பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, May 16, 2006

விஜயகாந்த் பேட்டி

அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்டன. உங்களுடைய வாக்கு வங்கியின் நிலையும் தெளிவாக்கப்பட்டுள்ளது. நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?

தமிழக மக்கள் அளித்த தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறேன். எங்கள் கட்சியை ஆதரித்து வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும், முரசு சின்னத்தில் வாக்களித்திருக்கலாமோ? என்று நினைப்பவர்களுக்கும் எங்கள் கட்சியின் சார்பாக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த தேர்தலில் தமிழகத்தில் 100-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் கட்சியாக தேமுதிக உருவெடுத்துள்ளது. இந்தச் சூழ்நிலையை நீங்கள் முன்னரே எதிர்பார்த்தீர்களா?

பெரும்பாலான தொகுதிகளில் தேமுதிக வெற்றி பெறும் என்று நினைத்திருந்தேன். தற்போது பெரும்பாலான தொகுதிகளில் கணிசமான வாக்குகளைப் பெற்று கட்சிக்கான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளோம். இது முதல் வெற்றி. ஆட்சியமைப்பவர்களை முடிவு செய்யும் சக்தியாக எங்கள் கட்சி உருவாகும் என்று ஆரம்பத்தில் இருந்தே நான் சொல்லியுள்ளேன். எங்கள் வெற்றியை யாரும் சந்தேகப்பட முடியாது. அதற்குக் காரணம் எங்களுடைய நேர்மையான அணுகுமுறைதான்.

உங்கள் கட்சிக்கு கிடைத்த வாக்குகள் உங்களுக்காகக் கிடைத்தது என்று நினைக்கிறீர்களா? அல்லது திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்று வேண்டும் என்று நினைத்தவர்களால் கிடைத்தது என்று நினைக்கிறீர்களா?

விஜயகாந்த் என்ற தனி மனிதனுக்கு கிடைத்த வாக்குகளாக நான் கருதவில்லை. ஒரு மாற்றம் வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு நான் ஒரு நல்ல மாறுதலைத் தருவேன் என்ற நம்பிக்கை இருந்ததால் இந்த அளவுக்கு வாக்குகள் கிடைத்திருக்கலாம். அதற்காக நானும், எனது கட்சித் தொண்டர்களும் ஆற்றிய உழைப்பை, சிந்திய வியர்வையைக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. ஆரம்பத்தில் நான் என்ன சொன்னேனோ அதை கடைசி வரை கடைபிடித்திருக்கிறேன். மற்ற கட்சிகள் நாள்தோறும் ஓர் அறிவிப்பை வெளியிட்ட போது கூட நாங்கள் மனம் கலங்காமல் நாங்கள் சொன்னதிலேயே உறுதியாக இருந்தோம். அந்த உறுதிப்பாடு மக்களிடையே எங்களுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்து எங்களுடைய வாக்கு வங்கியை மற்ற கட்சிகள் வியந்தும், பயந்தும் பார்க்குமளவுக்கு உயர்த்தியுள்ளது.

உங்கள் தேர்தல் பிரசாரத்தின் மூலம் நீங்கள் தெரிந்துகொண்டது...?

நான் ஏற்கெனவே சினிமா ஷூட்டிங்குக்காக பல கிராமங்களுக்குச் சென்றுள்ளேன். அப்போதே கிராம மக்களின் வாழ்க்கைத் தரம் எந்த அளவுக்கு கீழேயுள்ளது என்று தெரியும். ஆனால் கடந்த 5 மாதங்களாக தேர்தலுக்காக நான் பல கிராமங்களுக்குச் சென்ற போதுதான் நான் நினைத்திருந்ததை விட கிராமங்கள் எந்த அளவுக்குப் பின் தங்கியிருக்கின்றன என்று தெரிந்துகொண்டேன். இதுவரை ஆட்சியில் இருந்த கட்சிகள் கிராமங்களை மறந்துவிட்டன. அதனால்தான் மக்கள் பிழைப்பு தேடி கிராமங்களை விட்டுவிட்டு நகரங்களை நோக்கி வருகிறார்கள். நம்முடைய நாட்டில் இருக்கும் வளத்திற்கு கிராமங்களின் மீது தனி அக்கறை செலுத்தி அவற்றை முன்னேற்றினாலே போதும். பல தலைமுறைகளுக்கு பட்டினி இல்லாமல் வாழலாம்.

உங்களுடைய தேர்தல் அறிக்கையைப் பார்த்த பின்புதான் மற்ற கட்சிகள் தங்களுடைய தேர்தல் அறிக்கையில் பல இலவசத் திட்டங்களை அறிவித்தனர் என்று ஒரு பேச்சு உள்ளது. அதைப் பற்றி...?

அதில் எந்த அளவுக்கு உண்மை என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குத்தான் தெரியும். அப்படி இருந்தால் மக்களுக்கு பல சலுகைகள் கிடைக்க நானும் ஒரு காரணமாக இருந்தேன் என்று சந்தோஷப்பட்டுக்கொள்வேன். எந்த ரூபத்திலாவது மக்களுக்கு நன்மை நடந்தால் சரிதான்.

விருத்தாசல வெற்றி குறித்து...?

விருத்தாசலத்தில் நிற்க வேண்டும் என்று முடிவெடுத்த போதே அங்கு வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. எவ்வளவோ எதிர்ப்புகள். ஆனால் மக்கள் என் மேல் வைத்திருந்த நம்பிக்கைக்கும், அன்புக்கும் முன்னால் எதுவும் எடுபடவில்லை. இனிமேல் என் தொகுதி மக்கள் நான் காட்டப் போகும் அன்பை பார்க்கத்தானே போகிறீர்கள்.

இனிமேல் உங்கள் தொகுதியில் மட்டும்தான் கவனம் இருக்குமா?

தொகுதி எம்.எல்.ஏ. என்ற முறையில் விருத்தாசலம் தொகுதிக்கு குடி தண்ணீர் வசதி, மின்சார வசதி, சாலை வசதி, முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை, படித்த, படிக்காத இளைஞர்களுக்கு அவர்களுக்கேற்ற வேலை வாய்ப்பு போன்றவை கிடைக்க போராடுவேன். தேமுதிக தலைவர் என்ற முறையில் தமிழகம் முழுமைக்கும் நன்மை கிடைக்க பாடுபடுவேன்.

ஒவ்வொரு கட்சியினரும் சில தொகுதிகளை தங்கள் கோட்டை என்று கூறுவது குறித்து...?

என்னைப் பொருத்தவரை இனி அப்படியெல்லாம் சொல்ல முடியாது. குறிப்பாக சென்னை, தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த நிலை மாறியுள்ளது. இதற்குக் காரணம் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்பதுதான்.

அடுத்து சினிமாவில் தொடர்ந்து நடிப்பீர்களா?

நிச்சயமாக. பல கம்பெனிகளிடமிருந்தும் அழைப்பு வந்துகொண்டிருக்கிறது. என்னுடைய சொந்த பேனரிலும் படம் தயாரித்து நடிக்கும் எண்ணம் உள்ளது. இது எந்த விதத்திலும் என்னுடைய அரசியல் பணியைப் பாதிக்காதவாறு பார்த்துக்கொள்வேன்.

எம்.எல்.ஏ. ஆகிவிட்டீர்கள். நடிகர் சங்கத் தலைவர் பதவியில் நீடிப்பீர்களா?

இப்போதுதான் எங்களது மன்ற நிர்வாகிகளிடமும், திரையுலக நண்பர்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். அனைவருடைய விருப்பத்துக்கு ஏற்றாற்போல் முடிவெடுப்பேன்.

தேர்தலுக்குப் பிறகு முதல்வர் கருணாநிதியைச் சந்தித்தீர்களா?

இல்லை. ஆனால் அவருக்கு என்னுடை மனமார்ந்த வாழ்த்துக்கள். சட்டப் பேரவைக்கு செல்வதற்கு முன்பு நிச்சயம் அவரைச் சந்தித்து ஆசி பெறுவேன்.

உங்கள் கட்சியின் பலவீனம் என்று எதை நினைக்கிறீர்கள்?

