பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, February 10, 2006

அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு: ஆய்வுத் தகவல்

இப்போதுள்ள சூழ்நிலையில் தேர்தல் நடந்தால் தமிழகத்தில் அதிமுக தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறும் என்று ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியா பவுண்டேஷன் அமைப்புக்காக மார்க்கெட்டிங் மற்றும் டெவலப்மெண்ட் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில் இத் தகவல் தெரிய வந்துள்ளது.

இதை இந்தியா பவுண்டேஷன் அமைப்பைச் சேர்ந்த எஸ். தியாகராஜன் தெரிவித்தார்.

ஆய்வு முடிவுகள் பற்றி அவர் தெரிவித்த தகவல்கள்:

அதிமுகவுக்கு 44.5 சதவீத வாக்காளர்களும், திமுக கூட்டணிக்கு 43.7 சதவீத வாக்காளர்களும் ஆதரவாக உள்ளனர். இது அதிமுகவுக்கு 146 முதல் 151 தொகுதிகள் வரை பெற்றுத் தரும். திமுக அணிக்கு 78 முதல் 83 தொகுதிகள் வரை கிடைக்கும்.

தனியே போட்டியிடப் போவதாகக் கூறியுள்ள பா.ஜ.க.வுக்கு 1.5 சதவீத வாக்காளர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனால் எந்தத் தொகுதியிலும் அக் கட்சி வெற்றி பெற முடியாது.

சுயேச்சைகள் மற்றும் இதர சிறிய கட்சிகளுக்கு 10.3 சதவீத வாக்காளர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனால் 7 முதல் 9 தொகுதிகள் வரை வெற்றி கிடைக்கும்.

அதிமுகவுக்கு கடந்த மக்களவைத் தேர்தலில் இருந்ததைவிட 14.5 சதவீதம் அதிக ஆதரவு கூடியிருக்கிறது.

இந்த ஆய்வு நடந்தபோது 14 சதவீதம் பேர் வாக்குப் பதிவு நேரத்தில் தங்கள் முடிவை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதாகக் கூறினர். அப்படி மாறும்போது அரசியல்கட்சிகளின் வெற்றி வாய்ப்பு மாறும்.

இப்போது காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளுக்கு ஆதரவு தெரிவித்தவர்களில், பலர் தேர்தலின்போது முடிவை மாற்றலாம் என தெரிகிறது. இதனால் திமுக அணி பாதிக்கப்படும்.

வாழ்க்கைத் தரம் உயர்ந்ததா?: கடந்த 5 ஆண்டுகளில் வாழ்க்கைத் தரம் உயர்ந்ததா என்று கேட்கப்பட்டது. 30 சதவீதம் பேர் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருப்பதாகக் கூறினர். எந்த மாற்றமும் இல்லை என 58 சதவீதம் பேரும், மோசமடைந்திருப்பதாக 12 சதவீதம் பேரும் கூறினர்.

இல்லத்தரசிகளிடம் இதே கேள்வியைக் கேட்டதில் 27 சதவீதம் பேர் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருப்பதாகத் தெரிவித்தனர். எந்த மாற்றமும் இல்லை என 62 சதவீதம் பேரும், மோசமடைந்திருப்பதாக 11 சதவீதம் பேரும் கூறினர். மாணவர்களில் 42 சதவீதம் பேர் வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது என்றனர். 50 சதவீதம் பேர் மாற்றம் இல்லை எனவும், 8 சதவீதம் பேர் மோசமடைந்திருப்பதாகவும் கூறினர்.

2 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகளில் 30 சதவீதம் பேர் தரம் உயர்ந்ததாகவும், 60 சதவீதம் பேர் மாற்றம் இல்லை எனவும் 10 சதவீதம் பேர் மோசமடைந்திருப்பதாகவும் கூறினர்.

2 முதல் 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளில் 42 சதவீதம் பேர் முன்னேற்றம் இருப்பதாகவும், 53 சதவீதம் பேர் மாற்றம் இல்லை எனவும், 6 சதவீதம் பேர் மோசமடைந்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

நல்ல முன்னேற்றம் இருப்பதாக இருக்கும் உணர்வுகள் வாக்குகளாக மாறுமா என ஆராயப்பட்டது. வாழ்க்கைத் தரம் உயர்ந்திருப்பதாகக் கூறியவர்களில் 75 சதவீதம் பேர், இப்போது தேர்தல் நடந்தால் அதிமுகவுக்கு வாக்களிக்கப் போவதாகக் கூறினர்.

சாலை, கழிவுநீர் அகற்றல், குடிநீர், பொதுக் கழிப்பிடம், தெருவிளக்கு, போக்குவரத்து, மருத்துவமனை, மின்சாரம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு வாக்காளர்கள் முக்கியத்துவம் கொடுப்பது ஆய்வில் தெரிய வந்தது.

2004-ல் மக்களவைத் தேர்தலில் அதிமுக தோற்ற பிறகு இலவச சைக்கிள் திட்டம், சுய உதவிக் குழுக்களை வலுப்படுத்தியது, விவசாயிகளுக்குக் காப்பீட்டு வசதி, சுனாமி மற்றும் வெள்ள நிவாரணம் உள்ளிட்டவற்றில் ஜெயலலிதா தலைமையிலான அரசு மிகச் சிறப்பாகச் செயல்பட்டதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

ஏழைகளுக்கு இலவச ஆடைகள், விதவை மற்றும் முதியோர் ஓய்வூதியத் திட்டம், பள்ளிகளில் இலவச உணவு ஆகியவையும் அரசின் சாதனைகளாகக் கருதப்படுகின்றன.

ரேஷன் அட்டை விநியோகத்தில் குளறுபடி இந்த அரசுக்கு எதிராக அமையும் என 25 சதவீத வாக்காளர்கள் தெரிவித்தனர். புயல், வெள்ள நிவாரணம் சரியாக வழங்கவில்லை என 20 சதவீதம் பேர் கூறினர். கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வந்ததற்கு 15 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆட்சியில் திருப்தி: 62 சதவீத வாக்காளர்கள் ஜெயலலிதா ஆட்சியில் திருப்தி தெரிவித்தனர். 2004 மார்ச் மாதத்தில் 34 சதவீதம் பேர் மட்டுமே இந்த ஆட்சியில் திருப்தி தெரிவித்திருந்தனர்.

முந்தைய திமுக ஆட்சியைவிட இந்த ஆட்சி நன்றாக இருந்தது என பாதிக்கும் மேற்பட்டவர்கள் கருதுகின்றனர்.

அடுத்த முதல்வர் பதவிக்கு ஜெயலலிதாவுக்கு 60 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர்.

இப்போது முடிவெடுக்காத வாக்காளர்கள், வெற்றி வாய்ப்புள்ள கட்சிகளுக்கு ஆதரவு அளிக்கிறார்கள் என்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என 56 சதவீதம் பேரும், திமுகவுக்கு 41 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்தனர்.

கிறிஸ்தவர்கள், நாயுடு சமூகத்தவர்கள் தவிர மற்ற சமூகத்தவர் அனைவருமே தங்கள் சமூகத்தவர்களின் நலன்களை அதிமுக பாதுகாப்பதாகக் கூறினர்.

பல்வேறு தரப்பு மக்களில் திமுகவைவிட அதிமுகவுக்கு 15 முதல் 17 சதவீதம் பேர் அதிகமாக ஆதரவு தெரிவிக்கின்றனர். படித்தவர்கள் மத்தியில் திமுகவுக்கு ஆதரவு அதிகமாக உள்ளது.

கிராமப் பகுதிகள், மகளிர் மற்றும் படிக்காதவர்கள் மத்தியில் அதிமுகவுக்கு அதிகமான ஆதரவு இருக்கிறது. நகர்ப்புறம், ஆண்கள், இளைஞர்கள் மற்றும் படித்தவர்கள் மத்தியில் திமுகவுக்கு சற்று அதிகமான ஆதரவு இருக்கிறது.

சுய உதவிக் குழுக்களுக்கு உதவி, விவசாயிகளுக்குக் காப்பீடு மற்றும் இலவச மின்சாரம், அன்னதானத் திட்டம் ஆகியவை அதிமுகவுக்கு பரவலாக ஆதரவைப் பெருக்கியுள்ளது.

மாணவர்கள், அரசு ஊழியர் மற்றும் பெரிய விவசாயிகளிடம் திமுகவுக்கு கூடுதல் ஆதரவு இருக்கிறது.

கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்தவர்களில் 90 சதவீதம் பேர் இப்போதும் அதே கட்சிக்கு ஆதரவு தெரிவித்தனர். திமுகவுக்கு முன்பு வாக்களித்தவர்களில் 73 சதவீதம் பேர் மட்டுமே இப்போது அக் கட்சிக்கு ஆதரவாக உள்ளனர்.

கடந்த முறை பாஜகவுக்கு வாக்களித்தவர்களில் 85 சதவீதம் பேர் இப்போது அதிமுகவை ஆதரிக்கின்றனர். காங்கிரûஸ ஆதரித்தவர்களில் 30 சதவீதம் பேர் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். இடதுசாரிகளை ஆதரித்தவர்களில் 45 சதவீதம் பேர் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். அதேபோல பா.ம.க.வை ஆதரித்தவர்களில் 11 சதவீதம் பேரும், ம.தி.மு.க.வை ஆதரித்தவர்களில் 17 சதவீதம் பேரும் இப்போது அதிமுகவை ஆதரிக்கின்றனர்.

நன்றி: தினமணி

0 Comments: