பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, October 01, 2007

போலி பக்தர் போலி பகுத்தறிவாளர் - ஞாநி

போலி பக்தர் போலி பகுத்தறிவாளர் என்ற தலைப்பில் ஞாநி எழுதிய கட்டுரை. ( நன்றி: விகடன் )

போலி பக்தர் போலி பகுத்தறிவாளர்

சேது சமுத்திரத் திட்டத்துக்காகக் கடலடி மணல் திட்டுக்-களை உடைக்கும் சர்ச்சையை, போலி பக்திக்கும் போலி பகுத்தறிவுக்கும் இடையில் நடக்கும் போராட்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஏனென்றால், அத்வானி போன்றோர் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து என்பதால் எதிர்க்கவில்லை. அது ராமர் பாலம் என்கிற, பகுத்-தறிவுக்கு அப்பாற்பட்ட பக்தி அடிப்படையில் சொல்கிறார்கள்.

ராமர் பாலத்தை உடைத்தே தீருவோம் என்று முழக்கமிடும் கருணாநிதி போன்றோரும், பகுத்தறிவு அடிப்படையில் திட்டத்தை அலசத் தயாராக இல்லை. இது தமிழனின் பல நூற்றாண்டு காலக் கனவு என்று இன்னொரு வகையான ‘மூட பக்தி’யை இதில் காட்டுகிறார்கள்.

அசல் கடவுள் பக்திக்கும் அத்வா-னிக்-கும் தொடர்பு இல்லை; அசல் பகுத்தறிவுக்கும் கருணாநிதிக்கும் சம்பந்தம் இல்லை என்பதுதான் யதார்த்தமான உண்மை.

உண்மையான பக்தி என்பது என்ன? பகுத்தறிவு என்பது என்ன? இரண்டுக்கும் உறவே இருக்க முடி-யாதா? ‘ராமர் பாலம்’ விஷயத்தை எப்படிப் பார்ப்பது என்பதற்கு, மிகப் பெரிய கடவுள் பக்தன் பாரதி-யிடம் போய்ப் பார்த்-தால், பல விடைகள் கிடைக்-கின்றன. ராமர் பாலம் மெய்யா,

கற்ப-னையா? ராமாயணம், மகாபாரதம் எல்லாமே என்ன? பாரதி தெளி-வாகச் சொல்கிறான்... ‘உண்மையின் பேர் தெய்வம் என்-போம். அன்றி ஓதிடும் தெய்வங்கள் பொய் எனக் கண்டோம். உண்மைகள் வேதங்கள் என்போம். பிறிது உள்ள முறைகள் கதையெனக் கண்டோம்...’

எதைக் குறிப்பிடு-கிறான் பாரதி? ‘கடலினைத் தாவும் குரங்கும், வெங்கனலிற் பிறந்ததோர் செவ்விதழ்ப் பெண்-ணும், வடமலை தாழ்ந்தத-னாலே, தெற்கில் வந்து சமன் செய்யும் குட்டை முனியும், நதி-யினுள்ளே முழுகிப் போய் அந்த நாகர் உலகி-லோர் பாம்பின் மகளை, விதியுறவே மணம் செய்த திறல் வீமனும் கற்பனை என்பது கண்டோம்...’

‘இந்தப் புராணத்தில் அப்படிச் சொல்லியிருக்கிறது, இன்னொன்றில் வேறு மாதிரி இருக்கிறதே... வால்-மீகியா, துளசியா, கம்பனா? யாரை எடுத்துக்-கொள்வது’ என்றெல்-லாம் நடக்கும் பட்டி-மன்றங்களுக்கு பதிலை-யும் அடுத்து வரும் பாரதியின் வரிகள் அடித்துச் சொல்கின்றன-

‘ஒன்று மற்றொன்றைப் பழிக்கும். ஒன்றில் உண்மை என்று ஓதி, மற்றொன்று பொய் என்னும் நன்று புராணங்கள் பல செய்தார்...’

