பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, July 10, 2006

தகவல் பெறுவோம்; தட்டிக் கேட்போம்

"2005ஆம் ஆண்டு தகவல் உரிமைச் சட்டம்' அமலுக்கு வந்து ஓராண்டு ஆகிவிட்டது. இதைக் குறிக்கும் வகையிலும், மக்களுக்கு இந்தச் சட்டத்தை விளக்கிச் சொல்லும் வகையிலும் நாடு தழுவிய பிரசார இயக்கம் ஜூலை 1 - 15 நடக்கிறது. தமிழகத்தில் இந்தப் பிரசாரம் ஜூலை 12-ம் தேதி தொடங்க இருக்கிறது.

இந்தச் சட்டம் ஆர்வலர்களின் பெரும் முயற்சியால் கொண்டு வரப்பட்ட சட்டமாகும். இதில் பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. சட்டம் நடைமுறைக்கு வர அரசு அறிவிக்கைக்காக காத்திருக்க வேண்டியதில்லை. குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்ற பின் 120 நாள்களுக்குள் சட்டத்தின் முக்கிய அம்சங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று சட்டத்திலேயே உள்ளது. தகவல் தராத, தர மறுத்த அல்லது தவறான தகவல்களைத் தந்த அரசு அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்கவும் சட்டம் வழிவகை செய்துள்ளது. மக்கள் தகவலைக் கோருவதைக் குறைப்பதற்காக, அரசே தானாக முன்வந்து அனைத்துத் தகவல்களையும் அளிக்க வேண்டும் என்றும் சட்டத்தில் விதிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய சிறப்பான சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தும் பொழுது பிரதமர் மன்மோகன் சிங் சில முக்கியக் கருத்துகளைக் கூறியுள்ளார்.

* ""மக்களாட்சி வெற்றிகரமாக இயங்குவதற்கு ஒரு முக்கியத் தேவை ""தான் தேர்ந்தெடுத்த பிரதிநிதியின் பணியை ஆராய்ந்து, மதிப்பீடு செய்து, அதன் அடிப்படையில் அவரது செயல்பாட்டைப் பற்றி ஓர் அறிவார்ந்த (informed) முடிவை எடுக்கும் ஆற்றலை ஒரு குடிமகன் பெற்றிருப்பதாகும்''. இவ்வாறு மதிப்பீடு செய்ய குடிமகனுக்குத் தேவையான தகவல்கள் எளிதில் கிடைக்க வேண்டும்.''

* ""இவ்வாறு அரசின் செயல்பாடுகளைப் பற்றி இறுதித் தீர்ப்பு வழங்கும் நீதிபதியாக, பிரச்சினைகளை அலசுபவராக, உரிய கேள்விகளைக் கேட்பவராக, தகவல்களைத் தேடுபவராக, பார்வையாளராக, சாதாரண குடிமகன் இருப்பதுதான் நமது ஜனநாயக அமைப்பின் ஆதாரமாகும்.''

* ""இந்த மசோதா நிறைவேற்றப்படுவதன் மூலம் நாம் ஆட்சி முறையில் ஒரு புதிய சகாப்தத்தை (Era) உருவாக்குவோம் என்று நான் நம்புகிறேன். அது திறமையுடன் செயல்படும் ஒரு புதிய சகாப்தம்; அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நன்மைகள் கிடைப்பதை உறுதி செய்யும் சகாப்தம்; ஊழல் அரக்கனை ஒழிக்கும் சகாப்தம்; ஆட்சி முறையின் இதயப் பகுதியிலே சாதாரண மக்களின் கவலைகளைக் கொண்டு வரும் சகாப்தம். நமது குடியரசை உருவாக்கிய முன்னோர்களின் நம்பிக்கைகளை முழுவதும் நிறைவேற்றும் ஒரு சகாப்தம்''

பிரதமரின் இந்த உயரிய நோக்கங்களை நிறைவேற்றுவது அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் கடமையாகும். இந்தச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மையத் தகவல் ஆணையத்தின் ஆணைகள் நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளன. ஓர் அரசுக் கோப்பிலுள்ள குறிப்புக் கோப்பையும் (Note file) ஒரு குடிமகன் பெற முடியும் என்று ஆணையம் தீர்ப்பளித்துள்ளது. உயர் அமைப்புகளில் இச்சட்டம் அமல்படுத்துவதில் நிகழ்ந்த குறைபாடுகளை ஆணையம் சுட்டிக்காட்டத் தவறவில்லை. உச்ச நீதிமன்றப் பதிவாளர் அலுவலகம், பிரதமரின் அலுவலகம், மத்திய கண்காணிப்புக் குழு போன்ற அமைப்புகளுக்கும் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது. வட மாநிலங்களில் குறிப்பாக தலைநகர் தில்லியில் இந்தச் சட்டம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. இதற்கு அங்குள்ள சமூக அமைப்புகளும் தில்லி மாநில அரசும், ஊடகங்களும் முக்கியக் காரணங்களாகும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை தகவல் உரிமைச் சட்டத்தை முதலில் இயற்றிய மாநிலமாகத் தமிழகம் இருந்தபோதிலும், அந்தச் சட்டத்தைப் பயன்படுத்துவதில் கடைசி மாநிலமாகவே இருந்தது. தமிழகத்திற்குப் பிறகு தகவல் உரிமைச் சட்டத்தை இயற்றிய கர்நாடகம், கோவா, மகாராஷ்டிரம், தில்லி போன்ற மாநிலங்களில் இந்தச் சட்டம் நல்ல முறையில் மக்களால் பயன்படுத்தப்பட்டது. தமிழகத்தில் 1997-ல் இயற்றப்பட்ட தகவல் பெறும் உரிமைச் சட்டம் மிக உயரிய நோக்கங்கள் கொண்டதாக இருந்தாலும், நடைமுறையில் மக்களுக்கு அதிகப் பலன் அளிக்கவில்லை. இதற்கு அரசு ஓரளவு காரணமாக இருந்தாலும், பொதுமக்களின் அக்கறையின்மையும், அறியாமையும் முக்கியக் காரணங்களாகும்.

