பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, May 15, 2006

வாய்ப்பைத் தவறவிட்டது தி.மு.க!

அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்புகளையும் உள்ளடக்கிய வலிமையான ஓர் அரசாங்கத்தை அமைக்கும் வாய்ப்பினைத் திராவிட முன்னேற்றக் கழகம் தவறவிட்டு விட்டதாகவே தோன்றுகிறது. வெறும் 96 சட்டமன்ற உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ள அக் கட்சி தனித்து ஆட்சியமைத்துள்ளமை, இதையே காட்டுகிறது.

தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகள் தாமாகவே முன்வந்து நிபந்தனையற்ற ஆதரவு தந்துள்ளது அக் கட்சிகளின் பெருந்தன்மைக்கு எடுத்துக்காட்டு! ஆனால், இதனைக் கூட்டணிக் கட்சிகளின் பலவீனமாக தி.மு.க. கருதிவிடக் கூடாது. "நிபந்தனையற்ற ஆதரவு' என்பது பேருக்காக இருக்கலாம். நடைமுறையில் இருக்க முடியாது.

உண்மையில், மற்றொரு கட்சிக்கு "நிபந்தனையற்ற' ஆதரவு அளிப்பதற்காக அக் கட்சிகள் வெற்றி பெற்று வரவில்லை - தங்களை ஆதரித்த மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யவே அவை சட்டமன்றத்திற்கு வந்துள்ளன!

தேர்தலுக்கு முன்பு கூட்டணியில் பங்கேற்ற கட்சிகளை, தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அரசில் பங்கேற்குமாறு தி.மு.க. தாமாகவே முன்வந்து அழைத்திருக்க வேண்டும். மேற்கு வங்கத்தின் 293 சட்டமன்றத் தொகுதிகளில் 176 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்ற நிலையிலும், கூட்டணி அரசு அமைக்க அம் மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வரும்போது, தமிழகத்தின் 234 தொகுதிகளில் 96-ல் மட்டுமே வெற்றி பெற்ற தி.மு.க. கூட்டணி ஆட்சி அமைக்க முன்வராதது வியப்புக்குரியது.

ஆட்சியில் பங்கு கொடுத்து அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள முன்வராவிட்டாலும், ஆட்சி நடத்துவதற்கான வழிகாட்டுதல்களையாவது பெறுவதற்கு தி.மு.க. முன்வந்திருக்க வேண்டும்.

தமிழகத் தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை பரபரப்பாகப் பேசப்பட்டதுதான். அதற்காக தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை மட்டுமே உயர்வானது, மற்றதெல்லாம் மோசம் என முடிவெடுத்து விட முடியாது. தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் அனைத்தும் ஆளுக்கொரு அறிக்கையை முன்வைத்துத்தான் தேர்தலைச் சந்தித்துள்ளன. இந்த அறிக்கைகளுக்காகத் தொடர்ந்து பாடுபட வேண்டிய கடமை அக் கட்சிகளுக்கு உண்டு.

எனவே, தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை மட்டுமே இலக்காகக் கொள்ளாமல், கூட்டணிக் கட்சிகளின் அனைத்துத் தேர்தல் அறிக்கைகளிலும் கூறப்பட்டுள்ளவற்றைப் பட்டியலிட்டு, அவற்றில் எல்லா கூட்டணிக் கட்சிகளுக்கும் உடன்பாடான அம்சங்களைக் கொண்டு, ஒரு குறைந்தபட்ச பொதுச் செயல்திட்டத்தைத் தயாரித்திருக்க வேண்டும்.

ஏனெனில், தி.மு.க. ஆட்சியமைக்க, காரணமாக உள்ள 163 சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்திற்குப் பின்னால், தி.மு.க.வின் எதிர்பார்ப்புகள் மட்டும் தனியாக இல்லை. கூடவே, கூட்டணிக் கட்சிகளின் எதிர்பார்ப்புகளும், லட்சியங்களும் கலந்தே உள்ளன! அந்த எதிர்பார்ப்புகளுக்கு தி.மு. கழகம் மதிப்பளித்திருக்க வேண்டும்! அதுதான் நியாயமும்கூட.