அப்படியானால் இவற்றை நாம் எப்படி எடுத்துக்-கொள்வது? அதையும் சொல்-கிறான் பாரதி. ‘அதில் நல்ல கவிதை பலப் பல தந்தார்...!’ எனவே, கவிதையை ரசித்துவிட்டுப் போக வேண்டியதுதான். ரசனைக்குரியது என்பதற்காக, உண்மை என்று நம்பி-விடாதே என்று உடனே எச்சரிக்கிறான்... ‘கவிதை மிக நல்லதேனும், அக்கதைகள் பொய் என்று தெளிவுறக் கண்டோம்!’

எதற்காக இந்தப் பொய்க் கதைகள்? ‘புவிதனில் வாழ்நெறி காட்டி, நன்மை போதிக்கும் கட்டுக்கதைகள் அவைதாம்!’ இலக்கியத்தின் நோக்கம் என்பதே, மனித வாழ்க்கையை மேலும் பயனுற வாழ்வதற்கு வழி காட்டு-வதுதான். அதை ரசனையுடன் கவிதைச் சுவையுடனோ, மொழி நயத்-துடனோ சொல்வதுதான் படைப்பாளி-யின் ஆற்றல்.

தொடர்ந்து எது தவம், எது யோகம், எது யாகம், எது பரம்பொருள், எது ஞானம், யார் மேற்குலத்தார், எது சாத்திரம், எது சதி, எது சமூக நீதி என்றெல்லாம் பாரதியின் ‘உயிர் பெற்ற தமிழர் பாட்டு’ சுருக்கமான, ஆழமான வரிகளில் பளிச்சென்று சொல்கிறது.

எல்லா மதங்களிலுமே, கடவுள் தத்து-வத்தில் கடைசி-யாக இரண்டு முக்கிய அம்சங்கள் வலியுறுத்தப்படுகின்றன. ஒன்று, நம்மை மீறிய இயற்கை அல்லது கடவுள் என்ற சக்தியிடம் மெய்யான பக்தன் தன்னை முழுமையாக ஒப்புக்கொடுத்துவிட வேண்டும். இதுதான் சரணாகதித் தத்துவம். அவனின்றி ஓரணுவும் அசையாது என்ற நம்பிக்கை.

இரண்டாவது, பிரபஞ்சத்தில் எல்லாமே கடவுளின் படைப்புகள் என்பதால், அத்தனை சக உயிர்களிடமும் அன்பு காட்டுவதுதான் கடவுளிடம் காட்டும் பக்தி என்ற புரிதலாகும்.

இந்த இரு அம்சங்களுக்கும் பொருந்-தாதவர் அத்வானி. கடவுளிடம் சரணாகதி அடைந்து, எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக்கொள்வார் என்று விட்டுவிடும் நம்பிக்கையே அவரிடம் இல்லை. மாறாக, கடவுளைக் காப்பாற்று-வது தன் வேலை என்று கருதுகிறார். ராமர் கோயிலாக இருந்தாலும், ராமர் பாலமாக இருந்தாலும் தானே அதை ராமனுக்--குக் காப்பாற்றிக் கொடுத்தாக வேண்டும் என்று நினைப்பவர், எப்படி ராமனின் பக்தராக இருக்க முடியும்?

அத்வானியும் அவர் சார்ந்திருக்கும் இந்துத்துவ அமைப்புகளும் சரி.. இதே வார்ப்பில் இயங்கும் இன்னும் சில இஸ்லாமிய, கிறிஸ்துவ அரசியல் அமைப்புகளும் சரி... இவை எல்லாமே மத அமைப்பு, அதன் அதிகாரப் போட்டி, அதற்கான அரசியல் சம்பந்தப்பட்டவை. கடவுள் தூணிலும் இருப்பார், துரும்-பிலும் இருப்பார் என்று நம்பக்கூடிய மெய்யான பக்தர் எவரும் மசூதியை இடித்துவிட்டுக் கோயில் கட்ட வேண்டும் என்று ஊர்-வலம் செல்ல மாட்டார்கள். சக மனிதரின் நாக்கை அறு, தலையை வெட்டு என்று பேசும் வேதாந்தி-களையெல்லாம் துறவி என்றும் பக்தர் என்றும் சொல்வதுதான் உண்மையில் ‘தெய்வக் குற்றம்.’

