பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, May 06, 2006

ஏஓபோவே ? ஏஓபோகூ ?

ஏன் ஓட்டு போட வேண்டும்? ஏன் ஓட்டு போடக் கூடாது? - ஞாநி

யாருக்கு ஓட்டு போடுவது என்று முடிவு செய்வதற்கு முன்னால், எல்லா தரப்பு வாதங்களையும் பரிசீலிக்க வேண்டும் என்றார் ஒரு நண்பர். எனவே, சன் டி.வி, ஜெயா டி.வி. இரண்டின் செய்திகளையும் அடுத்தடுத்து ஒவ்வொரு முழு நாள் பார்த்ததில், கடும் தலைவலிதான் மிச்சம்!

இருந்தபோதிலும், கடந்த ஒரு மாத காலப் பிரசாரம், பத்திரிகைச் செய்திகள் எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்த பிறகு, ஒவ்வொரு கட்சியைப் பற்றியும் ஸ்வாட் அனாலிசிஸ் (Strength, Weakness, Opportunities, Threats) செய்து பார்த்தேன். ஆப்பர்சூனிட்டியும், த்ரெட்டும் அந்தந்தக் கட்சி அதனதன் நலனுக்காகச் செய்துகொள்ள வேண்டி யவை. அவற்றின் பலமும், பலவீனமும் மட்டுமே வாக்காளர்களான நம்மைப் பாதிக்கக் கூடியவை.

எனவே, அந்த அடிப்படையில் ஒவ்வொரு கட்சியாக அதற்கு நாம் ஏன் ஓட்டு போடலாம், ஏன் ஓட்டு போடக்கூடாது என்று பார்ப்போமா?

தி.மு.க. அணி:

ஏன் ஓட்டு போட வேண்டும்?

1. தமிழ்நாட்டில், அரசியலில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்திய பெரி யாரின் சமூக நீதி சித்தாந்தத்தின் தொடர்ச்சியாக இன்னும் ஓரளவேனும் இருந்து வரும் கட்சி.

2. தனி நபர் வழிபாட்டு மடமாக ஆக்கப்பட்டு வரும் சட்டமன்றத்தை மீட்டு, அதன் நடவடிக்கைகளை மறுபடி யும் ஓரளவு ஜனநாயகபூர்வமாக நடத் தக்கூடிய ஆளுங்கட்சியாக இருப்ப தற்கான தகுதி உள்ள கட்சி.

3. எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அது பற்றிப் பத்திரிகை - மீடியாவுடன் நேரடியாகப் பேசி, தயங்காமல் கருத்து தெரிவிக்கக்கூடியவர் கருணாநிதி என்ப தால், அரசு என்ன நினைக்கிறது என்ப தைப் பொதுமக்கள் குழப்பமின்றித் தெரிந்துகொள்ள வசதியான கட்சி.

ஏன் ஓட்டு போடக் கூடாது?

1. எவ்வளவு பூசி மெழுகினாலும், கருணாநிதி - மாறன் குடும்பத்தின் நலனுக்கு முக்கியத்துவம் தந்து இயக்கப் படும் கட்சி.

2. பதவி பேரங்களுக்காக மட்டுமே டெல்லி அரசியலைப் பயன்படுத்தும் கட்சி. அங்கே, இங்கே என இரண்டு இடங்களிலும் இதே கட்சி அதிகாரத்தில் இருந்தால், கட்சித் தலைவர் குடும்பத்தின் வியாபாரத் தொழில் துறை ஏகாதிபத்திய விஸ்தரிப்பு கட்டுக்கடங்காமல் போய் விடும்.

3. பகுத்தறிவு, தமிழ்ப்பற்று போன்றவற்றையெல்லாம் வெற்று கோஷங்களாக மட்டுமே பயன்படுத்திக்கொண்டு, நடைமுறையில் அவற்றுக்கு எதிராக எல்லாவற்றையும் செய்யக்கூடிய கட்சி.

4. தமிழ்நாட்டில் ஊழல், போலீஸ் அராஜகம், தொழிலாளர் மீதான ஒடுக்குமுறை என்று எந்தச் சீர்கேட்டை எடுத்துக்கொண்டாலும், அதைத் திட்டமிட்டு கச்சிதமாகவும் அறிவியல் பூர்வமாகவும் செய்வதை ஆரம்பித்து விரிவுபடுத்தியது கருணாநிதியின் முதல் ஆட்சிக் காலம்தான்!

பாட்டாளி மக்கள் கட்சி:

ஏன் ஓட்டு போடலாம்?

1. சினிமா, பத்திரிகை போன்ற ஊடகங்களில் சமூக விரோதக் கருத் துக்கள் ஊக்குவிக்கப்படக் கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வருவதால்.

ஏன் ஓட்டு போடக் கூடாது?

1. எவ்வளவு பூசிமெழுகினாலும், ராமதாஸ் - அன்புமணி குடும்ப வாரிசு அரசியலையும் சுயநலத்தையும் ஊக்குவிக்கும் கட்சி.

2. குறிப்பிட்ட சாதி நலனுக்காக மட்டுமே இயங்கும் கட்சி.

3. அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக எந்தக் கொள்கை அடிப்படையும் இல்லாமல் அடிக்கடி அணி மாறக்கூடிய கட்சி.

காங்கிரஸ்:

ஏன் ஓட்டு போட வேண்டும்?

1. மாநிலக் கட்சித் தலைவர்களான கருணாநிதியும் ஜெயலலிதாவும் தலா 24 கோடி ரூபாய் சொத்துக் கணக்கு காட்டியுள்ள வேளையில், அனைத் திந்திய கட்சியான காங்கிரஸின் தலைவி சோனியாவின் சொத்து மதிப்பு வெறும் 7 கோடிதான் என்று காட்டப்பட்டு இருப்பதால்.

2. மதச் சார்பற்ற கொள்கையில், தி.மு.க, அ.இ.அ.தி.மு.க. போல் ஊசலா டாமல், நிலையாக இருந்து வருவதால்.

3. தகவலறியும் உரிமைச் சட்டம், கிராமப்புற வேலை வாய்ப்புச் சட்டம் போன்ற அதிமுக்கியமான அடிப் படைச் சட்டங்களைக் கொண்டு வந்ததால்.

ஏன் ஓட்டு போடக் கூடாது?

1. காமராஜருக்குப் பிறகு, சுயமரியாதை இல்லாத கட்சியாக தமிழகத்தில் ஆகி விட்டதால். சோனியாவுக்குப் பக்கத் தில் தயாநிதி மாறனை உட்கார வைத்துவிட்டு, பின்னிருக்கையில் ப.சிதம்பரம் உட்காரவைக்கப்படுகிறார்! கூட்டணி ஆட்சி வேண்டும் என்று கேட்டதற்காக இளங்கோவனுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுத்த கருணாநிதி, தானே இப்போது கூட்டணி ஆட்சிக்குத் தயார் என்று சொல்லும்போது, குறைந்தபட்சம் இளங்கோவனிடம் அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றுகூட வலியுறுத்தத் தோன்றாத முதுகெலும் பற்ற கட்சி.

2. கட்சி நலன் என்று பார்க்காமல் கோஷ்டி நலனை மட்டுமே பார்க்கக் கூடிய ஏராளமான தலைவர்கள்தான் தமிழகத்தில் கட்சி என்று ஆக்கி விட்டதால்.

3.பொருளாதாரச் சீர்திருத்தம் என்ற பெயரில் தொழிலாளர்கள் நலனுக்கு எதிரான பல நடவடிக்கைகளைப் பிடிவாதமாக மேற்கொள்வதால்.

இடதுசாரிக் கட்சிகள்:

ஏன் ஓட்டு போட வேண்டும்:

1. சுயநலம் இல்லாத நேர்மையான தலைவர்கள் இருக்கும் ஒரே அணி கம்யூனிஸ்ட் - மார்க்சிஸ்ட் கட்சிகள் இருக்கும் இடதுசாரி அணி மட்டுமே என்பதால். மேற்கு வங்க முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யாவின் சொத்துக் கணக்கு வெறும் 75 ஆயிரம் ரூபாய்கள்!

2. அடித்தட்டு மக்கள் நலன் பற்றி இன்னமும் சிந்திக்கும் ஒரே அணி!

ஏன் ஓட்டு போடக் கூடாது?

1. தங்கள் கொள்கை, நேர்மை, எதற்கும் சம்பந்தமில்லாத கட்சிகளுடன் தி.மு.க, அ.இ.அ.தி.மு.க. என இரண் டுடனும் மாறி மாறி சில சீட்டுகளுக்காக கூட்டணி வைத்துக்கொள்வதால்.

2. தனித்து நின்று கட்சியை வளர்க்க, நேற்று வந்த விஜயகாந்த்துக்கு இருக்கும் துணிச்சல்கூட, நூறாண்டு கால இடது சாரி இயக்கத்துக்கு இல்லாததால்.

அதி.மு.க. அணி:

ஏன் ஓட்டு போடலாம்?

1. மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி அதிகாரத்தில் இருந்தால், அதன் அராஜகம் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும் ஆபத்து இருப்பதால், இப்போது டெல்லியில் தி.மு.க. ஆட்சியில் இருக்கும் நிலையில் அதையே இங்கேயும் ஆளவிடாமல் இருப்பதற்காக, அ.தி.மு.க-வுக்குப் போடலாம். 1991-96-ல் ஜெயலலிதாவின் ஆட்சி அராஜ கத்தைவிட 2001-06-ல் அராஜகங்கள் சற்றே குறைவாக இருந்ததற்கும் இதுவே காரணம்.

2. சத்துணவு, எய்ட்ஸ் கல்வி, மகளிர் சுய உதவிக் குழுக்கள், மொழி வளர்ச்சி, சென்னைக் குடி நீர் திட்டம், மழை நீர் சேகரிப்புத் திட்டம் போன்ற சில துறைகளில் அமைதியாக, சீரான பணிகளைச் செய்து வருவதற்காக.

3. எந்த நோக்கத்துக்காகச் செய்திருந்தாலும், சட்டத் துக்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் கிடையாது என்ற நம்பிக்கையை ஜெயேந்திர ரைக் கைது செய்ததன் மூலம் ஏற்படுத்தியதற்காக.

ஏன் ஓட்டு போடக் கூடாது?

1. ஜனநாயக அணுகுமுறையே இல்லாமல் செயல்படும் பிடிவாத குணத்தைத் தன் சாதனையாகக் கருதும் ஜெயலலிதாவின் தலைமை.

2. உட்கட்சி ஜனநாயகம், அடுத்த வரிசைத் தலைவர்கள் என எந்த ஜனநாயக அமைப்பிலும் நம்பிக்கை இல்லாத கட்சியாக எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து இன்றுவரை இருந்து வருவதால்.

3. சட்டமன்றத்தில் தனி நபர் துதி பாடுவதற்கு மட்டுமே அனுமதித்து, மாற்றுக் கருத்துக்களுக்கு இடம் இல்லாமல் செய்துவருவதால்.

4. எல்லாப் பிரிவு மக்களுக்கு எதிராகவும் எடுத்த கொடூர நடவடிக் கைகளைத் திரும்பப் பெற்றாலும், மறுபடியும் அதே போல நடக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லாத ஆட்சி என்பதால்.

ம.தி.மு.க:

ஏன் ஓட்டு போட வேண்டும்?

1. வைகோ சிறந்த பார்லிமென்ட் டேரியன், சிறந்த பேச்சாளர் - என்டர் டெயினர், மனித உரிமை ஆர்வலர் என்பதைத் தவிர, வேறு எந்தக் காரணமும் இல்லை.

ஏன் ஓட்டு போடக் கூடாது?

1. வைகோவைத் தவிர, அவர் கட்சி யில் தேறக்கூடிய ஒரு தலைவர்கூடக் கிடையாது.

2. எதற்கும் மிகையாக உணர்ச்சி வசப்படுகிற தலைமை.

விடுதலைச் சிறுத்தைகள்:

ஏன் ஓட்டு போட வேண்டும்?

1. தொடர்ந்து அயராமல் களத்தில் தீவிரமாக இருக்கிற தலித் அமைப்பு!

ஏன் ஓட்டு போடக் கூடாது?

1. தலித் மக்களின் முதன்மை தேவை களான கல்வி, வேலை விஷயங்களில் அக்கறை காட்டாமல், அவர்களை இதர கட்சிகளைப் போலவே ஓட்டு வங்கியாக மட்டும் கருதுவது.

2. தலித் உட்பிரிவுகளிடையே ஒற்றுமைக்கு முயற்சிக்காமல் பிளவு களை நீடிப்பது.

3. சந்தர்ப்பவாதக் கூட்டணி அரசியலையே பின்பற்றுவது.

இரண்டு அணிகளும் இலவசங்களைப் போட்டி போட்டுக்கொண்டு அறிவித்து, தமிழக மக்களைச் சுயமரியாதை அற்ற பிச்சைக்காரர் களாகவே வைத்திருக்க விரும்புவது அருவருப்பை ஏற்படுத்துகிறது. தன் சொந்தக் காசில் ஒரு பொருளை வாங்கி மகிழ்ச்சி அடைவதற்கு ஏற்ற வாங்கும் சக்தியைத் தமிழருக்கு ஏற்படுத்து வதில் இரு அணிகளுக்கும் அக்கறையே இல்லை.

மொத்தத்தில், இரு அணிகளுக்குமே அவர் களுடைய குறைகளை மீறி ஆதரவளிக்கத் தூண்டும் அளவுக்கு எந்தப் பலமான காரண மும் இல்லை.

களத்தில் எஞ்சி யிருப்பது வேறு யார், யார்? பாரதிய ஜனதா, புதிய தமிழகம் இரண்டும் எந்த விதத்திலும் நம்பிக்கை தருவதாக இல்லை. கார்த்திக்கின் ஃபார்வர்ட் பிளாக், தற்போதைய தேர்தல் சோக நாடகத்தின் காமெடி டிராக்காக மட்டுமே இருக்கிறது. அடிஷனல் காமெடியாக சிம்ரன் முதல் தியாகு வரை நட்சத்திரப் பட்டாளமே உலா வருகிறது.

கடைசியில் எஞ்சியிருப்பது புதிய கட்சியான நடிகர் விஜயகாந்த்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம்தான். அதையும் அலசலாம்.

தே.மு.தி.க:

ஏன் ஓட்டு போட வேண்டும்?

1. இதுவரை ஆட்சியில் இல்லாததால், ஊழல், நிர்வாக முறைகேடு என்று எந்தக் கறையும் இல்லை. புதுத் துடைப்பம் நன்றாகப் பெருக்கும் என்ற நம்பிக்கைதான்.

2. ரஜினி மாதிரி அரசியலுக்கு வருவதைப் பற்றி குழப்பியடிக்காமல், சொன்னபடி விஜயகாந்த் வந்திருப்பதால்.

ஏன் ஓட்டு போடக் கூடாது?

1. கட்சியின் கொள்கை என்று அறிவிக்கப் பட்டிருப்பது எதுவும் புதிய அணுகுமுறையில் இல்லை. எம்.ஜி.ஆரின் அண்ணாயிசத்துக்குச் சமமான குழப்ப சித்தாந்தம்தான்.

2. தேர்தல் அறிக்கையில் கழகங்களைப் போலவே இலவசங்களை வாக்குறுதிகளாக அள்ளி வீசியிருப் பதால்.

3. கழகங்களைப் போலவே குடும்ப அரசியலுக்கு ஆரம்பத்திலேயே வித்திட்டிருப்பதால்.

எனவே, ஓட்டு போடத் தகுதியாக ஒரு கட்சிகூட இந்தத் தேர்தலில் கண்ணுக்குப் படவில்லை. கருத்துக்கும் எட்டவில்லை.

