பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, February 23, 2007

தவறு, நம்முடையதுதான் !

துக்ளக் தலையங்கம் மற்றும் நினைத்தேன் எழுதுகிறேன் பகுதியிலிருந்து.

விவரம் புரியாமல், சில கருத்துக்களைத் தெரிவித்து எழுதுபவர்கள் – தங்களுடைய தவறைப் புரிந்து கொண்டவுடன், மரியாதையாக மன்னிப்புக் கேட்பதுதான் முறை. நாம் மன்னிப்பு கோருகிறோம். சென்ற இதழ் தலையங்கத்தில், நாம் தெரிவித்திருந்த கருத்துக்கள் பல, எவ்வளவு தவறானவை என்பது இப்போது நமக்குப் புரிந்து விட்டது. மன்னிக்க வேண்டுகிறோம்.

நீதிமன்றங்களை கட்டப் பஞ்சாயத்துடன் ஒப்பிட்டு, "சில நீதிபதிகள் ஆகாயத்திலிருந்து குதித்தவர்கள் போல நடந்து கொள்கிறார்கள்' என்றுசொல்லி, "அரசாங்கத்தை
விமர்சிப்பதற்கு நீதிபதிகளுக்கு அதிகாரம் கிடையாது' என்று விளக்கி, "முதலமைச்சரை விட நீதிபதிகளுக்கு அதிக அதிகாரம் கிடையாது' என்று பிரகடனம் செய்து, "அவர்களே (நீதிபதிகளே) தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று நினைப்பார்களேயானால், அது சரியல்ல' என்று எச்சரித்து... அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசியது, மிகவும் தவறு என்று நாம் நினைத்து விட்டோம்.

அது மட்டுமல்ல. அமைச்சர், மேலே சொன்ன மாதிரியெல்லாம் பேசிய அதே மேடையில், அமைச்சரின் பேச்சை ஆமோதித்து தமிழக முதல்வர், "இனிமேலாவது நாட்டில் நேர்மை, நியாயம் இவைகள் தழைக்கட்டும்' என்று கூறினார். தவிர,
நீதிபதிகளை எதிர்ப்பாளர்கள் வரிசையில் சேர்த்து, "இந்த அரசுக்குத் துணையாக மத்தியிலே இருக்கிற ஆட்சி விளங்கிக் கொண்டிருக்கிறது... என்பதையும் எண்ணிப் பார்த்து எதிர்ப்பாளர்கள் நடந்து கொள்ள வேண்டும்' என்றும் பேசினார். இது
நீதிமன்றத்திற்கு விடப்பட்ட மிரட்டல் என்று நினைத்து, நாம் கருத்து தெரிவித்தோம். அதனால், அமைச்சர் மற்றும் முதல்வர் ஆகியோரின் இந்த பேச்சுக்களை, நாம் வன்மையாகக் கண்டித்தோம்.

ஆனால், தவறு செய்தது நாம்தானே தவிர, அமைச்சரோ, முதல்வரோ அல்ல என்பது இப்போது நமக்குப் புரிந்து விட்டது. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பங்குவகித்த "பெஞ்ச்' இப்பிரச்சனையை கவனித்த போது, "நீதித் துறையின் அதிகாரத்தை களங்கப்படுத்தும் நோக்கத்தில், (அமைச்சரின்) இந்தக் கருத்து கூறப்பட்டுள்ளது. அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் பேச்சு முறையற்றது;
தேவையில்லாதது. கட்டப் பஞ்சாயத்து என்று கூறுவதால் கோர்ட்டின் கண்ணியத்திற்கு குறைவு ஏற்படும். அது மட்டுமல்ல, அவர் தொடர்பாக மூன்று வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது, இந்தக் கருத்துக்களை அவர் கூறியிருக்கிறார். எனவே, அந்த
நீதிமன்ற விசாரணையில் அவர் செய்த குறுக்கீடாகவே இதைக் கருதுகிறோம்...' என்றெல்லாம் தலைமை நீதிபதி கூறினார்; அமைச்சரிடம் விளக்கம் கேட்கப்பட்டது.

