பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, May 03, 2007

எது உண்மை ?

"தமிழக மீனவர்களைச் சுட்டது விடுதலைப் புலிகளாகவும் இருக்கலாம்'' – என்று
இந்திய கடற்படை தளபதி சுரேஷ் மேத்தா கூறினார். அதன் பின் வந்த செய்திகள்/அறிக்கைகள்...


ராமதாஸ்
அன்று
""இந்தியக் கடல் எல்லைப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்கிச் சாகடிக்கும் துயரச் சம்பவங்கள் கடந்த சில
வருடங்களாகவே தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது. அண்மை காலத்தில் இந்த சம்பவம் அதிகரித்திருக்கிறது"

இன்று
"தமிழக மீனவர்களை விடுதலை புலிகள் பிடித்து வைத்திருப்பதாக வும், மீனவர்கள் சிலரை அவர்கள் தான் சுட்டு கொன்றார்கள் என்றும் தமிழக காவல்துறை சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதே என்று குறிப்பிட்டு டாக்டரின் கருத்தை கேட்டதற்கு அவர் பதில் அளிக்கையில் டிஜிபி கூறியது மர்ம நாவல் போல் உள்ளது. அவர் கூறியது நம்பும்படியாக இல்லை. அதற்கு காரணம் எனக்கு தெரியும் ஆனால் சொல்லக்கூடாது"


ஜெயலலிதா

அன்று
""மீனவர்கள் 29.3.2007 அன்று இந்தியப் பகுதியில் உள்ள கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிகிறது.

""மத்திய – மாநில அரசுகள் விழிப்பாகவும், உறுதியாகவும் இந்த சம்பவங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்''.

இன்று
விடுதலைப்புலிகளுக்கு, திமுக அரசு எப்போதும் ஆதரவு அளிக்காது என்று சட்டமன்றத்தில் கருணாநிதி சொன்னாலும், விடுதலைப் புலிகள் மீதும், அதன் இயக்கத்தின் மீதும் கருணாநிதிக்கு எப்போதும் பற்றும், பாசமும் இருக்கிறது என்பதற்கு காவல்துறை மானியக் கோரிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவலே போதுமான ஆதாரமாக இருக்கிறது. இச்செயல் தமிழ்நாட்டிற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் செயலாகும். இது கடுமையான கண்டனத்திற் குரியது

கலைஞர்

அன்று

""குமரி கடலில் ஐந்து மீனவர்கள் மீன் பிடிக்க அவர்கள் சென்றபோது, சிங்கள ராணுவ வெறியர்களால் சுட்டு வீழ்த்தப்பட்ட கொடுமை பற்றியும், அவர்களை இழந்த குடும்பங்களுக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமை பற்றியும், இங்கே நம்முடைய உறுப்பினர்கள் விளக்கங்களைத் தந்திருக்கிறார்கள்...

"...ஐந்தாறு முறை நம்முடைய மீனவர்கள் சுடப்பட்டார்கள். அவர்களுடைய படகுகள் கவிழ்க்கப்பட்டன. ஒரு சிலர் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி வரிசையாக, படிப்படியாக வந்தபோதுதான் நான் சொன்னேன்: இனியும் இதைப் பார்த்துக் கொண்டு எங்கள் கரங்கள் மீன்களை மாத்திரம் பிடித்துக் கொண்டிருக்காது என்று சொன்னேன்''.

13.3.2007ல் நிருபர்களை முதல்வர் கருணாநிதி சந்தித்தபோது, ""இலங்கை அரசின் சார்பில் இத்தகைய சம்பவங்களுக்கு தாங்கள் காரணம் அல்ல என்றும், விடுதலைப் புலிகள் தரப்பில் செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் சொல்லி இருக்கிறார்களே?'' என்று நிருபர்கள் தரப்பில் கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த முதல்வர், ""இந்தக் கருத்தை பாதிக்கப்பட்ட மீனவர்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லையே''

இன்று

"...இலங்கை கடல் படையால்தான் இது போன்ற சம்பவங்கள் நடப்பதாக நாம் கருதிக்கொண்டிருக்கும் நிலையில் விடுதலைப்புலிகள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது நம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்"

பழ.நெடுமாறன்

""...தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லும்போது, சிங்களப் படைகளால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். ஆனால் இந்திய கடற்படை தளபதி சுரேஷ் மேத்தா, மீனவர்களை சுட்டது விடுதலைப் புலிகளாக இருக்கலாம் என்று கூறுகிறார்... பெரிய பதவியில் இருப்பவர்கள் உள்நோக்கத்துடன் பேசுவதை, பாதுகாப்பு அமைச்சகம் கண்டிக்க வேண்டும்''.