இன்னொரு பக்கம், போலி பகுத்தறி-வின் அடையாளமாகத் திகழ்கிறார் கருணாநிதி. ராமன் என்ற காவியப் பாத்திரம் கற்பனை-தான்; கடவுள் அல்ல! ராமன் வாழ்ந்ததற்கோ, பாலம் கட்டியதற்கோ எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை என்று ஆணித்தரமாக வாதாடுகிற அவரால், தான் கொண்டாடி வரும் கண்ணகியும் அதேபோலத்-தான் என்பதை மட்டும் ஏற்க முடியாது.

ஜெயலலிதா ஆட்சியில் கண்ணகி சிலையை அகற்றியதும், பஸ் கட்டணத்தை உயர்த்தியதும் ஒரே சமயத்தில் நடந்த-போது, கண்ணகி சிலை அகற்றலுக்காக மாவட்டம்-தோறும் தி.மு.க. கண்டன மாநாடு நடத்தும் என்று கருணாநிதி அறிவித்தாரே தவிர, பஸ் கட்டணத்தை எதிர்த்துப் போராட்டம் அறிவிக்கவில்லை; அதற்கு ஒரு தீர்மானம் மட்டுமே போதும் என்பதுதான் அவருடைய நிலைப்பாடு!

‘கண்ணகியைக் கொண்-டாடும் மன-நிலை என்பது, குழந்தையாக இருந்தபோது விளையாடிய கரடி பொம்மையை, வயதான பிறகும் விடாமல் கொஞ்சுகிற மன நிலைக்-குச் சமமானது’ என்று, இரு மனநிலைகளை ஒப்பிட்டு, ‘ஓ’ பக்கங்களில் எழுதி-யபோது, ‘கண்ணகியை கரடி பொம்மை’ என்று இழிவுபடுத்திவிட்டதாகத் திரித்துச் சொல்லி, உணர்ச்சி வேகம் காட்டினார் கருணாநிதி. அதையே அவரது கட்சியினரும் கடுமை-யாகப் பிரதிபலித்தார்கள். ஆனால், இப்போது, ‘ராமன் சோமபானம் குடித்தவன்; ராமன் இன்ஜினீயரா?’ என்றெல்-லாம் அவர் நேரடி-யாகவே ராமனைப் பகடி செய்யும்போது, அவருக்கு அப்போது ஏற்பட்ட அதே உணர்ச்சி வேகம், இப்போது ராம பக்தர்களுக்கும் வரும் என்று ஏன் இவர் எதிர்-பார்க்கவில்லை?

ஸ்டாலினும் தயாநிதி மாறனும் அம்மன் கோயிலில் கும்பிட்டுக் கற்பூர ஆரத்தியைத் தொட்டு வணங்கும்போது, கருணாநிதியின் பகுத்தறிவுக் கொள்கைப்-பிடிப்பு காணமல் போய்விடும். சால்வை-யின் மஞ்சள் நிறத்துக்கு விதவித-மான விளக்கங்கள் தருவாரே தவிர, மஞ்சள் நிறத்தை கைவிட மறுப்பது ஏன் என்பது பகுத்தறி-வுக்கு அப்பாற்பட்ட விஷயம்.

