் பயன் அடையும்; வாணிபமும் தொழிலும் பெருகும்; அந்நிய முதலீடு அதிகரிக்கும்; அன்னியச் செலாவணி அதிகம் கிடைக்கும்; கப்பலின் பயணத் தூரம் வெகுவாகக் குறைவதால் எரிபொருளும் பயண நேரமும் மிச்சமாகும்; ஏற்றுமதி, இறக்குமதி அதிகரிக்கும்; குறிப்பாக ராமநாதபுரம் போன்ற மிகமிகப் பிற்பட்ட தமிழக தென் பகுதி மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும்; வேலை வாய்ப்பு பெருகும்; தூத்துக்குடி துறைமுகம் சர்வதேச அளவில் விரிவடையும், சுற்றுலா வளர்ச்சி அடையும்.''

- இவ்வாறு அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா எழுதியிருக்கிறாரா இல்லையா?

அப்போது பொருளாதார வளம் பெருகும் என்று ஜெயலலிதா கூறிவிட்டு, தற்போது அதை மாற்றிக் கூறுகிறார்.

0 Comments: