பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, February 25, 2006

வைகோ தாயார் பேட்டி

இந்த வார ஆ.வியில் வைகோ தாயார் சிறப்பு பேட்டி. ...


கடந்த 2001&ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. இரண்டு கட்சிகளாலும் வேண்டாத மருமகளாகப் பார்க்கப்பட்ட வைகோ, இந்தத் தேர்தலில் இரண்டு கட்சிகளுக்கும் புதுமணப் பெண்ணாகக் காட்சியளிக்கிறார். ஜெயலலிதா, கருணாநிதி இரண்டு பேருமே அவரைக் கூட்டணிக்குள் சேர்த்துக்கொள்ள போட்டிப் போட்டுக்கொண்டு ஆரத்தித் தட்டு தூக்கி நிற்கிறார்கள். காரணம், கணிசமான தொகுதிகளில் வெற்றி&தோல்வியை நிர்ணயிக்கக்கூடிய சக்தியாக ம.தி.மு.க. இருப்பதால்தான்!இதை வைகோ மட்டுமல்ல... தமிழக உளவுத் துறையும் உணர்ந்திருப்பதால்தான் ‘எந்தக் கூட்டணி ம.தி.மு.க&வின் எதிர்காலத்தை ஒளிரவைக்கும்’ என முடிவெடுக்க முடியாமல் சற்றே குழம்பிப் போனார் வைகோ. மாற்றி மாற்றி உளவுத்துறை உசுப்பேற்றியதால், ஏகத்துக்கும் தடுமாறிவிட்ட வைகோ... இப்போதுதான் சரியான நிலைக்குத் திரும்பியிருக்கிறார் என்று அவருடைய கட்சியின் இரண்டாம் கட்ட தலைகளே ஆறுதல்படும் அளவுக்கு ஒரு முடிவை இப்போது எடுத்திருக்கும் வைகோ, தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்கு உழைக்கப் போகிறேன். கலைஞர்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்றெல்லாம் அறிவித்திருக்கிறார்.

வைகோவின் இந்த அறிவிப்புக்குப் பின்னணியில், அவருடைய பாசத்துக்குரிய தாய் மாரியம்மாளின் கனிவான ஆலோசனையும் இலைமறைகாயாக இருந்ததை வைகோவே ஒப்புக் கொண்டிருக்கிறார். மகனை தி.மு.க. கூட்டணியில் இழுத்து நிறுத்தியதைத் தனக்கு நெருக்கமானவர்களிடம் பெருமையோடு சொல்லிக் கொண்டிருக்கிறார் மாரியம்மாள்."தி.மு.க. கூட்டணியில்தான் நீடிக்கிறோம்" என்ற வைகோவின் அறிவிப்பைக் கேட்டு கலிங்கப் பட்டியிலுள்ள வடக்கத்து அம்மன் கோயிலில் ஐம்பத்தோரு சூறைத்தேங்காய் உடைத்து நேர்ச்சை செலுத்தியிருக்கிறார்கள் வைகோவின் அபிமானிகள். இந்த நிலையில் வைகோவின் தாயார் மாரியம்மாளை கலிங்கப்பட்டியிலுள்ள அவரது வீட்டில் சந்தித்தோம்.

அண்ணாவின் படத்துக்குக் கீழே உட்கார்ந்தபடி பேட்டிக்குத் தயாரான மாரியம்மாள், "கருணாநிதி படத்த எத்துகு ரா (எடுத்துக்கிட்டு வா)’’ என்று வீட்டில் உள்ளவர்களுக்குத் தெலுங்கில் உத்தரவிட்டபடி நம்மிடம் பேசினார்."போன வெள்ளிக்கிழமை தான் மெட்ராஸ்ல இருந்து இங்க வந்தேன். ‘எனக்கு என்ன பண்றதுனு தெரியலம்மா. எல்லாமே குழப்பமா இருக்கு... இந்த நேரத்துல நீ எம்பக்கத்துல இருந்தீனா, தெம்பா இருக்கும்மாÕனு வைகோ சொன் னான். ‘என்னடா புள்ள இப்புடி சொல்றானே’னுட்டு ஒரு மாசமா அவன்கூட மெட்ராஸ்ல இருந்தேன். வெள்ளிக்கிழமை நானும் அவனும்தான் ஒண்ணா கலிங்கப்பட்டிக்கு வந்தோம். வந்த ரெண்டு நாள்ல என்னென்னமோ நடந்துருச்சு, பாத்துக்குங்க’’ என்றவரிடம்,

நீங்க சொன்னதால்தான் வைகோ ‘தி.மு.க. கூட்டணியில் நீடிக்கிறோம்’னு அறிக்கை விட்டதா சொல்றாங்களே? என்று கேள்வியைப் போட்டோம்.

"மதுரையில இருந்து காருல ஊருக்கு வந்துகிட்டிருந்தப்ப எங்ககூட இன்னும் ரெண்டு பேரு வந்தாங்க. அவங்க எந்தக் கட்சிக்காரங்கனு தெரியல. அவங்ககூட வைகோ பேசிக்கிட்டே வந்தான். எங்கெல்லாம், எப்புடியெல்லாம் ஜெயிக்கலாம்னு அவங்க விவரமா பேசிக்கிட்டு வந்தாங்க. வீட்டுக்கு வந்ததுமே, ‘ஐயா, நீ ஜெயலலிதா கூட்டுல சேரப்புடாது. என்னானாலும் கருணாநிதி கூடத்தான் இருக்கணும்’னு சொன்னேன். அதைக்கேட்டு அவன் சிரிச்சான். அன்னிக்கி ராத்திரியே மறுபடியும் அவன் மெட்ராஸ§க்குப் புறப்பட்டப்ப, ‘ஐயா, அந்தம்மாவால நாம பட்டதெல்லாம் போதும்யா. நெட்டையோ, குட்டையோ... நீ கருணாநிதிக்கிட்டயே இருந்துறய்யா’னு சொன்னேன். அதுக்குப் பின்னாடி அவன்கிட்ட நான் எதுவும் பேசல.’’

அரசியலில் அணி மாறுவது சகஜம். அப்படி இருக்கும்போது, அ.தி.மு.க&வோட வைகோ அணி சேருவதில் உங்களுக்கென்ன வருத்தம்?

"நீங்க கேட்ட மாதிரிதான் எங்க சாதி சனத்துலயும் ‘எதுக்குக் கருணாநிதியோட கூட்டு சேர சொல்றே?’னு கேட்டாங்க. பொடா கேஸ்ல வைகோவோட சேர்த்து என் வயித்துல பொறக்காத எட்டுப் புள்ளைங்களயும் அந்தம்மா அரஸ்ட் பண்ணுனாங்களே... அவங்கள கொஞ்ச பாடா படுத்துனாங்க! வைகோ மேல வெய்யில்கூட படாம வளத்தாரு, அவங்க அப்பா. வெளியில எங்க போனாலும் அவன்கூட துணைக்கி ஒரு ஆள அனுப்பி விடுவாரு. அப்புடி வச்சுருந்த மகன, ஜெயில்ல போட்டுப் பத்தொன்பது மாசமா என்ன கொடுமைப் படுத்துனாங்க! அமெரிக்காவுல இருந்து வந்து இறங்குன புள்ளய, கொலைக் குத்தவாளிய புடிக்கிற மாதிரியில்ல குண்டுக்கட்டா பிடிச்சுத் தூக்கிட்டுப் போனாங்க! அத்தோட விட்டாங்களா, இம்புட்டுப் பெரிய மனுஷன் வீட்டுக்குள்ள போலீஸ்காரங்க நொழைஞ்சு சோதனை போட்டாங்களே. அதை இந்த ஊரே கூடி வேடிக்கை பாத்துச்சே! இந்த வேதனைகளை எல்லாம் நாங்க தாங்கிக்கிட்டோம். ஆனா, மறக்க முடியாதே! இதையெல்லாம் மனசுல வச்சுத்தான், ‘அந்தம்மா சகவாசம் வேணாம்யா’னு சொன்னேன்.’’"எல்லாம் இருக்கட்டும்...நீங்கள் குற்றம்சாட்டும் அதே ஜெயலலிதாதானே கூட்டணிக்குத் தூது விடுகிறார் என்கிறார்கள்... அதை ஏற்றால் தப்பென்ன?"

"அவங்களுக்குப் பதவி ஆசை... அதனால பழசை எல்லாம் மறந்துட்டு, கூசாம கூட்டணிக்குக் கூப்புடுறாங்க. ஆனா, பட்ட துன்பத்தை நாங்க மறந்துட முடியுமா? ஒரு பேச்சுக்கு, அந்தம்மா கூட்டணிக்கு வைகோ போறான்னு வச்சுக்குவோம், அப்ப மேடைக்குமேடை இம்புட்டு, அம்புட்டுல இருந்து பெரிய மனுஷன் வரைக்கும் ‘வைகோ... வைகோ’னுட்டு இவம்பேர சொல்லுவாங்க. அதை அந்தம்மாவால தாங்கிக்கிட முடியாது. அந்தம்மா மனசும் அத ஏத்துக்கிடாது.’’

ஜெயலலிதாகிட்ட நாற்பது தொகுதிகளும், அதுக்கு செலவு செய்ய நாற்பது கோடி ரூபாய்க்கும் வைகோ சரண்டர் ஆகிட்டதாகக்கூட பேச்சு வந்ததே?"பணத்துக்கோ, பதவிக்கோ ஆசைப்படறவனில்லை வைகோ. அரசியலுக்கு வந்து நாங்க எதையும் சம்பாதிச்சுக் கிடல. அட்டை கம்பெனி, பெட்ரோல் பங்க், பண்ணை வீடு, புஞ்சைக்காடு... இப்புடி ஏகப்பட்ட சொத்துகளை இழந்துருக்கோம். அதனால பணம் அவனுக்குப் பெரிசில்ல!’’

இடையில் நடந்த குழப்பங்களை சாக்காக சொல்லி, தி.மு.க. அணியில் வைகோவுக்கு ஸீட் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டால்..?

"இப்ப வைகோ, தன்னோட முடிவ தெளிவா சொல்லிட்டான். இப்ப பந்து, கருணாநிதி கையில இருக்கு. வைகோவோட செல்வாக்குத் தெரிந்து ம.தி.மு.க&வுக்குத் தொகுதிகள குடுக்கணும் கருணாநிதி. அவன் கேக்குறது நியாயமா இருந்தா குடுக்கட்டும். இல்லாட்டி குறைச்சுக்கட்டும். அவரு என்ன செய்யப் போறாருனு யாரு கண்டது? ஆனா அவரு குடுத்தாலும், குறைச்சாலும் வைகோவுக்கு உள்ளது உள்ளபடி இருக்கும். அதுக்காக அவன் கூட்டு மாறமாட்டான்.’’தி.மு.க&வைவிட தாராளமாகத் தொகுதிகளை விட்டுத் தருவதாக ஜெயலலிதாசொன்னால்..?

"அந்தம்மா நூறு தொகுதிகளைக் குடுத்தாக்கூட வேணாம். இது சம்பந்தமா ஜெயலலிதாவே நேருல கூப்புட்டுப் பேசினாலும் எம்புள்ள எம்பேச்ச தட்டிட்டு, அந்தப் பக்கம் போகமாட்டான்.’’

வைகோவைக் கூட்டணியில தக்க வைக்கிறதுக்காகக் கருணாநிதி வீட்டுப் பெண்கள் உங்களிடமும், உங்கள் மருமகளிடமும் பேசியதாக சொல்கிறார்களே...?

"என்கிட்ட அப்படி யாரும் பேசல. ஒருக்கா மருமகள்ட்ட யாராச்சும் பேசியிருப்பாங்க...

கூட்டணி முடிவை அறிவித்தபிறகு மகன்கிட்ட பேசுனீங்களா?

"நேத்திக்கிப் பேசுனேன். 'மனசுக்கு ரொம்ப நிம்மதியா இருக்குப்பா'னு சொன்னேன். அவனும் நிம்மதியா இருக்கற மாதிரி சிரிச்சான்."

நன்றி: ஆனந்த விகடன்

4 Comments:

நன்மனம் said...

//வைகோ மேல வெய்யில்கூட படாம வளத்தாரு, அவங்க அப்பா. வெளியில எங்க போனாலும் அவன்கூட துணைக்கி ஒரு ஆள அனுப்பி விடுவாரு. அப்புடி வச்சுருந்த மகன, ஜெயில்ல போட்டுப் பத்தொன்பது மாசமா...//

Oru Annaiyin/thanthaiyin manam evalavu arumaiyanathu enbathai unarthum varigal

மாயவரத்தான்... said...

அது சரி. 'கொலைகார பட்டம்' கட்டி கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியவர்களிடம் கூட்டணி வைத்துக் கொள்வது தப்பில்லையாம். அதுவும் கொடுப்பதை வாங்கிக் கொண்டு கூட்டணியில் இருக்க வேண்டும் என்றார்களாம். ம்...என்னவோ நடக்குது!

சதயம் said...

ஏனுங்க...இப்படி cut&paste பண்ணலாமா...ஏதோ காப்பிரைட் அது இதுன்னு சொல்றாங்களே....

தெரியாமத்தான் கேக்க்றேன்....

Idly Vadai said...

Sadhayam - நான் கூட நினைத்தேன். கீழே நன்றி ஆனந்த விகடன் என்று போட்டிருக்கிறேன். அதனால் பிரச்சனை ஒன்றும் வராது என்று நினைக்கிறேன் :-). இருந்தாலும் எனக்கு தெரிந்தவர்களிடம் இதை பற்றி விசாரிக்கிறேன். நன்றி.