பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, June 08, 2006

கண்ணகியும் கரடி பொம்மையும்

இந்த வார ஆனந்த விகடனில்..

... ஒரு ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கைகளை அடுத்த ஆட்சி மாற்றாமல் தடுக் கவும் நெறிமுறைகள் தேவைப்படுகின்றன. லாட்டரி சீட்டு ஒழிப்பு, மது, மணல் விற்பனையை அரசே மேற்கொண்டது, ஆசிரியர் இட மாற்றத்துக்கு கவுன்சிலிங் போன்ற நடவடிக்கைகள் மாற்றப்பட வேண்டியவை அல்ல.

எதை மாற்றினாலும் மாற்றா விட்டாலும், ஒரு விஷயத்தில் மாற்று நடவடிக்கை எடுத்தே தீருவது என்று பிடிவாதமாக இருக்கிறார் கருணாநிதி. அகற்றப்பட்ட கண்ணகி சிலையை மறுபடி யும் நிறுவுவதுதான் அது.

ஜெயலலிதா ஆட்சியின்போது, கண்ணகி சிலை அங்கிருந்து காணாமல் போனது ஏன் என்பது, எவ்வளவு விமர்சனங்கள் வந்தா லும் கருணாநிதி ஏன் மஞ்சள் சால்வையை அகற்றுவதில்லை என்கிற மர்மத்துக்கு நிகரானது. இரண்டுக்கும் காரணம் வாஸ்து, மூட நம்பிக்கை, மருத்துவம் என்றெல் லாம் ஊகிக்கலாமே தவிர, புதிர் முடிச்சை அவிழ்க்கவே முடியாது.

உணர்ச்சிவசப்படாமல் பார்த்தால்... கண்ணகியின் சிறப்புகளாகக் கூறப்படும் இரண்டும் சிறப்புகளே அல்ல என்பது என் உறுதியான கருத்து. கற்புக்கரசி, நீதி கேட்டு அரசனோடே போராடியவள் என்கிற இரண்டிலும் பசையில்லை. வேறு பெண்ணை நாடிப் போய்விட்டு, தன்னை பத்தாண்டுகளுக்கு மேலாகப் பிரிந்து வாழ்ந்த கோவலனைச் சகித்துக்கொண்டு, அவன் திரும்ப வந்ததும் ஏற்றுக்கொண்டதும், அதுவரை இன்னொரு ஆணின் துணையை நாடாமல் இருந்ததும்தான் கற்பு என்று கற்பிக்கப்படும் என்றால், அதை ஏற்பதற்கில்லை! அது, கோவலன் போன்ற ஆண்களுக்கே வசதியான ஒருதலைக் கற்பு. கண்ணகியின் நிலையை இன்று நாம் ஏற்பதானால், ஏழு ஆண்டுகளுக்கு மேல் பிரிந்து வாழ்ந்த தம்பதியின் திருமணம் ரத்து செய்யப்படக்கூடியது என்கிற இன்றைய சட்டப் பிரிவையே நீக்கவேண்டி வரும்!

அடுத்து, அரசனுக்கெதிராக கண்ணகி போராடிய விஷயம்... தனக்கு அநீதி செய்த கணவ னுக்கு நீதி கேட்டுப் போராடிய பேதமைத்தனம் அது. கோவலனை தவறாகக் கொன்ற தில் துளியும் சம்பந்தமில்லாத மதுரை மக்களை எரித்த கண்ணகியின் செயலும்கூட, எங்கோ ஏற்பட்ட வேதனையை வேறெங்கோ வெளிப்படுத்துகிற இயலாமைதான்! இதையெல்லாம் பார்க்கும்போது, இன்றைய கால கட்டத்தில் ஏராளமான சோதனைகளுடன் பல சவால் களையும் சந்திக்கவேண்டியுள்ள பெண்களுக்கு கண்ணகியை முன்னுதாரணம் காட்டுவது எப்படிச் சரியாகும்?

சில குழந்தைகள், பெரியவர்களான பிறகும்கூட தூங்கும்போது ஒரு பழைய ‘டெடி பேர்’ கரடி பொம்மையைப் பக்கத்திலேயே வைத்திருப்பார்கள். இன்று ஆள்பவர்களுக்குக் கண்ணகி அப்படித்தான்!

நன்றி: ஓ-பக்கங்கள், ஆனந்த விகடன்


ஜூவியில்... கண்ணகி’ விழாவில் தழுதழுத்த கருணாநிதி...
..... கண்ணகி சிலை அகற்றப்பட்ட நாளில் இருந்து நடந்த விஷயங்கள் ஒவ்வொன்றையும் தேதிவாரியாகப் பட்டியல் போட்டு, சிலையை அகற்றியதை எதிர்த்து யார் யாரெல்லாம் குரல் கொடுத்தார்கள் என்று பேசி முடித்துவிட்டு, அடுத்து அவர் தொட்டது- ‘ஆனந்த விகடன்’ இதழை! கண்ணகி பற்றி பத்திரிகையாளர் ஞாநி தன் கருத்தாக எழுதி விகடனில் வெளியான கட்டுரையைக் கையில் எடுத்தவர்,

‘‘கரடி பொம்மைக்கும் கண்ணகி சிலைக்கும் என்ன வித்தியாசம் என்று எழுதியிருக்கிறார்கள். தமிழா! நீ இன்னும் தமிழ்நாட்டில் உயிரோடுதான் இருக்கிறாயா? இதைக் கேட்பதற்காக என் ஆட்சியின் செங்கோல் பறிக்கப்பட்டாலும், எனக்குக் கவலையில்லை. தமிழனுடைய உணர்ச்சியைத் தட்டிவிடும் வேலை இனியும் வேண்டாம். இது... அதிகாரத்திலே ஏதோ அமர்ந்துவிட்ட காரணத்தால்; கடந்த ஆட்சிக் காலத்தைப் போல ஆணவக் குரல் அல்ல. அடக்கமான குரல்தான், வேண்டுகோள் குரல்தான்’’ என்று சொன்னார் கருணாநிதி. இந்த விஷயத்தைப் பேசத் துவங்கியதுமே மிகவும் உணர்ச்சிவசப்பட்ட கருணாநிதியின் நா தழுதழுத்துப் போனது (மறுநாள், 4-ம் தேதி காலையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள விகடன் அச்சக அலுவலக வாசலில் குவிந்த தி.மு.க-வினர், அங்கே விகடனுக்கு எதிராகக் கோஷமிட்டதோடு, விகடன் இதழ்களையும் தீவைத்துக் கொளுத்தினார்கள். போலீஸார் விரைந்து வந்து அவர்களை அப்புறப்படுத்தினார்கள். தமிழகம் முழுக்கவே பரவலாக விகடனுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தப்பட்டன).

( நன்றி: ஜூனியர் விகடன் )

சில கார்ட்டூன்கள் - நன்றி குமுதம், தினமணி

14 Comments:

Balamurugan said...

டிராமா போடுவதில் இப்போது விகடனும் கெட்டிக்காரந்தான்!

G.Ragavan said...

திமுகவினரின் ஆர்ப்பாட்டம் தேவையில்லாதது. கண்ணகியைப் பற்றி விகடன் கூறியது அந்தக் கட்டுரையை எழுதியவர் கருத்து. அந்தக் கருத்தோடு எனக்கு ஒப்புதல் இல்லையென்றாலும் விகடனுக்கு அதனுடைய கருத்தைச் சொல்ல உரிமை உண்டு. ஆனால் விகடன் அலுவலகம் முன்னால் அடாவடி செய்தது மிகத் தவறு. அடுத்தவர் கருத்தைச் சொல்ல விடாமல் வாயடைக்க வைப்பதுதான் வெற்றி என்று நினைக்கிறவர்கள் இருக்கும் வரையில் இப்படித்தான் நடக்கும்.

யாத்திரீகன் said...

>>>தமிழா! நீ இன்னும் தமிழ்நாட்டில் உயிரோடுதான் இருக்கிறாயா? இதைக் கேட்பதற்காக என் ஆட்சியின் செங்கோல் பறிக்கப்பட்டாலும், எனக்குக் கவலையில்லை <<<<

>>>அலுவலக வாசலில் குவிந்த தி.மு.க-வினர்<<<

இந்த ரெண்டு வரிக்கும் எந்த சம்பந்தமும் இல்லவே இல்லைனு யாரோ உபி சொல்றாங்கப்பா...

>>>> தமிழனுடைய உணர்ச்சியைத் தட்டிவிடும் வேலை இனியும் வேண்டாம்.<<<<<

யாருப்பா இதைச்சொல்றது.... காமெடிக்கு ஒரு அளவே இல்லையா... :-))))

Anonymous said...

கருத்து சுதந்திரம் ?

மாயவரத்தான்... said...

இதையெல்லாம் விட பெரிய ஜோக், கரடி மேட்டரில் 'பரம்பரை பகை' மேட்டரையெல்லாம் கூட இழுத்து பெரிசு பேசியது தான்.

ஜெயிச்சு ஆட்சிய பிடிச்சாச்சில்ல? அப்படி தான் பே(த்து)சுவாரு!

யாத்திரீகன் said...

என்ன பண்ண... லாரி இடிச்சிச்சு, இடிக்கவேயில்லைனு சிலர் பே(த்து)சும்போது..இதையும் கேட்க்க வேண்டி இருக்கு.. ;-))

Bala said...

கண்ணகி சிலை பற்றிய விவாதங்கள் எழுந்த போழுது என் மனதுக்குள்ளும் ஞானி எழுப்பிய அதே கருத்துக்கள் எழுந்தன. அதை பற்றிய ஒரு பதிவு போட வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஞானி என்னை முந்திக் கொண்டு விட்டார் ;-).

சரி..ஆனால் அந்த கற்புக்கரசி கண்ணகி சிலையை ஒரு கற்புக்கரசன் திறந்து வைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமே?

தன் மனைவி கற்புடையவளாகவும், தன் கணவன் ஏக பத்தினி விரதனாகவும் இருக்க என்னும் தமிழ் மக்கள், தன் தலைவன் / தலைவி எப்படி இருந்தாலும் ஏற்றுக் கொள்வார்கள். இது தமிழர்களின் தலை எழுத்து........

http://balablooms.blogspot.com

பாவி மனுசன் said...

ஆமாம் ஆமாம் கண்ணகியாவது கற்பாவது.. இது என்ன சின்னப்புள்ளதனம்.. நாம் எந்த நூற்றாண்டுல இருக்கோம்? நம்மள மாதிரி தெளிஞ்சவங்க நடிகைக்கு கோயில் கட்டலாம், ஸ்டைல் காட்ற ஹீரோவுக்குக்காக ரசிகர் மன்றம் வெக்கலாம். ஆடை பஞ்சத்தில் தவிக்கிற கவர்ச்சி நடிகையோட படங்களை கவர்ஸ்டோரியில் போட்டு மக்களுக்கு சேவை செய்யலாம். சினிமாவில ரவுடிகளையும், விபசாரிகளையும் தியாகதீபமா காமிச்சா அத கைத்தட்டி வரவேற்கலாம் (நூத்துக்கு 45 மார்க்கு கூட போடலாம்). ஆன தப்பித்தவறி அந்த காலத்து காப்பிய நாயகிக்கு சிலை...அதுவும் முன்ன இருந்த இடத்திலேயே.. வெச்சுடோம்னா நாம பிற்போக்குவாதியா ஆயிடுவோம்ல.

"வேறு பெண்ணை நாடிப் போய்விட்டு,...... கோவலன் போன்ற ஆண்களுக்கே வசதியான ஒருதலைக் கற்பு."
சரிதான். ஆன இன்னும் ஏன் இந்த இரண்டு பொண்டாட்டி 'கடவுள்'கள வழிபாடு செய்யறீங்க? அங்க போயிதான் உண்டியல்ல கோடி கோடியா கொட்றீங்க. அவருக்கு ஒரு ஞாயம் கோவலனுக்கு ஒரு ஞாயமா? நம்ம ஞாநி அந்த 'கடவுள்'களின் துணைவியர்களை teddy bearக்கு ஒப்பிட்டு எழுத தயாரா? அவருடைய கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க எத்தனை பேர் துடிக்கிறார்கள் என்று பார்க்க நானும் ஆவல்.

"திமுகவினரின் ஆர்ப்பாட்டம் தேவையில்லாதது..."
திமுகவினரின் ஆர்ப்பாட்டம் தேவையில்லாதது தான். பேசாமல் 'இந்து' நாளிதழ் அலுவலகதிற்க்கு போலிசை அனுப்பி ஊழியர்களை மிரட்டியது போல் கருத்து சுதந்திரம் அளித்திருக்கலாம்.

Anonymous said...

//உணர்ச்சிவசப்படாமல் பார்த்தால்... கண்ணகியின் சிறப்புகளாகக் கூறப்படும் இரண்டும் சிறப்புகளே அல்ல என்பது என் உறுதியான கருத்து. //

Right On

Anonymous said...

இட்லிவடை எழுதும் பாஸ்டன் பாலாஜி அவர்களுக்கு,

கண்ணகி தலைவிரிகோலமா இருந்தா ஆட்சிக்கு ஆகாதுன்னு யாரோ ஜோஸியக்காரன் சொன்னதை நம்பி அதை லாரியவிட்டு மோதி குப்பையில் போட்ட ஜெயலலிதாவைவிட மீண்டும் தூக்கி நிறுத்திய கருணாநிதி தேவலாம்.

இவண்,
முனியாண்டி,
அலுவலக உதவியாளர்,
போலிடோண்டு ரசிகர்மன்றம்,
தலைமைக் கழகம்,
23ஏ,சிம்ரன் ஆப்பக்கடை மேல்மாடி,
துபாய்.

Anonymous said...

கண்ணகி தமிழரின் தாய்

(திண்ணையில் ஜோதிர்லதா கிரிஜா எழுதிய இந்த கட்டுரைக்கு நான் எழுதிய மறுப்புரை.இந்த வார திண்னையில் என் கட்டுரை வெளிவந்துள்ளது.கண்ணகி பற்றி முத்தமிழ் குழுவில் முன்பே சுவையான விவாதம் நடைபெற்றுள்ளது )

இப்போது என் திண்ணை கட்டுரை

குப்புசாமி தன் செத்து போன தாத்தா பாட்டி படத்தை வைத்து கும்பிட்டுக் கொண்டிருந்தான்.அங்கே ஓடி வந்தார் ஒரு பெண்ணுரிமை வாதி."உன் தாத்தாவை கும்பிடாதே.அவன் ரெண்டு கல்யாணம் பண்ணிய ஆணாதிக்கவாதி.உன் பாட்டி அதுக்கு ஒத்துப்போன முட்டாள்.உன் முன்னோர் அனைவரும் ஜாதிவெறி பிடிச்ச,பெண்ணுரிமையை மிதிச்ச இனம்" என்றார்.

குப்புசாமி தலையை சொறிந்தான்."இதெல்லாம் சரிங்க.அதுக்காக அவங்க என் தாத்தா பாட்டி என்பதை மறுக்கவா முடியும்?அவங்க ஜாதிவெறிக்கா நான் போட்டோ வெச்சு கும்புடறேன்?தாத்தா பாட்டி என்பதால் தான் கும்பிடறேன்" என்று சொல்லிவிட்டு போட்டோவை கும்பிட்டான்.

குப்புசாமி சொன்ன பதிலை தான் நான் சகோதரி ஜோதிர்லதா கிரிஜாவுக்கு அளிக்க விரும்புகிறேன்.

கண்ணகி அறிவாளியா என கேட்கிறார்.அறிவாளிக்கு தான் சிலை வைக்கணும்னு ஏதாவது சட்டம் இருக்கா?மெரினா பீச்சில் சிலையாய் நிற்கும் தலைவர்களுக்கு ஐ.கியூ பரிட்சை வைத்தால் எத்தனை பேர் தேறுவார்கள்?நாட்டின் ஜனாதிபதி ஆகவே ஒண்ணங்கிளாஸ் கூட படித்திருக்க வேண்டியதில்லை எனும்போது சிலை வைக்க என்ன அறிவாளி தகுதி வேண்டும் என்பது எனக்கு தெரியவில்லை.

கண்ணகி முட்டாள் என்கிறார்.சொந்த துயரத்துக்காக ஊரையே எரித்தவள் முட்டாளாம்.நம் தலைவர்களை இழுப்பதை விட்டு விட்டு இந்த கேள்விக்கு பதில் சொல்ல வேண்டுமென்றால் நான் சொல்லவிரும்புவது ஒன்றுதான்.சிலப்பதிகாரத்தை படியுங்கள்.அவள் யாரை எரித்தாள் என தெரியவரும்.

பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர்,
மூத்தோர், குழவி, எனும் இவரைக் கைவிட்டு,
தீத் திறத்தார் பக்கமே சேர்க என்று, காய்த்திய
பொன் தொடி ஏவ புகை அழல் மண்டிற்றே
நல் தேரான் கூடல் நகர்.

"தீத்திறத்தார் பக்கமே சேர்க" என தீயோரை மட்டுமே எரித்தாள்.

பழங்கால மனிதர்களை நம் தற்கால அலவுகோள்கலை கொண்டு மதிப்பிடுவது என்னை பொறுத்தவரை தப்பு.அமெரிக்காவில் ரஷ்மோர் மலையில் 4 ஜனாதிபதிகளின் சிலையை வைத்து ஷோ காட்டிக்கொண்டிருக்கிறார்கள்."பார் எங்கள் நாட்டின் வரலாற்றை" என்கிறார்கள்.தற்கால அளவுகோல் படிபார்த்தால் அதில் உள்ள ஜார்ஜ் வாஷிங்க்டன் அடிமை பண்ணை வைத்திருந்தவர்.கறுப்பர்களை அடிமையாக வைத்திருந்தவர்."ஏன் இப்படிப்பட்ட ரேஸிஸ்டை சிலை வைத்து கொண்டாடுகிறீர்கள்?" என கேட்க முடியுமா?

கறுப்பர்களும் வந்து ஜார்ஜ் வாஷிங்டனை பார்த்து புகைப்படம் எடுத்துக்கொண்டு தான் போகிறார்கள்.தெற்கத்திய மாகாணங்களை வாளால் அடக்கிய ஆப்ரகாம் லிங்கனை சர்வாதிகாரி என்றா தெற்கத்திய அமெரிக்க மாகாணங்கள் சொல்லுகின்றன?செவ்விந்தியர்களை இன அழிப்பு செய்ய காரணமான கொலம்பசுக்கு "கொலம்பஸ் டே" என பாராட்டு விழா எடுத்து கொண்டாடிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

மெரினாவில் நிற்கும் ஒவ்வொரு தலைவர் மீதும் ஏதாவது குற்றச்சாட்டு இருக்கும்.ஆசிய ஜோதி நேரு ஒரு பிளேபாய் என்பார்கள்.காந்தி தன் மனைவியை மற்றவர்களின் மலத்தொட்டியை சுத்தம் செய்ய நிர்பந்தித்த ஆணாதிக்கவாதி எனலாம்.இந்திராகாந்தி எமெர்ஜென்ஸி கொண்டுவந்த சர்வாதிகாரி,கட்டாய கருக்கலைப்பு செய்ய உத்தரவிட்டவர் என்றெல்லாம் கழித்துகட்டிக்கொண்டு போனால் மெரினாவில் கடைசியில் எந்த சிலையும் இருக்காது.

நமக்கு பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ வரலாறு கொலை,கொள்ளை,வன்புணர்ச்சி,ஆணாதிக்கம்,அடிமை வியாபாரம் ஆகியவற்றால் நிரம்பித்தான் இருக்கும்.அவற்றை நம் காலத்திய அளவுகோல்களால் அளந்தால் நாளை நம் சந்ததியினர் அதை விட உயர்ந்த அளவுகோல்களை வைத்து நம்மை அளப்பர்."புகையை கக்கும் வாகனங்களால் உலகை மாசுபடுத்திய 21 நூற்றாண்டினர் முட்டாள்கள்,கொலைகாரர்கள்.அவர்களுக்கு சிலை எதுக்கு?" என யாராவது பின்னாளில் கட்டுரை எழுதினாலும் எழுதுவார்கள்.

அதை விட காமடியான விஷயம் என்னவென்றால் ஜோதிர்லதா கிரிஜாவால் புரட்சிச் சிந்தனையாளர், சமுதாயக் கண்ணோட்டமுள்ளவர், பெண்களின் பால் பெரும் பரிவு காட்டி, ஒரு பெண்ணைக்காட்டிலும் அதிக ஆத்திரத்தோடு ஆணாதிக்கத்தைச் சாடியவரின் வழித்தோன்றல் என்றழைக்கப்படும் "எல்லாம் அறிந்த கலைஞரே" ரெண்டு தாரத்தோடு வாழ்பவர்தான்.கோவலனை ரெண்டு பொண்டாட்டிக்காரன்,ஆணாதிக்கவாதி என கண்டபடி திட்டிவிட்டு கலைஞரை இப்படி போற்றினால் சிரிப்புதான் வருகிறது.

கண்ணகி மதுரையை எரித்தது ஒரு உவமை,கற்பனை என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.நீதி தவறிய நாட்டாமை அந்த வினாடியே உயிர் துறப்பது போல் காட்சி அமைப்பு வந்தால் கைதட்டி சிலாகிக்கிறோம்.பாண்டியன் நெடுஞ்செழியன் உயிர் துறந்தால் முட்டாள் என்கிறோம்."தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்" என பொங்கி எழுந்தானே பாரதி அவனை "நீ உலகை அழிக்க சொன்ன முட்டாள்?" என்றா சொல்லுகிறோம்?அதில் உள்ள கோபத்தையும் தார்மிக நியாயத்தையும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறதல்லவா?அதே போல் தான் இளங்கோவும் நீதி தவறிய அரசை கொளுத்திடுவோம் என அப்போதே எழுதினார்.

கண்ணகி தமிழனின் கலாச்சார அடையாளம்.பழந்தமிழரின் தாய்."வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவள் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்" என்ற ஐயன் மொழிக்கேற்ப வாழ்வாங்கு வாழ்ந்த எம் தாய்க்கு சிலை வைக்க உத்தரவிட்ட கலைஞர் தமிழர் நெஞ்சில் நீங்காது வாழ்வார்.

"நீதி கேட்டு நெருப்பென நின்ற எம் தாயே
அன்னை கண்ணகியே.வணங்குகிறோம் உம்மை.
தமிழர் நெஞ்சில் நீக்கமற நீயே நிற்கிறாய் அம்மா.
காத்தருள் எங்களை.தமிழர் தம் தாயே"Thanks: Selvan.

http://holyox.blogspot.com/2006/06/104.html

Anonymous said...

//கண்ணகி தமிழனின் கலாச்சார அடையாளம்.பழந்தமிழரின் தாய்."வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவள் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்" என்ற ஐயன் மொழிக்கேற்ப வாழ்வாங்கு வாழ்ந்த எம் தாய்க்கு சிலை வைக்க உத்தரவிட்ட கலைஞர் தமிழர் நெஞ்சில் நீங்காது வாழ்வார்.
//

:))))))))))))))))

Boston Bala said...

---இட்லிவடை எழுதும் பாஸ்டன் பாலாஜி அவர்களுக்க---

இட்லிவடை மீது தனி மனிதத் தாக்குதல் தொடுக்கும் பின்னூட்டங்களை வெளியிடலாமா ;-))

PisassWithPizazz said...

Kannagi Silaikku kodutha mukkiyathai Kalaignar Pappappatikku koduthirundha nalla irukkum. Ivanellam thazhtha pattorin arangavalannu vera peru. Pongada pokkatha pasangala