பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, May 01, 2006

கருத்து கணிப்பு - கட்டுரைகள்

கருத்து கணிப்பு பற்றி தினமும் ஒரு செய்தி வந்து கொண்டு இருக்கிறது. குமுதம், துக்ளக் வார இதழ்கள் ஜெக்கு வெற்றி வாய்ப்பு என்கிறது. லயோலா கல்லூரி பற்றி அவர் அவர்கள் வேண்டியவற்றை எடுத்துக்கொண்டு நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்கிறார்கள். CNN-IBN - "To Close to call" என்று ஜகா வாங்கிவிட்டது. நேற்று The Week பத்திரிக்கை திமுகவிற்கு வெற்றி என்கிறது. இன்று `டெக்கான் கிரானிக்கல்' ஆங்கில பத்திரிகை, `ஏசி நீல்சன்' அதிமுகவிற்கு வெற்றி என்கிறது. கருத்து கணிப்பை பற்றி சில கட்டுரைகள் இந்த பதிவில் - ஒன்று ஆனந்த விகடனில் ஞாநி எழுதியது மற்றொன்று தினமணியில் வந்தது.

தே.மு - தே.பி - ஞாநி - ஆனந்த விகடன்

ஒவ்வொரு தேர்தலின்போதும் தவறாமல் நடக்கும் இரண்டு விஷயங்கள் உண்டு. ஒன்று தே.மு. இன்னொன்று தே.பி!

தேர்தலுக்கு முன்பு நடப்பது கருத்துக் கணிப்பு. அது தங்களுக்குச் சாதகமாக இருந்தால், உடனே அதைப் பெரிதுபடுத்தி விளம்பரப்படுத்துவதும், பாதகமாக இருந்தால், குற்றம்சாட்டுவதும் அரசியல் கட்சிகளுக்கு வழக்கம்.

தேர்தலுக்குப் பின்பு நடப்பது ஓட்டுச் -சீட்டு விகிதாசார ஆராய்ச்சி. ஆட்சியைக் கைப்பற்றத் தவறும் கட்சி தவறாமல் செய்வது, தனக்குக் கிடைத்த ஓட்டு விகிதம் பற்றி பேசுவதாகும். ஜெயித்த கட்சியைவிட தங்களுக்கு வெறும் இரண்டு சதவிகித ஓட்டுதான் குறைவு என்பதைச் சுட்டிக்காட்டுவார்கள். அந்த அடிப்படையில் சீட்டுகளை ஒதுக்கினால் ஆளுங்கட்சியைவிட ஒரு சில சீட்டுகள் மட்டுமே தங்களுக்குக் குறைவாக இருக்க முடியும் என்பார்கள். ஆனால், இந்தக் கணக்கை அதே கட்சி ஜெயித்து வரும்போது பேசாது. விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறைக்குத் தேர்தலை மாற்றியமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்காது.

இப்போது தே.மு. சீஸன். தினசரி விதவிதமான கருத்துக் கணிப்புகள் வெளியிடப்படுகின்றன. முன்பு ஓரிரு கல்லூரிகள் மட்டுமே இதில் ஈடுபட்டது போய், இப்போது நிறைய கல்லூரிகள் இறங்கிவிட்டன. இன்னும் கொஞ்ச நாளில் டுடோரியல் கல்லூரிகள்கூட கருத்துக் கணிப்பில் இறங்கக்கூடும். சில பத்திரிகைகள் தாங்கள் மார்க்கெட்டிங் நிறுவனங்களுடன் இணைந்து கருத்துக் கணிப்பை நடத்தியதாக அறிவிக்கின்றன. இதில் சில பத்திரிகைகளும், சில மார்க்கெட்டிங் நிறுவனங்களும் இதற்கு முன்பு இருந்ததாகவே தெரியவில்லை.

இசை மாதிரியே கருத்துக் கணிப்பும் கலையா, விஞ்ஞானமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. இசை முழுக்க முழுக்க தாளக் கணக்கில் இருக்கிறது. இன்னின்ன ஸ்வரங்கள் இன்ன வரிசையில் வந்தால்தான் இன்ன ராகம் என்று வரையறை இருக்கிறது. எனவே, இசையை விஞ்ஞானம் என்று கருத முடியுமா? மனோ தர்மம் என்ற ஒன்றும் இசையில் முக்கியமானதாக இருப்பதால் அது கலைதான் என்று வாதிட முடியும்.

கருத்துக் கணிப்பிலும், இலக்கண வரையறைகள் இருக்கின்றன. ஒரு கோடி பேரின் கருத்து இன்னதென்று அறிவதற்கு அந்த ஒரு கோடி பேரில் குறைந்தபட்சம் எத்தனை பேரிடம் கருத்து கேட்க வேண்டும் என்று சாம்பிள் சைஸ் பற்றிய விதிகள் இருக்கின்றன. சமூகத்தின் எந்தப் பிரிவினரிடம் சர்வே எடுக்கப்படுகிறது; அந்த சாம்பிள் நிஜமாகவே அந்தப் பிரிவின் மெய்யான பிரதிநிதியா என்றெல்லாம் மண்டையை உடைத்துக்கொண்டு வரையறுக்க விதிகள் இருக்கின்றன. சோப், குளிர்பானம், பற்பசை போன்ற அதிவேக நுகர் பொருட்களை விற்கும் கம்பெனிகள் சந்தை ஆராய்ச்சி செய்து கிடைத்த முடிவுகளின் அடிப்படையில் வர்த்தகம் செய்து பல சமயங்களில் வெற்றியும், அதே அளவு பல சமயங்களில் தோல்வியையும் அடைகின்றன. ஓரளவுக்கு மேல் துல்லியமாக எந்த முடிவுக்கும் வர முடியாத நிலையும் கருத்துக் கணிப்புகளில் இருப்பதால், அது விஞ்ஞானமாக மட்டுமில்லாமல் கலையாகவும் ஆகிவிடுகிறது. விஞ்ஞானத்தில் மட்டும்தான் ஒற்றைச் சாத்தியங்களுக்கு இடம் உண்டு. கலையில் எப்போதுமே அநேக சாத்தியங்கள்தான்.

கருத்துக் கணிப்புகள் சரியாக அமைவதற்கும் பலிப்பதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன. சாம்பிள் சைஸ் பெரிதாக இருப்பது ஒரு காரணம், கருத்துத் தெரிவித்த சாம்பிள் முழு மக்கள் தொகைக்கும் அசல் பிரதிநிதிகளாக அமைவது இன்னொரு காரணம். எல்லா வற்றையும்விட முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. அதுதான் கருத்து தெரிவித்தவர்கள் உண்மையைப் பேசினார்கள் என்பதாகும்.

இந்த இடத்தில்தான் எல்லா கருத்துக் கணிப்புகளும் சிக்கலைச் சந்திக்கின்றன. சன் டி.வி-யிலிருந்து மைக்கை நீட்டினால் ஒருவிதமாகவும் ஜெயா டி.வி-யிலிருந்து மைக்கை நீட்டினால் இன்னொரு மாதிரியாகவும் பேசும் திறமை நமது மக்களுக்கு எப்போதோ ஏற்பட்டுவிட்டது. கருத்து கேட்க வந்திருப்பவர் யார் என்பது தெரியாதபோது உண்மையைப் பேசுவார் கள் என்ற உத்தரவாதமும் இல்லை. யார் என்றே தெரியாததால், இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதையாகிவிடுவார்கள். கருத்து கணிப்பவரிடம் கருத்து சொல்லும் முன் னால் மக்கள் முதலில் அவரைக் கணிக்கி றார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக அரசியல் விஷயங்கள் பற்றி உண்மையான கருத்தைப் பகிரங்கமாகத் தெரிவிக்கும் கலாசாரமே நமக்கு இல்லை. இதை ஒரு ரயில் பயணத்திலேயே உணர முடியும். முன்பின் தெரியாத பக்கத்து சீட் பயணி, நம்மிடம் எந்தத் தயக்கமும் இல்லாமல், ‘என்ன வேலை பாக்கறீங்க?’ என்று தொடங்குவார். கூசாமல் சம்பளம் பற்றி கேட்பார். கூடப் பிறந்தவர்கள் பற்றி விசாரிப்பார். ‘தங்கை திருமணத்துக்கு என்ன செலவாச்சு?’ என்றுகூட கேட்பார். இதற்குள் நம் ஜாதி எது என்று முடிவு கட்டியிருப்பார். இதே போன்ற நமது கேள்வி களுக்கு அவரும் தயங் காமல் பதில் சொல்வார். ஆனால், அரசியல் பற்றி பேசத் தொடங்கின அடுத்த நொடியில் உஷார் கவசத்தை அணிந்து விடுவார். நாம் தி.மு.க-வா, அ.தி.மு.க-வா, நக்சல் பாரியா என்று எடை போட்டபடியே வழவழா பதில்கள் சொல்வார்.

மேற்கத்தியக் கலாசார மரபு வேறு. அங்கே சக பயணியிடம் ஜார்ஜ் புஷ், ப்ளேர், மித்தராந்த், சிராக் பற்றியெல்லாம் விலாவாரி யாக விவாதிப்பார்கள். உங்களுக்கு கல்யாணமாகிவிட்டதா என்ற கேள்வி யைக் கேட்டதும் சுருங்கிக் கொள்வார்கள். அந்தரங்க, தனி வாழ்க்கை விஷயங் களைப் பற்றி பகிரங்கமாகப் பேச விரும்ப மாட்டார்கள். பொது விஷயங்களைச் சுதந்திரமாக விவாதிப் பார்கள். அந்தக் கலாசாரத் தில் தோன்றிய கருத்துக் கணிப்பு நம்முடைய கலா சாரத்தில் கொஞ்சம் கஷ்டப் படத்தான் செய்கிறது.

அரசியல், பொது விஷயங்களைப் பற்றி கருத்து சொல்லும் தயக்கத் தின் ஆதாரம் பயம்தான். இது மகாபாரதக் காலத்தி லிருந்தே வருகிறது. துரியோ தனன் சபையில் உண்மை யான கருத்தை துரோணர், பீஷ்மர் போன்ற பெரிய பெரிய இன்டெலக்சு வல்கள்கூட சொல்லப் பயந்தார்கள். மாற்றுக் கருத்தைச் சொன்ன ஒரே அறிவுஜீவி விதுரன். அவரை உடனே துரியோ தனன் நாயே, பேயே என்று திட்டி அவமானப் படுத்துகிறான்.

ஆட்சியாளர்களுக்கு எப்போதும் பொய்தான் பிடிக்கும். மெய்யைச் சொன்னால் ஆகாது. எதற்கு நாம் வீணாக மெய்யைச் சொல்லி, வீட்டுக்கு ஆட்டோவை வரவழைக்க வேண்டும் என்ற பயம்தான் பெருவாரியான மக்களை உண்மைக் கருத்தைப் பகிரங்க மாகப் பேசவிடாமல் தடுக்கிறது.

எல்லா வேட்பாளர்களையும் நிராகரிக்கும் 49 ஓ-வின்படி ஓட்டு போடுவது பற்றி கடந்த 15 நாட்களாகப் பிரசாரம் செய்ததில் இந்தப் பயம் அதிகமாக இருப்பது தெரியவந்தது. 49 ஓவை எப்படி சர்வ கட்சி தேர்தல் பூத் ஏஜெண்ட்டுகள் முன்னால் பகிரங்கமாகப் போடுவது என்ற பயத்தைப் பலரும் தெரிவித்தார்கள். இதுபற்றிய எங்கள் கருத்துக் கணிப்பின்படி, 49 ஓ மட்டும் தனி ரகசிய பட்டனாக வந்துவிட்டால், அதற்கு 80 சதவிகித ஓட்டு விழும் வாய்ப்பு இருக்கிறது! அப்படி வந்துவிடுமோ என்ற பயம் அரசியல் வாதிகளுக்கும் இருக்கிறது.

கருத்துக் கணிப்புகள் எப்படி வேண்டுமானாலும் போகலாம் என்ற நிலை இருக்கும்போது ஏன் அவை அதிகரித்து வருகின்றன? உண்மையில் அவற்றையும் பிரசாரத்தின் ஒரு பகுதியாகப் பார்க்கலாம். வாக்குப் பதிவுக்கு முன்பு வெளியிடப்படும் கருத்துக் கணிப்புகள் ஓரளவேனும் சில வாக்காளர் மன நிலையைப் பாதிக்கும். குறிப்பாக, ஜெயிக்கிற கட்சிக்கு நம் ஓட்டும் போய்ச் சேரட்டும் என்று கருதக்கூடிய வாக்காளர்கள் கருத்துக் கணிப்பால் வளைக்கப்படலாம். ஆனால், இப்போதெல்லாம், நம்மை வளைக்கத்தான் ஒவ்வொரு கட்சியும் தனக்குச் சாதகமான கருத்துக் கணிப்பை விளம்பரப்படுத்துகிறது; இது கணிப்பு அல்ல... திணிப்பு! என்ற உஷார் உணர்ச்சி பல வாக்காளர்களுக்கு ஏற்பட்டு வருகிறது. அதனால் எந்தக் கருத்துக் கணிப்பையும் நம்பாமல், அதை இன்னொரு ஜோசியம் மாதிரி பார்க்கும் மன நிலை பெருகி வருகிறது.

தேர்தல் நமக்கு ஜனநாயகத்தின் சட்டப்பூர்வமான கடமை மட்டுமல்ல. அது நமக்கு ஒரு பிரமாண்டமான திருவிழாவும்கூட. தேர்தல் பிரசாரம் நமக்கு மிகப் பெரிய பொழுதுபோக்கு நிகழ்ச்சி. குட்டிக் கதைகள், அதிரடி சவால்கள், வீடியோ படங்கள் என்று வகை வகையான என்டர் டெயின்மென்ட் இருக்கும் திருவிழா. ஒரு படத்தில் காமெடி, ஸ்டன்ட், சென்ட்டிமென்ட் என்று பல ரசங்களும் இருப்பது போல, நமக்குத் தேர்தலிலும் கருத்துக் கணிப்பு பொழுதுபோக்கு அம்சங் களில் ஒன்றாகிவிட்டது. எந்தக் கருத்துக் கணிப்பு அதிக விஞ்ஞானப்பூர்வமானது என்று அவற்றை அலசுவதேகூட நமக்கு ஒரு சுவாரஸ்ய மான பொழுதுபோக்குதான்.

கருத்துக் கணிப்பை எத்தனை பேர் நம்புகிறார்கள் என்றுகூட ஒரு கருத்துக் கணிப்பு எடுக்கலாம். ஆனால், அதன் முடிவும் சர்ச்சைக்குரியது. ஏனென்றால், கருத்துக் கணிப்புகளை நம்பவில்லை என்று ஓட்டு போட்டவர்கள் இந்தக் கருத்துக் கணிப்பை மட்டும் ஏன் நம்பி ஓட்டு போட்டார்கள் என்ற கேள்விக்குப் பதில் சொல்லவே முடியாது. நம்பாமலே பங்கேற்றார்கள் என்றால், அப்படிப்பட்டவர்கள் சொன்ன கருத்தையே நம்ப முடியுமா என்ற கேள்வி வந்துவிடுமே!

கருத்துக் கணிப்புகள்; மக்கள் அளித்த தீர்ப்புகள் - தினமணி

நடைபெற இருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கே அதிக ஆதரவு என்று சமீபத்தில் வெளியான கருத்துக் கணிப்பு ஒன்று தெரிவித்தது. அதேநேரத்தில், மற்றொரு கருத்துக் கணிப்போ தி.மு.க. அணிக்கே அதிக ஆதரவு என்று கூறியது.

இத்தகைய கருத்துக் கணிப்புகள் கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களின்போது சில நேரங்களில் உண்மையானதும் உண்டு. சில நேரங்களில் அறவே பொய்த்துப் போனதும் உண்டு. கடந்த காலங்களில் தேர்தல்களின்போது நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகள், அத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்புகள் ஆகியவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்.

* கணிப்பு பொய்யானது

1980 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் -தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. அத்தேர்தலில் இரண்டே தொகுதிகளில் மட்டுமே அ.தி.மு.க. வென்றது. பின்னர் அ.தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. இதையடுத்து, சில மாதங்களில் நடைபெற்ற தமிழக சட்டப் பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸ் -தி.மு.க. கூட்டணி நீடித்தது.

வலுவான அக்கூட்டணியே மீண்டும் வெற்றி பெறும் என அப்போது வெளியான தேர்தல் கணிப்புகள் கூறின.

ஆனால், அனைவரது கணிப்புகளையும் பொய்யாக்கும் வகையில் தேர்தல் முடிவுகள் அமைந்தன. அ.தி.மு.க.வும், அதனுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்த தோழமைக் கட்சிகளும் மகத்தான வெற்றியைப் பெற்றன. அ.தி.மு.க. மீண்டும் அறுதிப் பெரும்பான்மை பெற்று, ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. அதேநேரத்தில், 1977-ல் கிடைத்ததை விட குறைவான இடங்களே தி.மு.க.வுக்குக் கிடைத்தன.

* ரஜினி ஆதரித்தும்...

1989-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, மக்களவைக்குப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலுக்கு முன்பாக அரசு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப்படக் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அப்போது"கருணாநிதியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்' என ரஜினி குறிப்பிட்டார். உடனே தி.மு.க.வை ஆதரித்து ரஜினி பேசியதாக அப்போது பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின. அதுமட்டுமின்றி, அப்போது வெளியான கருத்துக் கணிப்புகள் கணிசமான தொகுதிகளில் தி.மு.க.வே வெல்லும் என்றும் கூறின.

ஆனால், மொத்தம் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் நாகப்பட்டினம் தொகுதியைத் தவிர இதர 38 தொகுதிகளிலும் தி.மு.க. அணி தோற்றது.

நாகப்பட்டினத்தில் கூட தி.மு.க. அணியில் இடம் பெற்றிருந்த இந்திய கம்யூனிஸ்ட் தான் வென்றது.

* ஆட்சிக்கு வந்த பிறகு ஏற்பட்ட தோல்வி

1989 சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தலின்போது ஜெ. அணி, ஜா. அணி என அ.தி.மு.க. இரண்டாகப் பிளவுபட்டிருந்தது. இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டிருந்தது. ஜெயலலிதா அணி சேவல் சின்னத்திலும், ஜானகி ராமச்சந்திரன் அணி இரட்டைப் புறா சின்னத்திலும் போட்டியிட்டன.

தேர்தலில் தி.மு.க. வென்று ஆட்சிக்கு வந்தது. அதன்பிறகு அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைந்தன. அக்கட்சிக்கு மீண்டும் இரட்டை இலைச் சின்னம் கிடைத்தது. இந்நிலையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த சிறிது காலத்துக்குள் மதுரை கிழக்கு, மருங்காபுரி ஆகிய இரு தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.

ஆட்சிப் பொறுப்பில் இருந்த தி.மு.க. தான் வெல்லும் என்கிற கருத்து அப்போது பரவலாக நிலவியது. ஆனால், இரு தொகுதிகளிலுமே அ.தி.மு.க. வென்றது.

அதேபோல, 1991 மக்களவை -சட்டப் பேரவைப் பொதுத் தேர்தல்களில் அ.தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றது. அப்போது தி.மு.க.வின் சார்பில் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி மட்டுமே வென்றார். தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று, எம்.எல்.ஏ. பதவியை ஏற்காமல் விலகினார்.

இதனால் துறைமுகம் தொகுதியிலும், ஏற்கெனவே வேட்பாளர் இறந்ததால் தள்ளி வைக்கப்பட்ட எழும்பூர் தொகுதியிலும் சிறிது காலத்துக்குப் பிறகு தேர்தல் நடைபெற்றது. அந்த இரு தொகுதிகளிலும் தி.மு.க.வே வென்றது.

* மாறிய மக்கள் தீர்ப்பு

2001 சட்டப் பேரவைத் தேர்தலின்போது தி.மு.க. அணிக்கு சாதகமான கணிப்புகளும், கருத்துகளுமே தமிழகம் முழுவதும் நிலவின.

தற்போது தி.மு.க. அணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் அப்போது அ.தி.மு.க. அணியில் அங்கம் வகித்தன. அ.தி.மு.க. கூட்டணியில் பிரதான இடத்தைப் பெற்றிருந்த த.மா.கா. தலைவர் ஜி.கே. மூப்பனார், ஓரிரு பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் மட்டுமே அ.தி.மு.க. அணி வெற்றி பெறும் என்றனர்.

அவர்கள் தெரிவித்த கருத்தை பலரும் விமர்சித்தனர். ஆனால், அத்தேர்தலில் பெரும்பாலானவர்கள் தெரிவித்த கணிப்புகளைப் பொய்யாக்கும் வகையில் மக்கள் தீர்ப்பு அளித்தனர்.

அ.தி.மு.க. அணி வெற்றி பெற்றது. அறுதிப் பெரும்பான்மையுடன் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தது.

1977 சட்டப் பேரவைத் தேர்தல், 1984 மக்களவை -சட்டப் பேரவைத் தேர்தல்கள் ஆகியவற்றின்போது அ.தி.மு.க. அணியே வெல்லும் என்று தெரிவிக்கப்பட்ட கருத்துக் கணிப்புகள் பலித்தன. 1996-ல் தி.மு.க. -த.மா.கா. அணி வெல்லும் என்று தெரிவிக்கப்பட்ட கருத்துக் கணிப்பும் உண்மையானது.

நன்றி: ஆனந்த விகடன், தினமணி

3 Comments:

நாகு said...

தேர்தல் கருத்து கணிப்பினை தடைச்செய்யலாம்.

Chithi said...

இப்போ என்னதான் சொல்ல வர்றீங்க? ஏற்கனவே உச்சி வெய்யில் மண்டைய பொளக்குது... இதுல நீங்க வேற ஒரே பத்தியில் பல கருத்து கணிப்புகளைப் பற்றி ஞானியும், தினமனியும் சொல்லுறதப் போட்டு காய விட்டுட்டீங்களே.... நீங்க எழுதுனதுனால விடவும் முடியாம படிச்சாச்சு....

ஒரு விஷயம் நம்ம எல்லாருக்குமே தெரியும்னு கருத்த திசீ...கணிக்கிறவங்களுக்கு தெரியல....
சும்மா செவனேன்னு தெருவில போறவங்ககிட்ட போய் மைக்க வாய்க்கு நேர புடிச்சிகிட்டு நீங்க யாருக்கு ஓட்டு போடுவீங்கன்னு கேட்டா எல்லாருமே சொல்லுவாங்க... ஆனால் அவங்கள்ள எத்தன பேரு மெனக்கெட்டு போய் ஓட்டு போடுவாங்கன்னு நெனக்கிறாங்க...
இதுமூலம் எல்லா கட்சிகாரங்களுக்கும் பொதுமக்களாகிய நாங்க சொல்லுறது என்னன்னா நாங்க கருத்து கணிப்புல சொல்லுறதெல்லாத்தையும் சீரியசாக எடுத்துக்காதீங்க....அதுனால கணிப்புகள பாத்து, கேட்டு சந்தோஷப்படவோ, பயப்படவோ தேவையில்லீங்கோ.... டும்..டும்...டும்......

கோவி.கண்ணன் said...

சூடான செய்திகள் ராமதாஸ் குடும்பம் மீது கொலைவழக்கு.... மற்றும் பல.. இன்றைய தமிழ் முரசில்
கீழே உள்ள தொடுப்புகளை வெட்டி ஒட்டிக் கொள்ளுங்கள்.

http://epaper.tamilmurasu.in/2006/may/09/1.html
http://epaper.tamilmurasu.in/2006/may/09/2.html
.
.
.
http://epaper.tamilmurasu.in/2006/may/09/20.html

கடைசி 1, 2., 3 எண்களை மாற்றினால் போதும் எல்லா பக்கங்களையும் பார்த்து விடலாம்