பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, March 26, 2007

சபாஷ் விஜயகாந்த்

விஜயகாந்தின் அறிக்கையை படிக்கும் முன்..

"ஒரு கட்சியை துவக்கி நடத்துபவருக்கு தான் அதன் கஷ்டங்கள் தெரியும்; இடையில் குடிபுகுந்தவர்களுக்கு அதுபற்றி தெரியாது' - விஜயகாந்த்

"குடி உள்ளே புகுந்த காரணத்தால் வரலாறு தெரியாமல் உளறுகிறார்" - கலைஞர்

ஏற்கனவே விஜயகாந்த் குடித்துவிட்டு பேசுவதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் குறிப்பிட்டு இருந்தார். தற்போது முதல்வர் கருணாநிதியும் இதே குற்றச்சாட்டை சுமத்தியுள்ளதால், அதற்கு கடுமையான பதிலடியை கீழே பார்க்கவும்..


பெற்ற தாய்க்குத் தான் பிரசவ வேதனை தெரியும். சுற்றி நிற்கும் மற்றவர்களுக்கு வேதனை தெரியாது. அதைப்போல தி.மு.க.,வை நிறுவிய அண்ணாதுரைக்கு தான் கஷ்டம் தெரியும். கருணாநிதிக்கு தெரிய நியாயம் இல்லை. அவர் எந்த கட்சியையும் தோற்றுவிக்கவில்லை. தி.மு.க.,வின் நிறுவனரும் அல்ல. தி.மு.க., ஆரம்பித்த 49ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி காலையில் நீலமேகம் தலைமையில் நடந்த கூட்டத்தில் கருணாநிதியை காணோம். அன்று மாலை ராயபுரம் ராபின்சன் பூங்கா மைதானத்தில் நடந்த துவக்க விழா கூட்டத்தில் சித்தையன், என்.வி.நடராஜன், சம்பத், எஸ்.ஆர்.சுப்பிரமணியம், ஆசைத்தம்பி, நீலமேகம், மதுரை முத்து, சத்தியவாணி முத்து, நெடுஞ்செழியன், அண்ணாதுரை ஆகியோர் பேசினர். அதிலும் கருணாநிதி பேசவில்லை. ஐம்பெரும் தலைவர்கள் பட்டியலில் கருணாநிதி இடம்பெறவில்லை.

சேலத்தில் 1944ம் ஆண்டு அண்ணாதுரை கொண்டு வந்த தீர்மானத்தின் படி திராவிடர் கழகம் தோன்றியது. அண்ணாதுரை தீர்மானம் என்றே அதற்கு பெயர். இருப்பினும் திராவிடர் கழகம் யாருடையது என்று கேட்டால் ஈ.வெ.ராமசாமியுடையது தான். அண்ணாதுரை அதற்கு உரிமை கொண்டாடியது இல்லை. அது பண்பாடு. பச்சை குழந்தைகளுக்கு வரலாறு தெரியாது தான். ஆனால் வளர்ந்த பிறகு வரலாற்றில் பங்கு பெற முடியா விட்டாலும் வரலாற்றை படித்து தெரிந்து கொள்ளலாம். வரைபடத்தோடு கட்டடம் எழுப்புவது பெரிதா? செங்கல்லை தூக்கிக் கொடுத்த ஒரு சிற்றாளின் பணி பெரிதா என்பதை கருணாநிதி சிந்திக்க வேண்டும்.

உழைப்பையும், உடமையையும், ஏன் உயிரையும் பணயம் வைத்து அன்று பல தலைவர்கள் பாடுபட்டனர். அவர்கள் எல்லாம் மறக்கடிக்கப் பட்டு விட்டனர். அவர்கள் வாரிசுகள் கூட இன்று தி.மு.க.,வில் இல்லை. கரையான் புற்றெடுக்க கருநாகம் புகுந்த கதைதான் இன்றைய தி.மு.க., வரலாறு. என்னை பச்சைக் குழந்தை என்கிறார். குடி உள்ளே புகுந்ததால் உளறுகிறார் என்கிறார். குழந்தை குடிப்பது பால் தான். அது பேசும் மழலை உளறலாகத் தெரியும் மற்றவர்களுக்கு. ஆனால், அதுவே இனிமையாக தெரியும் உறவினர்களுக்கு. காமாலைக் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பதைப் போல குடி என்றால் தாங்கள் குடிப்பது தான் நினைவிற்கு வரும் போலும்.

சிலர் அறையில் குடிப்பது, சாமி கும்பிடுவது, அம்பலத்தில் அவற்றை மறுப்பது ஆகிய இரட்டைப் போக்கை கடைப்பிடிக்கின்றனர். இத்தகைய தொடர்பு கனவிலும் கொடுமையைத் தரும் என்கிறார் திருவள்ளுவர். என்னைப் பற்றி ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டபோது அதை அநாகரிகம் என்று கருதினேன். இன்று கருணாநிதியும் அதேபோல் தான் அநாகரிகமாக கருத்து தெரிவிக்கிறார். கருணாநிதி அதே பேட்டியில் ஜெயலலிதாவைப் பற்றி குறிப்பிடுகையில் பன்றியை கண்டு யானை ஒதுங்கிய உதாரணத்தைச் சொல்கிறார். அதைப்போல எனக்கு இவர்களைக் கண்டு ஒதுங்குவதை தவிர வேறு வழியில்லை. கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல்லெறிய வேண்டாம் என்று பழைய கட்சித் தலைவரை கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

13 Comments:

Hari said...

விஜயகாந்த் அரசியலிலும் "சுழ்ட்டி" அடிக்கிறார்.

மேலும், இந்திய அணிக்கு உங்கள் பாராட்டுக்கள் நல்ல பஞ்ச்

முத்துகுமரன் said...

உருப்படியா ஒரு அறிக்கை எழுதி கொடுத்திருக்கிறார் பண்ருட்டியார் :-)

IdlyVadai said...

முத்துகுமரன் நானும் அப்படி தான் நினைத்தேன்.

வடுவூர் குமார் said...

அப்பாடியோவ்!!
தேவையா நம் தலைவருக்கு,இது.
இவர்கள் எல்லோரும் சேர்ந்தே திரு.விஜயகாந்துக்கு ரோடு போட்டு கொடுக்கிறார்கள்.
நல்லது தான்.
நடக்கட்டும்.
அப்படியாவது தமிழகம் தலைநிமிரட்டும்.

சிவமுருகன் said...

//+2, பத்தாவது பரீட்சை எழுதும் மாணவர்களின் தேர்வுக் காலத்தையும் எதிர்காலத்தையும் கருதி, சூப்பர் எட்டுக்குள் போகாமல் தவிர்த்த இந்திய அணியினருக்கு இட்லிவடையின் பாராட்டுக்கள் //

இது சூப்பர்

Nandha said...

தலைவரு படத்துல பேசும் போது மட்டும் தான் மொக்கையா ஏதாவது பேசி சொதப்பிடறாரு. ஆனால் அறிக்கையில எல்லாம் படம் காமிக்கிறாரு. கலக்குங்க தலைவரே!

Hariharan # 03985177737685368452 said...

பலாப்பழம் நேரடியாகக் கண்ணுக்குத் தெரியலைன்னாலும் பலாப்பழம் இருக்குன்னு வாசம் வச்சுக் கண்டுபிடிச்சிரலாம்.

பண்ருட்டிதான் பலாப்பழத்துக்குப் பேர் போனதுதானே!

விசய்காந்த் மாதிரி ஜெயலலிதா, கருணாநிதி இப்படி உண்மையை விடுதலை செய்கின்ற ஒரு அறிக்கை விடத்தான் முடியுமா?

விசய்காந்த் விருத்தாசலத்தில் வெற்றி கண்டு பெரிய மருந்து ராமதாசுக்கு வைக்கிறார் ஆப்பு...

டாஸ்மாக் கண்ட தலைவி ஜெயலலிதா.. விசய்காந்தை நம்பித்தான் ஆரம்பித்தேன் என்கிறார்...

தினமும் எனக்கு ஊற்றித்தந்தாரா ஜெயலலிதான்னு விசய் காந்த் தெளிவாக ஆப்புக் கேள்வி கேட்கிறார்....

ராமதாஸ் திமுக அரசை பச்சை துரோகிகள்ன்னு விமர்சித்து வைக்கிறார் அறிக்கை ஆப்பு..

கருணாநிதி விசய்காந்துக்கு வெற்றிகொண்டான் விஷம விமர்சன ஆப்பு அனுப்புகிறார்...

விசய்காந்த் கழக வரலாறு குறித்து வரலாற்றுச்சிறப்பு அறிக்கை ஆப்புவைக்கிறார்!

ஒரே ஆப்புக்கும்மியா இருக்கப்பூ!

விசய்காந்த் கையில் இருக்கும் பாதுகாப்புத் தொழில் நுட்பத்திற்காகவாவது அவரை பாதுகாப்பு அமைச்சராக்கி அழகுபார்க்கணும்!

அரசியல்வாதிகளுக்கு ஆகும் புல்லட் ப்ரூப் செக்யூரிட்டிக்கு செலவு சருக்குன்னு இறங்கிடும்! எல்லோருக்கும் சிம்பிளா ஒரு தாம்பாளத்தட்டு போதுமே!

(பண்ருட்டிப் பலாப்பழம் விற்கவும் தாம்பாளத்தட்டு கூடுதலாகப் பயன்படலாம்)

நம்ம வல்லரசு விசய்காந்த் இந்தியாவைப் பேரரசு ஆக்கிக்காட்டுவார்!

நடத்துங்க நடத்துங்க! பேப்பர், அறிக்கைப்புலியா பாய்ச்சல் காட்டுங்க!

IdlyVadai said...

ஹரிஹரன் பலாப்பழம் உவமை சூப்பர்.

VSK said...

உங்கள் உவமானத்தில் கண்டுள்ளபடியே, எப்படி அண்ணாதுரை திராவிடகழகத்துக்கு உரிமை கொண்டாடாதது நாகரீகமானதோ, அதேபோல, பண்ருட்டியார் உரிமை கொண்டாடாமல், கேப்டனுக்கு சமர்ப்பணம் செய்ததிலும்[அவரே எழுதிக் கொடுத்திருந்தலும்] தவறில்லை என நினைக்கிறேன்.
தி.மு.க.வின் முழு வரலாறும் தெரிந்தவர்தானே பண்ருட்டியார்.!

அமெரிக்க அதிபர் புஷ்ஷுக்குக் கூடத்தான் அடுத்தவர் உரை எழுதித் தருகின்றனர்.
அதற்காக எழுதியவருக்கா போய்ச்சேரும்?
:))
கேப்டன் கலக்கறாரு!

IdlyVadai said...

VSK - அடுத்த பதிவில் கலைஞர் பதில் மற்றும் ராமதாஸ் அறிக்கையும் படித்துவிடுங்கள் :-)

Anonymous said...

அட, நான் கூட விஜயகாந்த் அரசியல்ல வந்து ஏதாவது செய்வார்ன்னுப் பாத்தா, இந்த கெழவனும், கெழவியும் விடமாட்டாங்களாட்டிக்குதே. தேவையில்லாம, வெட்டிவம்பு செஞ்சுக்கிட்டு மக்களத்தான் கேணப்பயலுகலா ஆக்கறாங்க. நாடு எப்பத்தான் இந்தமாதிரி ஆளுங்ககிட்ட இருந்து உருப்புடப் போவுதோ :(

-L-L-D-a-s-u said...

முதலில் அவரை செய்கிற வேலையை ஒழுங்கா செய்ய சொல்லுங்கப்பா.. 20 வருஷமா செய்யிற வேலையில இன்னும் ஒழுங்கு வரல..இவரு அரசியல என்ன கிழிக்கப்போறாரோ தெரியலை .

தாம்பூலத்தட்டுல குண்டைத்தடுக்குறது, செல்போன் வெளிச்சத்துல, அரைப்பிளேடால ஆபரேஷன் பண்ணுறதுன்னு மக்களை முட்டாளா நினைக்காம முதல்ல ஒழுங்கா நடிங்க அப்புறம் நாட்டைக்காக்கலாம்

Haranprasanna said...

கருணாநிதி திமுகவின் தொடக்கத்தில் இல்லை என்கிற விஷயம் இப்போதைக்கு அவசியமான ஒன்றே இல்லை. ஏனேன்றால் கருணாநிதிதான் இப்போது திமுக. ஆனால் எங்கே அடித்தால் கருணாநிதிக்கு வலிக்கும் என்று தெரிந்து அடித்ததில்தான் அறிவுபூர்வம் தென்படுகிறது. இதைப் புறக்கணிப்பதன் மூலமே கருணாநிதி சிறப்பாகச் செயலாற்றியிருக்க முடியும். ஆனால் பதிலுக்குப் பதில் சொல்லி.. ஏற்கனவே ஜெயலலிதா குடியன் என்று மட்டமாகப் பேசியபோது அதைக் கண்டித்த கருணாநிதி, தானும் அப்படியே பேசி... முதிர்ச்சியற்ற அரசியல்.