விநாயகர் வழிபாடு தமிழர் வழி-பாடு அல்ல; வாதாபியிலிருந்து வந்தது என்று ஒவ்வொரு விநாயகர் பூஜையின்போதும் தமிழ்ச் சமூகத்-துக்கு அறிவுரை சொல்வாரே தவிர, குடும்பத்துக்-குள்ளே விநாயகர் விக்கிரகங்-களைக் குவித்துவைப்பவர்-களுக்கு அறிவுரை சொல்ல மாட்டார்.

புட்டபர்த்தி சாயிபாபா காலில் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் விழுந்து கும்பிட்ட-போதுகூட, வயதில் பெரியவர் என்பதால் அப்படிச் செய்தார் என்று காரணம் கொடுத்தார். பகுத்தறிவைப் பொறுத்தவரை, குடும்பத்துக்கு ஒரு அளவுகோல்; இதர உடன்-பிறப்புகளுக்கு இன்னொரு அளவுகோல் என்பதுதான் அவர் வழக்கம்.

முனியன், செல்லியம்மன், காத்தவராயன் கோயில்களில் எல்லாம் கிராமிய மரபில் நடந்து வரும் தமிழ் வழியிலான வழிபாட்டு முறைகளை நீக்கி-விட்டு, அங்கே ஆகம வழியி-லான சம்ஸ்கிருத முறைகளை அறிமுகப்படுத்தி, அந்தக் கோயில்-களை ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டுக்குள் கொண்டு-வரும் திட்டத்துடன்தான் பூசாரிகள் சங்க அமைப்பைத் தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். உருவாக்கியது. அதன் மாநில மாநாட்டில் பேசும்-போது, தமிழ் வழி-பாடு பற்றி-எல்லாம் சொல்ல கருணா-நிதிக்கு மறந்துபோய்-விடும். கிராமப் பூசாரிகள் நல வாரியத்தில் அரசு உறுப்பினர்களாக மூத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர்-கள் வேதாந்தம், ஆர்.பி.வி.எஸ்.மணியன் இருவரையும் மீண்டும் மீண்டும் கருணாநிதி நியமித்துக்கொண்டே இருக்கிறார். சில மாதங்களுக்கு முன்புகூட அவர்கள் மறு நியமனம் செய்யப்பட்டார்கள்.

இந்த மாதம் நடந்த விநாயகர் பூஜைகளின்-போது ஆர்.எஸ்.எஸ். சார்பு அமைப்புகள் தெரு முச்சந்திகளில் நூற்றுக்கணக்கான விநாயகர் சிலை வைத்த பந்தல்களை அமைத்-தன. அவை ஒவ்வொன்றிலும் விநாயகருக்குப் பக்கத்தில், ‘ராமேஸ்வரத்தைக் காப்போம். ராமர் பாலம் காப்போம். ராமராஜ்ஜியம் அமைப்--போம்’ என்ற பேனர். விநாயகர் பூஜைக்-கும் ராமர் பாலத்துக்கும் என்ன சம்பந்தம்? இந்த பேனர்களை நீக்குவதற்கு இந்த அரசின் போலீஸ் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாறன் குடும்பத்துடன் நடக்கும் குடும்பச் சண்டையில் டி.டி.ஹெச், கேபிள், சேனல் யுத்தத்தில் அரசாங்கம் முழு மூச்சாகக் களத்தில் இறங்கியிருப்பதிலிருந்து மக்களின் கவனத்தைத் திருப்பவோ, டெல்லியில் அடுத்து வரும் அணி மாற்றத்துக்குத் தயார் செய்து-கொண்டு, சோனியா அணியிலிருந்து கழற்றிக்-கொள்ள சாக்கு தேடியோதான் ராமரும் பெரியாரும் இப்போது பயன்படுகிறார்களா என்பதைக் கருணாநிதி சொல்ல மாட்டார்.!

மெய்யான பக்தர்களும் மெய்யான பகுத்தறி-வாளர்களும் கருத்து வேறுபடுவார்கள். ஆனால், ஒருபோதும் மூர்க்கத்தனமான சண்டைகளில் ஈடுபட மாட்டார்கள். காரணம், அசல் ஆன்மிகமும் அசல் பகுத்தறிவும் சந்திக்கும் புள்ளி என்பதே, மனிதர்கள் மீதான அன்பு என்பதாகும். போலி பக்தர்களும் போலி பகுத்தறிவாளர்களும் மனிதர்களை நேசிப்பதில்லை; வெறுமே பயன்படுத்திக்-கொள்பவர்கள். அதைத்தான் இப்போது அத்வானியும் கருணாநிதியும் செய்துகொண்டு இருக்கிறார்கள்!

5 Comments:

cgs said...

இட்லிவடை உங்களுக்கு சொந்த செலவில் சூனியம் வைக்க இவ்வளவு ஆசையா?எல்.எல் உங்ககளை துவைக்கபோகிறார்.மேலும் சமீபத்தில் தமிழ்மண்ம் திரட்டியில் படித்தது.கலைஞர் சொன்னதாக..'சிலர் நான் தொட்டால் அக்காரியம் வெற்றியடயும் என்று நம்புவதால் என்னையே கலைஞர் டிவி தொடங்க அழைத்தார்கள்' என்பது போல.எனக்கு வார்த்தைக்கு வார்த்தை சரியாக தெரியவில்லை.
ஆனலும் இதில் உள்ள பகுத்தறிவை கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை.

IdlyVadai said...

cgs உங்களுக்காக அந்த வரிகள் இதோ

எத்தனையோ புதிய தொலைக்காட்சிகள் எனது வாழ்த்தைக் கேட்டுப் பெற்றிருக்கின்றன. அப்படி ஆரம்பித்து வெற்றிக் கொடி நாட்டியவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.

இப்போது என்னுடைய பெயரில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிற இந்த புதிய தொலைக்காட்சியையும் என்னையே வாழ்த்துமாறு கூறினார்கள்.

அதற்குக் காரணம், நான் ராசியானவன், நான் தொட்டது துலங்கும், என் வார்த்தைகள் பலிக்கும் என்ற நம்பிக்கைதான், அவர்களைக் கேட்குமாறு தூண்டியிருக்கிறது. அதற்கேற்ப எத்தனையோ முறை, நான் கூறிய வாழ்த்துக்கள் பலித்திருக்கின்றன, நல்லது நடந்திருக்கிறது.

அந்த வகையில், இந்த புதிய தொலைக்காட்சியும், பல வெற்றிகளைக் குவித்திட தமிழர் உள்ளங்களைக் குளிர்வித்திட என்னுடைய வாழ்த்துக்கள்

யோசிப்பவர் said...

//அதற்குக் காரணம், நான் ராசியானவன், நான் தொட்டது துலங்கும், என் வார்த்தைகள் பலிக்கும் என்ற நம்பிக்கைதான், அவர்களைக் கேட்குமாறு தூண்டியிருக்கிறது. அதற்கேற்ப எத்தனையோ முறை, நான் கூறிய வாழ்த்துக்கள் பலித்திருக்கின்றன, நல்லது நடந்திருக்கிறது.
//

அருமையான பகுத்தறிவு!!!

jeevan said...

From your movie reviews....

Kireedom - 5.5 / 10

Urchagam - 6 / 10

Dont u know how to judge a movie?? This is something like a typical SUN TV _ TOP 10 REVIEW...

DIDN't EXPECT THIS FROM A PROLIFIC BLOGGER!!!!!

Jeevan

IdlyVadai said...

ஜிவன் கீரிடம் அஜித், ராஜ்கிரன் என்ற பெரிய நடிகர்கள் நடித்தது. பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் உற்சாகம் புது நடிகர்கள், சிம்பிள் ஸ்டோரி லைன் ஆனால் திரைகதை நல்லா இருந்தது. படம் சுமாரா இருக்கும் என்று பார்த்தால் பரவாயிலை என்று தோன்றியது அதனால் அந்த மார்க் போட்டேன்.