அவ்வாறே, ஆட்சி நடத்தும் போது அவ்வப்போது எடுக்க வேண்டிய முக்கிய முடிவுகளை எல்லாம், தி.மு.க.வின் அமைச்சரவை மட்டுமே முடிவெடுக்காமல், கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசி ஒருமித்த முடிவினை எடுக்கக்கூடிய ஓர் அமைப்பை உருவாக்கியிருக்க வேண்டும். இதற்காக, கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களைக் கொண்ட ஓர் ஒருங்கிணைப்புக் குழுவினையும் அமைத்திருக்க வேண்டும்.

இவ்வாறாக, ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காகக் கிடைத்த ஓர் அரிய வாய்ப்பினை தி.மு.க. தவறவிட்டுள்ளது. இனியாவது, இத்தகைய பொது செயல்திட்டம் மற்றும் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பதற்கு தி.மு.க. முன்வரலாம். அப்படி முன்வந்தால் தமிழகத்திற்கு நல்லது.

நன்றி: தினமணி

19 Comments:

Anonymous said...

Congress is looking for to have a CMP (Common Minimun Program) to achive that.

ப்ரியன் said...

நல்லதொரு கருத்தை சொல்லியிருக்கிறது தினமணி...ஆனாலும் எனக்கென்னவோ எந்த ஒரு முக்கியமான திட்டம் தரும் முன்னமும் கலைஞர் கலந்து ஆலோசித்தே முடிவெடுப்பார் எனத் தோன்றுகிறது...இந்த அமைச்சரவை விசயமும் அப்படியே தேர்தலுக்கு முன்னமே முடிவு செய்யப்பட்டிருக்கும் என்பது என் கணிப்பு

sivagnanamji(#16342789) said...

1971 தேர்தலில்,11 எம்,பி சீட்டுகளூக்
காக எம்.எல்.ஏ சீட்டுகள்ஐ தாரை
வார்த்தார் இந்திரா
இப்பொழுதும்,டெல்லி ஆட்சிக்காக
தமிழ் நாட்டில் காங்கிரசின் வளர்ச்சியை
அர்ப்பணம் செய்கின்றார் சோனியா
வாழ்க டெல்லி அரசியல்

RAAJA said...

//நன்றி... தினமணி//

அதானே..., இவ்வளவு அருமையான கட்டுரையை நீங்களா எழுதியதோ என்று பார்த்தேன்

Bala said...

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு...

கண்ணியம் முதல் நாளே காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது (எதிர் கட்சியினரை 'விழப் பாம்புகள்' என வர்ணித்தது).

உன்னுடையது எல்லாம் என்னுடையது. என்னுடையது எல்லாமும் என்னுடையது. (அதாவது மத்தியில் உனக்கு ஆதரவு தர எனக்கு அமைச்சரவையில் பங்கு வேண்டும். ஆனால் எனக்கு நீ நிபந்தனையற்ற ஆதரவு தந்து வெளியில் இருக்க வேண்டும்). கண்ணியத்தின் இரண்டாவது தோல்வி.

சறுக்கல்களில் ஆரம்பித்து இருக்கிறார் ஆட்சியை. பார்க்கலாம்.

Idly Vadai said...

ராஜா,

//அதானே..., இவ்வளவு அருமையான கட்டுரையை நீங்களா எழுதியதோ என்று பார்த்தேன்//

இவ்வளவு நம்பிக்கையா என் மேல். நன்றி :-)

Sriram said...

Unless the parties in the DMK alliance join the Ministry, I feel that it is practically impossbile to hope that DMK will consult them before making important decisions.

