பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, June 22, 2007

சிவாஜி விமர்சனம் - குமுதம்

குமுதத்தில் வந்த சிவாஜி விமர்சனம்.

"பேரைச் சொன்னாலே அதிருதுல" _ சிவாஜியில் ரஜினி அடிக்கடி சொல்லும் டயலாக் இது. உண்மைதான். தியேட்டர் அதிர வேண்டுமென்றே ஒரு படம் எடுத்திருக்கிறார்கள். நோக்கம் நிறைவேறியிருக்கிறது.

அமெரிக்காவில் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் ஆர்க்கிடெக்ட்டாக சம்பாதித்த கோடிகளுடன் இந்தியா திரும்பும் ரஜினி, அந்தப் பணத்தைக் கொண்டு இலவசக் கல்வி கொடுக்க விரும்புகிறார். அரசாங்க அனுமதி வாங்கி, சம்பாதித்த பணம் முழுவதையும் கல்வி நிறுவனங்களில் முதலீடு செய்கிறார். ஆனால், ஊழல்வாதிகள் அவரை வளரவிட மறுக்கிறார்கள். அவரை நடுத்தெருவுக்குக் கொண்டு வந்து விடுகிறார்கள். வில்லன் அவர் கையில் ஒரு ரூபாய் பிச்சை போட்டு ‘பிழைத்துக் கொள்’ என்று சொல்லிப் போகிறான். அந்த ஒரு ரூபாயைக் கொண்டு மீண்டும் கல்வி, வேலை, மருத்துவம் என்று தன் சாம்ராஜ்யத்தை நிறுவுகிறார். இதை எப்படிச் சாதிக்கிறார் என்பதுதான் திரைக்கதை.

கதை, திரைக்கதையெல்லாம் படத்தில் முக்கியமில்லை. ஒரே ஒரு விஷயத்தைத்தான் இயக்குநர் நம்பியிருக்கிறார். ரஜினி. நம்பிக்கை வீண் போகவில்லை.

ரஜினியின் சுறுசுறுப்பும் விறு விறுப்பும் பிரமிக்க வைக்கிறது. ஆடுகிறார், பாடுகிறார், அடிக் கிறார், அசத்துகிறார். கண்களின் காந்த சக்தி இன்னும் அப்ப டியே. உதட்டோர காதல் சிரிப்பும் ஆக்ரோஷ அதிரடிச் சிரிப்பும் ரஜினி ரசிகர்களை பரவசப்படுத்துகின்றன. அதுவும் அந்த மொட்டைத் தலையில் அவர் காட்டும் ஸ்டைல் கலக்கல். சுயிங்கத்தை கையில் தட்டி வாயில் போடுவதும், நாணயத்தை அப்படி சுண்டி இப்படி சுண்டி பாக்கெட்டில் போடுவதும் விசிலடிக்க வைக்கின்றன.

முதல் பாதியில் வரும் காமெடி கலந்த காதல் காட்சிகள் நிறைய சிரிக்க வைக்கின்றன. அவ்வப்போது அபத்தத்தின் எல்லையையும் தொட்டுவிட்டு வருகின்றன. காதலையும் தன் மாற்றி யோசிக்கும் ஃபார்முலாபடி சொல்லியிருக்கிறார் ஷங்கர். வழக்க மாய் ஹீரோயின்தான் ரஜினியைத் துரத்தித் துரத்தி காதலிப்பார். இங்கே ரஜினி, ஸ்ரேயாவைத் துரத்துகிறார்.

முதல் பாதி காதல் காமெடி என்றால், இரண்டாவது பாதி ஆக்ஷன் அதிரடி.

கார்கள் சீறுகின்றன. அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் பண மூட்டைகள் மாறுகின்றன. ஒரு ரூபாய் கோடி ரூபாய்களாய் குவிகிறது. கிராஃபிக்ஸில் கட்டடங்கள் எழும்புகின்றன. சட்சட்டென்று ஹெலிகாப்டர்கள் இறங்குகின்றன. கிங்காங் வாய்க்குள் ஜீப் பறந்து போய் நுழைகிறது. வில்லன்கள் சுழன்று சுழன்று விழுகிறார்கள். சிவாஜி _ எம்.ஜி.ஆர். ஆகிறார். ஸ்டைல் முடி மொட்டை ஆகிறது. பண நோட்டுக்கள் பறக்கின்றன. கறுப்புப் பணக்காரர்கள் (அது என்ன, கறுப்புப் பணம் என்றாலே, அரசியல்வாதிகளும் தொழிலதிபர்களும் தானா? சினிமாகாரர்கள் கிடையாதா?) பணம் கட்டுக்கட்டாய் வெளியே வருகிறது.

நமது காதுகளில் சுற்றப்படும் பூக்களைக் கூட கவனிக்க விடாமல் படம் படுவேகமாக நகருகிறது. தியேட்டருக்கு வெளியே வந்து யோசிக்கும்போதுதான் காதுல பூ சமாச்சாரம் தெரிகிறது.

‘‘கூல்’’ இதுவும் படத்தில் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை. அதனால் டென்ஷனாக வேண்டாம். கூல். இது லாஜிக் பார்க்க வேண்டிய படமல்ல. பார்க்க வேண்டியது இரண்டு விஷயங்களைத்தான். ரஜினியின் ஸ்டைல், ஷங்கரின் பிரமாண்டம். இரண்டும் பிரமாதமாய் இருக்கின்றன.

‘ஒரு கூடை சன்லைட்’ பாடல் காட்சி தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல். காமிரா கோணங்கள், எடிட்டிங், சூழல், ரஜினி_ஸ்ரேயாவின் ஆட்டம் என மலைக்க வைக்கிறது. வழக்கமாய் முதலிரவுக் காட்சிகளில் பாலும் பழமும் வைத்து டூயட் பாடுவார்கள். இங்கும் ஷங்கர் மாற்றி யோசித்திருக்கிறார். மைக்கேல் ஜாக்சனின் ‘ப்ளட் ஆன் தி டான்ஸ் ஃப்ளோர்’ ஜாடையில் ரஹ்மான் பாடியிருக்கும் ‘தீ தீ’ பாடலுக்கு ‘டெஸ்பரடோ’ பட துப்பாக்கி வில்லன்கள் ஸ்டைலில் காட்சியமைத்திருக்கிறார் ஷங்கர். அது ஒரு கிராஃபிக்ஸ் அற்புதம். ஷங்கர் இந்தப் படத்தில் புகுத்தியிருக்கும் தொழில்நுட்பங்களைப் பற்றி தனிப் புத்தகமே போடலாம். ஷங்கருக்கும், துணிந்து செலவு செய்த தயாரிப்பாளருக்கும் சபாஷ்.

பிரமாண்ட பாடல் காட்சிகளுடன் போட்டி போடுகின்றன பாடல் வரிகள். ‘தீ,தீ’ வாலியின் இளமை அதிரடி. ‘சாஹானா’ வைரமுத்துவின் காதல் சரவெடி, ‘ஒரு கூடை சன்லைட்’ பா.விஜய்யின் ஃபாரின் வெடி. ‘பல்லேலக்கா’ நா.முத்துக்குமாரின் இயற்கை வெடி.

வெள்ளை வேட்டி சட்டையில் மீசையில்லாமல் வரும் சுமன் படத்தின் இன்னொரு அதிசயம் ஆறடி உயரம் ஆஜானுபாகுவான தேகம் கொண்டு அதிகம் பேசாமல் மிரட்டுகிறார். இனி தமிழ்ப் படங்களில் இவரை நிறைய பார்க்கலாம்.

ஸ்ரேயா ஒரு ஆச்சரியம். பொதுவாய் தமிழ் சினிமா ஹீரோயின்கள் அழகாயிருப்பார்கள். இவர் நடிக்கவும் செய்கிறார். பாடல் காட்சிகளுக்கு அத்தனை செலவு செய்தவர்கள், ரசிகர்கள் மனமறிந்து ஸ்ரேயாவின் மேலாடைக்கு அதிகம் செலவழிக்கவில்லை.

ரஜினியின் வலது கரமாய் விவேக். அவர்தான் படத்தின் காமெடிக்கரம். உதவிக்கரங்களாய் மணிவண்ணன், பட்டிமன்ற பேச்சாளர்கள் சாலமன் பாப்பையா, ராஜா.

ஏ.ஆர்.ரஹ்மானின் ஆர்ப்பாட்டமான இசை, சுஜாதாவின் புத்திசாலித்தனமான வசனங்கள், கே.வி.ஆனந்தின் அட்டகாச ஒளிப்பதிவு, ஆண்டனியின் அதிவேக எடிட்டிங், தோட்டாதரணியின் பிரமாண்ட அரங்குகள்... என சிவாஜியின் டாப் டென் லிஸ்ட் போட்டுக் கொண்டே போகலாம்.

படத்தில் இத்தனை ப்ளஸ்கள். ஆனால் ஒரே ஒரு மைனஸ், திரைக்கதை. படத்தைப் பார்க்குபோது ஜென்டில்மேன், இந்தியன், முதல்வன், அந்நியன் என பல படங்கள் நினைவுக்கு வருவது திரைக்கதையின் பலவீனம். மாத்தி யோசிங்க, ஷங்கர்.

சிவாஜி_நோ லாஜிக், ஒன்லி ரஜினி மேஜிக்.
(நன்றி: குமுதம்)

2 Comments:

Anonymous said...

idlyvadia i am really angry that you nor any other magazine is able to see how offensive the concept of dark girls being insulted is.the movie is racist, we are more color consious than the whitres. shame on us. idhula vera pengalai madhikkum tamizhagam?what a joke.

Boston Bala said...

Where is 'Kalki' review of Sivaji :)