இந்த நிலையில், நாம், நமது கருத்து சரியானது என்றே நினைத்தோம்; அமைச்சரின் பேச்சு, நீதிமன்ற அவமதிப்பு; குறுக்கீடு; கண்டனத்திற்குரியது – என்ற நமது அபிப்பிராயம் நியாயமானது என்றே நாம் நினைத்தோம்.

இதற்குப் பிறகுதான், அமைச்சர் சார்பாக "விளக்கம்' வந்தது; நீதிமன்றம் அதை ஏற்றது; நமக்கு புத்தி வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல், அமைச்சர் சார்பாக ஒரு விளக்கத்தை தாக்கல் செய்தார். அதில் "நீதிமன்றம், நிர்வாகம், சட்டமன்றம் ஆகியவற்றைப் பற்றி தேசிய அளவில் நடக்கிற நல்ல விவாதத்தின் ஒரு பகுதியாகத்தான், அமைச்சரின் பேச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். நீதித் துறையை குறைத்து மதிப்பிட்டு, அதன் சுதந்திரமான செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக அவருடைய கருத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது' – இந்த "விளக்கம்' நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டது.

"கட்டப்பஞ்சாயத்து' என்று நீதிமன்றத்தை வர்ணிப்பதும், நீதிபதிகள் ஆகாயத்திலிருந்து குதித்தவர்கள் போல நடந்து கொள்கிறார்கள் என்று கூறுவதும், அரசை விமர்சிக்க
நீதிபதிகளுக்கு அதிகாரம் கிடையாது என்று சொல்வதும், நீதிபதிகளே தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று நினைப்பார்களேயானால்... என்று மிரட்டுவதும், "...தேசிய அளவில் நடக்கிற விவாதத்தின் ஒரு பகுதி; இதில் அவமதிப்போ குறுக்கீடோ இல்லை' என்று அமைச்சர் தரப்பில் கூறப்பட, நீதிமன்றம் அதை ஏற்றிருக்கிறது.ஆகையால், இந்த மாதிரியெல்லாம் பேசுவதும், "பூனைக்கு மணி கட்டிய' அமைச்சரை முதல்வர் பாராட்டுவதும், "மத்திய அரசும் தங்களுக்குத் துணை' என்று எச்சரிப்பதும் – நீதிமன்ற குறுக்கீடுகள் ஆகாது; நீதிமன்ற அவமதிப்பு ஆகாது – என்று இப்போது நாம் புரிந்து கொள்கிறோம். நீதிமன்றத்தை ரொம்ப மதிப்பவர்கள்தான்,
நீதிமன்றத்தின் மீது தாங்கள் வைத்திருக்கிற அபார மதிப்பைக் காட்டுவதற்காகத்தான்
– கட்டப் பஞ்சாயத்து முதல் மத்திய அரசு துணை என்பது வரையில், மேற்குறிப்பிட்ட மாதிரி பேசியிருக்கிறார்கள் என்பதை நீதிமன்றமே ஏற்றிருப்பதால், இவை எல்லாம் கண்டிக்கத்தக்க பேச்சுக்கள் அல்ல என்று நமக்கு இப்போது புரிகிறது.

நீதிமன்றம், அமைச்சர், முதல்வர் – என்ற மூவரும் விளக்கிய பிறகு, தவறு நம்மீதுதான் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. ஆகையால்தான், இம்மாதிரி பேச்சுக்களை கண்டித்த நாம், இப்போது மன்னிப்பு கோருகிறோம்.

ஆனால் ஒன்று. இனி, வேறு யாராவது அமைச்சர்கள் அல்லாதவர்கள், "நாமும்
நீதிபதிகள் பற்றியும், நீதிமன்றம் பற்றியும் இப்படியெல்லாம் பேசலாம்; அதில் தவறே கிடையாது' என்று நினைத்து எதையாவது பேசிவிடக் கூடாது.

ஏனென்றால் இது ஜனநாயகம். இங்கு நடப்பது சட்டத்தின் ஆட்சி. இதில்,
மந்திரிகளுக்கு ஒரு நீதி; பிற மாந்தர்க்கு நீதி மற்றோர் வகை! அத்துடன் விவகாரம் முடிந்தது. அமைச்சர் வருத்தம் தெரிவிக்கவில்லை; தனது பேச்சை
நீதிமன்றம் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதைச் சொன்னார்; நீதிமன்றமும் அப்படியே எடுத்துக் கொண்டது. பிரச்சனை முற்றுப் பெற்றது.
நினைத்தேன் எழுதுகிறேன் பகுதியிலிருந்து..
இது வரலாறு காணாதது!


