பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, August 09, 2007

பெரியார் சினிமா 100-வது நாள் விழா

தந்தை பெரியாரின் வாழ்க்கையை பெரியார் என்னும் திரைப்படமாக லிபர்டி கிரியேஷன்ஸ் தயாரித்து வெளியிட்டது. இந்த திரைப்படத்திற்கு தமிழக அரசின் சார்பில் ஒருகோடி ரூபாய் நிதி உதவியை முதல்-அமைச்சர் கருணாநிதி வழங்கினார். படத்தில் பெரியாராக நடிகர் சத்யராஜ், மணியம்மையாக நடிகை குஷ்பு ஆகியோர் நடித்தனர்.


இந்த படத்தின் 100-வது நாள் வெற்றி விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவிற்கு முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமை தாங்கி பெரியார் படத்தில் நடித்த நடிகர் சத்யராஜ், நடிகை குஷ்பு உள்பட அனைத்து கலைஞர்களுக்கும் விருதுகளை வழங்கி பேசினார்.

கலைஞர் பேச்சு:

இங்கே தந்தை பெரியார் அணிந்திருந்த பச்சைக்கல் கணையாழியை தம்பி சத்யராஜுக்கு அணிவிக்கின்ற அந்த பணியினை திராவிடர் கழகத்தலைவர் வீரமணி எனக்கு அளித்து அந்த பச்சைக்கல் கணையாழியை நான் அவருக்கு அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. பச்சைக்கல் மோதிரத்தை பார்த்தவுடன் அதை இன்று நேற்றல்ல, பெரியாரிடம் இருந்து அந்த பச்சைக்கல் மோதிரத்தை பார்த்து ரசித்தவர்களிலே நானும் ஒருவன். அந்த பச்சைக்கல் மோதிரம் இன்றைக்கு என்னை விட்டு பறிபோகிறதே என்றும், அது தம்பி சத்யராஜுக்குத்தானே போகின்றது என்ற ஆறுதலும், மகிழ்ச்சியும், நிம்மதியும் எனக்கு ஏற்பட்டது. அறிஞர் அண்ணா எனக்கு அணிவித்த கணையாழியின் வரலாற்றை தம்பி சத்யராஜ் இங்கே சொன்னார். அண்ணா எனக்கு கணையாழியை அணிவித்தார் என்பது உண்மை. ஆனால் அந்த நிகழ்ச்சி எப்போது நடந்தது? என்பதுதான் சற்று வரலாற்று பிழை.

இதுபோன்ற வரலாறு திருத்தப்பட வேண்டும். வரலாற்றில் பிழை இருந்தால் அதுவே எதிர்காலத்தில் வரலாறாக மாறிவிடும். இப்படித்தான் பல வரலாறுகள் தவறாக இன்றைக்கு நாட்டு மக்களுக்கு கிடைத்து கொண்டிருக்கிறது.

1959-ம் ஆண்டு முதன் முதலாக திராவிட முன்னேற்ற கழகம் சென்னை மாநகராட்சி மன்றத்திலே போட்டியிடுகிறது. அப்படி போட்டியிடுகின்ற நேரத்தில் யார், யாரை எந்த வட்டத்தில் தி.மு.க. வேட்பாளராக நிறுத்துவது என்று யோசிக்கப்பட்டு, அதற்காக ஒரு குழுவை அமைத்து அந்த குழுவுக்கு தலைவராக என்னை நியமித்து நாவலர் நெடுஞ்செழியன் மற்றும் கழக தோழர்கள் அந்த குழுவிலே உறுப்பினர்களாக அமைக்கப்பட்டு நாங்கள் எந்தெந்த வட்டத்தில் யார் யார் நிற்பது என்பது குறித்து அண்ணா இடத்தில் எடுத்து சென்றோம்.

கிட்டத்தட்ட 40, 50 பேர் பெயர்கள் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அண்ணா அதைப்பார்த்து "ஏனப்பா, 50 பேரா? கட்சியினுடைய பலம் அந்தளவுக்கு இடமளிக்கிறதா? தாங்குமா? அதிகம் பேரை நிறுத்துவதற்கு அதிகம் ஆசைப்படாதீர்கள்'' என்று அண்ணா சொன்ன போது நான் பிடிவாதமாக, "இல்லை அண்ணா, நீங்கள் இந்த பட்டியலை ஏற்றுக் கொண்டால், 45 பேர் நிச்சயமாக வெற்றி பெறுவோம்'' என்று குறிப்பிட்டேன். அண்ணா முடியாது என மறுத்துவிட்டார். அண்ணாவிடம் வாதாடினேன், போராடினேன். "இல்லை, இல்லை நீங்கள் இதை ஏற்றுத்தான் ஆகவேண்டும். நீங்கள் பாருங்கள் நாம் வெற்றி பெற போகிறோம். மேயர் வெற்றியிலும் நாம்தான்'' முன் நிற்க போகிறோம் என்று சொன்னேன். அப்போது அண்ணா சொன்னார் "எனக்கு பிடிக்கவில்லை. நீ சொல்வது போல் 40 இடத்திற்கு மேல் வந்துவிட்டால், நான் உனக்கு ஒரு கணையாழி அணிவிப்பேன். கடற்கரையில் கூட்டம் போட்டு அந்த கணையாழியை அணிவிப்பேன்'' என்று சொன்னார்.

அண்ணா மோதிரம்

இதன் பின்பு தேர்தல் நடந்தது. தி.மு.க. மேயர் பதவியை ஏற்கின்ற அளவுக்கு வெற்றியை பெற்றோம். வெற்றி பெற்ற பிறகு கடற்கரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அண்ணா பேசும்போது அதுவரையிலே சட்டப்பையிலே ஒளித்து வைத்திருந்த கணையாழியை எடுத்து "இங்கே மேயர் பதவிக்கு, உரியவகையிலே வெற்றி பெற்றால் தம்பி கருணாநிதிக்கு கணையாழி அணிவிப்பதாக சொல்லி இருந்தேன். கருணாநிதி வெற்றி பெற்றுவிட்டார். ஆகவே நான் எனது மனைவிக்கு கூட நகை வாங்க நகை கடைக்கு இதுவரை சென்றதில்லை. தம்பி, கருணாநிதிக்காக இந்த மோதிரத்தை வாங்க, பாண்டி பஜாருக்கு அலையாய் அலைந்து வாங்கி வந்திருக்கிறேன்'' என்று சொல்லி கணையாழியை எனக்கு அணிவித்தார். நான் அணிந்திருக்கிற கணையாழியின் வரலாறு இதுதான்.

சத்யராஜுக்கு பெருமை

சத்யராஜ் இப்போது அணிந்திருக்கிற பச்சைக்கல் மோதிரத்துக்கு வரலாறு உண்டு. இந்த மோதிரத்தை பெரியார் தொடர்ந்து அணிந்திருந்தார். என்னைப் போன்றவர்கள் எல்லாம், இந்த மோதிரம் எங்கள் விரல்களுக்கு வந்து எங்களை அழகுபடுத்தாதா? என்று எண்ணியது உண்டு. பெரியாருடைய வீட்டில் உள்ள பிள்ளைகள் எல்லாம், அந்த மோதிரத்தை விரும்பியது உண்டு. அது யார்? என்று வீரமணிக்கு தெரியும். அந்த மோதிரம் யாருக்கும் கிடைக்கவில்லை.

எனக்கும் கிடைக்கவில்லை. நான் பெயர் சொல்லவிரும்பாத அந்த பிள்ளைக்கும் கிடைக்கவில்லை. ஆக, ஒரு உண்மையான மாணவனுக்கும் கிடைக்காமல், ஒரு உண்மையான பிள்ளைக்கும் கிடைக்காமல், சத்யராஜுக்கு இந்த மோதிரம் கிடைத்திருக்கிறது என்றால், எவ்வளவு பெருமை சத்யராஜுக்கு என்பதை எண்ணி, எண்ணி நான் பொறாமைப்படுகிறேன்.

இந்த பொறாமை நெஞ்சத்தில் ஊறுகின்ற அன்பின் அடிப்படையில் ஏற்படுகின்ற பொறாமை என்பதை சத்யராஜுக்கு சொல்லிக் கொள்ள நான் விரும்புகிறேன்.

எச்சரிக்கை செய்யும்

சத்யராஜுக்கு அணிவிக்கப்பட்ட அந்த பச்சைக்கல் மோதிரம் பெரியாரை ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கும். என்றைக்காவது ஒரு நாள் பெரியாருடைய கொள்கைகளை மறந்துவிட கூடிய அல்லது சற்று விலக்கி வைக்கக்கூடிய, ஒரு ஆசை-திருப்பதிக்கு போய் வருவோமே என்று வந்தால், அப்போது அந்த பச்சைக்கல் பளபளத்து எச்சரிக்கும் என்பதை சத்யராஜுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

சத்யராஜ் நாத்திக கொள்கையோடு ஊறி திளைத்தவர். அவர் திளைத்தது மாத்திரம் அல்ல. குஷ்பு போன்ற நடிகைகளையும் நாத்திகர்கள் என்று அழுத்தம் திருத்தமாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு, கலை உலகத்தில் அவர் நடத்திய பிரசாரம் அவர் மேற்கொண்டிருக்கின்ற உறுதி அப்படிப்பட்ட நிலையை உருவாக்கி இருக்கிறது.

மனோரமா பற்றி நான் உறுதியாக சொல்ல முடியாது. ஏனென்றால் அவர்களுடைய குடும்பம், திருவாரூர் பக்கத்திலே இருந்த காட்டூரிலே வாழ்ந்த காலத்தில் இருந்து இன்றைக்கும் கலை உலகத்தில் புகழ் பெற்றிருக்கின்ற காலம் வரையில் அந்த குடும்பத்தை பற்றி நான் நன்றாக அறிவேன். அவ்வளவு பெரிய பக்தர்கள் உலகத்தில் வேறு யாரும் இருக்க முடியாது. ஆகவே பெரியார் கொள்கை எல்லாம் அங்கு ஒன்றும் பலிக்காது.

பெரியார் தான் சொன்னதை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று இருந்ததில்லை. மற்றவர்களை தன்னுடைய கொள்கைக்கு மாற்ற வேண்டும் என்பதில் அவர் பிடிவாதமாக இருந்ததில்லை. மற்றவருடைய உரிமைக்கு, சுதந்திரத்துக்கு மரியாதை கொடுத்தவர்தான் பெரியார்.

பெரியார் பிறக்காமல் இருந்திருந்தால் நாம் இவ்வளவு, சிறப்பாக வாழமுடியாது. ஏதோ ஓரளவுக்கு நாம் சிறப்பாக இருக்கிறோம் என்றால், நான் ஒரு முதல்-அமைச்சராக வீற்றிருக்கிறேன் என்றால், பலரும் அமைச்சர்களாக வீற்றிருக்கிறார்கள் என்றால், சத்யராஜ் ஒரு திறமையான நடிகர் என்று பாராட்டப்படுகின்றார் என்றால், சிவகுமாருக்கு பெருமையும், புகழும் கிடைத்திருக்கிறது என்றால், அது பெரியாரால்தான்.

பொற்கால ஆட்சி

இங்கு பேசிய தங்கர்பச்சான், வீரமணி ஆகியோர் பொற்கால ஆட்சி, பொற்கால ஆட்சி என்று எடுத்து கூறினார்கள். பொற்காலம்தான். ஆனால் இந்த பொற்காலத்தை மதிக்கின்றவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள். இந்த பொற்காலத்துக்கு காரணகர்த்தாவாக இருப்பவன் பூணூல் அணியாத ஒரே குறையினால் தான். இதை பொற்காலம் என்று மறுக்கிறவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள். இந்த கேள்வி என்னுடைய மண்டைக்குள்ளே என்னுடைய நெஞ்சுக்குள்ளே திணித்தவர் என்னுடைய ஆசான் பெரியார் அல்லவா?.

பெரியார் பிறக்காவிட்டால் நாம் அடிமைகளிலே அடிமையாக இருந்திருப்போம். சிலர் ஆண்டவர்களாக இருப்பார்கள். சிலர் உயர் சாதிக்காரர்களாக வாழ்வார்கள். நாம் மடிந்து மடிந்து அடிமையிலும் கீழாய் நலிந்து போய் கிடப்போம். பெரியார் பிறப்பதற்கு முன்பு வரலாற்றை எண்ணிப்பார்த்தால் என்ன நிலைமை? அந்த நிலைமை எல்லாம் தடுத்து நிறுத்தி மாபெரும் தியாகத்தை செய்தவர் பெரியார். நமக்காக அல்லவா தந்தை பெரியார் தியாகியாக மாறினார். வேதனைகளை எல்லாம் சுமந்தார். இன்றைக்கு சில ஏடுகளிலே பார்த்தேன். இந்தி மீண்டும் வருவதற்கான ஆயத்தங்கள் நடைபெறுகின்றன என்று சில ஏடுகளிலே செய்தி வந்திருக்கிறது. விடுதலை சிறுத்தை இயக்கத்தினர் தங்களது எதிர்ப்பைக்காட்டி இருக்கிறார்கள் என்ற செய்தியை பார்த்தேன். அந்த செய்தி ஒரு சிறிய அளவில் வந்திருந்தது. அது சிறிய அளவிலே செய்தியாக இருந்தாலும், சிறு பொறி பெரும் தீ என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அந்த எண்ணத்தை எனக்கு உருவாக்கியது யார்? இந்த எண்ணத்தை எனக்கு 14 வயதிலேயே பெரியார் உருவாக்கினார். 84 வயது வரையில் அந்த உறுதி என்னுடைய நெஞ்சிலே இருக்கிறது என்றால், அதற்கு காரணம், பெரியார், பெரியார், பெரியார்தான்.

பெரியாருக்காக படம் எடுத்தோம், பாடம் பெறுவோம். நாம் பெற்ற பாடத்தை இந்த பார் முழுவதும் பரப்புவோம். அந்த பாடம் பரவினால்தான் பகுத்தறிவு ஜோதி கிளம்பினால்தான், மனிதன் மனிதனாக வாழமுடியும் என்பதை மறவாமல் நடைபோடுவோம்.

அடிக்கல்

பெரியார் திடலில் இனமுரசு சத்யராஜ் கூடம் ஒன்று உருவாக்கப்படுகிறது. இதற்கு விழா மேடையில் முதல்-அமைச்சர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார். விழாவில் பெரியார் படத்தில் நடித்த நடிகர் சத்யராஜுக்கு, பெரியார் இறுதிவரை அணிந்திருந்த பச்சைக்கல் மோதிரத்தை முதல்-அமைச்சர் கருணாநிதி அணிவித்தார். பெரியார் படத்தில் நடித்த நடிகர்கள் சந்திரசேகர், நிழல்கள் ரவி, ஒய்.ஜி.மகேந்திரன், நடிகை மனோரமா, இயக்குனர் ஞான.ராஜசேகரன், ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சான், படத்தொகுப்பாளர் லெனின் மற்றும் கலைஞர்களுக்கு பெரியார் விருது வழங்கப்பட்டது.

விழாவில் நடிகர் சத்யராஜ் பேசியதாவது:-

கருணாநிதி நடித்து காட்டினார்

கருணாநிதி முதல்-அமைச்சராக இல்லாமல் இருந்திருந்தால் பெரியார் படம் வந்திருக்காது. பெரியார் படத்தில் நான் சிறப்பாக நடிப்பதற்கு காரணமே முதல்-அமைச்சர் கருணாநிதிதான். கருணாநிதி எழுதிய பராசக்தி, மனோகரா போன்ற படங்களின் கதை வசனத்தை நான் சிறப்பாக பேசியதன் காரணமாகத்தான் பெரியார் அணிந்த பச்சைக்கல் மோதிரம் என்னுடைய கைக்கு வந்துள்ளது. பெரியார் எப்படியெல்லாம் பேசுவார் என்பதை முதல்-அமைச்சர் கருணாநிதி என்னிடம் நடித்து காட்டினார். எனவேதான் பெரியார் படத்தில் என்னால் சிறப்பாக நடிக்க முடிந்தது.

பெரியாரின் கருத்தை நடைமுறைப்படுத்தி வருபவர் கருணாநிதிதான். பெரியாருடைய கனவுகளை நினைவாக்கிக் கொண்டு வருகிறார். பெரியார் கருத்துகள் வளம்பெற்றால்தான் தமிழகம் வளம்பெறும். எனக்கு கிடைத்திருக்கிற இந்த பெயரை எதிர்காலத்தில் காப்பாற்றுவேன்.

இவ்வாறு சத்யராஜ் பேசினார்.

பாக்கியமாக கருதுகிறேன்

நடிகை மனோரமா பேசும்போது, நடிகர் சிவாஜி கணேசன் பெரியாராக நடிக்க ஆசைப்பட்டார். ஆனால் அது நிறைவேறவில்லை. ஆனால் சத்யராஜ் பெரியாராகவே வாழ்ந்து காட்டியுள்ளார் என்றும், நான் ஆயிரத்துக்கு மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும், பெரியாரின் அம்மாவாக நடித்ததை பாக்கியமாக கருதுகிறேன் என்றும் கூறினார்.

நடிகை குஷ்பு பேசும்போது, "நான் 150-க்கு மேற்பட்ட தமிழ்ப்படங்களில் நடித்திருக்கிறேன். பெரியார் படத்தில் நடிப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது. இந்த படத்தில் நடித்த அனைவருமே சிறப்பாக நடித்தனர். எனவே பெரியார் படம் 95 சதவீதம் வெற்றி அடைந்துள்ளது. படம் வெற்றி அடைவதற்கு முக்கிய காரணம் நடிகர் சத்யராஜ் தான்'' என்று கூறினார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசுகையில் திரைப்பட பூஜை ஏதும் நடத்தாமல் செவ்வாய்க்கிழமை வெளியான இந்தப்படம் வெற்றி பெற்றுள்ளதே, பெரியாரின் கொள்கைக்கு கிடைத்த வெற்றி என்றார்.

(நன்றி: தினத்தந்தி, தினமணி )

6 Comments:

Hari said...

/* இந்த பொற்காலத்துக்கு காரணகர்த்தாவாக இருப்பவன் பூணூல் அணியாத ஒரே குறையினால் தான். இதை பொற்காலம் என்று மறுக்கிறவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்.*/

ராமதாஸை சொல்கிறாரா?

ஹரன்பிரசன்னா said...

//திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசுகையில் திரைப்பட பூஜை ஏதும் நடத்தாமல் செவ்வாய்க்கிழமை வெளியான இந்தப்படம் வெற்றி பெற்றுள்ளதே, பெரியாரின் கொள்கைக்கு கிடைத்த வெற்றி என்றார்.
//

படம் இதனால்தான் தோற்றது என்று பிறர் சொல்ல இவரே வழிசெய்கிறார்...

Subramanian said...

Ammam.......பொற்காலம் enna ennadhu???

Since, I was not come across any such !!!

Anonymous said...

கருணாநிதிக்கு அண்ணா போட்ட கணையாழி பற்றி கண்ணதாசன் தன் வனவாசத்தில் எழுதியிருக்கிறார். உழைத்தது எல்லாம் நான் மோதிரம் மட்டும் கருணாநிதிக்கா என்று அண்ணாத்துரையிடம் போய் கண்ணதாசன் கோபமாகக் கேட்டுள்ளார். அதற்கு அண்ணாத்துரை முதலி " ஏன் நீயும் கடையில் போய் ஒரு மோதிரத்தை வாங்கி என்னிடம் கொடுத்திருந்தால் உனக்கும் கூட மேடையில் போட்டிருபேனே" என்றாராம். ஆக அது கருணாநிதியே வாங்கிக் கொடுத்து அண்ணாத்துரை வாங்கிக் கொடுத்துப் போட்டது போன்ற ஒரு ஃப்ராடுத்தனம். வெளூத்ததெல்லாம் பால் (அல்லது கள்) என்று நினைக்கும் கண்ணதாசனுக்கு அந்த அரசியல் எல்லாம் புரியாததனால் ஓரம் கட்டப் பட்டார்.

கவுண்டமணி said...

மஞ்சள் துண்டு போட்டால் பொற்காலம். கருப்பு துண்டு போட்டால் கற்காலம். ஜால்ரா போட்டால் எதிர்காலமுங்கண்ணா.

Subramanian said...

//கவுண்டமணி said...
மஞ்சள் துண்டு போட்டால் பொற்காலம். கருப்பு துண்டு போட்டால் கற்காலம். ஜால்ரா போட்டால் எதிர்காலமுங்கண்ணா.
//

Really Funny :-))))