நாங்கள் சந்தித்த முதல் தேர்தல் என்பதால் சில சில பிரச்சினைகளைச் சந்தித்தோம். சில இடங்களில் தவறு நிகழ்ந்துள்ளது. பண பலம் இல்லாததும் ஒரு பலவீனம்தான். எல்லாவற்றையும் கட்சி நிர்வாகிகளும், என்னுடைய நல விரும்பிகளும், பத்திரிகைகளும் சுட்டிக் காட்டியுள்ளீர்கள். அவற்றை உதாசீனப் படுத்தாமல் தேவையான மாற்றங்களைச் செய்து அனைவரின் நன்மதிப்பையும் பெறுவோம்.

இப்போது உங்கள் தொண்டர்களிடம் ஏற்பட்டுள்ள உற்சாகம் குறையாமலிருக்க என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?

இனி எங்கள் தொண்டர்களின் உற்சாகம் மேலும் அதிகரிக்கும். அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலில் இன்னும் அதிக உழைப்பை வெளிப்படுத்துவோம். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று நிர்வாகிகளைச் சந்தித்து பொதுக்கூட்டம், மாநாடு போன்றவற்றின் மூலம் தொண்டர்கள், பொதுமக்கள் ஆகியோரின் அபிமானத்தைப் பெறுவேன். அரசியலில் எங்களுக்கு அங்கீகாரம் பெற்றுத் தந்த தமிழக மக்களின் நலனுக்காக இறுதி வரை பாடுபடுவேன்.

நன்றி: தினமணி

11 Comments:

பொன்ஸ்~~Poorna said...

பதிவுக்குத் தொடர்பில்லாத பின்னூட்டம் (எஸ்கே, மன்னிக்க :) ):
இட்லிவடை,
சைட்ல குடுத்திருக்கிற உங்க அறிமுகம் சூப்பர்..
//சாதனை: திருமணம் ஆகவில்லை
காரணம்: ஃபிரைடு இட்லி, வடைகறி ஆக விருப்பமில்லை//

இதை இளவஞ்சி வாத்தியார் கேட்டா இருக்கு உங்களுக்கு :)

கோவி.கண்ணன் said...

//விஜயகாந்த் என்ற தனி மனிதனுக்கு கிடைத்த வாக்குகளாக நான் கருதவில்லை. ஒரு மாற்றம் வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு நான் ஒரு நல்ல மாறுதலைத் தருவேன் என்ற நம்பிக்கை இருந்ததால் இந்த அளவுக்கு வாக்குகள் கிடைத்திருக்கலாம்.//
கேப்டனின் கண்ணியமான பதில். பாராட்டுகள்

SK said...

முதல் தேர்வில் வெற்றி பெற்று விட்டார் என்றே சொல்ல வேண்டும்!

நேர்மையான, முறையான, ஆணவமற்ற பேட்டி!

தொகுதிப் பணிகளை எப்படி ஆற்றுகிறார் எனப் பார்க்க வேண்டும்!

SK said...

பாரட்டுகளை திசை திருப்பும் 'பொன்ஸின்' இந்தப் பதிவை வன்மையாகக் கண்டிக்கிறேன்!

ஓஓ! 'எஸ்கே மன்னிக்க்' ன்னு சொல்லிட்டீங்கல்ல!

ஸாரி!

திரும்ப வந்து, வி. கா. வைப் பத்தியும் ஒரு கருத்து சொல்லிட்டுப் போங்க!

அப்படியே 'நாயும் நானும்' பதிவுல உங்களுக்கு ஒரு அழைப்பு விடுத்துருக்கேன், அதையும் பாருங்க!

Nambi said...

No doubt its a balanced interview.

//விஜயகாந்த் என்ற தனி மனிதனுக்கு கிடைத்த வாக்குகளாக நான் கருதவில்லை. ஒரு மாற்றம் வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு நான் ஒரு நல்ல மாறுதலைத் தருவேன் என்ற நம்பிக்கை இருந்ததால் இந்த அளவுக்கு வாக்குகள் கிடைத்திருக்கலாம்.//
கேப்டனின் கண்ணியமான பதில். பாராட்டுகள்

Where did he get this tag "கேப்டனின்"? Did he serve in Indian Army before? Please dont drag this guy also into the same track. Let him be VijayaKanth.

*cheers*
Nambi
"Even if you have to cross 1000 miles, you need to make a first step". It is equally important that the first step should also be in the right direction.

Anonymous said...

மாயவரத்தான் பெயரில் வருவது போலி பின்னூட்டங்களே, இது பலரது பதிவுகளில் வருகிறது. பாவம் மாயவரத்தானின் எழுத்தாக படிப்பவர்கள் குழம்புகிறார்கள். லிங்கை அழுத்தி உள்ளே சென்று பாருங்கள் முதல் பக்கத்தில், நிஜம் போல தோன்றும், அதன் பிறகு சென்றால், உள்ளே இரண்டு லிங்குகள் இருக்கும், ஒன்று மாயவரத்தான் பதிவுக்கு செல்லும், மற்றொன்று ஆபாச போலி தளத்துக்கு செல்லும்

பொன்ஸ்~~Poorna said...

//திரும்ப வந்து, வி. கா. வைப் பத்தியும் ஒரு கருத்து சொல்லிட்டுப் போங்க!//
வி.கா பத்தி என்னங்க கருத்து சொல்றது.. பேட்டி நல்லா குடுத்திருக்காரு... ஆனா திரும்பவும் நடிக்க வருவேன்னு இப்படி மெரட்டிப் பார்க்கறாரே!!

//அப்படியே 'நாயும் நானும்' பதிவுல உங்களுக்கு ஒரு அழைப்பு விடுத்துருக்கேன், அதையும் பாருங்க! //
'நாயும் நானும்' பதிவுல என்னைக் கூப்பிட்டிருக்கீங்களா?!! எனக்கும் நாய்க்கும் என்ன சம்பந்தம்? யானை/பூனையைப் பத்திக் கேட்டாலாவது ஏதாவது சொல்லலாம்.. இருக்கட்டும் வந்து பாக்கறேன் :)

Anonymous said...

" தற்போது பெரும்பாலான தொகுதிகளில் கணிசமான வாக்குகளைப் பெற்று கட்சிக்கான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளோம்."


முதல் தேர்தலிலேயே கட்சி அங்கீகாரம் பெற்ற தே.தி.மு.க.விற்கு
வாழ்த்துக்கள்.

அன்புடன்,
துபாய் ராஜா.

வந்தியத்தேவன் said...

//முரசு சின்னத்தில் வாக்களித்திருக்கலாமோ? என்று நினைப்பவர்களுக்கும் எங்கள் கட்சியின் சார்பாக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
//

உள்ளாட்சித் தேர்தலில் இன்னும் அதிகமான வாக்குகள் பெறுவார்.

Anonymous said...

//நாங்கள் சந்தித்த முதல் தேர்தல் என்பதால் சில சில பிரச்சினைகளைச் சந்தித்தோம். சில இடங்களில் தவறு நிகழ்ந்துள்ளது. பண பலம் இல்லாததும் ஒரு பலவீனம்தான். எல்லாவற்றையும் கட்சி நிர்வாகிகளும், என்னுடைய நல விரும்பிகளும், பத்திரிகைகளும் சுட்டிக் காட்டியுள்ளீர்கள். அவற்றை உதாசீனப் படுத்தாமல் தேவையான மாற்றங்களைச் செய்து அனைவரின் நன்மதிப்பையும் பெறுவோம்.
//


நல்ல அணுகுமுறை. தனது பலம் மற்றும் பலவீனத்தை நன்கு உணர்ந்து செயல்படுகிறார். இதுவே அவருக்கு வரும்காலத்தில் சாதகமாக அமைய வாய்ப்புள்ளது.

அவரது வருங்கால செயல்பாடுகள்தான் அவரது நிலையை நிர்ணயிக்கும்

manasu said...

பின்னாட்களில் அதிமுக வும், திமுக வும் இணைந்து எதிர்க்க வேண்டியிருக்குமோ கேப்டனை!!!!