கார்ப்பரேஷன் தேர்தல் பற்றி, சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் இருவித தீர்ப்புகளை வழங்கிய நிலையில், பிரச்சனை மூன்றாவது நீதிபதியின் முன் போயிற்று. இப்போது மூன்றாவது நீதிபதி திரு.மிஸ்ரா, "98 வார்டுகளில் நடத்தப்பட்ட தேர்தல் செல்லாது' என்று தீர்ப்பளித்திருக்கிறார். அதாவது, முன்பு தீர்ப்பளித்த இரு
நீதிபதிகளில் ஒருவரான திரு. கலிஃபுல்லா அளித்த தீர்ப்பை, நீதிபதி திரு. மிஸ்ராவும் உறுதி செய்திருக்கிறார்.

தேர்தல் விவகாரங்களில் நீதிமன்றக் குறுக்கீடு நடைபெறுவது கடினம் – என்று முன்பு நாம் கூறியிருந்தோம்; அதே சமயத்தில் நீதிமன்றக் குறுக்கீடு அவசியமாகிற அளவிற்கு அநியாயம் நடந்திருக்கிறது என்பது திறமையாக எடுத்து வைக்கப்பட்டால், நீதிமன்றம் தனது விசேஷ அதிகாரத்தைப் பயன்படுத்தும் – என்றும் நாம் கூறியிருந்தோம்.

இப்போது இவ்விஷயத்தில் தீர்ப்பளித்துள்ள மூன்றாவது நீதிபதி மிஸ்ரா, "பொதுவாக, நீதிமன்றம் தேர்தல் விவகாரங்களில் குறுக்கிடாது; ஆனால் ஜனநாயக வழிமுறைகளைப் பாதுகாக்க மாநில தேர்தல் கமிஷன் முன்வராத நிலையில்,
நீதிமன்றம் குறுக்கிட்டு நியாயம் வழங்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு. ஒவ்வொரு நிகழ்ச்சியின் தன்மையை ஒட்டி, அவசியம் நேரிடுகிறபோது, தனது விசேஷ அதிகாரத்தைப் பயன்படுத்தி, நீதிமன்றம் நியாயம் வழங்கும்' – என்று
கூறியிருக்கிறார்.சென்னை கார்ப்பரேஷன்


இப்போது வந்துள்ள தீர்ப்பில், மாநில தேர்தல் கமிஷனருக்கு, நீதிபதி கடுமையான கண்டனம் தெரிவித்திருக்கிறார். "மண்ணில் தலை புதைக்கிற நெருப்புக் கோழிபோல தேர்தல் கமிஷனர் நடந்து கொண்டார் – கற்சிலை போல நின்றார் – நடந்த தீமைகளைப் பார்க்க மறுத்தார் – தன்னுடைய கடமையைச் செய்யத் தவறினார்
– முரட்டுப் பிடிவாதம் காட்டினார்...' என்றெல்லாம் நீதிமன்றம் கூறியிருக்கிறது.

இதுவரை எந்த ஒரு தேர்தல் கமிஷனரைப் பற்றியும், எந்த ஒரு நீதிமன்றமும் இவ்வளவு கடுமையான கண்டனங்களைத் தெரிவிக்கிற அவசியம் நேரிட்டதில்லை. வரலாறு காணாத நீதிமன்றக் கண்டனம் பெறுகிற அளவிற்கு, மாநில தேர்தல் கமிஷனர், ஆளும் கட்சியின் ஏவலைப் புரிந்திருக்கிறார்.

கார்ப்பரேஷன் தேர்தலின்போது நடந்த அட்டூழியங்களை, சர்வ சாதாரண நிகழ்ச்சி போல வர்ணித்த தேர்தல் கமிஷனரைக் கண்டித்து, நீதிமன்றம் "இந்த தேர்தலில் நடந்த அட்டூழியம், சாதாரணமானது அல்ல. அது சுனாமி!' என்று கூறியிருக்கிறது.நீதிபதி மிஸ்ரா


"நீதிபதிகள் ஆகாயத்திலிருந்து குதித்து வந்தவர்களா?' என்ற அதிமேதாவித்தனமான கேள்வியை எழுப்பி, முதல்வரின் பாராட்டையும் பெற்ற, அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் ஆத்திரப் பிரசங்கத்தை நினைவுபடுத்துகிற வகையில், நீதிபதி திரு. மிஸ்ரா, "தேர்தல் தினத்தன்று, இந்த பூமி, நரகமாக மாறி விட்டது என்பதைக் கூற, ஒருவர் ஆகாயத்திலிருந்து குதித்து வர வேண்டிய அவசியம் இல்லை' என்று
கூறியிருக்கிறார். அமைச்சரும், முதல்வரும் நீதிபதிகளுக்கு விடுத்த எச்சரிக்கையும், மிரட்டலும் பலன் அளிக்காததால், அவர்கள் என்ன செய்யப் போகிறார்களோ!

இது ஒருபுறமிருக்க, தேர்தல் கமிஷனரைப் பற்றி யார் குறை கூறினாலும், "அவர் பிற்படுத்தப்பட்டவர் என்பதால், அவரை விமர்சிக்கிறார்கள்' என்று ஜாதியைப் புகுத்திப் பேசி, தேர்தல் கமிஷனருக்கு வக்காலத்து வாங்கி வந்தார் தமிழக முதல்வர்; இப்போது இரு நீதிபதிகள், இரு வேறு தீர்ப்புகளில், தேர்தல் கமிஷனரின் ஒருதலைப்பட்ச நடவடிக்கையை வன்மையாகக் கண்டித் திருக்கிறார்கள். இதற்கும் முதல்வர் ஜாதியை இழுக்கப் போகிறாரோ, என்னவோ!

"இந்தத் தேர்தல் கமிஷனர் பதவியில் நீடிக்கிற வரையில், தேர்தல் முறையாக நடக்கும் என்று எதிர்பார்க்க முடியாது' – என்ற எதிர்க் கட்சிகளின் நிலைக்கு, முழு நியாயம் கிட்டியிருக்கிறது.

இத்தனை கண்டனங்களுக்குப் பிறகும் – எதிர்க் கட்சிகளுக்கு சகுனி பட்டம் சூட்டுவது, விமர்சகர்களுக்கு ஜாதி வெறிச் சாயம் பூசுவது, நீதிமன்றத்திற்கு அமைச்சர் மூலம் மிரட்டல் விடுவது – போன்ற வழிமுறைகளை முதல்வர் கடைப்பிடித்தால் – தேர்தல் கமிஷனரின் பதவியைக் காப்பாற்றலாம்; ஆனால் அந்த அமைப்பின் மரியாதையைக் காப்பாற்ற முடியாது.

5 Comments:

ravi srinivas said...

typical CHO.I think the decision given by HC is being challenged in Supreme Court.

IdlyVadai said...

RaviSrinivas Yes. it is typical Cho. Let me put the other article also on this subject.

Anonymous said...

Cho is always best

Anonymous said...

இதே துக்ளக்கில் இந்த வாரம் சோவின் வருடாந்திர விழா வின் பேச்சு ஒரு பகுதி வந்திருக்கிறது.

அமர்க்களமாய் இருக்கிறது.

அதை நீங்கள் பிரசுரித்தால் இன்னும் மஜாவாய் இருக்கும்.

கருணாநிதியை "கோரைக்கால் ஆழ்வான்" பட்டம் கொடுப்பதாகட்டும் (ஔவையார் படப்பாலை பாடி...) இல்லை ஜெயல்லிதா பேச்சுதான் ஆண்பிள்ளையாக இருக்கிறது. கருணாநிதி பேச்சில் இல்லை.... என்று கிண்டலடிப்பதாகட்டும், vintage சோவை படித்தேன். ரசித்து சிரித்தேன். அதையும் எழுதுங்கள்...

Anonymous said...

தவரு எண்ரு தெரிண்தும் அதை ஆதரிப்பவர்க்கல் "மாக்கலுக்கு" சமமானவர்கல் ஆவர்.

யதையும் கட்சியின் பெயரால் ஆதரிபது மதவெரியை போண்ட்ரது..


சுப்பு.