இப்படிப்பட்ட சூழலில் தனிப்பட்ட வேட்பாளரின் தகுதியை மட்டும் பார்த்து ஓட்டு போடலாம் என்று சிலர் சொல்கிறார்கள். அதிலும் பயனில்லை. தனி மனிதராக ஒருவர் சிறந்தவராக இருந்தாலும், அவரை நிறுத்திவைத்திருக்கும் கட்சி சரி இல்லை என்றால் என்ன பயன்? அவரால் அந்தக் கட்சிக்குள் இருந்துகொண்டு என்னதான் நல்லது செய்ய முடியும்? அப்படிப்பட்டவர் களைக் கட்சிகள் சீக்கிரமே வெளியேற்றிவிடும். இடதுசாரிகள் எவ்வளவுதான் நேர்மையானவர்களாக இருந் தாலும், கூட்டணியில் இருந்து கொண்டு என்ன செய்ய முடிகிறது? அது போலத்தான்.

எனவே -

ஓட்டு போடாமல் இருந்துவிட முடியுமா?

கூடாது. கூடவே கூடாது!

எந்தக் கட்சியும் சரியில்லை, எந்த வேட்பாளரும் சரியில்லை என்றால், அதைத் தெரிவிக்கவும் நமது தேர்தல் விதிகள் இடம் தந்திருக்கின்றன. அதன்படி, வாக்குச் சாவடியில் விரலில் மை வைத்த பிறகு, அதிகாரியிடம் ‘49 ஓ’ பதிவு செய்யப் போகிறேன் என்று தெரிவிக்கலாம்.

இப்படி ‘49 ஓ’ போடுவதால் என்ன பயன்? அதுதான் அரசியல் கட்சிகளுக்கு வாக்காளர்கள் தரும் எச்சரிக்கை மணி. ஒரு சாதி கட்சிக்கு ஒவ்வொரு தொகுதி யிலும் சுமார் 3,000 ஓட்டு இருந்தாலே கூட்டு சேரத் துடிக்கும் கட்சிகள், தொகுதிக்கு 5 ஆயிரம் ‘49 ஓ’ விழுந்தால், நிச்சயம் அதைப் புறக்கணிக்க முடி யாது. தங்களைத் திருத்திக்கொள்ளத் தொடங்கியாக வேண்டி வரும்.

அப்போதுதான் அடுத்த கட்டமான அடிப்படை மாற்றத்தை நோக்கி நாம் போக முடியும். விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைக்கு நம் தேர்தல் முறை மாறினால்தான், எல்லா கட்சிகளின் அசல் பலமும் பிரதிபலிக்கும். அப்போது தான் கூட்டணி என்பதற்கு சரியான அர்த்தமும் இருக்க முடியும்.

இப்போது யாரும் தங்கள் பலத்தின் அடிப்படையில் கூட்டு சேருவதில்லை. பலவீனங்களின் அடிப்படை யிலேயே சீட்டு பிரித்துக் கொள்கிறார்கள். தமிழ் நாட்டில் தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் நிரந்தரமாக இருப்பது, தலா சுமார் 24 சதவிகித ஓட்டுதான். அதன் படி அவற்றுக்கு சட்ட மன்றத்தில் தலா 50 முதல் 60 சீட்டுகள்தான் இருக்க முடியும். வைகோவுக்கோ, திருமாவுக்கோ, இடதுசாரி களுக்கோ தலா 5 முதல் 10 சதவிகிதம் இருக்குமானால், அவர்களுக்கெல்லாம் தலா 10 முதல் 20 எம்.எல்.ஏ-க்கள் நிச்சயம் இருக்க முடியும். அப்படிப்பட்ட சூழலில் கூட்டணி என்பதைக் கொள்கை சார்ந்து அமைக்க முடியும்.

இந்தப் படிக்கட்டுகளில் எல்லாம் நாம் ஏறிப்போவதற்கு முதல் படிக்கட்டு - 49 ஓ!

தமிழ்நாட்டில் விஜயகாந்த்கூட எல்லா தொகுதிகளிலும் போட்டியிடவில்லை. எல்லா தொகுதிகளிலும் இருக்கும் ஒரே வேட்பாளர் ‘49 ஓ’தான்!

நன்றி: ஆனந்த விகடன்

0 Comments: