தி.மு.க. வைத் தாக்கிக் கொண்டிருந்த ராமதாஸ் சமீபத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியையும் தாக்கிப் பேசியிருக்கிறார். ராமதாஸ் சொன்ன புகாருடன் கி.வீரமணியை பெரியார் திடலில் சந்தித்தோம். அர்த்தத்துடனும் ஆவேச அனலுடனும் பேசினார். ( நன்றி: குமுதம் )
தி.மு.க.வுக்கும் ராமதாஸுக்கும்தான் பிரச்னை என்று நினைத்திருந்தோம். இப்போது ராமதாஸ் உங்களையும் தாக்குகிறார்? உங்களுக்குத் அவருக்கும் என்ன பிரச்னை?
‘‘ராமதாஸ் திடீரென்று நினைத்துக் கொண்டு யாரை வேண்டுமானாலும் தாக்குவார். இது அவரது அண்மைக் கால வழக்கமாக இருக்கிறது. துணைநகரம் அமைப்பது தொடர்பாக நான் கூறிய கருத்துக்கள் அவருக்குக் கோபத்தை வரவழைத்திருக்கின்றன.
தமிழ்நாட்டில் உள்ள வளர்ந்துவரும் மாநகரங்கள் எல்லாவற்றுக்கும் குறிப்பாக, சென்னைக்கும் துணைநகரம் அவசியம். இதுபோன்ற வளர்ச்சித் திட்டங்கள் காலத்தின் கட்டாயம். இதைப் புரிந்துகொள்ளாமல் தேவையின்றி என்னையும், முதல்வரையும் சேர்த்து உள்நோக்கம் கற்பிக்கிறார் ராமதாஸ்.’’
மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் உள்ள தொழிலதிபர்களுக்கு நிலம் வாங்கிக் கொடுப்பதற்காக, துணைநகரம் வேண்டும் என்று நீங்கள் சொல்வதாக அவர் குறிப்பிட்டிருக்கிறாரே?
‘‘பொறுப்பு வாய்ந்த ஒரு அரசியல் கட்சியின் நிறுவனரான ராமதாஸ் பொறுப்போடு அரசியல் கருத்துக்களைச் சொல்ல வேண்டாமா? என்மீது குற்றம் சொல்லும் இவர் ஆதாரங்களோடு அதை நிரூபிப்பாரா? நிரூபிக்க முடியாவிட்டால் அவர் நிலைப்பாடு என்ன? ராமதாஸுக்கு எப்போதுமே ஒரு பழக்கம். தனக்குத் தோன்றுவதையெல்லாம் பேசுவார். இப்படியெல்லாம் பேசினோமே என்று பின்பு யோசிக்கமாட்டார். உதாரணத்துக்கு முதலில் அரசியலில் ஈடுபடமாட்டேன் என்றார், சாட்டையைச் சொடுக்குவேன் என்றார். குடும்பத்தாரை அரசியலில் இழுக்கமாட்டேன் என்றார், இப்படியெல்லாம் பேசியவரின் இன்றைய நிலையை யோசித்துப் பாருங்கள். இப்படிப்பட்ட பெருமைக்குரியவர்தான் ராமதாஸ்.
இன்னொரு விஷயம், நான் துணைநகரம் வேண்டும் என்று சொன்னபோதுகூட அது எங்கே, எந்தப் பகுதியில் எப்படி அமையவேண்டும் என்று நான் சொல்லவில்லை. குறிப்பிட்ட பகுதியில் அமையக்கூடாது என்று வேறு சிலர் தான் சொல்லுகிறார்கள். அவர்கள் பின்னணியில்தான் நில தாதாக்கள் இருப்பார்களோ என்ற சந்தேகம் நிச்சயம் மக்களுக்கு வரும்‘‘.
அ.தி.மு.க. ஆட்சியின்போது அந்தக் கட்சிக்கு கொள்கை பரப்புச் செயலாளராக இருந்தீர்கள் என்றும் இப்போது தி.மு.க.வுக்கு கொ.ப.செ.யாக இருக்கிறீர்கள் என்றும் அவர் கூறுகிறாரே?
‘‘தந்தை பெரியார் காலத்திலிருந்தே மதவெறி கட்சிகளை திராவிடர் கழகம் ஆதரித்தது கிடையாது. அதே அடிப்படையில்தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அரசியல் வடிவமான பி.ஜே.பி. தலைமையில் அமைந்த கூட்டணியில் யார் இருந்தாலும் திராவிடர் கழகம் ஆதரிக்காது.
என்னை அணி மாறியவர் என்று சொல்லக்கூடிய மருத்துவர் தன்னைப் பற்றியும் தன் கட்சியைப் பற்றியும் கடந்த பத்து ஆண்டுகளாக மாறி மாறி அவர்கள் எடுத்த நிலைப்பாடுகள் பற்றியும் நினைத்துப் பார்க்கவேண்டும். அவற்றை நான் நினைவூட்டினால் அவருக்கு மிகுந்த சங்கடம் ஏற்படும். சகோதரியிடம் புதுவை ஒப்பந்தம் செய்தபிறகு, பட்டை நாமத்தை நெற்றியில் சுமந்து கொண்டு வெளியேறியது இப்போது அவருக்கு நினைவில்லை போலும்.
டாக்டருக்கு அடிக்கடி ‘செலக்டிவ் அம்னீஷியா’ வந்துவிடுகிறது. ராமதாஸின் அறிக்கையைப் பார்த்தபோது கலைஞருடைய ஒரு வசனம்தான் எனக்கு நினைவிற்கு வருகிறது. ‘மனசாட்சி உறங்கும்போது, மனக்குரங்கு ஊர் சுற்ற கிளம்பிவிடுகிறது’ என்பதே அது.
தி.மு.க.விற்கு கொள்கை பரப்பு செயலாளராக இருக்கிறேன் என்று ராமதாஸ் சொல்கிறார். இதை நான் பெருமையாகக் கருதுகிறேன். திராவிடக் கழகம் தாய்க் கழகம். தி.மு.க. அதன் அரசியல் வடிவம். சேய்க் கழகம். ஐந்தாவது முறையாக ஆட்சிக்கு வந்த முதல்வர் கலைஞர். 84 வயதிலும் ஒரு இளைஞனைப் போல் எதிர்நீச்சல் போட்டுக்கொண்டிருக்கிறார். நித்தம் நித்தம் தமிழுக்கும் தமிழக மக்களுக்கும் உதவிக்கொண்டிருக்கிற கலைஞருக்கு ஆதரவாக இருப்பதில் தவறில்லை.
பிற்படுத்தப்பட்டோருக்கு ஐம்பது சதவீத இட ஒதுக்கீட்டை எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்த போது பெற்றுத் தந்தது தி.க.வும்., தி.மு.க.வும்தான். அதில் 20 சதவீதத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டவருக்காக ஒதுக்கியது கலைஞர். இதில் ராம தாஸுக்கு துளியும் சம்பந்தமில்லை. இதற்காக கலைஞருக்கு நன்றி சொல்லலாம்.
எந்தக் கூட்டணியிலும் சேராமல் பா.ம.க. தனித்து நின்றால் தேர்தலில் எத்தனை இடங்கள் பிடிக்கும் என்று தாங்கள் நினைக்கிறீர்கள்?
‘‘எனக்கு ஆரூடத்திலோ ஜோதிடத்திலோ நம்பிக்கை இல்லை. அப்படிச் சொல்லப் பழக்கப்பட்டவனும் இல்லை. ஆனால் அந்த அனுபவம் அவருக்கு ஏற்கெனவே இருக்கிறதே (முகத்தில் புன்னகை) புதுவையில் கூட்டணியில்லாமல் தனித்து நின்றபோது ஒரு இடத்தில் கூட ஜெயிக்க முடியாமல் போனதை மறக்காமல் இருந்தால் சரி.’’ (மீண்டும் புன்னகை).
(நன்றி: குமுதம்)
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Monday, September 10, 2007
ராமதாஸுக்கு செலக்டிவ் அம்னீஷியா! - கி.வீரமணி
Posted by IdlyVadai at 9/10/2007 02:10:00 PM
Labels: பத்திரிக்கை, பேட்டி
Subscribe to:
Post Comments (Atom)











1 Comment:
வீரமணி முதலில் பெரியார் வழியில் ஒரு சமூக இயக்க தலைவராக செயல்படட்டும்.அல்லது தைரியம் இருந்தால் மருத்துவர் போல கட்சி ஆரம்பித்து இவருடைய செல்வாக்கை காட்டட்டும்
Post a Comment