பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, March 30, 2007

கேப்டன் அடிக்கும் சிக்ஸர்

அர்ச்சனையைச் சந்திக்காத ஆண்டவனுமில்லை... பிரச்னையைச் சந்திக்காத அரசியல்வாதியும் இல்லை...’ என்றாலும் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தற்போது சந்திக்கும் பிரச்னை கொஞ்சம் வித்தியாசமானது. யாரும் எதிர்பாராத நேரத்தில், விஜயகாந்தை ‘குடிகாரர்’ என்று விமர்சித்தார் ஜெயலலிதா. அரசியல்வாதிகள் மீது இதுமாதிரியான தனிப்பட்ட விமர்சனங்கள் தேவைதானா? என்ற விவாதங்கள் முற்றுப்பெறாத நிலையில், ஜெ. பாணியிலேயே கலைஞரும் அவரை விமர்சனம் செய்திருக்கிறார். பொதுவாகவே வார்த்தைகளை நிதானித்து வீசும் கலைஞர், ‘குடி உள்ளே போனது... மயக்கத்தில் இருக்கிறார்...’ என்றெல்லாம் அதிரடியாக விஜயகாந்த் மீது வார்த்தைக் கணைகளை வீசியிருக்கிறார். இந்த நிலையில், விஜயகாந்தை சந்தித்துப் பேசினோம்...
( குமுதம் ரிப்போட்டர் பேட்டி )


தமிழக அரசின் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

‘‘பெரிதாகச் சாதித்துவிட்டார்கள்... சாதிக்கப் போகிறார்கள் என்று சொல்லுமளவுக்கு இதில் ஒன்றும் இல்லை என்றே நினைக்கிறேன். 56 சதவிகிதம் பேர் விவசாயத்தை நம்பி இருப்பதாகச் சொல்கிறார்கள். இதில் மிகப் பெரும்பான்மையானோர் சிறு, குறு விவசாயிகள். இவர்களின் நலனைக் காக்க, அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர, கடன் சுமை குறைய உருப்படியான எந்தத் திட்டமும் இந்த பட்ஜெட்டில் இல்லை. கூட்டுறவுக்கடன் தள்ளுபடிக்காக பல ஆயிரம் கோடி செலவானதாகச் சொல்கிறார்கள். உண்மையில் இதில் பலனடைந்தது பெரும்பாலும் தி.மு.க.வினர்தான். இந்த லட்சணத்தில் தொடர்ந்து கடன் வழங்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள். உண்மை விவசாயிகள் இதனால் எந்தளவுக்கு நியாயமாகப் பயனடைவார்கள் என்று தெரியவில்லை. அதற்கான செயல் திட்டத்தையும் சொல்லவில்லை. விவசாயத்திற்கு எந்த வகையிலும் முன்னுரிமை தரவில்லை.

வறுமையை ஒழிப்போம், விலைவாசியைக் குறைப்போம் என்று வெறும் வார்த்தைகளில் சொன்னால் போதுமா? செயல்திட்டம் வேண்டாமா? இந்த விஷயத்தில் இதுவரை இந்த அரசு என்ன சாதித்திருக்கிறது? அறிவிக்கப்பட்டுள்ள மற்ற திட்டங்களும்கூட, ஓட்டு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் சொல்லப்பட்டவைதான். ஐந்தாண்டுகளுக்கு அதை இழுத்துக்கொண்டே போய், அடுத்து வரும் தேர்தலுக்குப் பயன்படுத்துவார்கள்.

பட்ஜெட்டைப் படித்துப் பார்த்தால் பாதிக்குமேல் பழைய விஷயங்கள்தான் இருக்கின்றன. புதிய திட்டங்கள் ஏதுமில்லை. மொத்தத்தில் மணமில்லாத மலர், மலர்ந்தென்ன பயன்? இது வெறும் காகிதப்பூ என்றுதான் நினைக்கிறேன். சொல்லியிருக்கிற ஒன்றிரண்டு விஷயங்களாவது ஒழுங்காகச் செயல்படுகிறதா என்று பொறுத்துப் பார்த்துத்தான் சொல்ல வேண்டும்.’’