இவற்றை நீக்குவதற்கு தீவிரப் பிரசாரம் தேவைப்படுகிறது. 2005 சட்டம் அமலுக்கு வந்த பிறகு தமிழகத்தில் இந்தச் சட்டத்தைப் பற்றி அரசு அலுவலர்கள் இன்னும் தெளிவு பெறவில்லை என்றே தோன்றுகிறது. தமிழகத்திலுள்ள ஒரு மைய அரசின் பொது நிறுவனத்தின் முன்னாள் ஊழியர், ஓய்வுக்குப் பிறகு அந்த நிறுவனத்தின் ஊழியர் சங்கச் செயலாளராகப் பணியாற்றி வரும்போது, அந்த நிறுவனத்திடம் பொதுத் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கேட்டார். அந்த நிறுவனம், தகவல்களை ஒரு குடிமகனுக்குத்தான் கொடுக்க முடியும். நீங்கள் ஓர் இந்தியக் குடிமகன்தான் என்று முதலில் நிரூபியுங்கள் என்று கூறியது. இது பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் செயலாகும். சென்னையை அடுத்துள்ள புறநகர்ப் பகுதியிலுள்ள நகராட்சியில், அந்த நகராட்சியில் உள்ள குடியிருப்போர் நலச் சங்க கூட்டமைப்பின் தலைவர் தகவல் கேட்டார். ""நகராட்சி இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றவில்லை'' என்று கூறப்பட்டது. இதுவும் பொறுப்பற்ற அணுகுமுறைதான். மற்றொரு மாவட்டத்தில் ""கோரிய தகவல் கீழ்மட்ட அலுவலரிடமிருந்து கிடைக்கவில்லை. எனவே, செலுத்திய கட்டணத்தைத் திருப்பி அனுப்பி விடுகிறோம். தகவல் கிடைக்கும்பொழுது உங்களுக்கு அளிக்கப்படும்'' என்று கூறப்பட்டது. இதுவும் 30 நாள்களுக்குள் தகவல் கொடுக்கப்பட வேண்டும் என்ற பொறுப்பைத் தட்டிக் கழிப்பதாகும்.

2005 தகவல் அறியவும் உரிமைச் சட்டத்தின் கீழ் மாநில அரசுக்கு பல கடமைகள் உள்ளன. சட்டப்பிரிவு 4(1) (க்ஷ) படி அரசுத்துறைகளும் அரசு அமைப்புகளும் 15.10. 2005-க்குள் தங்களைப் பற்றிய அனைத்து விவரங்களையும் வெளியிட்டிருக்க வேண்டும். சட்டப்பிரிவு 24(1)ன் படி அரசு, பொது மக்கள் இந்தச் சட்டத்தை அறிந்து கொள்வதற்காக விழிப்புணர்வு முகாம்கள் நடத்த வேண்டும்; சட்டத்தைப் பயன்படுத்த விரும்பும் மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு வழிகாட்டி (Guide) 15.11.2006-க்குள் தமிழிலே கொண்டு வர வேண்டும். இதையெல்லாம் செய்ய அரசை மக்கள் வற்புறுத்த வேண்டும். மக்களுக்கு சட்டத்தின் நுணுக்கங்களைத் தன்னார்வ அமைப்புகளுக்கும் எடுத்துக்கூற வேண்டும்.

தகவல் அறிவைப் பெருக்கும். அறிவு ஆற்றலை அளிக்கும். அமெரிக்க நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான ஜேம்ஸ் மேடிசன் கூறினார், ""அறிவு என்றென்றும் அறியாமையின் மேல் ஆதிக்கம் செலுத்தும். தாங்களே தங்களை ஆளுபவர்களாக இருக்க வேண்டும் என்று கருதுபவர்கள் அறிவு தரும் அதிகாரத்தை ஆயுதமாகப் பெற வேண்டும். மக்களுக்குத் தகவல் இல்லாமலோ அல்லது அதைப் பெறும் வழிவகை இல்லாமலோ ஒரு மக்கள் அரசு இருக்குமானால், அது ஒரு கேலிக்கூத்துக்கு அல்லது துன்பியல் நாடகத்துக்கு அல்லது இரண்டுக்குமான ஒரு முன்னுரையாகத்தான் இருக்கும் ("Knowledge will forever govern ignorance and a people who mean to be their own governors, must arm themselves with the power knowledge gives. A popular government without popular information or the means of acquiring it, is but a prologue to a farce or a tragedy or perhaps both")

ஜேம்ஸ் மேடிசனின் கூற்றுப்படி பார்த்தால் தகவல் பெறுவது ஓர் உரிமை மட்டுமல்ல, அது ஒரு கடமையுமாகும். 1997-ஆம் ஆண்டு தமிழகத் தகவல் உரிமைச் சட்டம் இயற்றப்பட்ட நோக்கங்களில் ஒன்று, அரசுத் திட்டங்களில் நிகழும் தவறுகளைப் பொது மக்கள் தட்டிக் கேட்பதற்கு வழிவகுப்பதாகும். மக்களாட்சியில் நல்லாட்சிக்கு மக்களே இறுதியில் பொறுப்பு. ஆதலால் தகவல் பெறுவதும், தட்டிக் கேட்பதும் நமது உரிமை மட்டுமல்ல. கடமையும் கூட. எனவே தகவல் பெறுவோம்; தட்டிக் கேட்போம்.

தகவல் உதவி: தினமணி

0 Comments: