பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, November 15, 2006

கலைஞர் பேட்டி ( அ ) ஜெயலலிதாவிற்கு பதில்

திருக்குறள், கூட்டுறவு தேர்தல் குறித்து பதில்

கேள்வி:- அரசுப்பேரூந்துகளில் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் திருக்குறள் எழுதப்பட்டிருந்ததாகவும், இப்போது அந்த திருக்குறளை அழித்து விட்டு `கலைஞர் பொன் மொழி' எழுதப்பட்டிருப்பதாகவும் அதை எதிர்த்து ஒரு போராட்டம் என்றும் ஒரு சிலர் கூச்சல் எழுப்பியிருக்கிறார்களே?

பதில்: அளித்த வாக்குறுதிகளை அடுத்தடுத்து நிறை வேற்றி வரும் ஆட்சியின் சாதனைகளை மக்கள் மனதிலிருந்து திசை திருப்பி மறைப்பதற்காக வயிற்றெரிச்சல் வனிதாமணிகள் கிளப்பிவிடும் வதந்தி இது!

"எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு''

என்று கூறிய திருவள்ளுவரின் குறள் மொழிக்கு உண்மைப்பொருள் காண்பீரேல் தெளிவு பெறுவீர்!

"சாதி மத பேதம் தீது'' என்றும்- "நான்'' என்ற ஆணவம் கூடாது "நாம்'' என்ற பணிவு வேண்டும் என்றும் எழுதப்பட்டவைகளும் அரசுப்பேருந்துகளில் இடம்பெறுவது அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட முடியுமா என்ன?

வள்ளுவர்க்குக் கோட்டம்- வானுயர் சிலை, குமரி முனையில்! குறளோவியம் நூல், தமிழில் ஆங்கிலத்தில், மற்றும் குறளுக்கு உரை, இப்படி எத்தனையோ புகழாரங்களை திருக்குறளுக்கு அணிவித்த அடியேன் தான் "குறளை'' முதன் முதலாக அரசுப்பேருந்துகளில் 1968-ம் ஆண்டிலேயே இடம் பெறச்செய்தவன் என்பதை அப்போது அரசியலுக்கு வராத அம்மணியாரிடம் நினைவூட்டுவது நல்லது.

கே:வடலூர் வள்ளலார் சபையில் உருவவழிபாடு என்றும், அதனால் பிரச்சினை என்றும் அது பற்றி விசாரித்தறிய கழக அரசு பொன்னம்மாள் தலைமையில் ஆய்வுக்குழு ஒன்றை அமைத்திருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளது பற்றி?

ப:- சிலை வணக்கம் கூடாது என்பதை செயல்படுத்திக்காட்டிய சிறந்த ஞானிகளில் ஒருவர் சீர்திருத்தச் செம்மல் வடலூர் வள்ளலார் என்பதால் அவர் மீது நமக்கு தனி மதிப்பும், மரியாதையும், பற்றும், பாசமும் உண்டு. அவர் வகுத்த அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என்ற வழியை மாற்றுவது சரியல்ல. இதிலே மாற்று கருத்து உள்ளவர்களின் நடவடிக்கை நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. இந்த நிலையில் அரசின் சார்பில் யாரையும் ஆய்வுக்குழுத்தலைவராக நியமிக்கவும் இல்லை. அப்படியொரு ஆய்வு குழு செயல்பட்டால் அதற்கும் அரசுக்கும் எந்தச்சம்பந்தமும் இல்லை.

கே:- கன மழை காரணமாக மேட்டுப்பாளையம்- குன்னூர்சாலை துண்டிக்கப்பட்டிருப்பதாகச் செய்தி வந்திருக்கிறதே?

ப:- நேற்றைய தினமே இது குறித்து முதல்-அமைச்சர் அலுவலகத்திலிருந்து தொடர்பு கொண்டு கோவை, நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடனும், நீலகிரி மாவட்ட அமைச்சர் தம்பி ராமச்சந்திரனுடனும் தொலைபேசியில் பேசி நிவாரண நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்று நான் கூறியதன்பேரில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், 17 இடங்களில் சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதென்று, சாலை சரி செய்யப்படும் பணி நடைபெற்று வருவதாகவும் அதுவரை கோத்தகிரி வழியாக போக்குவரத்து திருப்பிவிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

லாரி விபத்தில் உயிரிழந்த கிளீனர் குடும்பத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி உடனடியாக வழங்கிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கே:- 5000 ஆதி திராவிட பெண்களுக்கு தலா ஒரு ஏக்கர் நிலம் சர்வோதய இயக்கத்தின் சார்பில் வழங்கப்பட்டது குறித்து இன்றைய நாளேடுகளில் செய்தி வந்திருப்பதைப் பார்த்தீர்களா?

ப:- 2006-ம் ஆண்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையிலே தெரிவித்த வாக்குறுதிகளுக்கேற்ப, தமிழ்நாட்டிலுள்ள நிலமற்ற ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு தரிசு நிலங்களை பண்படுத்தி இலவசமாக வழங்கும் திட்டம் செப்டம்பர் 17-ல் அனைத்து மாவட்டங்களிலும் முதற்கட்டமாக நடைபெற்று, தற்போது டிசம்பர் 17-ந்தேதி அன்று இரண்டாவது கட்டமாக அவ்வாறு நிலம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இந்த நிலையில் இன்றைய தினம் தஞ்சையில் 5000 ஆதி திராவிடப்பெண்களுக்கு தலா ஒரு ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது பற்றிய செய்தியினை முழுவதுமாகப் படித்தேன். அந்தச் செய்தியிலே சர்வோதய இயக்கத்தலைவியும், உழவனின் நில உரிமை இயக்க பொதுச்செயலாளருமான கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் பேசும் போது, "நாங்கள் கூத்தூரில் வினோபாபாவே ஆசிரமம் அமைத்து உழவனின் நிலஉரிமை இயக்கத்தை தொடங்கி ஆதிதிராவிட மகளிர் முன்னேற்றத்துக்காக 38 ஆண்டுகளாக போராடி வருகின்றோம். கிராமப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் நிலமற்ற 10 ஆயிரம் மகளிருக்கு தலா ஒரு ஏக்கர் வீதம் நிலத்தைப்பிரித்து அளித்தோம்.

இதற்கும் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி பத்திரப்பதிவு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களித்தார். தற்போதும் 1061 ஏக்கர் நிலம் வாங்க தாட்கோ மானியம் வழங்கவும், பத்திரப்பதிவு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களித்தும் முதல்-அமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார் என்று பேசியிருக்கிறார். இதையும் எண்ணிப்பார்த்தேன்.

இது போலவே மற்றொரு விவசாயிகள் பாதுகாப்பு இயக்கமான டாக்டர் அம்பேத்கர் மக்கள் சங்கத்தின் சார்பாக வாங்கப்பட்ட நிலங்களுக்கு பத்திரப்பதிவு விதி விலக்கு கோரி ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அனுப்பப்பட்ட கோப்பு கையெழுத்திடப்படாமல் கிடந்து தி.மு.க. தற்போது ஆட்சி பொறுப்புக்கு வந்தபிறகு அந்தக்கோப்பிலே நான் கையெழுத்திட்டு, அந்த சலுகையை வழங்கினேன் என்பதையும் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன்.

கே :தமிழகத்தில் கூட்டுறவுத் தேர்தல் நியாயமாக நடக்காது என்று ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளாரே?

ப: ஓ! அதனால்தான் அவரது ஆட்சியில் கூட்டுறவு தேர்தலே நடத்தாமல் இருந்து விட்டாரோ? நியாய அநியாயங்களை சுட்டிக்காட்டி நல்ல தீர்ப்பு அளிப்பதற்கு நீதி மன்றங்கள் இருக்கும் போது, மக்கள் மன்ற உரிமைகளைத் தடுத்து நிறுத்தி ஜனநாயக அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தாமல் விட்டு விடுவது தான் இந்த "ஜனநாயகத்தாயின்'' அரசியல் அறவழி போலும்.

மேலும் 2001-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலின் போது முதல்-அமைச்சர் பொறுப்புக்கு வந்த ஒரு சில நாட்களுக்குள் கூட்டுறவு தேர்தலை நடத்துவேன் என்று ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். அதற்கு பிறகு ஐந்து ஆண்டுகள் ஆட்சியிலே இருந்த ஜெயலலிதா கூட்டுறவு தேர்தலையே நடத்தவில்லை.

அவரது ஆட்சிக்காலத்தில் ஐந்தாண்டுகாலம் கூட்டுறவு தேர்தலைப்பற்றி வாய்திறக்காமல் இருந்து விட்டு தற்போது தி.மு.க. ஆட்சியில் நடைபெற உள்ள கூட்டுறவுத் தேர்தலைப்பற்றி அறிக்கை விட அவருக்கு எந்தவிதத்தில் அருகதை உள்ளது என்பதை தமிழ்நாட்டு மக்கள்தான் எண்ணிப்பார்க்க வேண்டும்.

கே: நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றத் தேர்தல்களை ஒட்டு மொத்தமாக ரத்து செய்து விட்டு மறு தேர்தல் நடத்த வேண்டுமென்று ஒருவர் சொல்கிறாரே?

ப: நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றத்தேர்தல்கள் என்ன? அதற்கு முன்பு நடைபெற்ற பொதுத்தேர்தலைக்கூட ஒட்டுமொத்தமாக ரத்து செய்து விட்டு மறுதேர்தல் நடத்தினால் அவர்களுக்கு மகிழ்ச்சியாக தான் இருக்கும். வெற்றிவாய்ப்பை இழந்தாலும் பெட்டி நிரம்புமல்லவா!

கே: அரசு அதிகாரிகள் கடமையைச் செய்யும் போது, தடுப்பதும் குறுக்கிடுவதும் குற்றம் என்பதினால்தானே அப்படித்தடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது?

ப:- அரசு அதிகாரிகள் சட்டப்படி தங்கள் கடமையைச் செய்தால் பிரச்சினையில்லை எல்லோருக்கும் உள்ள பொதுவான நியாயமும் சட்டமும் தனக்கு மட்டும் கிடையாது என்று வல்லடி வழக்காடினால் அதன் விளைவுகளை அவர்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

2 Comments:

மு.கார்த்திகேயன் said...

இட்லிவடையாரே, உண்மையோ பொய்யோ கலைஞரோட கேள்வி பதில் எப்பவுமே எனக்குப் பிடிக்கும். அவர் ஒவ்வொரு கேள்விகளுக்கும் தனது ஞாபகப் பெட்டகத்துள் இருந்து பதில் சொல்வது என்னை வியப்பில் ஆழ்த்தும்..

We The People said...

//இட்லிவடையாரே, உண்மையோ பொய்யோ கலைஞரோட கேள்வி பதில் எப்பவுமே எனக்குப் பிடிக்கும். அவர் ஒவ்வொரு கேள்விகளுக்கும் தனது ஞாபகப் பெட்டகத்துள் இருந்து பதில் சொல்வது என்னை வியப்பில் ஆழ்த்தும்..//

கார்த்திகேயன் பதில்களுக்கு கேள்வி எழுதும் போது ஞாபக பெட்டகம் தேவையா?? யாருபா இவரு விவரம் தெரியாதவரா இருக்காரு...