பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, April 02, 2006

எங்களுக்கு பலமான தலைவி உள்ளார் - வைகோ பேட்டி

கேள்வி:நீங்கள் ஏன் தேர்தலில் போட்டியிடுவது இல்லை என முடிவு செய்தீர்கள்?

பதில்: இது உங்களுக்கு வேண்டுமானால் வியப்பாக இருக்கலாம். இது திடீரென எடுத்த முடிவு அல்ல. நீண்ட நாள்களுக்கு முன்பாகவே சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவது இல்லை என முடிவு செய்து விட்டேன். மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவுக்கான காரணம்தான் இப்போதைய முடிவுக்கும் காரணம். நான் எனது நேரத்தையும், சக்தியையும் கட்சியின் வளர்ச்சிக்கும், அடிமட்டத் தொண்டனுடனான உறவை வலுப்படுத்திக் கொள்ளவும் பயன்படுத்தி வருகிறேன். தனது உடலையும், உள்ளத்தையும் கட்சிக்காக ஈந்துவரும் தொண்டனுடன் கலந்துபேச நேரமில்லை எனக் கூறிவரும் சில தலைவர்களுக்கு மத்தியில் இது எனக்கு கிடைத்துள்ள ஒரு பெரிய வாய்ப்பு.

கடந்த 12 மாதங்களாக நான் எனது கட்சித் தொண்டர்களை சந்தித்து பேசி வருகிறேன். அது கட்சியைப் பற்றியது அல்ல. அவர்களது குடும்பம், குழந்தைகள், தொழில், மாத வருமானம், உடல் ஆரோக்கியம் உள்ளிட்டவை குறித்துதான் பேசினேன். அப்போது, பலர் வாழ்க்கைப் போராட்டத்தில் இருப்பதை அறிந்தேன்.

நான் தேர்தலில் போட்டியிட்டால் அத் தொகுதியில் அதிகமான நேரத்தை செலவிட வேண்டியது இருக்கும். எங்கள் கட்சியில், சில தலைவர்கள் வட்டார மற்றும் மாவட்ட அளவில் மட்டுமே தெரிந்தவர்கள். அவர்களுக்கு இந்தத் தேர்தலில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஒருவர்தான் சிவகாசி தொகுதி வேட்பாளர்.

கே: தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவு தாற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா?

ப:எனது அந்த போர் தந்திரத்தை நான் வெளியே கூற மாட்டேன். அவ்வாறு கூறினால் அது போர் தந்திரம் அல்ல.

கே: நாடாளுமன்றத்தில் நீங்கள் ஜெயலலிதாவின் நண்பராக இருந்துள்ளீர்கள். அதன் பின்பு அவருடன் தேர்தல் கூட்டணி வைத்துள்ளீர்கள். பின்பு எதிர்க்கட்சியாகவும், இப்போது கூட்டணியிலும் சேர்ந்துள்ளீர்கள். ஜெயலலிதாவின் அரசியல் பரிணாம வளச்சியை எப்படி பார்க்கிறீர்கள்?

ப: நாடாளுமன்றத்தில் நாங்கள் அருகருகே அமர்ந்திருந்தோம். எங்களுக்கு மத்தியில் குவாலியர் ராணி ராஜமாதா சிந்தியா அமர்ந்திருந்தார். அவர் சபைக்கு வராத நாள்களில் எங்களுக்குள் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. முதல்வரும் எனது நாடாளுமன்ற நடவடிக்கைகளை வெகுவாகப் புகழ்ந்துள்ளார். நான் அவரது நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்திருந்த போதிலும், அவர் எப்போதும் என் மீது தனிப்பட்ட முறையில் வெறுப்பு காட்டியதில்லை. இதுவரை எனக்கு எதிராக எதுவும் சொன்னதில்லை. என்னை சிறையில் அடைத்தது வேறு.

கடந்த 20 நாள்களில் நான் அவரை 3 முறை சந்தித்துப் பேசியுள்ளேன். நான் அவரிடம் கண்ட கடல் அளவு மாற்றம் என்னை திகைப்படைய வைத்துள்ளது. அது உண்மை. அவர் தன்னை அபரிமிதமாக தகுதிப்படுத்தியுள்ளார். அவர் தீவிரமான படிப்பாளி என்பது எனக்குத் தெரியும். அவர், விவேகி மற்றும் அதிபுத்திசாலி. இதை நான் ஒரு அரசியல்வாதியாக இல்லாமல் பார்வையாளன் என்ற முறையில் சொல்கிறேன். அவர் ஆட்சி நடத்தி வரும் திறமை வியப்பூட்டுகிறது.

அமெரிக்காவில் ஏற்பட்ட இயற்கைப் பேரழிவின்போது கூட நிவாரணப் பணிகளுக்கு அந்நாட்டு அரசு நேரம் எடுத்துக் கொண்டது. ஆனால் தமிழ்நாட்டில் அரசு இயந்திரம் விரைவாக முடுக்கி விடப்பட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் வேகமாக நடைபெற்றன. இவை எல்லாம், மத்தியில் இருந்து போதுமான அளவு நிதி கிடைக்காத போதும் செய்து முடிக்கப்பட்டன.

சட்டப் பேரவையிலும் கூட மிகப் பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் சித்திரக்குள்ளர்கள் ஆனார்கள். அவரிடம் கேள்வி கேட்க கூட திராணி இல்லை. அவர்கள் கேள்வி கேட்டால் அதற்கான பதில் முதல்வரின் விரல் நுனியில் இருக்கும் என்பதோடு, அவர்கள் கூறும் புகார்கள் அவர்களையே திருப்பித் தாக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். குறிப்பாக திமுகவில் முடிசூட உள்ள இளவரசர் மு.க. ஸ்டாலின் முழு அமைதியாகி விட்டார். ஸ்டாலின் எப்போது சபைக்கு வருவார், எப்போது வெளியே செல்வார் என்பது எவருக்கும் தெரியாது.

சென்னை விமான நிலைய விரிவாக்கப் பிரச்சினை: சென்னை விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தினால் அப்பகுதியில் பாதிக்கப்படும் மக்களின் பிரச்சினைகள் குறித்து முதன் முறையாக நான் முதல்வரிடம் எடுத்துக் கூறினேன். அவர் எனது கடிதத்தை அவ்வளவு விரைவாக படித்துப் பார்த்தார். உடனே, செயலரை அழைத்து, அந்த விரிவாக்கப் பணியை நிறுத்தி வைக்கவும், தேர்தல் முடிந்த பின்பு விரிவான விசாரணைக்குப் பின்பு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

நான் அவருடன் தேர்தல் கூட்டணி வைத்துக் கொண்டதற்காக மகிழ்கிறேன். அதிமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கே. ஜனநாயக மக்கள் கூட்டணி எண்ணிக்கை அடிப்படையில் பலமானது அல்ல?

ப: எங்களுக்கு பலமான தலைவி உள்ளார். எதிரணியில் பலவீனமான தலைவரும், குழப்பமான கூட்டணியும் உள்ளது. அவர்கள் ஒருவருக்கொருவர் சதி செய்வார்கள். எனது கடந்த கால கணிப்புகள் சரியாகி உள்ளன.

கே: சன் தொலைக்காட்சியின் அபரிமிதமான சொத்து குறித்து நீங்கள் குற்றம் சாட்டுகிறீர்கள். அது மட்டும்தானே பிரபலமான தொலைக்காட்சியாக உள்ளது.

ப:அவர்கள் ஏகபோகத்திற்கு முயற்சிக்கிறார்கள். ஜெயா தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு உரிமை பெறுவதை அவர்கள் தடுத்தார்கள். ராஜ் தொலைக்காட்சியை கொன்றார்கள். வரலாற்றை நீங்கள் மறந்து விடக் கூடாது. பெரும்பான்மை அதிகாரமானது அதே அதிகாரத்தால் அழியும்.

கே: இந்த தடவை தேர்தலில் குதித்துள்ள புதிய தலைவர்கள் என்ன ஆவார்கள்?

ப:இது அவர்களுக்கு ஒரு அமிலச் சோதனை. மக்கள் எப்போதுமே தந்திரக்காரர்கள் மற்றும் புத்திசாலிகள். இந்த தேர்தல் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு புதிய வளத்தை ஏற்படுத்துவதாக இருக்கும். அதன் மூலம் மாநிலத்திற்கு நல்லது கிடைக்கும்.

கே: அப்படியானால் இம்முறை தமிழ்நாட்டில் முதன் முறையாக கூட்டணி ஆட்சி ஏற்படும் என்ற பொருளில் கூறுகிறீர்களா?

ப: இல்லை. அதிமுக பெரும்பான்மை பெறும். முதல்வர் ஆவோம் என்ற கனவில் இருப்பவர்கள் காணாமல் போவார்கள்

செய்தி : தினமணி

1 Comment:

manu said...

Idly vadai, did not you sleep.? suda suda breakfast pramaadham.viraivil please start appalam+payasam, so we can feast on thru out the day. ezhisai.