Shows the double standards of DMK.
DMK wants Union Ministers but would not like to give minsitries to Congress or its alliance partners in Tamil Nadu.

Anonymous said...

RAAJA - இது ஒரு நல்ல பின்னூட்டம் இல்லை. இட்லிவடைக்கு இதைவிட நன்றாக எழுத தெரியும்.

இட்லிவடை ரசிகர்

SK said...

கூட்டணிக் கட்சிகளின் 'உரிமை', 'கடமை' என்று ஏதோ தினமணி உளறியிருக்கிறது!

திமுகவின் சர்வாதிகாரச் செயல்பாடும், இந்தக் கூட்டணிக் கட்சிகளுக்குள்ள தன்மான இழிவும் தினமணிக்குத் தெரியாதா என்ன?

ஒவ்வொரு கட்சியும் தனிதனி தேர்தல் அறிக்கை வெளியிட்ட நிலையில், இப்போது அவர்களுக்கு அதனை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு இல்லை, ஆட்சியில் இல்லாததால்!

அரசியல் என்பது ஒரு தொண்டு என்பது போய், வியாபாரம் ஆகி, அது விபச்சாரமாக மாறிப் பலகாலம் ஆகிறது!

இதுதான் இன்றைய இந்தியாவின் தலைவிதி!

நடக்கட்டும் முதியவரின் மன்னராட்சி!

Krishna said...

எனக்கென்னமோ, 48 தொகுதிகள் அவர்களுக்குக் கொடுக்கும்போதே, தாம் கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக இடன்கள் கொடுத்து, குறைவான தொகுதிகளில் போட்டியிடுவதால், தனிப் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், ஆட்சியில் பங்கு கோரக்கூடாது, வெளியிலிருந்துதான் ஆதரவு தர வேண்டும் என்ற உத்தரவாதத்தை, காங். மேலிடத்தில் பெற்றிருப்பார் என்றே தோன்றுகிறது.

தொகுதிகள் தருவதில் உண்மையிலேயே திமுக தியாகம் செய்துள்ளது என்பதை ஒத்துக் கொள்ளவேண்டும். எண்ணிக்கையில் மட்டுமல்ல, பலமான தொகுதிகளையும் விட்டுக் கொடுத்துள்ளது. அங்கே கொடுத்து, இங்கே வாங்கிக் கொண்டார் என நினைக்கிறேன்.

மத்தியில் இவர்களது 7 மந்திரிகள், 40 க்கு 40 பெற்று, மத்தியில் ஆட்சி மாற்றம் அமைய காரணகர்த்தாவாக இருந்ததற்குத்தான்.

Sriram said...

//
அரசியல் என்பது ஒரு தொண்டு என்பது போய், வியாபாரம் ஆகி, அது விபச்சாரமாக மாறிப் பலகாலம் ஆகிறது!
//
This is the bitter truth on Indian politics...:-(

Murthi said...

கூட்டணி கட்சிகளுக்கு கலைஞர் சூடாக அல்வா கிண்டி கொடுத்திருக்கிறார். கட்சியை வளர்க்கும் ஒரு அருமையான வாய்ப்பை காங்கிரஸ் கோட்டை விட்டுவிட்டது.அவர்களுக்கு கட்சியை வளர்க்கும் எண்ணம் இருப்பதாக தெரியவில்லை.அவரவர் கோஷ்டிகளை வளர்ப்பது மட்டுமே தமிழக காங்கிரஸாரின் ஆசை.

இன்றைய தினமலரில் காங்கிரஸ் மத்திய அமைச்சர்களே தலைமையிடம் அமைச்சரவையில் காங்கிரஸ் சேரக்கூடாது என வாதிட்டதாக தகவல்.தமிழக காங்கிரசை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.

ஜோ / Joe said...

