பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, May 05, 2006

Follow the leader - ஜெ பேட்டி

'தலைவரைப் பின் தொடருங்கள்' (Follow the Leader) என்ற தலைப்பில், அரசியல் தலைவர்களைப் பேட்டி காணும் என்.டி.டி.வி.க்கு ஜெ அளித்த பேட்டியின் சுருக்கம் வருமாறு:

கேள்வி: மக்களையே தங்கள் சொந்தம் என்று கூறும் தலைவர்களும், தலைவர்களை ஆராதிக்கும் தொண்டர்களும் பிற மாநிலங்களில் இல்லை, தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இப்படி?

பதில்: எனக்கென்று குடும்பமோ, சொந்தங்களோ கிடையாது; தமிழக மக்கள் அனைவரும் என்னுடைய சொந்தங்கள், அவர்களுக்காகவே நான் வாழ்கிறேன், அது அவர்களுக்கும் தெரியும்.

கே: உங்களுக்கென்று குடும்பம் ஏதும் இல்லை என்று சொல்லும்போது ஒருவித சோகம் தொனிக்கிறதே, இந்த அரசியல் வாழ்க்கை உங்களுக்கு அலுத்துவிட்டதா?

ப: இல்லையில்லை, இதுதான் என்னுடைய வாழ்க்கைமுறை, நான் மக்களுக்காகவே வாழ்கிறேன். எனக்கென்று சொந்த வாழ்க்கை இல்லை, அவர்களுக்காகவே வாழ்கிறேன் என்பது தெரிந்திருப்பதால்தான் அவர்கள் என்னை ஆராதிக்கிறார்கள்.

கே: தனியாகவே தேர்தல் பிரசாரம் செய்வது என்று தீர்மானித்துவிட்டீர்களா, தோழமைக் கட்சித் தலைவர்கள் யாரும் இல்லையே?

ப: இல்லையே, எங்களுக்காக வைகோ, திருமாவளவன், பல்வேறு முன்னணி நடிகர்கள், நடிகைகள் பிரசாரம் செய்கிறார்களே?

கே: இல்லை உங்களுடன் சேர்ந்து யாரும் வருவதில்லையே என்று கேட்டேன்?

ப: தமிழ்நாடு முழுக்க சென்று பிரசாரம் செய்ய வேண்டியிருப்பதால் நாங்கள்தான் இப்படிப் பேசி பிரித்துக் கொண்டோம்; கும்பலாகச் சென்றால் நேரத்தை வீணடித்துக் கொண்டிருப்போம்.

கே: உங்களுக்கு எதிராக திரண்டுள்ள கூட்டணியைப் பார்த்து உங்களுக்கு அச்சமாக இல்லையா, பெரியதாக இருக்கிறதே?

ப: இல்லவே இல்லை. அவர்கள்தான் எங்களுக்குக் கூடும் கூட்டத்தைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறார்கள்.

கே: நீங்கள் என்ன ஒற்றைப் பெண் போர்ப்படையா?

ப: கோடிக்கணக்கான மக்களின் ஆதரவும் கோடிக்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்களின் ஆதரவும் எனக்கு இருக்கிறது.

கே: 2004 பொதுத் தேர்தலில் மாற்றுக்கட்சியினரைத் தாக்கிப் பேசியதைப்போல இப்போது சூடாகப் பேசுவதில்லையே, வயதும் அனுபவமும் ஏறஏற வரும் முதிர்ச்சியினாலா இந்த மாற்றம்?

ப: ஆண்டு ஏறஏற நானும் ஒரு தலைவராக முதிர்ச்சி பெறுகிறேன்.

கே: நீங்கள் எடுத்த சில முடிவுகளுக்கு மக்களிடையே வரவேற்பில்லை, எனவே அவற்றைத் திரும்பப் பெற நேர்ந்தது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?

ப: நான் ஏற்கெனவே கூறியிருக்கிறேன், நான் பதவி ஏற்றபோது கசப்பான சில முடிவுகளை எடுப்பதைத் தவிர எனக்கு வேறு வழியே இல்லாமல் இருந்தது. நிதித்துறையில் பெரிய குழப்பம் இருந்தது. மாநிலம் கிட்டத்தட்ட போண்டியாகிவிட்டது. கருவூலம் காலியாக இருந்தது. 38 ஆயிரம் கோடி ரூபாய் கடன் இருந்தது. ஒரு நாளைக்கு 11 கோடி ரூபாய் வட்டியாகத் தர வேண்டியிருந்தது. 1996 முதல் 2001 வரை ஆண்ட திமுகவின் நிர்வாகச் சீர்கேட்டால் நிதிநிலைமை கெட்டுப்போயிருந்தது.

