பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, March 09, 2007

கூட்டணியில் மாறுதல் வரும்! - வைகோ பேட்டி

இந்த வாரம் ஆனந்த விகடனில் வந்த வைகோ பேட்டி ( நன்றி ஆனந்த விகடன் )
உணர்ச்சிக்கும் நெகிழ்ச்சிக்கும் வைகோ என்று பெயர்!

கணக்குகள் தவறினாலும், கனவுகள் குறையவில்லை ம.தி.மு.க. தலைவரின் கண்களில்!

‘‘‘உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு’ என்கிற கண்ணதாசனின் கவிதை வரிகளை இப்போது அடிக்கடி நினைத்துக்கொள்கிறேன். 1993-ல் ம.தி.மு.க. துவங்கப்பட்டதிலிருந்து எல்லாத் துன்பங்களையும் சந்தித்தாகிவிட்டது. வலிகள் ரணங்களாகி, அதுவே அனுபவங்களாகி எனது காலடியில் விழுந்துகிடக்கின்றன. நீண்ட இரவுக் குப் பிறகு வரும் விடியலைப் போல எங்களுக்கென்று ஒருநாள் வரும்’’ என்கிறார் வைகோ தன்னம்பிக்கையோடு.


‘‘எல்.ஜி, செஞ்சி இருவரின் பிரிவுக்குப் பிறகு, கட்சியும் நீங்களும் எப்படி இருக்கிறீர்கள்?’’

‘‘எது நடந்தாலும், அதில் ஒரு நன்மை இருக்கும். எல்.கணேசன் மீதும் செஞ்சி ராமச்சந்திரன் மீதும் மிகுந்த அன்போடும் மரியாதையோடும் இருந்தேன். யாரிடம் இருந்து பிரிந்து வந்தோமோ, அவர்களிடமே போய் அடைக்கலமாகிற சதியில் அவர்கள் ஈடுபடுவார்கள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தி.மு.க-வில் போய் மீண்டும் சேர வேண்டும் என்றால், ம.தி.மு.க-வைத் தோற்றுவித்ததன் காரணம் என்ன? ஐந்து பேரின் உயிரின் மீதான தணலில் இருந்து தோன்றிய இயக்கம் இது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் ஒரு சோதனை!

லட்ச ரூபாயைப் பார்த்தறியாத இயக்கத்தில் உள்ள ஒன்றியச் செயலாளர்கள் வரை போய் பேரம் பேசினார்கள். எந்தச் சூழலிலும் தங்களை விற்க விரும்பாத ஆயிர மாயிரம் இதயங்கள் இன்னும் இந்த இயக்கத்தில் இருக்கின்றன என்பதை செஞ்சியும் எல்.ஜி-யும் தொடுத்த அக்னிப் பரீட்சையில் தெரிந்துகொண்டேன். குளித்தலை ஒன்றியச் செயலாளர் சீராளன், பைபாஸ் சர்ஜரி செய்துகொள்ள இரண்டரை லட்சம் செலவு செய்ய முடியாமல் சிரமப்படும் மனிதர். அவரிடம் போய், ‘நான்கு லட்சம் தருகிறோம். நாங்கள் கூட்டும் பொதுக்குழுவுக்கு வந்து விடு’ என்று பேரம் பேசியிருக் கிறார்கள். ஆனால், சீராளன் தன் உயிர் போனாலும் வர மாட்டேன் என்று மறுத்துவிட்டார். இது போல நூற்றுக்கணக்கான உதாரணங்கள். அது சரி, எய்தவன் விட்ட அம்பு பாதி வழியில் திசை மாறி விழுந்துவிட்டது. அம்பை நொந்து என்ன பயன்?

அ.தி.மு.க-வுடன் ம.தி.மு.க-வைக் கொண்டுபோய் இணைத்து அதற்கு நான் அவைத் தலைவராக முயற்சிக்கிறேன் என்று என்மீது குற்றம் சாட்டினார்கள். ‘சித்தப் பிரமை ஏற்பட்டிருந்தால்தான் இப்படி ஒரு குற்றச்சாட்டைச் சொல்ல முடியும்’ என்றேன். கடைசி யில் என்ன நடந்தது, அவர்களை இன்னொரு ம.தி.மு.க-வாக அங்கீகரித்து, காவிரி பிரச்னைக்காக நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைத்திருக்கிறார் முதல்வர். முதல்வர் பதவி என்பது அறிவாலயம் கொடுக்கிற பதவி அல்ல; அது ஆறரைக் கோடி மக்கள் கொடுக்கிற பொறுப்பு. தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டுச் செயல்பட வேண்டும். ஐந்து முறை முதல்வராக இருக்கும் இந்தியாவின் மூத்த தலைவருக்கு அந்த மனது இல்லை!’’

‘‘பொடா சட்டத்தில் இன்னும் ஜாமீனில்தான் இருக்கிறீர்கள். அந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி மீண்டும் சிறை செல்ல நேரிடும் அபாயம் இன்னும் இருக்கிறதா?’’

‘‘இலங்கைக்கு ஆயுதங்கள் கடத்தியதில் தொடர்புள்ள அரசியல்வாதிகள் கைது செய்யப்படுவார்கள் என்று சமீபத்தில் முதல்வர் சொல்லியிருந்தார். அரசியல்வாதிகள் யாருக் கேனும் தொடர்பு இருக்குமானால், அது பற்றிய ஆதாரங்கள் கிடைக்கு மானால், தாராளமாக நடவடிக்கை எடுக்கட்டும். ஆனால், திடீரென்று முதல்வர் இத்தகைய சந்தேகத்தை ஏன் விதைக்க வேண்டும்? இதுதான் மிரட்டுகிற வேலை. பார்க்கலாம்... ஆனால், என்னை மீண்டும் பொடா சட்டத்தில் சிறையில் தள்ளுவார்கள் என நினைக்கவில்லை!’’

‘‘தொடர்ந்து இலங்கைக் கடற்படை ராமேஸ்வரம் மீனவர்களைத் தாக்குவது பற்றிய செய்திகள் வருகின்றனவே...’’

‘‘தமிழக மீனவர்களைக் காக்கிற உரிமை மத்திய - மாநில அரசுகளின் பொறுப்பு. ஆனால், நமது மீனவர்களைச் சுடுகிற இலங்கைக் கடற்படையை எச்சரிக்கும் விதமாக இதுவரை ஒரு ‘வார்னிங் ஷாட்’ டாவது எழுப்பியிருக்கிறதா இந்தியக் கடற்படை?

இன்று நேற்றல்ல... கடந்த 30 ஆண்டுகளாகவே தமிழக மீனவர்களைக் கொன்று குவித்து வருகிறது சிங்களக் கடற்படை. தமிழக மீனவர்களைப் பாதுகாக்க வேண்டிய முதல்வரைக் கேட் டால், மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி விட்டேன் என்பார். சாதகமான ஒன்று நடந்தால், அது தன்னால்தான் நடந்தது என்று மார் தட்டுகிற முதல்வர், பாதகமான விஷயம் வந்தால், பிரதமருக்குக் கடிதம் எழுதிவிட் டேன் என்று தன் பொறுப்பைத் தட்டிக் கழித்துவிடுவார். இதுதான் அவரின் நிஜ முகம்!’’

‘‘தி.மு.க. அரசின் இலவசத் திட்டங்களை ஏமாற்று வேலை என்று சொன்னீர்கள். ஆனால், தி.மு.க. அரசு இலவசங்களை இப்போது தொடர்ந்து வழங்கி வருகிறதே?’’

‘‘ஒரு பக்கம் வரலாறு காணாத விலைவாசி உயர்வு; இன்னொரு பக்கம் ஆட்சி மீதான மக்களின் வெறுப்பு! இதை மறைக்கத்தான் இலவசத் திட்டங்களால் மக்களை மயக்குகிறார் முதல்வர். மக்களை முன் னேற்ற நினைப்பவர்கள் இலவசமாக கம்ப்யூட்டர்கள் தர வேண்டியது தானே? அதைத் தர மாட்டார்கள். அது சன் டி.வி-யை வளர்க்க உத வாதே?

அதே நேரம், இலவசங்களால் மக்கள் மாறிவிடவில்லை. ஆள்வோர் மீதான வெறுப்பின் வெளிப்பாடுதான் மாநகராட்சியின் மறுதேர்தலை மக்கள் புறக்கணித்தது. இரண்டாவது தடவையாக நடந்த மாநகராட்சித் தேர்தலில், பயப்படாமல் ஓட்டுப் போட வாருங்கள் என்று போலீஸாரே கூவிக்கூவி அழைத்தும், மக்கள் ஓட்டுப் போடவில்லை. வன்முறைக்கு பயந்து மக்கள் ஓட்டுப் போடப் போகாமலில்லை; முதல் மாநகராட்சித் தேர்தலில் செய்த தவறுகளுக்குத் தண்டனையாகவே இந்த மாநகராட்சித் தேர்தலில் ஓட்டுப் போடாமல் புறக்கணித்தார்கள்!’’

‘‘இந்த முறை அ.தி.மு.க-வும் நீங்களும் போட்டியிலிருந்து ஒதுங்கிக்கொண்டது சரியா?’’

‘‘நடந்ததற்குப் பெயர் தேர்தலா என்ன? மாநகராட்சித் தேர்தல் முதலில் நடந்த விதத்தைப் பார்த்து ஆளும் தி.மு.க-வுக்கு எதிரான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியது. உடனே, மூன்றாவது நீதிபதியும் விசாரிப்பார்தானே என்றார்கள். அடுத்து வந்த தீர்ப்பில், ‘தேர்தல் கமிஷனர், நெருப்புக் கோழி மாதிரி தலையை மண்ணுக்குள் புதைத்துக்கொண்டு இருந்தார்’ என்று கடுமையான தீர்ப்பு வந்தது. அதற்கு ஆற்காடு வீராசாமி, ‘இவர்கள் சொர்க்கத்தில் இருந்து குதித்து வந்தவர்களா?’ என்று கேட்டார். அதற்கும் ‘இதைச் சொல்வதற்கு சொர்க்கத்திலிருந்து குதித்து வர வேண்டியதில்லை. ஏனெனில், நீங்கள் பூமியை நரகமாக்கிவிட்டீர்கள்’ என்று பதில் சொன்னது நீதிமன்றம். இதிலிருந்தும் தி.மு.க. பாடம் கற்றுக் கொண்ட மாதிரி தெரியவில்லை. ஆளில்லாத மைதானத்தில் கேட்பாரற்றுக் கிடக்கும் கோல் போஸ்ட்டில் போட்ட கோல்கள் போலக் கிடைத்தவை தி.மு.க. கூட்டணியின் மாநகராட்சி வெற்றிகள். எங்களைப் போலவே பெரு வாரியான மக்களும் அநீதியான இந்தத் தேர்தலைப் புறக்கணித்தார்கள் என்பதுதான் நிஜம்!’’

‘‘தமிழக அரசின் செயல்பாடுகளை மிகக் கடுமையாக ராமதாஸ் விமர்சிக்கிறார். இதனால் மாநிலத்தில் கூட்டணிகளில் மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளதா?’’

‘‘நிச்சயமாக! மக்கள் பிரச்னைகளை முன்வைத்துதானே தி.மு.க. அரசை விமர்சிக்கிறார் ராமதாஸ்! மக்கள் நல விரோதத் திட்டங்களையும் தயங்காமல் எதிர்க்கிறார். மைனாரிட்டி தி.மு.க. அரசுக்குக் கூட்டணிக்குள் இருந்தபடியே கலகக் குரல் கொடுத்து, எச்சரிக்கை மணி அடிக்கிற ராமதாஸின் விமர்சனங்களைக்கூட முதல்வரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை; புலம்பித் தள்ளுகிறார்.

விமர்சனைங்களை முன்வைக்கும்போது மெலிந்தவர்கள் பக்கம்தான் தன் கோபத்தைக் காட்டுவார் இந்த முதல்வர்; வலிந்தாரிடம் காட்ட மாட்டார் என்பது ராமதாஸிடம் அவர் நடுங்குவதைப் பார்த்தாலே நிரூபணமாகிறது. அதனால், இந்த ஆண்டு இறுதிக்குள்ளேயே கூட்டணி மாறுதல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது!’’

‘‘கார்டனுக்கும் கலிங்கப்பட்டிக்குமான உறவு எப்படி இருக்கிறது?’’

‘‘இன்றுகூட சந்தித்துப் பேசினோம். அ.தி.மு.க - ம.தி.மு.க. கூட்டணி பலமாகவும் பரஸ்பரப் புரிதலோடும் இருக்கிறது. உணர்வுபூர்வமான தோழமை!’’

0 Comments: