பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, December 29, 2004

சுனாமி -கவிஞர் வைரமுத்து
ஏ கடலே!
உன் கரையில் இதுவரையில்
கிளிஞ்சல்கள்தானே சேகரித்தோம்
முதன்முதலாய்ப் பிணங்கள் பொறுக்குகிறோம்

ஏ கடலே!
நீ முத்துக்களின் பள்ளத்தாக்கா!
முதுமக்கள் தாழியா?

நீ கலங்களின் மைதானமா?
பிணங்களின் மயானமா?

துக்கத்தை எங்களுக்குத் தந்துவிட்டு
நீ ஏன் கறுப்பை அணிந்திருக்கிறாய்?

உன் அலை
எத்தனை விதவைகளின் வெள்ளைச்சேலை?

நீ தேவதை இல்லையா
பழிவாங்கும் பிசாசா?

உன் மீன்களை நாங்கள்
கூறுகட்டியதற்கா
எங்கள் பிணங்களை நீ
கூறுகட்டுகிறாய்?

நீ அனுப்பியது
சுனாமி அல்ல
பிரளயத்தின் பினாமி

பேய்ப்பசி உன்பசி
பெரும்பசி

குமரிக்கண்டம் கொண்டாய்
கபாடபுரம் தின்றாய்
பூம்புகார் உண்டாய்

போதாதென்று
உன் டினோசர் அலைகளை அனுப்பி
எங்கள்
பிஞ்சுக்குழந்தைகளின்
பிள்ளைக்கறி கேட்கிறாய்

அடக்கம் செய்ய ஆளிராதென்றா
புதை மணலுக்குள்
புதைத்துவிட்டே போய்விட்டாய்?

என்னபிழை செய்தோம்?
ஏன் எம்மைப் பலிகொண்டாய்?

சுமத்ராவை வென்றான்
சோழமன்னன் ராஜராஜன்

அந்தப் பழிதீர்க்கவா
சுமத்ராவிலிருந்து சுனாமி அனுப்பிச்
சோழநாடு கொண்டாய்?

காணும் கரைதோறும்
கட்டுமரங்கள் காணோம்
குழவிகளும் காணோம்
கிழவிகளும் காணோம்
தேசப்படத்தில் சில கிராமங்கள் காணோம்

பிணங்களை அடையாளம்காட்டப்
பெற்றவளைத் தேடினோம்
அவள்
பிணத்தையே காணோம்

மரணத்தின் மீதே
மரியாதை போய்விட்டது
பறவைகள்
மொத்தமாய் வந்தால் அழகு
மரணம்
தனியே வந்தால் அழகு
மொத்தமாய்வரும் மரணத்தின் மீது
சுத்தமாய் மரியாதையில்லை

அழுதது போதும்
எழுவோம்
அந்த
மொத்தப் பிணக்குழியில்
நம் கண்ணீரையும் புதைத்துவிடுவோம்

இயற்கையின் சவாலில்
அழிவுண்டால் விலங்கு

இயற்கையின் சவாலை
எதிர்கொண்டால் மனிதன்

நாம் மனிதர்கள்
எதிர்கொள்வோம்

மீண்டும் கடலே
மீன்பிடிக்க வருவோம்

ஆனால்
உனக்குள் அஸ்திகரைக்க
ஒருபோதும் வரமாட்டோம்


நன்றி:தினத்தந்தி

6 Comments:

Eswar said...

தினத்தந்தி சுட்டி தருவீர்களா? உங்கள் பக்கத்தை பார்க்க இயலாதவருக்கு [unicode format ]
உதவக் கூடும்.

நன்றி,
ஈஸ்வர ப்ரஸாத்

Anonymous said...

DAILYTHANTHI.COM

NAVIN

ROSAVASANTH said...

இதையும் தன் போலி வார்த்தைகளால் கவிதை எழுதும் இந்த வைரமுத்து நாயை கொண்டுபோய் கடலில் முதலில் போடவேண்டும்.

சுந்தரவடிவேல் said...

நல்லா வருது வாயில.

Eswar said...

தினத்தந்தியின் சுட்டி நான் அறிந்ததே. நான் கேட்டது இக்கவிதைக்கான சுட்டி. எனினும் நன்றிகள் பல.

Idly Vadai said...

ஈஸ்வர ப்ரஸாத்,
தினத்தந்தியின் சுட்டியை மேலே கொடுத்துள்ளேன்.
அன்புடன்
இட்லி