அதை முதலில் சீர்படுத்த வேண்டியிருந்தது. மற்றவர்களாக இருந்தால் நமக்கு எதற்கு இந்தப் பதவி என்று விட்டுவிட்டு ஓடிப்போயிருப்பார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளையும் சிக்கன நடவடிக்கைகளையும் எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். வியாதி தீர கசப்பான கஷாயத்தைக் குடிக்க வேண்டியதைப்போல இந்த நடவடிக்கைகளை மக்கள் சிறிது காலம் பொருத்துக்கொள்ள வேண்டும் என்று கூறித்தான் அவற்றை எடுத்தேன். அதனால் நிதி நிலைமை சீர்பட்டது. அந்த நேரத்தில் மக்களவை பொதுத் தேர்தல் வந்தது, எங்களுக்கு தோல்வியும் கிட்டியது.

கே: நீங்கள் சர்வாதிகாரி, இரண்டாவது தலைமுறைத் தலைவர்கள் வளர அனுமதிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு பற்றி என்ன சொல்கிறீர்கள்?

ப: இதில் கொஞ்சமும் உண்மை இல்லை.

கே: அப்படியானால் இரண்டாவது நிலைத் தலைவர்கள் யார் இருக்கிறார்கள், உங்களைத் தவிர வேறு யாரும் கண்ணில்படவில்லையே?

ப: நேரம் வரும்போது ஒரு தலைவர் வருவார்.

கே: அரசியலுக்கே தயக்கத்தோடுதான் வந்தீர்கள், ஒரு பாடகியாகவோ, வழக்கறிஞராகவோதான் ஆசைப்பட்டீர்கள் என்று கேள்விப்பட்டேன், எல்லாவற்றையும் விட்டுவிட்டு போய்விட வேண்டும் என்று எப்போதாவது தோன்றியது உண்டா?

ப: இல்லை. இப்போது இதுதான் எனது வாழ்க்கை என்றாகிவிட்டது. இதில் கடமை இருக்கிறது, பொறுப்புகள் உள்ளன. இதிலிருந்து விடுபட்டு நான் ஓடும் பேச்சுக்கே இடமில்லை. நான் தலைமை தாங்கி, வழிநடத்திச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்க வேண்டும் என்ற லட்சியத்தில் இருக்கிறேன். பிரேசில், அயர்லாந்து, மலேசியா போன்ற வேகமாக வளரும் நாடுகளுக்கு இணையாக தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்த விரும்புகிறேன்.

கே: எப்படி உங்களால் இப்படி செயல்பட முடிகிறது, எங்கிருந்து (பிரசாரத்துக்கு) சக்தி கிடைக்கிறது?

ப: மக்கள் என் மீது காட்டும் அன்பும் ஆத்ம பலமும்தான் என்னை ஊக்குவிக்கின்றன.

கே: பிரசாரத்தின்போது எப்போதாவது மிகவும் களைப்படைந்திருக்கிறீர்களா?

ப: உண்மையிலேயே இது களைப்புறவைக்கும் வேலைதான், ஊர் ஊராகச் சென்று வெயிலிலும் மழையிலும் பிரசாரம் செய்வது எளிதான வேலை அல்ல.

(இந்த பேட்டி என்.டி.டி.வி. தொலைக்காட்சியில் வெள்ளிக்கிழமை(இன்று) இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.)
தகவல் உதவி: தினமணி

2 Comments:

தயா said...

வாழ்த்துக்கள் இட்லிவடை! ரொம்ப பிரபலமாய்ட்டீங்க. பின்னூட்டம் வாங்கவே எல்லோரும் பாடுபடும் போது நீங்க டிவியிலேயே வந்துட்டீங்க! (காதுல புகை...)

CNN-IBN Blog Poliitcsல் இட்லிவடை மற்றும் பத்ரியின் பேட்டியை கண்டபோது நானே வந்ததுபோல சந்தோசமாயிருந்தது.

கலக்குங்க!

macmohan said...

Entha கேள்வி ellam கலைஞர் edathil kettirunthal enna பதில் kidaikkum?