ஐயா அதிபுத்திசாலிகளே!
தமிழகத்தில் காங்கிரஸ் ஆதரவு கொடுக்கவில்லையென்றாலும் கூட பாமக,கம்யூனிஸ்ட் ஆதரவில் ஆட்சி அமைக்கலாம் .ஆனால் புதுவையில் திமுக ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது .அப்படி இருந்தும் திமுக அங்கு பங்கு கேட்கவில்லையே ?அது பற்றி யாரும் பேச மாட்டீர்களோ?

SK said...

12 மத்திய அமைச்சர்கள், அதுவும் இவர்கள் விரும்பிய 'கொள்ளை' இலாகாக்கள்!

அது கிட்டும் வரை ஆட்சி அமைக்க வைத்த கெடு!

பேரனுக்கு முடிசூட்ட முனைந்த பேரங்கள்!

இதற்குப் பிறகும், பாண்டி பற்றி பேசுவது கேவலம்!

பண்ணியது பச்சை துரோகம்
போட்டது பட்டை நாமம்- தமிழ் மக்களுக்கு!

இதைச் சொன்னால் மட்டும் பொத்துக் கொண்டு வருகிறதே!

Anonymous said...

I don't know why you are allowing Poli's comments. I mean about the comments of POLI with the name 'மாயவரத்தான'. Hope you know where the link lead to.

ஜோ / Joe said...

//இதைச் சொன்னால் மட்டும் பொத்துக் கொண்டு வருகிறதே! //

SK,
யாருக்கு பொத்துக்கொண்டு வருகிறது என்பதை மற்றவர்கள் படித்து தெரிந்து கொள்ளட்டும் .நீங்க முதல்ல அனுமானங்களை மட்டுமே எழுதி காலத்தை ஓட்டாமல் நிரூபிக்க முடிவனவற்றை வாதம் செய்ய வாருங்கள் .இல்லையென்றால் உங்கள் விதண்டாவாதங்களுக்கு பதில் சொல்ல நான் தயாராய் இல்லை.

selvan said...

இவ்வாறாக, ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காகக் கிடைத்த ஓர் அரிய வாய்ப்பினை தி.மு.க. தவறவிட்டுள்ளது. இனியாவது, இத்தகைய பொது செயல்திட்டம் மற்றும் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பதற்கு தி.மு.க. முன்வரலாம். அப்படி முன்வந்தால் தமிழகத்திற்கு நல்லது.

Common minimum programme is not possible. Because Communist parties are against issuing of colour TV to the public through tax income.Like that they will not accept any free issue to public from tax income except bonus and increment for govt. employees.

selvan said...

ஐயா அதிபுத்திசாலிகளே!
தமிழகத்தில் காங்கிரஸ் ஆதரவு கொடுக்கவில்லையென்றாலும் கூட பாமக,கம்யூனிஸ்ட் ஆதரவில் ஆட்சி அமைக்கலாம் .ஆனால் புதுவையில் திமுக ஆதரவு இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது .அப்படி இருந்தும் திமுக அங்கு பங்கு கேட்கவில்லையே ?அது பற்றி யாரும் பேச மாட்டீர்களோ?


Karunanidhi may believe congress than PMK. He knows very well about PMK. He will demand so many things indirectly from Karunanidhi.

கோவி.கண்ணன் said...

//இன்றைய தினமலரில் காங்கிரஸ் மத்திய அமைச்சர்களே தலைமையிடம் அமைச்சரவையில் காங்கிரஸ் சேரக்கூடாது என வாதிட்டதாக தகவல்.தமிழக காங்கிரசை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.//
ஒருவேளை அமைச்சர் பதவி காங்கிரசுக்கு கொடுப்பதாகவே வைத்துக் கொண்டாலும் எந்த கோஷ்டிக்கு கொடுப்பது என்பதில் சிக்கல் வரும், தேவையில்லாமல் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியை வம்பில் மாட்டிவிட்டுடக் கூடாது என்று முதல்வர் நினைக்கிறாரோ ? :)