பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, November 08, 2006

FLASH: காளிமுத்து காலமானார்

அதிமுக அவை தலைவர் காளிமுத்து இன்று காலை மாரடைப்பால் காலமானார். முன்னாள் சட்டசபை சபாநாயகரும், அதிமுக அவை தலைவருமான காளிமுத்து சமீப காலமாக உடல் நல குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை அவர் சென்னை மருத்துவனையில் மாரடைப்பால் காலமானார்.
அவருடைய குடும்பத்திக்கு இட்லிவடையின் ஆழ்ந்த அனுதாபங்கள்.


காளிமுத்து பற்றி.. ( நன்றி தட்ஸ் தமிழ் )
மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்து 1942ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் (இப்போது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள) ராமுத்தேவன் பட்டியில் பிறந்தவர். இவரது தந்தை பெயரும் காளிமுத்துதான்.

எம்.ஏ., பி.எச்.டி படித்துள்ள காளிமுத்து மாணவப் பருவத்திலேயே சிறந்த பேச்சாளராக விளங்கினார்.

ஓச்டூடிட்தtடத பேச்சுத் திறமை காரணமாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரால் மேடை மணி என்று பாராட்டப்பட்டவர்.

ஆரம்பத்தில் இருந்தே திராவிட இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்த காளிமுத்து, இந்தி எதிர்ப்புப் போரிலும் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார்.

ஆரம்ப காலத்தில் திமுகவில் இருந்த காளிமுத்து முதல் முறையாக 1971ம் ஆண்டு சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். பின்னர் எம்.ஜி.ஆர். அதிமுகவை ஆரம்பித்தபோது அதில் இணைந்தார்.

1977, 1980 ஆகிய தேர்தல்களில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றார். 1984ம் ஆண்டு மதுரை கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஆனார்.

எம்.ஜி.ஆரின் மிக நம்பிக்கைக்கு உரியவராக திகழ்ந்த காளிமுத்துவை அமைச்சராக்கி அழகு பார்த்தார் எம்.ஜி.ஆர். அவரது அமைச்சரவையில் நிரந்தர அமைச்சராகவும் இருந்தார். எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் உள்ளாட்சித் தறை, வேளாண்மைத் துறை, குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக பணியாற்றினார். அதிமுக துணைப் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் ஜானகி அணியில் இருந்த காளிமுத்து பின்னர் திமுகவுக்குத் திரும்பினார். அப்போது நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் கடலாடி தொகுதியில் போட்டியிட்டு தோற்றார்.

அந்தத் தேர்தலில் சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதி போட்டியிட்டார். கடலாடியில் காளிமுத்துவுக்காக பிரச்சாரம் செய்த கருணாநிதி, ''தம்பி நீ கடலாடி வா.. துறைமுகத்தில் காத்திருக்கிறேன்'' என்று பேசினார். ஆனால், காளிமுத்து தோற்றார்.

திமுகவில் சில காலம் இருந்த காளிமுத்து பின்னர் மீண்டும் அதிமுகவுக்கு மாறினார்.

இம்முறை காளிமுத்துவுக்கு அதிமுகவில் முக்கியத்துவம் கொடுத்து சபாநாயகர் பொறுப்பில் அமர வைத்தார் ஜெயலலிதா. 2001ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

2001ம் ஆண்டு முதல் 2006 வரை அவர் சபாநாயகர் பொறுப்பை வகித்தார். சட்டசபை ஆயுட்காலம் மு¬டிவடையும் தருவாயில் அப்பொறுப்பிலிருந்து காளிமுத்துவை விலக்கி அதிமுகவின் அவைத் தலைவராக நியமித்து அழகு பார்த்தார் ஜெயலலிதா.

அதிமுக ஆட்சியை இழந்த பின்னர் காளிமுத்து மீது இரண்டு வழக்குகளை ஊழல் தடுப்புப் போலீஸார் பதிவு செய்தனர். எம்.எல்.ஏ. விடுதி வளாகத்தில் உள்ள இரண்டு கேண்டீன்களுக்கு முறைகேடாக அனுமதி வழங்கியது தொடர்பான வழக்குகள் அவை.

அரசியலுக்கு அப்பாற்பட்டு நல்ல இலக்கியவாதியாகவும் தமிழ் ஆர்வலராகவும் திகழ்ந்தவர் காளிமுத்து. மிகச் சிறந்த பேச்சாளர். அவரது பேச்சுக்கு பெரும் ரசிகர் கூட்டமே இருந்தது. மேலும், உதாரணங்களைச் சொல்லிப் பேசுவதிலும் வல்லவர்.

''கருவாடு மீனாகாது, கறந்த பால் மடி புகாது'', ''கூரையேறி கோழி பிடிக்கத் தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் பிடிப்பானா'' என்பது உள்ளிட்ட அவர் சொல்லிய பல உதாரணங்கள் தமிழர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தகப் பிரியரான காளிமுத்து நூல்களைப் படிப்பதையே முக்கியப் பொழுதுபோக்காக கொண்டவர். அவரது வீட்டிலும் மிகப் பெரிய நூலகம் உள்ளது. 100க்கும் மேற்பட்ட கட்டுரைகள், ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.
ஜெயலலிதா அறிக்கை:


அ.தி.மு.க. அவைத் தலைவர் காளிமுத்து உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும் மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

முத்தமிழ் அறிஞர், மொழிப் போர்த்தியாகி, பேச்சிலும் மூச்சிலும் தமிழாக வாழ்ந்தவர், தலைமுறை பல கோடி கண்ட தமிழினத்தைச் சாடுவோருக்கு ஓங்காரக் காளியாக, தேனினும் இனிய தீந்தமிழ் தாய் மொழிப் பாவருக்கு ஓய்யார முத்தாக காளிமுத்து விளங்கினார்.

கண்ணான கழகத்துக் கொள்கைகளை தன் உயிர் மூச்சாய்க் கொண்டு மேடைகளில் முழங்கிய போர்வாள், அரசியலில் மொழிப் போராட்டக் காலந்தொட்டு லட்சியப் பய ணத்தில் மாறாத உறுதியோடு நடை போட்டவர்.

கழக அரசு பொறுப்பேற்றுக் கொண்ட நேரத்தில் அமைச்சுப் பணியிலும், பேரவைத்தலைவராகவும்தான் மேற்கொண்ட பணியினை செம்மையாக ஆற்றி தமிழ் கூறும் நல்லுலகிற்கு சேவை புரிந்துள்ளார்.

நம் கழகத்திற்கு வில்லாக வேலாகவும் அதன் வளர்ச்சிக்கு வித்தாக விதையாகவும், தனது வாழ் நாளின் இறுதி மூச்சு வரை கழகத்திற்காக அரும் பணியாற்றி வந்த அவரது இழப்பு கழகத்திற்கு ஈடு செய்ய இயலாததாகும்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்றிலிருந்து 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும்.

8, 9, 10 ஆகிய 3 நாட்கள் கழக கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடப்படும். 3 நாட்கள் பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகிறது.


கருணாநிதி இரங்கல்:

காளிமுத்துவின் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மாணவப் பருவத்திலிருந்தே திராவிட இயக்கப் பற்றாளராக விளங்கியவர் காளிமுத்து. பின்னர் மொழிப் போரில் ஈடுபட்டு தியாகியாக மாறினார். எழுத்து பேச்சு ஆகியவற்றில் திறம் பெற்று விளங்கியவர்.

அமைச்சர், எம்.பி, சபாநாயகர் ஆகிய பதவிகளை ஏற்று செயல்பட்டவர். நட்புக்கும், நல்ல தோழமைக்கும் ஏற்றவராக அவர் விளங்கினார். அவரது மறைவுக்கு ஆழ்ந்த துயரத்தையும், இரங்கல்களையும் அவரது குடும்பத்திற்கு தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.


எம்.கிருஷ்ணசாமி
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், முன்னாள் சபாநாயகர் கா. காளிமுத்து திடீர் மரணமடைந்த செய்தி அறிந்து பெரிதும் துயறுற்றேன். தமிழ்மொழி இலக்கியத்தை கற்றுணர்ந் தவர். அரசியலில் தான் சார்ந்துள்ள கட்சி யின் கருத்தை தெரிவிப்பதில் திறமையான பேச்சாளர். அமைச்சராகவும், சபாநாயக ராகவும் திறம்பட பணியாற்றியவர். அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது இழப்பால் துயருறும் குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.

இல.கணேசன்
பிஜேபி மாநில தலைவர் இல. கணேசன் தனது இரங்கல் செய்தியில், முன்னாள் சபாநாயகர் கா. காளிமுத்து, ஒரு நல்ல பேச்சாளர், இலக்கியவாதி மட்டுமல்ல என்னுடைய நல்ல நண்பர். கட்சி எல்லையை கடந்து கண்ணியமான நட்பை அனைவரி டமும் பாராட்டியவர். சட்டசபையை கலகலப்பாக மட்டுமல்ல தமிழ் மணக்க நடத்தியவர். அவரின் இழப்பு அரசியல் உலகிற்கு மட்டுமல்லாமல் தமிழ் இலக்கிய உலகிற்கும் ஒரு பேரிழப்பு. அவரின் குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கி றேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மறைந்த அதிமுக அவைத் தலைவர் டாக்டர் காளிமுத்து அண்ணாவின் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு அரும்பணி ஆற்றியவர்.

எம்ஜிஆரால் நன்கு மதிக்கப் பட்டவர். அவரது அமைச்சர வையில் இடம் பெற்றவர். அமைச்ச ராகப் பொறுப்பேற்று தமிழ்நாட்டுக்குத் தொண்டு புரிந்தவர். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர். தலைசிறந்த பேச்சாளர், எழுத்தாளர், சட்டமன்ற தலைவராகவும் தொண்டாற்றியவர். மதுரை தந்த நல்லமுத்துக்களில் ஒருவராக இருந்தவர். அவரது மறைவு அவர் சார்ந்த கட்சிக்கு மட்டுமல் லாமல் தமிழ்நாட்டுக்கும், திராவிட இயக்கத்திற்கும் பேரிழப் பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், கட்சி தொண்டர் களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழுக்கு தொண்டு செய்த தூண்டா மணிவிளக்கு அனைந்து விட்டது. திராவிட இயக்கத்தின் சிங்கம் சாய்ந்து விட்டது. அருவி என தாவிவரும் தமிழ்ச் சொற்கள் கேட்பவரை காந்தமென ஈர்க்கும் மணிக்குரல் அவருக்கு நிகரான இன்னொரு சொற்பொழிவாளரை இதுகாரும் நான் கண்டதில்லை. இனி காணப்போவதும் இல்லை.

என் உயிர் நண்பனை இழந்தேன். தமிழகம் ஒரு உத்தம தமிழ் தொண்டனை இழந்தது. அதிமுக பகைக்கு அஞ்சாத ஒரு சேனாதிபதியை இழந்தது. அன்பால் அரவணைத்து பாதுகாத்த தலைவனை அவரது குடும்பம் இழந்தது.

சு.திருநாவுக்கரசர்
முன்னாள் மத்திய அமைச்சர் சு.திருநாவுக்கரசர் தனது இரங்கல் செய்தியில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத் திக்கொண்ட எம்ஜிஆர் காலத்தில் அமைச்சராகவும், பிறகு சபாநாயகராகவும் சிறப்பாக பணியாற்றிய அண்ணன் காளிமுத்து சிறந்த பேச்சாளர், மிகச்சிறந்த இலக்கியவாதி. அனைத்துக்கும் மேலாக நல்ல மனிதர். நயத்தகு நாகரிகம் நிறைந்தவர். சிறந்த பண்பாளர்.

அவரது இழப்பு தமிழ்த்தாய்க்கு மிகப்பெரிய இழப் பாகும். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதா பத்தை தெரிவித்துக்கொள்கிறேன். தி.க. தலைவர் கி.வீரமணி, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன், குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு. தமிழரசன் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


6 Comments:

Sivabalan said...

அவருடைய குடும்பத்திக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

மனதின் ஓசை said...

மிகச்சிறந்த பேச்சாற்றல் கொண்ட மனிதர் அவர். அவர் இறப்பு அவர் குடும்பத்துக்கும் அவர் குடும்பத்திற்கும் ஆதிமுக-வுக்கும் மிகப்பெரிய இழப்பு.

அவர் குடும்பதிற்கு என் அனுதாபங்கள்.

பங்காளி... said...

அரசியல் நாற்றத்தில் அமிழ்ந்துபோன அருமையான தமிழறிஞர்....அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

இம்சை அரசன் said...

மிஸ்டர் வடை, நான் இருக்கிறேன்.. உங்களுக்கு ஆதரவாக, பதிவு பார்த்தீர்களா.. :-))))))))

IdlyVadai said...

Update: ஜெ, கலைஞர் இரங்கல்

IdlyVadai said...

Some more updates..