பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, April 10, 2006

பாக்யராஜ் பேட்டி

ஏன் இந்தத் திடீர் முடிவு?

‘‘இந்தத் திடீர் முடிவுக்கு விளக்கமாகப் பதில் சொல்லிவிடுகிறேன். ஆரம்பத்தில் எனக்கு அரசியலில் அவ்வளவாக ஆர்வமில்லாமலிருந்தது. ஆனால், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் உடல் நலமில்லாதபோது, ஒரு விபத்தாக இந்த அரசியலில் நுழைந்தேன். இதைத் தொடர்ந்து, அவர் என்னை ‘கலையுலக வாரிசு’ என்றார். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு, தெரியாத்தனமாகச் சொந்தக் கட்சி ஒன்றை ஆரம்பித்து, தெரியாத்தனமாகச் சுடு தண்ணியிலே காலை வச்சு ஷாக்கடிச்சு பின்வாங்கினேன். அப்புறம், பேசாம நமக்குத் தெரிஞ்ச சினிமாவை மட்டும் பார்த்துக்கிட்டிருக்கலாம்னு முடிவு செய்தேன்.

ஆனாலும் என்னை அரவணைத்த _ ஆசீர்வதித்த _ எம்.ஜி.ஆரின் கட்சியை வழிநடத்திச் செல்லும் ஜெயலலிதாவை தூரமாக நின்று பார்த்து ஓரிரு நிகழ்ச்சிகளின் போது, பூங்கொத்துக் கொடுத்து வாழ்த்துத் தெரிவித்து விட்டு வந்தேன். கடந்த 18 வருடங்களாக இப்படி மூலையில் நின்ற என் பார்வையின்படி, ஆரம்பத்தில் ஜெயலலிதா சிறப்பாகவே செயல்பட்டு வந்தார். ஜெயலலிதாவின் தன்னம்பிக்கையும், துணிச்சலும் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது.. அதைப் பார்த்த நானே, ஒரு பேட்டியில் ‘ஜெயலலிதா இங்கு முதல்வராக மட்டுமல்ல; பிரதமராகவும் வரக்கூடிய தகுதியிருக்கிறது’ என்றெல்லாம் சொன்னேன்.

ஆனால், போகப் போக ஜெயலலிதாவின் தன்னம்பிக்கை அதிகமாகி, தலைக்கனம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு மாறியதைப் பார்த்துக் குழம்பிப் போனேன். தேசியத் தலைவர்கள் பலருடன் சண்டை போட்டு பிரச்னை பண்ணி, தமிழகத்திற்கு மத்திய அரசால் கிடைக்கக்கூடிய சகாயங்களை வாங்க முடியாத போக்கைக் கையாண்டதைக் கண்டு எனக்கே கோபம் வந்தது.

அரசியலில் நேரடித் தொடர்பு இல்லாத நான், இவரின் போக்கை என்னுடைய ‘பாக்யா’ பத்திரிகையில் கார்ட்டூன் போட்டும் ஆங்காங்கே ஓரிரு விமர்சனம் செய்தும் வெளிக்காட்டுவதோடு நின்று கொண்டேன்.

ஆனால், நாளாக நாளாக அவரின் நடவடிக்கைகள் எனக்கு பெரும் கோபத்தையே ஏற்படுத்த ஆரம்பித்து விட்டன. குறிப்பாக, அவர் கட்சி வேட்பாளர் பட்டியலைப் பார்த்தபோது, அந்தக் கட்சி வளர பாடுபட்ட பல முன்னணித் தலைவர்களின் பெயர்கள் விடுபட்டிருந்ததைப் பார்த்து அதிர்ந்து போனேன்.

உழைப்புக்கும், உண்மைக்கும் உரிய மரியாதை கொடுத்து, கட்சி நடத்தி வந்த எம்.ஜி.ஆரின் இயக்கத்தில் நடக்கும் இந்த அலட்சியப் போக்கும், ஆணவப் போக்கும் தொடரவிடக் கூடாது என்று முடிவெடுத்தேன். அவருடன் இணைந்து அவரைத் திருத்த முடியாது என்று நன்றாகவே தெரிந்ததால், என் ஆசானும் வளர்ந்த _ வளர்த்த தி.மு.க.வில் சேர்ந்துவிட்டேன். இங்கிருந்தபடி அவர்களைக் கண்டிக்கப் போகிறேன். அதற்காகவே தி.மு.க.வில் திடீரென்று சேர்ந்தேன்’’.

பொருளாதாரச் சிக்கலில் இருக்கும் உங்களுக்குப் போதிய உதவி கிடைத்ததாலேயே தி.மு.க.வில் சேர்ந்தீர்கள் என்று செய்தி வருகிறதே?

‘‘எனக்கு கடந்த எட்டு வருடங்களாகவே, பொருளாதாரச் சிக்கல் இருந்து கொண்டேதான் இருக்கிறது. ஆனால், அதைச் சமாளிக்க இந்த அரசியல் உதவியாக இருக்குமென்றால், இதே தி.மு.க. ஆளும்கட்சியாக இருக்கும்போதே சேர்ந்திருப்பேன். இப்போது சேர்ந்ததன் நோக்கம் பொருளாதாரத் தேவை அல்ல.

அதே சமயம், என் பிரச்னை மற்றும் தேவை பற்றி கலைஞருக்கும் நன்றாகவே தெரிந்திருக்கும். அவரும் எனக்கு கை கொடுத்து என் சிரமத்தைப் போக்குவார் என்று நம்புவதில் தவறில்லை’’.

சொந்தமாகக் கட்சி ஆரம்பித்து நடத்திய உங்கள் பார்வையில் விஜயகாந்த், கார்த்திக் ஆகியோரின் செல்வாக்கு எப்படி இருக்கிறது?

‘‘அதுபற்றி எனக்குத் தெளிவாகச் சொல்லத் தெரியவில்லை. விஜயகாந்த் அரசியலில் இறங்கும் எண்ணத்தில் வெகுகாலமாகவே தன்னை பலப்படுத்தி வந்திருக்கிறார். நான் அவரைப் போல மன்றங்களை நடத்தி, அரசியல் கட்சி ஆரம்பித்தவன் இல்லை. கார்த்திக் மட்டும் என்னைப் போல திட்டமிடாமல் திடீரென்று களத்தில் குதித்திருக்கிறார். அவர் குறிப்பிட்ட சமூகத்தை நம்பி இதில் இறங்கியிருக்கிறார். இருவரில் விஜயகாந்தை குறைத்து மதிப்பிடமுடியாது. அதே சமயம், இந்த இருவராலும் பல தொகுதிகளில் ஓட்டு சிதறும். என் கணிப்பு... வெற்றி வாய்ப்பு இருவருக்கும் கிடைக்காது!’’

கூட்டணி மாறி மேடைதோறும் தி.மு.க. மீது புகார் பட்டியல் வாசித்து வரும் வைகோ பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

‘‘மிகச் சிறந்த மேடைப் பேச்சாளரான வைகோ, கூட்டணி மாற முடிவெடுக்க காலதாமதப்படுத்தியதாலேயே பலவீனமாகிவிட்டார். அப்படி அணி மாறும்படி அவரை சக நிர்வாகிகள் நிர்ப்பந்தப்படுத்தியதாலேயே மாறியதைப் பார்க்கும்போது, கட்சியின் தலைமைப் பொறுப்பிற்கு லாயக்கில்லாதவராகவே தோன்றுகிறது.’’

இப்போது அ.தி.மு.க.வில் சேர்ந்து வரும் பிரபலங்களான சிம்ரன், கோவைசரளா போன்றவர்கள் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

‘‘அதுபற்றி கிண்டலாகத்தான் சொல்லமுடியும். சிம்ரன் நாடெங்கும் போய் இயல், இசை, நாடகத் தமிழில் முழங்கப் போவதை மக்களே ஆவலோடு எதிர்பார்ப்பது போல நானும் எதிர்பார்க்கிறேன். அவர்களைப் பற்றி வேறென்ன சொல்ல? பாவம் மக்கள்!’’

சரத்குமார் தி.மு.க.வில் ஓரங்கட்டப்பட்டு சலசலப்பு ஏற்பட்டிருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

‘‘என்னைப் பொறுத்தவரையில் ஏதாவது எதிர்ப்பார்ப்பிருந்தால்தான் ஏமாற்றம் கிடைக்கும். எனக்கு இந்த அரசியலில் எந்த லட்சியமும் கிடையாது. அதனால், நான் ஓரங்கட்டப்பட்டுவிடுவேன் என்ற பயம் இல்லை. சரத்குமார் விஷயத்திற்கும் கலைஞர் தெளிவாக பதில் சொல்லி விட்டார். ஓரிரு நாளில் சரத்தும் கலைஞரும் நேரில் பேசி குழப்பத்தைத் தீர்த்துக் கொள்ளப் போவதாகக் கேள்விப்பட்டேன்.’’

நாடெங்கும் பிரசாரம் செய்யப் போவதாக அறிவித்திருக்கிறீர்கள். தமிழக ஆட்சி பற்றி விமர்சனம் செய்யும் நீங்கள், மத்தியில் உள்ள 13 தமிழக அமைச்சர்களின் செயல்பாடுகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

‘‘நான் அரசியலில் இருந்து 18 ஆண்டுகள் விலகி இருந்தாலும் தமிழக நிலவரங்களை மட்டுமே உன்னிப்பாக கவனித்து வந்தேன். இனிமேல்தான் ஒட்டுமொத்தமாக இந்திய அரசியல் பற்றி அறிந்து கொள்வேன். அதுபோக, நேற்று வரை நான் நடுநிலை ஆளாக இருந்தவன். இப்போது ஓர் இயக்கத்தில் சேர்ந்த பிறகு சொல்லும் கருத்து ஒரு சார்பாகத்தான் இருக்கும். அதனால், இப்போதைக்கு இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல இயலாது.’’

தி.மு.க.வில் வாரிசு அரசியல் உருவாகி ஸ்டாலின் முன்னிலைப்படுத்தப்படுவதாகக் கூறுகிறார்களே?

‘‘அதிலொன்றும் தவறில்லையே. என் குடும்ப வக்கீல் ஒருவரின் மகன் வக்கீலாகத்தான் உருவாகியிருக்கிறார். என் குடும்ப டாக்டரின் மகளும் டாக்டராக வந்திருக்கிறார். இவ்வளவு ஏன், என் மகள் கூட நடிப்புக் கலையில் தான் ஈடுபட்டுள்ளாள். இதெல்லாம் சரியென்றால், கலைஞரின் வாரிசாக ஸ்டாலின் வருவதும் நியாயம்தான்!’’

நன்ற்குமுதம் ரிப்போர்ட்டர்

0 Comments: