பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, February 27, 2006

ஜெ அழைத்தால்...வைகோ பேட்டி

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ `இந்தியாடுடே' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

8 சதவீத ஓட்டு

கேள்வி:- நீங்கள் ஒரு தவிர்க்கமுடியாத சக்தியாக உருவெடுத்து இருக்கிறீர்களா?

பதில்:- 96-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெரிய பிரளயமே ஏற்பட்டபோதுகூட ம.தி.மு.க. 8 சதவீத வாக்குகள் பெற்றது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். பொடா சிறைவாசத்துக்கு அப்புறம் நாங்கள் வலுப்பெற்று இருக்கிறோம். சில இடங்களில் 14 சதவீதம், சில இடங்களில் 8 சதவீதம், சில இடங்களில் 4 சதவீதம்-ஒட்டுமொத்தமாக பார்க்கையில் 8 சதவீத வாக்குகள் எங்களிடம் உள்ளன. இவை தவிர, ஒரு நிலையான வாக்காளர்களை கவர்கிறவர்களாக இருக்கிறோம். ம.தி.மு.க. மீதான நம்பகத்தன்மை வாக்காளர்கள் மத்தியில் இருக்கிறது. வாக்காளர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறோம்.

அ.தி.மு.க.வுடன் கூட்டணி?

கேள்வி:- உங்கள் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அ.தி.மு.க. கூட்டணியில் சேரலாம் என்று சொல்வதாக தெரிகிறதே?

பதில்:- அது உண்மைதான். ம.தி.மு.க. குறைவான தொகுதிகளில் போட்டியிட்டுக்கொண்டு இருக்காமல், அ.தி.மு.க. கூட்டணிக்குப்போய் நிறைய இடங்களைப்பெற்று, ஜெயித்து இன்னும் பலமான கட்சியாக மாறலாம் என்று அவர்கள் நினைத்தார்கள். இது ஒன்றும் லட்சியக்கூட்டணி இல்லையே என்று அவர்கள் நினைத்து இது வெறும் தொகுதி உடன்பாடுதானே என்ற எண்ணத்துக்கு அவர்கள் வந்தது உண்மைதான்.

நல்லதை செய்வது

கேள்வி:-ஆனால், தொண்டர்களின் எண்ணத்துக்கு எதிராக முடிவு எடுத்து இருக்கிறீர்களே?

பதில்:-ஜனநாயகமான கட்சி அமைப்பில் பக்குவமாக எடுத்துச்சொல்லித்தான் அவர்களுடைய மனதை மாற்ற முடியும். தொண்டர்களுக்கு அவர்கள் விரும்புவதை செய்து தருவது ஒன்று-தொண்டர்களுக்கு எது நல்லதோ, அதைச்செய்து தருவது என்பது ஒன்று.

கேள்வி:- உங்கள் கட்சியில் இரண்டாம் மட்டத்தலைவர்கள் கூட தி.மு.க.வை கடுமையாக விமர்சிக்கிறார்களே?

பதில்:- தி.மு.க. கூட்டணியில் அதிக இடங்கள் பெறவேண்டும் என்ற துடிப்பு அவர்களிடம் இருக்கிறது. அந்த துடிப்பில் ஆவேசமாக பேசி வருகின்றனர். அது தவறுதான். அதை தவிர்க்கவேண்டும் என்று சொல்லி இருக்கிறேன்.

நாணயமான அரசியல்

கேள்வி:- ஆற்காடு வீராசாமி, " இது நாணயமான அரசியலாக இல்லை'' என்று உங்களை விமர்சித்து இருக்கிறாரே?

பதில்:- கூட்டணி நலனை பாதுகாக்கவேண்டும் என்கிற பொறுப்பு எனக்கும் இருக்கிறது. தி.மு.க.வைப்பற்றி ம.தி.மு.க. பேச்சாளர்கள் பேசியதை கண்டித்ததை தவறு இல்லை. ஆனால், ம.தி.மு.க. வேறு இடத்தில் பேரம் பேசுகிறது என்ற வார்த்தைகள், கடுமையான வார்த்தைகள். அதற்கு பதில் அளிக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு, நானும் வார்த்தைகளை பயன்படுத்துவது கூட்டணி நலனுக்கு உகந்தது அல்ல. அதனால்தான் அறிக்கையில் எனது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தி இருக்கிறேன்.

பா.ம.க.வுக்கு முக்கியத்துவம்

கேள்வி:- பா.ம.க.விற்கு அதிக முக்கியத்துவம் தருவதாக ம.தி.மு.க.வினர் விமர்சிக்கிறார்களே?

பதில்:- இன்னொரு கட்சியுடன் ஒப்புமைப்படுத்தி நான் கணக்கு பார்ப்பது இல்லை. பா.ம.க.வினரும் என்னிடம் பிரியமாக இருக்கிறார்கள். எங்களுக்கு உரிய பங்கு எங்களுக்கு கிடைத்தால் போதும்.

கேள்வி:- ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் கூடுதல் இடங்கள் கேட்பீர்களா?

பதில்:- 35 மாவட்டங்களில் கட்சி அமைப்பாக இருக்கிறோம். எனவே மனநிறைவு அளிக்கத்தக்க வகையில் இடங்கள் தரப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

கேள்வி:- இந்த தடவையாவது தரப்படும் இடங்கள் வெற்றி வாய்ப்பு உள்ள இடங்களாக இருக்குமா?

பதில்:- கடந்த காலத்தில் நடந்து முடிந்தவைகள் நடந்தவைகளாகவே இருக்கட்டும். எங்களுக்கு மனதில் கவலை ஏற்படாத அளவிற்கு தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

ஜெயலலிதாவே அழைத்தால்...

கேள்வி:-`வாங்க வைகோ' என ஜெயலலிதாவே தேர்தல் கூட்டணிக்கு அழைத்தால்..?

பதில்- (நீண்ட மவுனத்துக்குப்பின்)- அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை.

கேள்வி:- தி.மு.க கூட்டணி வென்றால், ஸ்டாலின்தான் முதல்வர் என்று சொல்லப்படுகிறதே?

பதில்:- கற்பனையான ஆரூடங்களுக்கு எல்லாம் பதிலே சொல்லக்கூடாது. கலைஞரே பரிபூரண நலத்தோடு முதல்வராக இருப்பார். முழு 5 ஆண்டுகள் ஆட்சி நடத்துவார்.''

8 Comments:

பழூர் கார்த்தி said...

//கேள்வி:-`வாங்க வைகோ' என ஜெயலலிதாவே தேர்தல் கூட்டணிக்கு அழைத்தால்..?
பதில்- (நீண்ட மவுனத்துக்குப்பின்)- அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை.//

இதற்கு என்ன அர்த்தம் ?? வைகோ நீண்ட மவுனத்திற்கு பிறகு பதில் கூறினாரென்றால், இன்னும் யோசிக்கிறார் என்றுதானே அர்த்தம் !!
ஒருவேளை ஜெ. அழைத்தால், சென்று விடுவாரோ...

Idly Vadai said...

ஒரு வாரம் காத்திருக்கவும். 99% வைகோ திமுகவில் தான் இருப்பார் :-)

டி ராஜ்/ DRaj said...

ஒருவேளை ஜெ. "வாங்க வைகோ"-ன்னு அழைக்க முடியாதுன்னு கட் அண்ட் ரைட்டா சொல்லிட்டாங்களோ?
;)

Idly Vadai said...

வாங்க வாங்க என்று அழைக்க அவர் தமிழ்மணம் நட்சத்திரமா என்ன ? :-)

Anonymous said...

வைகோ எந்த கூட்டணியில் இருந்தாலும் தேர்தலுக்கு பிறகு கழட்டி விடுவது நிச்சயம் ஆதலால் யார் அதிகம் சீட்டு கொடுக்கிறார்களோ அவர்கள் பின்னாடி செல்வதே நலம்

Anonymous said...

இட்லி வடை என்ற தலைப்பை, வை. & கோ. என்று மாற்றிவிடலாமோ?

Idly Vadai said...

அட நல்ல ஐடியா :-)

Haranprasanna said...

லட்சியம் என்றால் வைகோ தனித்தே போட்டியிடவேண்டும். தி.மு.க. அணியில் இருந்தாலும் சரி, அ.தி.மு.க. அணியில் இருந்தாலும் சரி - இலட்சியம் இருக்காது. இப்போதைக்கு நிறைய சீட்டுகளுக்காக வைகோ அ.தி.மு.க. பக்கம் போவதே அவருக்கு நல்லது. இல்லையென்றால் 20 சீட்டுகளே கிடைக்கும். அதிலும் அவர் ஏமாற்றப்படாமல்வேறு இருக்கவேண்டும். மீண்டும் ஒரு முறை வைகோ அழுதால் என் மனசு தாங்காது. :P