வைகோ
அன்று
""இலங்கை கடற்படை நாள்தோறும், நமது கடலில் தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்வதை மத்திய அரசு வேடிக்கை பார்ப்பது, தமிழ் மக்களுக்குச் செய்யும் துரோகமாகும். தமிழக மீனவர்களைக் காக்கத் தவறும் இந்திய அரசு, சிங்களரின் இனக் கொலைக்கு மறைமுகமாக உதவிடும் வகையிலேயே செயல்பட்டு வருகிறது.

இன்று
தமிழக மீனவர்களின் நலனில், பாதுகாப்பில் அதிக அக்கறையும், பொறுப்பும் ம.தி.மு.க.வுக்கு உண்டு. தமிழக மீனவர்களின் நலன் குறித்தும், ஆழ்கடலில் அவர்களுக்கு எதிராக நடக்கும் தாக்குதல்கள் குறித்தும் நாடாளுமன்றத்தில் பலமுறை பேசியுள்ளேன்.

பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங்கை நேரடியாக சந்தித்தும் இது தொடர்பாக கோரிக்கை அளித்தேன். குமரி மீனவர்களின் நலன்காப் பதில் மத்திய அரசுக்கு ஒரு பொறுப்பு உண்டு. ஆனால் இன்றைய சம்பவங்கள் ஒரு உள்நோக்கத்தோடு வஞ்சகமாக புலிகள் மீது வீண்பழிபோடும் கபட நாடகத்தை போலீஸ்துறை மூலம் தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது.உண்மைஒருநாள் வெளிச்சத்திற்கு வரும்.

விடுதலைப்புலிகளை ஆதரிக்கிறோம். புதிதாக எதுவும் சொல்லவில்லை. விடுதலைப்புலிகளை தொடர்ந்து ஆதரிப்பதில் எங்கள் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.

இல.கணேசன்
தமிழக மீனவர்கள் மீது விடுதலைப்புலிகள் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவம் அவர்களுக்கு தமிழக மக்களிடையே பின்னடைவை ஏற்படுத்தும்.

"விடுதலைப்புலிகளை ஆதரித்து வைகோ பேசிவரும் விஷயத்தில் சட்டம் தன்கடமையை செய்ய வேண்டும். மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தவுடன் பொடா சட்டம் கொண்டு வரப்படும்."


கிருஷ்ணசாமி
விடுதலைப்புலிகளை ஆதரித்து அறிக்கை வெளியிட்டுள்ள வைகோவை அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து ஜெயலலிதா வெளியேற்றுவாரா? - காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி
( விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிவரும் வைகோ மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி, கருணாநிதியை சந்தித்து வற்புறுத்தினார்.)

வைகோ
விடுதலைப்புலிகளை ம.தி.மு.க. ஆதரிப்பதால் அ.தி.மு.க.-ம.தி.மு.க. கூட்டணி இடையே எந்த நெருடலும் ஏற்படவில்லை. கூட்டணி பலமாக இருக்கிறது. மைனாரிட்டி தி.மு.க. அரசுக்கு எதிராக மக்கள் சக்தியை ஒன்று திரட்டும் பணியில் இரு கட்சிகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

ஞான சேகரன்
"விடுதலைப்புலிகளை நாங்கள் தொடர்ந்து ஆதரிப்போம் என்று சொல்கின்ற ம.தி.மு.க.வினுடைய பொதுச்செயலாளர் வைகோவை கைது செய்ய வேண்டும்"
( மத்திய அரசிடம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் - கலைஞர் பதில்)

இளங்கோவன்
கேள்வி:- விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசிவரும் வைகோ மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நினைக்கின்றீர்களா?

பதில்:- விடுதலைப் புலிகள் 12 தமிழக மீனவர்களை கடத்தி சிறையில் வைத்துள்ளனர் என்பதை தமிழக அரசே காவல் துறைமூலம் உறுதி செய்துள்ளது. இதன் பின்பும் வைகோ போன்றவர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசுவது தடுக்கப்படவேண்டும். வைகோ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக தொடர்ந்து பேசினால் முதல்- அமைச்சர் கருணாநிதி, வைகோ மீது சட்டபடியான நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

ஜி.கே.வாசன்
விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் வைகோ செயல்பாடு ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. வன்முறைக்கு இந்தியாவில் இடம் கிடையாது. விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்கள் யாராக இருந்தாலும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். வன்முறையாளர்களுக்கு துணை போகிறவர்களை தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பார்கள். குறிப்பாக இளம் தலைவர் ராஜீவ்காந்தி தமிழ்நாட்டில் ரத்தம் சிந்தியதை நாங்கள் இன்னும் மறக்கவில்லை.

வைகோ
காங்கிரஸ் தரப்பில் இருந்து ஒரு சலசலப்பு எழுகிறது. புலிகளை ஆதரிக்கும் ம.தி.மு.க.வை தடை செய்ய வேண்டுமாம். விடுதலைப்புலிகளை நாங்கள் என்றும் ஆதரிப்போம்.

விடுதலை புலிகள்
தமிழக மீனவர்கள் 12 பேரை கடத்தி சிறை வைக்கவில்லை என்றும், 5 தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்லவில்லை என்றும் விடுதலைப்புலிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
( முன்பு ராஜிவ் காந்தி இறந்த போதும் முதலில் மறுத்தார்கள் )


டி.ஜி.பி. முகர்ஜி
12 மீனவர்களை கடத்தியது பற்றியும், 5 மீனவர்கள் சுட்டுகொல்லப்பட்டது பற்றியும் கியூ பிரிவு போலீஸ் விசாரணையில் ஏற்கனவே பிடிபட்ட விடுதலைப்புலிகளின் கடல் புலிகள் உறுதியாக வாக்குமூலம் கொடுத்துள்ளனர். அந்த வாக்குமூல விவரம் வீடியோ கேசட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வைகோ
கியூ பிராஞ்ச் போலீசார் விடுதலைப்புலிகள் மீது பழிபோட இப்படி வாக்குமூலம் தயாரித்திருக்கிறது என்று நான் குற்றம் சாட்டுகிறேன். பயமுறுத்தி அல்லது வேறு வகையில் நிர்பந்தப்படுத்தி படகில் பிடிபட்டவர்களை வாக்குமூலம் கொடுக்க செய்திருக்கலாம். இப்படியான வாக்குமூலத்தை போலீசார் மாஜிஸ்திரேட்டு முன் கூட பதிவு செய்திருக்கலாம். அதை நம்ப தயார் இல்லை.


இன்றைய செய்தி

விடுதலைப்புலிகள் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு விஷயம் கவனிக்கப்படவேண்டியதாக உள்ளது. அவர்கள் நேரடியாக இந்த இரண்டு சம்பவங்களிலும் தங்களுக்கு தொடர்பு இல்லை என்று மறுக்கவில்லை. அதுபற்றிய தகவல்கள் எங்களுக்கு வரவில்லை என்றும், அது தொடர்பாக எங்கள் இயக்கத்தின் சம்பந்தப்பட்ட தளபதியிடம் விசாரணை நடத்துகிறோம் என்றுதான் விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர்.

பரபரப்பான தகவல்கள்

உண்மையில் இந்த இரண்டு சம்பவங்களிலும் நடுக்கடலில் உண்மையாக நடந்தது என்ன? என்பதை பற்றி பரபரப்பான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இந்த இரண்டு சம்பவங்களிலும் தொடர்பு உள்ளது என்பதை தமிழக கியூ பிரிவு போலீசார் தெரிவித்த தகவல் அடிப்படையில்தான் டி.ஜி.பி. முகர்ஜி அறிக்கை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் விடுதலைப்புலிகளின் கடல் புலிகள் பிரிவைச் சேர்ந்த 6 பேர் இந்திய கடலோர காவல் படையினரிடம் பிடிபட்டனர். அவர்கள் 6 பேரிடமும் கியூ பிரிவு போலீஸ் டி.ஐ.ஜி. விசுவநாதன் தலைமையில் நடத்திய விசாரணையில்தான் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு தொடர்பு உள்ளது என்பது ஆதாரங்களோடு உறுதிப்பட தெரியவந்துள்ளது.

பிடிப்பட்ட 6 கடல் புலிகளின் பெயர் விவரம் வருமாறு:-

1. ராபின்சன்
2. போனி பாஸ்
3. அருள்
4. செல்வக்குமார்
5. அருள் ஞானதாஸ்
6. ரவிக்குமார்

வீடியோ

இவர்கள் 6 பேரிடமும் கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தி அவர்களது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். அவர்கள் வாக்குமூலம் கொடுத்ததை வீடியோ படமாகவும் எடுத்துள்ளனர்.

இந்த 6 பேரின் வாக்குமூலம்தான் 12 மீனவர்கள் கடத்தப்பட்ட சம்பவத்திற்கும், 5 மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு தொடர்பு உள்ளது என்பதை நிரூபித்துள்ளது.

இந்த 6 பேரின் குழுவின் தலைவர் ராபின்சன் ஆவார். போனி பாஸ் துணைத் தலைவராவார். இவர்கள் இரண்டு பேரின் வாக்குமூலத்தையும் கியூ பிரிவு போலீசார் முக்கிய ஆதாரமாக வைத்துள்ளனர்.

வாக்குமூலம்

இவர்களில் ராபின்சன் கொடுத்த வாக்குமூலம் விவரம் வருமாறு:-

எங்கள் இயக்கத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒரு பணி கொடுக்கப்பட்டிருக்கும். அந்த பணியைத்தான் அவர்கள் செய்ய வேண்டும். பயிற்சியின் போது நாங்கள் தமிழக மக்களுக்கு எதிராக எதையும் செய்யக்கூடாது என்றுதான் சொல்லி தருவார்கள். நாங்களும், அதை முடிந்த வரை கடைபிடித்து வந்துள்ளோம்.

விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்கள் கப்பல்கள் மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்படுகின்றன. விடுதலைப்புலிகளுக்கு சொந்தமாக கப்பல்கள் உள்ளன. முதலில் ஒரு பெரிய கப்பலில் ஆயுதங்களை கொண்டு வருவார்கள். அந்த கப்பல் நடுக்கடலில் நிறுத்தப்பட்டிருக்கும். பெரிய கப்பலில் உள்ள ஆயுதப் பெட்டிகள் இன்னொரு சிறிய கப்பலுக்கு மாற்றப்படும். அந்த சிறிய கப்பலில் உள்ள ஆயுதங்களை பின்னர் அதிவிரைவு இயந்திர படகுகள் மூலம் விடுதலைப்புலிகள் முகாமுக்கு நாங்கள் எடுத்துச் செல்வோம்.

படகுகளில் ஏற்றிச் செல்லும் ஆயுதங்களை இலங்கையில் மன்னார் அருகேயுள்ள கொக்கு புதையன் என்ற இடத்தில் உள்ள விடுதலைப்புலிகள் முகாமில் ஒப்படைப்போம்.

இந்த ஆயுதங்களை படகில் ஏற்றிச் செல்வதற்கு ஒவ்வொரு முறையும் விடுதலைப்புலிகளின் கடல் புலிகள் பிரிவைச் சேர்ந்த 6 பேர் அனுப்பி வைக்கப்படுவார்கள். ஒரு முறை சென்ற குழுவினர் அடுத்த முறை செல்ல மாட்டார்கள்.

சண்டை போட மாட்டோம்

இவ்வாறு படகில் நாங்கள் ஆயுதங்களை எடுத்து வரும்போது அவற்றை மீன்கள் என்று சொல்லிதான் எடுத்து வருவோம். நாங்களும் இலங்கை தமிழ் மீனவர்கள் என்றுதான் சொல்வோம். எங்கள் ஆயுதப் படகில் மீன்பிடி வலைகளும் இருக்கும். சில நேரம் தப்பிப்பதற்காக மீன்களையும் வைத்திருப்போம்.

இவ்வாறு ஆயுதங்களை கடத்தி வரும்போது தமிழக மீனவர்கள் எங்களை பார்ப்பதுண்டு. ஆனால் நாங்கள் அவர்களிடம் ஒருபோதும் சண்டை போட்டது கிடையாது. அவர்களை சகோதரர்களாகவே மதிக்கிறோம்.

சில நேரம் நாங்கள் மீன்களை கூட அவர்களுக்கு கொடுத்து அனுப்பி வைப்போம். கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு பெரிய கப்பலில் ஆயுதங்கள் வந்திருந்தன. அந்த கப்பலில் உள்ள ஆயுதங்களை மரியா என்ற இயந்திர படகு ஒன்றில் ஏற்றி கொக்கு புதையன் முகாமுக்கு கொண்டு வரும் பணி நடந்து கொண்டிருந்தது.

முதலில் மனாளன் என்பவர் தலைமையில் 6 பேர் கொண்ட கடல் புலிகள் மரியா படகில் ஆயுதங்களை எடுத்து வந்தனர். அப்போதுதான் கன்னியாகுமரியைச் சேர்ந்த 9 மீனவர்களும் அவர்களை பார்த்துள்ளனர். முதலில் அவர்களுக்குள் சண்டை ஏதும் நிகழவில்லை. கன்னியாகுமரி மீனவர்கள் 9 பேரும் கடல் புலிகளிடம், "கடந்த ஒரு வாரமாக நாங்கள் கடலில் மீன் பிடிக்கிறோம். எங்களுக்கு மீன்கள் அதிகளவில் சிக்கவில்லை. உங்கள் படகில் மீன்கள் இருந்தால் கொடுங்கள்'' என்று கேட்டு உள்ளனர். கேட்டதோடு நிறுத்தாமல் அவர்களுடைய படகை கடல் புலிகளின் படகோடு சேர்த்து கட்டினார்கள். பின்னர் கடல் புலிகளின் படகில் ஏறி குதித்து அவர்கள் வைத்திருந்த வலைகளையெல்லாம் இழுத்து போட்டு மீன்கள் உள்ளதா என்று ஆராய்ந்து இருக்கிறார்கள்.

அப்போது ஆயுதம் வைத்திருந்த பெட்டிகளை அவர்கள் பார்த்து விட்டனர். அந்த பெட்டிகளில் ஏ.கே. 47 இயந்திர துப்பாக்கிகள், பயங்கர குண்டுகள், மனித வெடிகுண்டு ஜாக்கெட்டுகள் போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்தன.

கோபம் கொண்டு சுட்டனர்

கன்னியாகுமரி மீனவர்கள் நடந்து கொண்ட விதம் கடல் புலிகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ஆயுதம் கடத்துவதை அவர்கள் தெரிந்து கொண்டார்கள் என்று கடல்புலிகள் நினைத்திருக்கிறார்கள்.

மேலும் கன்னியாகுமரி மீனவர்களை உளவாளிகளாக இருக்கலாம் என்றும் சந்தேகித்தனர். இதனால் அவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி ஓடி கொக்கு புதையன் முகாமுக்கு வந்து விட்டனர்.

அடுத்த கட்டமாக அதே மரியா படகில் ஆயுதங்களை ஏற்றி வருவதற்கு நாங்கள் 6 பேரும் புறப்பட்டோம். கொக்கு புதையன் முகாமின் கமாண்டராக மைக் ஆல்பா என்பவர் செயல்பட்டு வந்தார். நாங்கள் புறப்பட்டபோது அவர் எங்களிடம் ``மனாளன் குழுவினர் போனபோது தமிழக மீனவர்களுடன் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. துப்பாக்கி சூடும் நடந்துள்ளது. எனவே நீங்கள் கவனமாக போய் வாருங்கள்'' என்று சொல்லி அனுப்பினார்.

மேலும் படகில் உள்ள மரியா என்ற எழுத்தை அழித்து விடும்படியும் அவர் தெரிவித்தார். அவர் சொன்னபடி நடப்பதாக கூறிவிட்டு நாங்கள் ஆயுதங்கள் ஏற்ற கடலுக்குள் வந்துவிட்டோம். மரியா என்ற எழுத்தை அழிப்பதற்கு முயற்சித்தோம். ஆனால் அது அழியவில்லை. இந்தநிலையில் அந்த படகும் பழுதாகிவிட்டது. இதனால் தமிழக கடல் எல்லைக்குள் நாங்கள் வந்து விட்டோம்.

அங்கே தமிழக மீனவர்கள் 6 பேர் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அவர்கள் வந்த படகின் உதவியோடு நாங்கள் மீண்டும் இலங்கைக்குச் செல்ல முயற்சித்தபோது இந்திய கடற்படையினர் எங்களை சுற்றி வளைத்து பிடித்து விட்டனர்.

படகில் மரியா என்ற எழுத்து இருந்ததால் நாங்கள்தான் கன்னியாகுமரி மீனவர்கள் 5 பேரை சுட்டவர்கள் என்று கடற்படையினர் சந்தேகப்பட்டனர். ஆனால் நாங்கள் அவர்களிடம் கடல் புலிகள் என்று சொல்லவில்லை. இலங்கை தமிழ் மீனவர்கள் என்றுதான் சொன்னோம். இதற்கிடையில் கியூ பிரிவு போலீசார் எங்களிடம் விசாரித்ததில் உண்மையை சொல்ல வேண்டியதாகி விட்டது.

12 மீனவர்கள் கடத்தல்

இந்த நிலையில்தான் கேரளா கடல் எல்லையில் இருந்து மார்ச் மாதம் கடைசி வாரத்தில் 12 தமிழக மீனவர்கள் கடத்திச் செல்லப்பட்ட இன்னொரு சம்பவமும் நிகழ்ந்து விட்டது.

இந்த தகவலை கொக்கு புதையன் முகாமில் உள்ள எனது நண்பன் திருமேனி செயற்கைகோள் தொலைபேசி மூலம் என்னிடம் கூறினான்.

அந்த 12 மீனவர்களும் அங்குள்ள முகாமில் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவித்தான். அவர்களை ஒன்றும் செய்யாமல் உடனடியாக விடுதலை செய்து விடுங்கள் என்று கேட்டுகொண்டேன். இல்லாவிட்டால் எங்களுக்கு பிரச்சினை என்றும் தெரிவித்தேன்.

இவ்வாறு ராபின்சன் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

போனில் பேச வைத்தனர்

கியூ பிரிவு போலீசார் விசாரித்தபோதும், ராபின்சனையும், போனி பாஸையும் போன் மூலம் கொக்கு புதையன் முகாமுக்கு பேச வைத்துள்ளனர். அவ்வாறு பேசும்போது 12 மீனவர்களும் அந்த முகாமில் சிறை வைத்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையில் தமிழகத்தில் 5 மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவமும், 12 மீனவர்கள் கடத்தப்பட்ட சம்பவமும் பெரிய பிரச்சினையை கிளப்பியதால் விடுதலைப்புலிகளின் மேலிடத்தினர் இது தொடர்பாக விசாரணை நடத்தியதாக தெரிகிறது.

தமிழக மீனவர்களை சுட்ட மனாளன் தலைமையிலான கடல் புலிகள் 6 பேரையும் விசாரணைக்காக விடுதலைப்புலிகளின் மேலிடம் அழைத்துள்ளதாக தெரிகிறது. அதோடு கொக்கு புதையன் முகாமின் கமாண்டராக இருந்த மைக் ஆல்பாவும் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

12 மீனவர்களை விடுதலை செய்து பிரச்சினையை சுமூகமாக முடிக்கவே விடுதலைப்புலிகள் விரும்புவதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர்களை விடுதலை செய்தால் விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் கெட்ட பெயர் உண்டாகும் என்று தமிழகத்தில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் சிலர் தடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் இந்த பிரச்சினையை விரைவில் சுமூகமாக முடித்து விடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 12 மீனவர்களும் நல்ல முறையில் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2 Comments:

Boston Bala said...

பதிவிற்கு நன்றி.
பாலாறு அணைப் பிரச்சினையிலும் ஓர் அன்றும்-இன்றும் போடலாம்

Dark Encryptor said...

// 12 மீனவர்களும் நல்ல முறையில் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. //

நம்பத்தகுந்த வட்டாரங்கள்?? Adhu yaarappa?? K.nidhi/VaiKo/Ramadas?