பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, July 14, 2006

வித்யாவுக்கு வாழ்த்துக்கள் !

‘அரவாணி’ என்றதும் உங்களுக்கு என்ன நினைவுக்கு வருகிறது?

அடிக்கும் நிறத்தில் உடையணிந்துகொண்டு, கையைத் தட்டி பாட்டுப் பாடி காசு பறிக்கிற கூட்டம்.. நாணி, கோணி நெளியும் மனிதர்கள்.. இவைதானே? ஆனால், இந்த அடையாளங்கள் எதுவுமின்றி, நம்முள் ஒருவராக, வாழ்ந்து வருபவர்தான், ‘லிவிங் ஸ்மைல்’ வித்யா.

‘லிவிங் ஸ்மைல்’? உருவத்தில் ஆணாகவும் உணர்வு களில் பெண்ணாகவும் பிறந்து, அந்த பாலின குழப்பங் களுடனே வளர்ந்து, சோகங்கள் மட்டுமே சொந்தமாகிப் போனாலும், தன் பெயரிலாவது புன்னகை வாழட்டுமே என்று அவர் சேர்த்துக் கொண்ட பட்டப் பெயர்தான் ‘லிவிங் ஸ்மைல்’.

வித்யா ஒரு எம்.ஏ. பட்டதாரி. சமூகத்தின் கேலி, கிண்டல், அவமானம், புறக்கணிப்பு அனைத்தையும் சகித்து.. அந்த சகிப்புத்தன்மை என்கிற ஆயுதத்தின் மூலமே ஒரு பெரிய அங்கீகாரத்தையும் பெற்றிருக்கிறார் அவர்.

ஆம்! நீதிமன்றம் ஏறி நியாயம் கேட்காமலே.. பேனர்கள் ஏந்தி போராடாமலே.. கத்தியின்றி, சத்தமின்றி, பெரும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். மதுரையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் வித்யா, அங்கேயே ஒரு ‘லேடீஸ்’ ஹாஸ்டலில் மற்ற பெண்களுடனும் தங்கியிருக்கிறார்! அரவாணிகள் என்றாலே விரட்டியடிக்கும் சமூகத்தில், அவருக்கு இதை விடவும் மிகப்பெரிய அங்கீகாரம் வேறென்ன இருக்க முடியும்?

யதார்த்தத்தின் போக்கிலேயே தானும் சென்று, கொஞ்சம் கொஞ்சமாக தனக்கான அடையாளத்தைப் பெற்று வரும் அவரது இயல்பு, மற்ற அரவாணிகளிடம் இருந்து அவரை வேறுபடுத்திக் காட்ட.. அதற்காகவே அவரை சந்தித்தோம்.

மதுரை, அரசரடியில் உள்ள ‘தமிழ்நாடு தியாசபிகல் செமினரி’ வளாகத்தில் இருக்கிற பண்டித ரமாபாய் பெண்கள் விடுதியில், ஒரு ஞாயிறு மதியப் பொழுதில் தனக்கும் தன் அறைத் தோழிக்குமாக மதிய உணவு வாங்கிக்கொண்டு திரும்பியவர், நம்மைப் பார்த்ததும் தோழமையுடன் புன்னகைத்து வரவேற்றார்.

முரட்டு ஜீன்ஸ்.. எளிமையான காட்டன் டாப்ஸ்.. சின்ன கிளிப்புக்குள் அடங்காமல் பறந்த கூந்தலில் மருதாணியின் பழுப்பு நிறம் ஏறியிருக்க, மஞ்சள் குளித்த முகம் பின்மதிய வெயிலில் மினுமினுத்தது. சிரிக்கும்போது எட்டிப் பார்க்கும் சிங்கப் பற்கள் முகத்துக்குக் களை சேர்க்க, 24 வயதிலும் ஒரு பள்ளிச் சிறுமி போன்ற மிரட்சி.. கண்களில் நிரந்தரமாக!

‘‘உங்களைப் பத்தி சொல்லுங்க வித்யா..’’ என்றதும் ஒரு வெறுமையான சிரிப்புடன் துவங்கினார்.