‘ஏழைகளின் கஷ்டம் அறிந்து, அவர்களின் துயர் துடைக்கும் வகையில் அமைந்த முத்தான பட்ஜெட் இது’ என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சொல்லியிருக்கின்றனவே?

‘‘மனசாட்சி உள்ளவர்கள் அப்படிச் சொல்லமாட்டார்கள். கூட்டணிக் கட்சிகளுக்கு வேறு வழியில்லை. தினசரி அவர்கள் சல்யூட் அடித்தாக வேண்டும். அதனால்தான் இப்படிப் பேசுகிறார்கள். விமான நிலைய விரிவாக்கம், துணை நகரம் அமைப்பது போன்ற விஷயங்களில், இன்று ஒன்றைச் சொல்கிறார்கள். மறுநாள், கூட்டணிக் கட்சிகளின் நிர்ப்பந்தத்திற்குப் பயந்தும் பணிந்தும் மாற்றிச் சொல்லி மக்களைக் குழப்புகிறார்கள். கேட்டால் கூட்டணி தர்மம் என்கிறார்கள். இதற்குத்தான் நான் முன்பே சொன்னேன்... ‘உங்களை வாழ்த்தப் பலர் இருக்கிறார்கள். ஆனால், குறைகளைச் சொல்ல எங்களைப் போல சிலர்தான் இருக்கிறார்கள். எங்களைக் கேளுங்கள். எங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பளியுங்கள்’ என்றேன். இலவசத் திட்டங்களில் நடந்த, நடந்துகொண்டிருக்கிற ஊழல்கள் பற்றி தி.மு.க._அ.தி.மு.க. இரண்டும் மாறி மாறிக் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறார்களே... இதுபற்றி எந்தக் கூட்டணிக் கட்சியும் இதுவரை வாய் திறக்கவில்லையே ஏன்? ஏனெனில், அவர்களால் பேச முடியாது. மக்கள் பிரச்னைகளைப் பற்றிப் பேசி, மக்களுக்காகக் குரல் கொடுத்தால், ஆட்சி அதிகாரத்தின் மிச்ச, மீதிகளை இவர்களால் அனுபவிக்க முடியாதே...? அந்த அடிப்படையில்தான் பட்ஜெட் பற்றிய அவர்களின் விமர்சனத்தைப் பார்க்கிறேன்.’’

அண்ணா தொடங்கிய கட்சியில் குடிபுகுந்தவர் என்று கலைஞர் மீது விமர்சனம் வைத்தீர்கள். ஏன் இந்தத் திடீர்த் தாக்குதல்...?

‘‘திட்டமிட்டதும் அல்ல... திடீர்த் தாக்குதலும் அல்ல. இதைச் சொல்லக் காரணமே கலைஞர்தான். என்னை விமர்சிக்க மாட்டேன் என்று சொல்லிக் கொண்டே, ‘புதுசா கட்சி ஆரம்பித்தவர்... புது தலைவர்...’ என்று என்னையும் எங்கள் கட்சியையும் தொடர்ந்து கிண்டலடிக்கிறார் கலைஞர். இவர் தனியாக கட்சியைத் தொடங்கியிருந்தால், எங்களைப் போன்றவர்களின் மனப்போராட்டம் தெரியும். கட்சியை நடத்துவதன் கஷ்டம் புரியும். பெரியாரிடம் இருந்து பிரிந்து வந்து தி.மு.க.வைத் தொடங்கியபோது, அண்ணா எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்? தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர். பிரிந்து வந்து புதிதாகக் கட்சி தொடங்கியபோது, எவ்வளவு மனப் போராட்டத்தைச் சந்தித்திருப்பார்?

இது மாதிரியான அனுபவங்களே இல்லாமல், தி.மு.க.வின் தலைமைப் பதவிக்கு வந்தவர்தான் கலைஞர். உழைப்பையும், உடைமையையும், ஏன் உயிரையும் பணயம் வைத்து தி.மு.க.வை ஆரம்பிக்க, வளர்க்க அன்று பல தலைவர்கள் பாடுபட்டனர். அவர்கள் எல்லாம் மறக்கடிக்கப்பட்டுவிட்டனர். அவர்களின் வாரிசுகளுக்குக் கூட இன்று தி.மு.க.வில் இடமில்லை. ‘கறையான் புற்றெடுக்க கருநாகம் குடிபுகுந்த கதை’தான் இன்றைய தி.மு.க. மற்றும் அதன் தலைவரின் வரலாறு.

இப்படி, ஒருவர் தொடங்கிய கட்சியில், சொகுசாக அமர்ந்துகொண்டு, எங்களைப் போன்ற புதிய அரசியல் கட்சிகளின் கஷ்டங்களை, போராட்டங்களைக் கிண்டலடித்ததால்தான் நான் அப்படி விமர்சனம் செய்தேன்.’’

‘குடி’ உள்ளே புகுந்ததால்தான் நீங்கள் அப்படி விமர்சனம் செய்திருப்பதாகச் சொல்லியிருக்கிறாரே, கலைஞர்?

‘‘அனுபவ ரீதியாகச் சொல்லியிருக்கிறார் கலைஞர். அவருக்கு அந்தப் பழக்கம் இருந்திருக்கலாம். அதனால்கூட இப்படிச் சொல்லியிருப்பார். ஆனால், நான் அவரிடம் நாகரிகமான அரசியலை எதிர்பார்த்தேன். அதுதான் நான் செய்த தவறு. வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் கஞைரைப் பற்றியும் நிறையச் சொல்லமுடியும். 12 வயதில் இருந்து அரசியலைக் கவனித்து வருகிறேன். அவரைப் பற்றி நிறைய விஷயங்களைக் கோடிட்டுக் காட்ட முடியும். நான் அதை விரும்பவில்லை. நான் விரும்பும் அரசியலும் அதுவல்ல. மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கும்போது, இதுமாதிரியான _ அநாகரிகமான _ உள்நோக்கம் கொண்ட விமர்சனங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். சில பேர் அறைக்குள்ளே குடிப்பார்கள். வீட்டிற்குள் சாமி கும்பிடுவார்கள். ஆனால், மக்கள் மத்தியில் உத்தமர், பகுத்தறிவுவாதி என்று கபட நாடகம் ஆடுவார்கள். இத்தகையோரின் தொடர்பு கனவிலும் கொடுமையைத் தரும் என்று வள்ளுவர் சொன்னதை நினைவுபடுத்துகிறேன். தமிழ் நாட்டு மக்களுக்குத் தெரியும். யார், யார்... எப்படி என்று..!’’

‘குடி’ விஷயத்தை மையப்படுத்தியே ஜெயலலிதா, கலைஞர் என இருவருமே உங்கள் மீது தாக்குதல் தொடுக்கிறார்களே...?

‘‘அரசியலில் நானும், எனது கட்சியும் வளர்ந்திருக்கிறோம் என்று அர்த்தம். அதனால்தான் பொறாமைத் தீயில் வெந்து, இப்படி தரம் தாழ்ந்த விமர்சனத்தை அள்ளி வீசுகிறார்கள். தமிழ்நாட்டு மக்களைப் பற்றிக் கவலைப்படாமல், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வழிவகை செய்ய முயற்சிக்காமல், இதுமாதிரியான விமர்சனங்களைச் செய்வது, பிள்ளை பெற முடியாத வயிற்றெரிச்சலில் உலக்கையை எடுத்து வயிற்றில் குத்திக் கொண்டது போல்தான் இருக்கிறது. என் பின்னால் மக்கள் அணிவகுப்பது பிடிக்காமல், அதைச் சகிக்க முடியாமல் இப்படி வீண் விமர்சனம் செய்கிறார்கள்.

மற்றபடி நான் என்ன இவர்களின் சொத்தைக் கேட்டேனா? இவர்களிடம் பதவி கேட்டேனா? ஏன் இந்தக் கோபம்? என்னை வளராத குழந்தை என்கிறீர்கள்... அப்புறம் ஏன் என்னைப் பார்த்துப் பயப்படுகிறீர்கள்?

பன்றியைப் பார்த்து யானை ஒதுங்கிய கதையை, ஜெயலலிதாவுக்காக கலைஞர் சொன்னார். அதே கதையை, இந்த இருவருக்காகவும் நான் சொல்லி ஒதுங்குவதைத் தவிர, வேறு வழியில்லை.’’

அரசியலில் பச்சைக் குழந்தையான உங்களுக்கு வரலாறு தெரியாது என்று சொல்லியிருக்கிறாரே கலைஞர்...?

‘‘படித்துப் பார்த்தும் வரலாற்றைத் தெரிந்து கொள்ளலாம். நெப்போலியனைப் பற்றிப் பேச வேண்டுமானால், அவரது படையில் ஒரு வீரனாக இருந்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அவரது வரலாற்றைப் படித்தாலே போதும். நானும் கலைஞரின் வரலாற்றைப் படித்தும் இருக்கிறேன். பார்த்தும் இருக்கிறேன்.

17.9.1949 அன்று காலை தி.மு.க. என்ற கட்சியைத் தொடங்குவது பற்றி கே.கே. நீலமேகம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலைஞரைக் காணோம். அன்று மாலை ராயபுரம் ராபின்சன் பூங்காவில் நடந்த கூட்டத்திலும் கலைஞர் முழங்கக் காணோம். தி.மு.க.வின் ஐம்பெரும் தலைவர்கள் என்ற பெருமைக்கும், தகுதிக்கும் உடைய பட்டியலில் கலைஞரின் பெயர் இல்லை.

பச்சைக் குழந்தைகளுக்கு வரலாறு தெரியாதுதான். ஆனால், வளர்ந்த பிறகு கடந்த கால வரலாற்றில் பங்கு பெற முடியாவிட்டாலும், அதைப் பற்றிப் படித்துத் தெரிந்துகொள்ளலாம். அந்த வகையில் நான் தெரிந்து கொண்டது மேலே சொன்ன விவரங்கள். இன்னும் தொடர்ந்து வரலாற்றைப் படிப்பேன். மக்களுக்கு எடுத்துச் சொல்வேன்.’’

நடிப்பில் களைத்துப் போனவர்கள் கட்சி ஆரம்பிக்கிறார்கள் என்றும் கலைஞர் சொல்லியிருக்கிறாரே...?

‘‘நடிப்புக்கு வயது கிடையாது. களைப்பும் கிடையாது. அரசியலுக்கு வயது கிடையாது என்று எப்படி அவர்கள் சொல்கிறார்களோ, அதே மாதிரிதான் நடிப்பும். இங்கே களைப்புக்கு இடமில்லை. சரி... இவர்களெல்லாம் களைத்துப் போய், பிழைக்க வேறு வழியில்லாமல்தான் அரசியலுக்கு வந்தார்களா?

தன்னை ஆதரித்தால் ஒரு மாதிரி, எதிர்த்தால் வேறு மாதிரி விமர்சனம் செய்பவர் கலைஞர். நான் கட்சி தொடங்கும் முன்பு என்னை ‘தம்பி விஜி’ என்றார். இப்போது நான் வில்லனாகிவிட்டேனா? ஒருத்தன் கட்சி ஆரம்பித்து மக்களிடம் வருகிறான் என்றால், அவன் என்ன சொல்கிறான்? அவன் கொள்கை என்ன? நோக்கம் என்ன? என்றுதான் பார்க்க வேண்டும். அவனுடைய தொழிலைப் பார்க்கக் கூடாது.

இது ஒருபுறம் இருக்கட்டும். தி.மு.க., அ.தி.மு.க. என்ற இரு கட்சியும் மாறி மாறிச் செய்த ஊழலால் சீரழிந்து கிடக்கும் தமிழகத்தைச் சீரமைக்கத்தான் நான் கட்சி ஆரம்பித்தேன். இறுதிவரை என் இலக்கை நோக்கி முன்னேறுவேன். இதுமாதிரியான விமர்சனங்கள் என்னை எந்த வகையிலும் பாதிக்காது.’’

முதலமைச்சர் ஆவது சாதாரண விஷயம் அல்ல... ஆனால், இந்த ஆசையுடன் சில திடீர்த் தலைவர்கள் கிளம்பியிருக்கிறார்கள் என்றும் விமர்ச்சிக்கிறார்களே...?

‘‘இதைச் சொல்லும் கலைஞர் எப்படி முதலமைச்சரானார்? இரண்டு முறை முதல்வர் பதவியை அனுபவித்து விட்டுக் கீழிறங்கிய பின்பு, எம்.ஜி.ஆர். மறையும் வரை மீண்டும் இவரால் முதல்வராக முடியவில்லையே! காரணம், மக்கள் இவரை ஏற்கவில்லை. அதன் பின்பு அ.தி.மு.க. இரண்டாக உடைந்தது. அதைப் பயன்படுத்தி மீண்டும் முதல்வரானார். இதற்குப் பிறகு கூட்டணியைப் பயன்படுத்தித்தான் இவரால் முதல்வராக முடிந்தது.

இதை எதற்குச் சொல்கிறேன் என்றால்... மக்கள் நினைத்தால், மக்கள் முடிவெடுத்துவிட்டால் யார் வேண்டுமானாலும் முதல்வராக ஆகலாம். அதை யாராலும் தடுக்க முடியாது. மற்ற விஷயத்துக்கெல்லாம், ‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்று சொல்பவருக்கு, இது மட்டும் புரியாமல் போனது எப்படி?’’

அறுபது ஆண்டுக் கால பொதுவாழ்க்கை கொண்டவர், சட்டமன்றத்தில் பொன்விழா கண்டவர், மூத்த அரசியல் தலைவர் எனப் பல தகுதிகள் கொண்ட கலைஞரை நீங்கள் கடுமையாக விமர்சிப்பது ஏன்?

‘‘என்னைப் பற்றி அவர் செய்யும் தேவையற்ற, உள்நோக்கங் கொண்ட விமர்சனங்களுக்கு நான் பதில் சொல்கிறேனே தவிர, நானாக, முன்வந்து எதையும் சொல்வதில்லை. எனக்கென்று ஒரு கட்சி இருக்கிறது. எனவே, அதன் மீது விமர்சனம் செய்யும்போது நான் பதில் சொல்ல வேண்டியதும் கட்டாயமாகிறது. இந்த இடத்தில் நான் எந்தப் பதிலும் சொல்லாமல் ஊமையாக இருக்க வேண்டுமா? அப்படிச் செய்தால் அதையும் விமர்சிப்பார்கள். என் விமர்சனங்கள் அரசியல் ரீதியாகத்தான் உள்ளன. தனிப்பட்ட முறையில் கலைஞரை மட்டுமல்ல... யாரையுமே நான் விமர்சிப்பதில்லை. ஆக, ஒவ்வொரு முறையும் என்னை விமர்சனம் செய்யும் சூழலுக்குள் தள்ளுபவர் கலைஞர்தான்.

அது இருக்கட்டும்... அறுபது ஆண்டு பொது வாழ்க்கை கண்டவர்... சட்டமன்றத்தில் பொன்விழா கண்டவர்... எல்லாம் சரிதான். இத்தனை ஆண்டுகளில் இந்த மாநில வளர்ச்சிக்கு இவர் என்ன செய்தார்? இத்தனை ஆண்டுகளில் யார் வளர்ந்தார்கள்? எந்தக் குடும்பம் வளர்ந்தது? என்பதெல்லாம் மக்களுக்குத் தெரியும். அதை சிலர் மறைத்து மக்களை ஏமாற்ற முனையும்போது, என்னைப் போன்றவர்கள் அதைச் சுட்டிக் காட்டுகிறோம். அதைக்கூட செய்யக்கூடாது. கை, கால்களைக் கட்டிக் கொண்டு சும்மாவே இருக்க வேண்டும்... அல்லது இவர்களைப் புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும்... என்ன நியாயம் இது...?

விமர்சனங்களைத் தாங்கமுடியாமல் இப்படி கோபப்படுகிறார் கலைஞர். எதையும் தாங்கும் இதயத்தை அண்ணா தந்திருப்பதாகப் பலமுறை இவரே சொல்லியிருக்கிறாரே.... ஏன் இந்த நியாயமான விமர்சனங்களை மட்டும் இவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை?’’

காவிரிப் பிரச்னையில் இந்த அரசின் செயல்பாடு எப்படி?

‘‘எல்லோருமே தமிழகத்தின் நலனைக் கோட்டை விட்டு விட்டார்கள். தங்கள் சுயநலத்தைத்தான் பார்க்கிறார்களே தவிர, தமிழ்நாட்டு மக்களின் நலத்தை யாரும் பார்க்கவில்லை. கோதுமை பேர ஊழல் மற்றும் பூச்சி மருந்து ஊழல் ஆகியவற்றிலிருந்து தப்பிக்கவே கச்சத்தீவை தாரை வார்த்தார்கள் என்று எம்.ஜி.ஆர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். தங்களுடைய சுயநலத்திற்காகச் செய்ய வேண்டிய விஷயங்களைச் செய்யாமல் விட்ட சில தலைவர்களின் பின்னணியும் எனக்குத் தெரியும். அதையெல்லாம் செய்துவிட்டு இப்போது, இறுதித் தீர்ப்பு ஆறுதல் அளிக்கிறது என்கிறார்கள். கர்நாடகத்தின் பதினொரு முதல்வரைப் பார்த்துவிட்டதாகச் சொல்கிறார் கலைஞர். அதனால் பயன் என்ன? எதைச் சாதித்திருக்கிறார்? இடைக்காலத் தீர்ப்பையாவது அமல்படுத்த முடிந்ததா? எல்லாம் வாய்ப் பேச்சுத்தான், செயலில் ஒன்றையும் காணோம். இப் பிரச்னை தீரவேண்டும் என்று யாரும் நினைக்கவில்லை. மாறாக, இதை நீட்டித்துக்கொண்டே போய்... ஓட்டு அரசியல் நடத்தத்தான் விரும்புகிறார்கள். இவர்களுக்கெல்லாம் உண்மையிலேயே அக்கறை இருந்தால், நதிகளை தேசிய மயமாக்கட்டும், பார்க்கலாம்.’’

பொதுவாக இந்த தி.மு.க. ஆட்சி எப்படி இருக்கிறது?

‘‘எல்லாமே அரைகுறைதான். குளறுபடிகள்தான். எந்தத் திட்டமும் முழுமையாக, நியாயமாகச் செயல்படுத்தப்படவில்லை. என்னை மாதிரி ஆட்களை புது தலைவர் என்கிறீர்கள்... ஏன்... நீங்கள் பழைய தலைவர்தானே? அனுபவஸ்தர்தானே? பிறகு ஏன் இத்தனை தடுமாற்றம்... தவறுகள்? காரணம், இவர்கள் மக்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. கூட்டணிக் கட்சிகளைச் சமாளிப்பதற்கும், தாஜா செய்வதற்கும்தான் இவர்கள் நேரத்தைச் செலவிடுகிறார்கள். இப்படி ஆட்சி நடத்தினால், அது எப்படி இருக்கும்? நீங்கள் மக்களிடமே கேளுங்கள். நிஜத்தை அவர்கள் தோலுரித்துக் காட்டுவார்கள்!’’

மதுரை மேற்குத் தொகுதி இடைத்தேர்தலில் என்ன திட்டத்தோடு களமிறங்கப் போகிறீர்கள்?

‘‘மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தலில் கெளரவமான வாக்குகளைப் பெற்றோம். இந்தத் தேர்தலிலும், வழக்கம் போல் மக்களை நம்பி நம்பிக்கையோடு களமிறங்குவோம். நாட்டில் நடப்பதைக் கவனித்து வரும் மக்கள், அதனடிப்படையில் எங்களுக்கு வெற்றியை அளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது!’’ என்று உற்சாகமாகச் சொல்லி முடித்தார் விஜயகாந்த

9 Comments:

Anonymous said...

கலக்கல் நான் ரிப்போட்டர்ல படித்துவிட்டு இங்கு வந்தால் நீங்களும் போட்டுவிட்டீர்கள்.....


பெரிய தமிழின துரோகியாக இருக்கிறீர்கள். துக்ளகை எடுத்துக்காட்டுவதாகட்டும், பந்தை எதிர்ப்பதாகட்டும். இப்படியே போனால், திராவிட தமிழ் பக்கத்தில் ஒரு பெரிய கண்டன அறிக்கை விட வைத்து அதனை பூங்காவில் சேர்க்க வேண்டியதாகும் என்று எச்சரிக்கிறோம்......ஹிஹிஹி...

Anonymous said...

what Vijaykanth has jumped directly from heaven or he is the incarnation of Mahatman Gandhi, he is afterall a silly politician. Is he ready to give up his kalyana mandapam to the benifit of public. He don't have any moral right to criticise a politician like Kalaignar.

IdlyVadai said...

Anony,
Like others in TN politics, Vijayakanth is also there. I feel that he is more matured than MK or JJ. Also he has the guts than Rajini and others.... I will post one more post on Vijayakanth.
anbudan,
idlyvadai

Anonymous said...

if captain continues like this, i am sure he will be CM of TN one day. Well Done captain!

Anonymous said...

whatever the truth may be instead of denying or accepting vijayakanth seems to be diplomatic about the alocohol issue. atleast that much honesty. not like the double standard of kalaignar,or DMK..cannot go to temples becuase that is not being rational. but oh yeah, you can go to church(geetha jeevan)and iftar party is acceptable too.who is being irrational here?karunanidhi has been only a politician but look at his wealth...he and jj have been our curse.

Anonymous said...

Befor commenting others, let Mr.Vijayakanth proove that he had paid all the Income Tax due to Government.Let him openly declare that he had received the money only thru Banking channel.When he is not a responsible citizen he has no moral right to comment others.

அருண்,சென்னை. said...

விஜயகாந்த் வல்லவரா, நல்லவரா என்பதை விட, இந்த இரண்டு திராவிடக்கட்சித் தலைவர்களைவிட மோசமில்லை என்ற ஒன்றே போதும்!

கருணாநிதி இவ்வளவு அனுபவம், அறிவும் இருந்தும், அரசியல் பண்பு என்பது அவரிடம் குறைவுதான், அவரது பாவாடை..நாடா..சிலேடை வசனம் அறியாத தமிழன் உண்டா? இன்னமும் போகவில்லை அந்தக் குணம்.

. : beachsundal : . said...

IdlyVadai, I really do not think Vijayakanth is more mature than MK or JJ. Its just that he is bold to have started a party and not aligned with any of the parties so far. That definitely deserves a pat. Becoming a politician and standing up to MK and JJ is something he has done extremely well. Something that Vaiko or Ramadoss have not done well at all. But what is lacking is his maturity. There are years to come and he might come good post MK and JJ phase, but now, it is too early. Its only the Red, Black and White colours that can feature in flags in Tamilnadu. Others have to align with these colours.

getch said...

Hats off to Captain!
Well done!