‘‘திருச்சிதான் சொந்த ஊர். எல்லாரையும் போலதான் நானும் ஒரு இயல்பான குடும்பத்துல மூணாவதா பொறந்தேன். ரெண்டு அக்கா.. கல்யாணமாயிடுச்சு! ஒரு தங்கச்சி, எட்டாவது படிக்குது. நான் ஆணா பொறந்தாலும், சின்ன வயசுலயே பெண்மைக்கான உணர்வுகள், விருப்பங்கள் எனக்குள்ள மெலிதா இருந்தது. அக்காக்களோட ட்ரெஸ்ஸை அறைக்குள்ள இருக்கும்போது போட்டுப் பார்க்கிறது, எப்பவும் பொம்பளைப் புள்ளைங்க கூடவே செப்புச் சாமான் வச்சு வெளையாடறதுனு இருப்பேன். வீட்டுல திட்டு வாங்க. ஆனாலும், ஸ்கூல் ஃபைனல் முடிக்கிற வரை எனக்கு இதனால பிரச்னை எதுவும் இல்ல.

காலேஜ் போனதும்தான் ரொம்ப பாதிக்கப்பட்டேன். ‘பெண்ணாக இருக்கணும்’கிற என்னோட உணர்வுப் போராட்டம் ஒரு பக்கம்.. என் நடை, உடை, செய்கை களைப் பார்த்து சக மாணவர்கள் பண்ற கேலியும் கிண்டலும் தந்த மனஉளைச்சல் இன்னொரு பக்கம்னு ரொம்ப துடிச்சுப் போயிட்டேன். அந்த நிலையிலயும் நான் பி.எஸ்சி. பாஸ் பண்ணினேன்னா, எனக்கு படிப்பு மேல இருந்த ஆர்வம்தான் அதுக்குக் காரணம்.

இயல்புலயே நான் கொஞ்சம் ரிசர்வ்டு டைப். எனக் குள்ள எழுந்த குழப்பங்கள், என்னை இன்னும் ஒதுங்க வச்சது. தனிமையை அதிகமா நாட ஆரம்பிச்சேன். அதுக்கு எனக்கு துணையாக இருந்தது புத்தகங்களும் நாடகங்களும்தான். என்னோட வலிகளுக்கான வடிகாலா அது ரெண்டும்தான் இருந்தது’’ - தெளிவாகப் பேசிக் கொண்டே போன வித்யா, இந்தக் குழப்பங்களுக்கு இடை யிலேயே எம்.ஏ., மொழியியலும் படித்திருக்கிறார்.

‘‘கல்லூரி நாட்கள்ல ‘ஆண் உருவத்துல இருந்துக் கிட்டு, பெண்ணா வெளிப்படறதனாலதானே இந்த மரண அவஸ்தை? பெண்ணாவே மாறிட்டா என்ன?’ங்கிற எண்ணமும் ஆர்வமும் தீவிரமாச்சு. ‘கஷ்டமோ, நஷ்டமோ.. அது நம்ம குடும்பத்தை பாதிக்கவேண்டாம். நாமளே எதிர்கொள்ளலாம்’னு முடிவு பண்ணித்தான் எம்.ஏ முடிச்சதும் வீட்டுல சொல்லிக்காம, சென்னைக்கு கிளம்பிட்டேன்.

சென்னையில எனக்குத் தெரிஞ்ச அரவாணிகள்கிட்ட என் ஆசையைச் சொன்னேன்.. அவங்க ‘பாம்பே, பூனா மாதிரி நகரங்கள்லதான் இதுக்கான ஆபரேஷன் பண்றாங்க! ஆனா, அதுக்கு நிறைய செலவாகும்’னு சொன்னாங்க. ஆனாலும், எம்.ஏ வரைக்கும் நான் படிச்சிருக்கறதால ஏதாவது வேலை பார்த்து சம்பாதிச்சு எப்பிடியாவது ஆபரேஷன் பண்ணிக்கணும்ங்கிற வெறியோட பூனாவுக்குப் போய் இறங்கினேன். ஆனா, பூனாவுல நான் சந்திச்ச அந்த உலகம் ரொம்பவும் பயங்கரமானது.. வேதனைமிக்கது..’’ என்றவரின் கண்களில் அந்த கோரத்தின் தாக்கம் தெரிந்தது. அவரே தொடரட்டும் என அமைதியாகக் காத்திருந்தோம்.

‘‘அங்கே அரவாணிகளோட மெயின் பிசினஸ் ‘கடை கேக்குறது’ (பிச்சையெடுப்பது)தான். ‘நான் படிச்சிருக் கேன்.. ஏதாவது வேலை பார்த்து, சம்பாதிக்கப் போறேன்’னு சொன்னதும், ஏதோ நான் சொல்லக் கூடாததை சொல்லிட்ட மாதிரி நக்கலா சிரிச்சாங்க, அங்கே நான் சந்திச்ச அரவாணிங்க. இருந்தாலும் அதையெல்லாம் கண்டுக்காம, டிரெயின்ல கீ-செயின், மொபைல் கவர் மாதிரி பொருட்களை விக்க ஆரம்பிச்சேன். ஆனா, கடைசியில அவங்களோட ஏளனச் சிரிப்புதான் ஜெயிச்சது. ஒருத்தரும் எங்கிட்ட ஒரு பொருள்கூட வாங்கல. வாங்காதது மட்டுமில்ல, கேலி பண்ணி கேவலப்படுத்தினாங்க.

‘எங்க பேச்சைக் கேக்காம வியாபாரத்துக்குப் போனேல்ல.. பார்த்தியா, என்ன ஆச்சு?’ அப்டீனு சொல்லி, அங்கேயிருந்த அரவாணிகள் என்னை சிறுமைப்படுத்துனாங்க. உழைக்கணும்னு கிளம்பி, இப்படி ஃபெயிலியர் ஆகிட்டதால, ஒரு தப்பான முன்னுதாரணமா ஆகிட்டோமேனு ரொம்ப வருத்தப்பட்டேன். வேற வழியே தெரியாம, கடைசியா நானும் ‘கடை கேக்க’த் தொடங்கினேன்!’’ - இதைச் சொல்லும்போது, குரல் மிகவும் கமறி, கலங்கிய கண்களை மறைக்க தலை கவிழ்ந்து, அவமானத்தால் முகம் சிவக்க.. குறுகிப் போனார் வித்யா. சில வினாடிகள் கழித்துத் தொடர்ந்தார்..

‘‘பிச்சையெடுக்கிறது எவ்வளவு கேவலமான விஷயம் தெரியுமா? இருந்தாலும், என் தோற்றத்துனால நான் தினம் தினம் சந்திக்கற அவமானத்தை நினைச்சு, ‘கொஞ்ச நாள்தானே!’னு சமாதானத்தோட, அந்த ஈனத் தொழிலைச் செஞ்சேன். தொடர்ந்து ஏழு மாசம் கடை கேட்டதில ஆபரேஷனுக்கு தேவையான பணம் கிடைச்சிடுச்சு. அதுக்கப்புறமா பூனாவுலயே ஆபரேஷன் பண்ணிக்கிட்டேன்!’’ என்றவர், பெண்ணாக மாறும் தனது கனவு நனவானதும் சொந்த மண்ணுக்கே போய் உழைத்துச் சம்பாதிக்கிற ஆசையில் மதுரை வந்திருக்கிறார்.

‘‘இங்கே வந்து ஒவ்வொரு இடமா வேலை கேட்டு ஏறி இறங்கினேன். என்னோட தோற்றத்துல வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத அவங்க, என் சர்டிஃபிகேட்ஸ்ல ‘பாலினம்: ஆண்’னு எழுதியிருந்ததைப் பார்த்ததும், அப்படியே பின்வாங்கினாங்க. என் முழுக் கதையையும் சொல்லி, ‘நான் ஒழுங்கா வேலை பார்த்து, கெளரவமா வாழ விரும்பறேன்’னு சொன்னாலுமே, ஏத்துக்கறதுக்கு தயாரா இல்ல. அவங்களையும் குற்றம் சொல்ல முடியாது. அவங்க நிலையில நான் இருந்திருந்தாலுமே அப்படித்தான் நடந்திருப்பேனோ என்னவோ? அதனால பொறுமையா முயற்சி செஞ்சேன்.

கடைசியா, என் வார்த்தைகளை நம்பின இந்த கம்பெனிக் காரங்கதான் இன்டர்வியூ வச்சு என்னை தேர்ந்தெடுத்து, ‘இ.டி.பீ. அசிஸ்டன்ட்’ வேலை கொடுத்திருக்காங்க. கெளரவமான வாழ்க்கை கிடைச்சிருக்கு. ஒவ்வொரு மாசமும் நான்கு இலக்க சம்பளம் வாங்கும்போது ‘இது கனவா, நனவா’னுதான் பிரமிப்பா இருக்கு!’’ - அவர் முகத்தில் கவலை ரேகை மறைந்து, பிரகாசம் தெரிகிறது.

‘‘சரி, இந்த லேடீஸ் ஹாஸ்டல்ல எப்படி சேர்ந்தீங்க?’’ என்றோம்.

‘‘அதுக்கும் நான் பொறுமையைத்தான் ஆயுதமா எடுத்துக் கிட்டேன். இங்கேகூட முதல்ல என்னை அனுமதிக்கவே யோசிச்சாங்க. அப்புறம், எங்க மேனேஜர் கொடுத்திருந்த சிபாரிசு லெட்டரைப் பார்த்துதான் கொஞ்சம் தயக்கத் தோடவே ஏத்துக்கிட்டாங்க. இது எதையுமே நான் தப்பா நினைக்கல. பெண்கள் பாதுகாப்பா தங்கற இடத்துல, என்னை.. அதுவும் முன்னே பின்னே தெரியாம எப்படி அனுமதிப்பாங்க?

முதல்ல, இங்கே ஹாஸ்டலை ஒட்டியிருக்கற கெஸ்ட் ரூமைத்தான் எனக்கு ஒதுக்கினாங்க.. ஆனா, கொஞ்ச நாள்லயே, நாகரிகமான என்னோட நடவடிக்கைகளைப் பார்த்துட்டு, மெயின் ஹாஸ்டல்லயே எனக்கு இடம் ஒதுக்கினாங்க. அதை எனக்குக் கிடைச்ச பெரிய வெற்றியா என் மனசு கொண்டாடிச்சு. இப்ப, நானும் அவங்கள்ல ஒருத்தியா தங்கியிருக்கறேன். பாதுகாப்பான சூழல்ல, கெளரவமா இருக்கறேன்ற நினைப்பே எனக்கு இன்னொரு பிறப்பு கிடைச்ச மாதிரி இருக்கு! இந்த அங்கீகாரத்துக்காகத்தானே நான் இத்தனை நாள் தவமிருந்தேன்!’’ - என்று சொல்கையில் கண்கள் பளீரிடுகின்றன வித்யாவுக்கு.

அரவாணிகளுக்காக, அவர்களின் முன்னேற்றத்துக்காக நிறைய செய்ய வேண்டும் என்கிற தாகம் நிறை யவே இருக்கிறது வித்யாவுக்கு.

‘‘ ‘ஆண்’, ‘பெண்’ மாதிரி நாங் களும் ஒரு ‘பாலினம்’னு மக்களை புரிஞ்சுக்க வைக்கறதுதான் என்னோட கனவு.. லட்சியம் எல்லாம்! முதல்ல ஒரு வக்கீல் மூலமா என் சான்றிதழ்கள்ல பாலின பெயரை சட்டப்பூர்வமா மாத்திட்டு, அப்புறம் பாங்க் அக்கவுன்ட், டிரைவிங் லைசன்ஸ்னு ஒவ்வொண்ணா முன்னேறணும்! அப்பதான் எனக்குப் பின்னால வர்ற அரவாணிகளுக்கு நான் ஒரு நல்ல முன்னுதாரணமா இருக்க முடியும். குழப்பத்தோட வர்ற இளம் அரவாணிகளுக்கு கவுன்சிலிங் கொடுத்து, வேலைவாய்ப்புக்கு உதவணும். இதையெல்லாம் கண்டிப்பா நான் சாதிப்பேன்கிற நம்பிக்கை இருக்கு. ஏன்னா, சமூகத்தோட கேலி, கிண்டல்களால மனசொடிஞ்சு போய் பிச்சை எடுத்து திரியற சராசரி அரவாணி இல்ல நான்.. ஆயிரத்துல ஒருத்தி.. அபூர்வமான பிறவி!’’ - உற்சாகமாக முடிக்கிறார்.

கேலிப் பார்வைகளை ஆச்சர்யப் பார்வைகளாக மாற்றிக் காட்டிய வித்யாவின் வெற்றிக்குக் காரணம்.. அந்த ஏளனப் பேச்சுக்களை எப்போதும் அவர் ஞாபகத்தில் வைத்திருப்பதும், அவை ஜெயித்துவிடக் கூடாது என்பதற்கு அவர் எடுத்துக் கொள்கிற முயற்சியும் கவனமும்தான் என்பது புரிகிறது! அவருக்கு மட்டு

நன்றி: ஆனந்த விகடன்.

20 Comments:

பொன்ஸ்~~Poorna said...

வாழ்த்துக்கள் வித்யா..

நன்றி இ.வ

மா சிவகுமார் said...

வித்யாவின் உறுதியும், பொறுமையும் இன்னும் அதிகரித்து வாழ்வில் பல உச்சங்களைத் தொட வாழ்த்துக்கள்.

அன்புடன்,

மா சிவகுமார்

Sivabalan said...

Wish You All the best "Vidya".

ஜோ / Joe said...

சகோதரி வித்யா-வுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

gulf-tamilan said...

வாழ்த்துக்கள்

இப்னு பஷீர் said...

வித்யாவுக்கு வாழ்த்துக்கள்! அவரது வெற்றி மற்றவர்களுக்கும் ஒரு தூண்டுகோலாக அமைந்து, அரவாணிகளின் முன்னேற்றத்துக்காக நிறைய செய்ய வேண்டும் என்கிற வித்யாவின் தாகம் நிறைவேறவும் வாழ்த்துக்கள்!

நன்மனம் said...

Best wishes to Living Smile Vidya.

Thanks I.V for posting this.

செந்தழல் ரவி said...

நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் வித்யா..

சந்தனமுல்லை said...

கன்வுகள் நனவாக வாழ்த்துக்கள் வித்யா!!

sivagnanamji(#16342789) said...

"வாழ்ந்து காட்டுவோம் ராமய்யா
வாழ்க்கை இது சுலபம் சுலபம்!"
சிகரத்தைத் தொடு..

லிவிங் ஸ்மைல் said...

பதிவை ஏற்றிய இட்லி வடைக்கு நன்றி... பின்னூட்டமிட்ட நண்பர்கள் பொன்ஸ், சிவகுமார், சிவபாலன், ஜோ, இப்னு பஷீர், நன்மணம், செந்தழில் ரவி வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்...

யாத்திரீகன் said...

Its a great thought that Vidya hasnt satisfied with her achievment alone, but is motivated to share her success and guide fellow mates towards the same path.. wishing her the best.. any support which we can stretch..is always doable..

இராம் said...

சகோதரி வித்யாவுக்கு மனம்கனிந்த வாழ்த்துக்கள்.

விழி said...

துன்பங்கள் பலவற்றைத் தாண்டி வந்த சிறந்த முன்னுதாரணம்.
வாழ்த்துக்கள் வித்யா.

செந்தில் குமரன் said...

வாழ்த்துக்கள் வித்யா அவர்களே... பேட்டிக்கு நன்றி இட்லி வடை...

G.Ragavan said...

வாழ்த்துகள் வித்யா. நீடு வாழ்க. பீடு வாழ்க. உங்களைப் போல நல்ல வழி பலருக்கும்...அட...அனைவருக்கும் திறக்கட்டும்.

மனதின் ஓசை said...

நன்றி இட்லிவடை..நல்ல பதிவு,..

வித்யாவின் வார்த்தைகளில் உள்ள தன்னம்பிக்கை அவர் சொல்லியுள்ளவற்றை சாதிப்பார் என்ற நம்பிக்கையை கொடுக்கிறது...இதில் அவர் பங்கை போலவே இவர்களை அங்கீகரித்து மரியாதை செய்ய வேண்டிய பொறுப்பு நமக்கும் இருக்கிறது...
வித்யா.. இதுவரை நீங்கள் செய்த சாதனைகளுக்கும் இனி வரும் காலங்களில் செய்யப்போகும் சாதனைகளிக்கும் மனமார்ந்த பாரட்டுக்கள் + வாழ்த்துக்கள்.

Pot"tea" kadai said...

I bow to vidya's PERSEVERENCE. I wish the very best in her life.

Thanks to Idly vadai.

Boston Bala said...

நன்றி

Anonymous said...

It was unfortunate that even an educated person like Vidya chose to run away from home and seek a solution. She could have consulted doctors and could have sought a treatment.This is a medical problem also.Surgery for changing sex is possible although it is
expensive.But the alternative
is not all that safe or less painful.